Pages

Wednesday, October 24, 2012

இது எனது முறை....!அப்போது யாருமற்று நான் நின்றேன். வலித்த போது என் கண்களே கலங்கியது. உலகம் தள்ளி நின்று கொண்ட போது நான் தனித்து நிற்க கற்றுக் கொண்டேன். தொடர்ச்சியான துரோகங்கள் எனக்கு இரணங்களைக் கொடுத்தாலும் அவை தழும்புகளாய் மாறி எனக்கு அனுபவமாகிப் போனது. அழுது, அழுது கண்ணீர் வற்றிப்போன போது என் கண்கள் பள பளக்கத் தொடங்கி இருந்தன. எல்லோரையும் காப்பாற்றும் கடவுளைப் போன்றவன் நான். கொடுக்கும் வரை கொண்டாடி, கொடுக்க முடியாவிட்டால் நீ எல்லாம் என்ன மானங்கெட்ட கடவுள் என்று  சீண்டிப்பார்க்கும்  உன்னத நிலையை எனக்கும் கொடுத்துப் பார்த்தான் சக மானுடன்.

நான் தனித்து இருந்தேன். அப்போது என் கவலைகள் எனக்குத் துணையாயிருந்தது. என் உணர்வுகளும், கொஞ்சம் வார்த்தைகளும் எனக்கு உற்சாகத்தை அவ்வப்போது கொடுக்க ஏதேதோ எழுதத் தொடங்கி இருந்தேன். நடை பயிலும் பிள்ளையாய் தத்தித் தத்தி எழுத்துக்களில் நான் நடக்க, நடக்க அந்த நடை எனக்குப் பிடித்துப்  போனது. எழுதவேண்டும் என்று நினைத்த போதெல்லாம் ஏதோ ஒரு வலி என்னிடம் இருந்தது. எனக்கு வலித்த போது எல்லாம் எழுதினேன். மேய்ப்பனாய் மாறிவிடுவேன் என்ற கனவிலேயே நான் ஆட்டுக்குட்டியாய் ஆகிப் போக, வருபவன் போபவன் எல்லாம் எனக்கு மேய்ப்பன் ஆகிப் போனான்.

பாசம் தனது தோலுரித்து விட்டு சட்டை மாற்றிக் கொள்கிறேன் என்று பாம்பாய் நகர்ந்து போனது. நான் பிய்ந்து போன தோலாய் காற்றில் பறந்து முள்ளில் சிக்கிக் கிழிந்து  கொண்டிருந்தேன். ஜெயித்தவன் அயோக்கியனாய் இருந்தாலும் தோற்றவனுக்கு அறிவுரை சொல்லத்தான் செய்வான், நீ நல்லவனாகவே இருந்தாலும் அவன் கால்களை நக்கியாவது கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் என்று காலம் பாடம் எடுக்கத் தொடங்கிய போது எனது கால்களில் காலத்தைப் போட்டு மிதிக்கும் ஆசையில் நானே மிதி வாங்கிக்கொண்டிருந்தேன்.

கடந்து போகவேண்டிய காலமாய் அது இருந்தது. உடலெல்லாம் இரணத்தோடு, எதார்த்தமாய் வாழ்க்கையைப் பார்க்கப் போய், யார் அடிக்கிறார்கள்? ஏன் அடி வாங்குகிறேன் என்று தெரியாமல் முகத்திலும், மார்பிலும், அடிபட்டு உதடுகள் கிழிந்து கண்ணீரோடு நகர்ந்து கொண்டுதான் இருந்தேன். எனது நகர்வு எனக்கு முக்கியமாயிருந்தது. நான் பாடங்கள் கற்றுக் கொண்டது நல்ல மாணவனாய் இருக்க அல்ல.... 

சொல்லிக் கொடுக்கப்படும் முறை தவறென்று சொல்லி கொடுத்தவர்கள் செவுட்டில் அறைந்து சொல்லிக் கொடுத்து பின் கற்றுக் கொள்பவர்களை அன்பாய் அரவணைத்து கற்றுக் கொடுக்கவே நான் அமைதியாய்க் கற்றுக் கொண்டிருந்தேன்.

நான் விரும்பியே தோற்றேன். உலகம் நான் எதிர்பார்த்தது போலவே என்னைச் சீண்டவில்லை. என் வறுமையை வேண்டுமென்றே காட்சிப்படுத்தி வைத்தேன்.... வாயுள்ளவர்கள் எல்லாம் பேசி மட்டும் தீர்க்காமல் காறி உமிழவும் செய்தார்கள். நான் முடிந்து விட்டேன் என்று கருதி எனக்கு திவசம் செய்து  முடித்தவர்கள் எல்லாம் என்னிடம் வாங்கித் தின்றவர்கள் என்பதை உணர்ந்தே இருந்தார்கள்...! 

நெருப்பில் குளித்திருக்கும் என்னை குளிர் எப்படி இனி மிரட்ட முடியும்....? காலச்சக்கரம் எல்லாவிதமான சோதனைகளிலும் என்னை சுற்றி முடித்திருந்த அந்த சுப தினத்தில் எனக்கு விதிக்கப்பட்ட கொடுமையான கடந்த கால என் சறுக்கல்களின் முதல் நிமிடம் எனக்கு நினைவுக்கு வந்தது. துரோகங்கள் இழைக்கப்படும் நேரத்தில் அன்பு மிகுந்த ஒவ்வொருவனும் ஏமாளியாகத்தான் பார்க்கப்பட்டிருப்பானோ என்னைப் போல என்று எண்ணிப் பார்த்தேன்.

வாழ்க்கையின் எனது முறையை  காலம் தொடங்கி விட்டிருக்கிறது. நான் அன்பு மிகுந்தவன் அல்ல இப்போது. என் கருணைகள் சிலுவைகளில் அறையப்பட்டு விட்டன. எனது மனித நேயம் தூக்கிலிடப்பட்டுவிட்டது. எனது ப்ரியங்களை  புதைத்த இடத்தில் கள்ளிச் செடிகள் முளைத்திருக்கின்றன இப்போது. உண்மைகளை நான் பொய் என்று குற்றம் சாட்டி விசாரித்த பின்பு அவற்றின் புறங்கைகளைக் கட்டி, கண்களை மூடி, வாயை இறுகப்பொத்தி அதன் பிறகே உண்மையென்று ஏற்றுக் கொள்வேன். என்னை பறக்க வைத்த காகிதங்களை என்னைச் சுற்றி பறக்க வைத்து அவற்றை பணம் என்று கூறி அதற்காய் பிணம் போல திரிந்தவர்களை அழைத்து அதை வாய்க்கரிசியாய்ப் போடுவேன்.

இது எனது காலம். என் தோல்விக் கொடியை இறக்கி எரித்து வெகு நேரம் ஆகி விட்டது.. இதோ ஏறிக் கொண்டிருக்கிறது எனது வெற்றிக் கொடி...! காலத்தின் தோள்களில் மீது இப்போது ஏறி நான் அதன் செவி கடித்துக் கொண்டிருக்கிறேன். மரித்து விட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்த மனிதர்களே....நான் இல்லை என்று கட்டியம் கூறி அறிவித்து விட்டு என்னை புதைத்து விட்டதாய் கூறிய ப்ரிய நேசர்களே..

எனது புரவியின் குளம்படிச் சப்தத்திலிருந்து  வெளிப்படும் நெருப்பிலிருந்து வெடித்துக் கிளம்பும் நரகத்தின் வாசல்களை உங்களுக்காய் திறந்து வைத்திருக்கிறேன்...

வாய்ப்பிருந்தால் தப்பித்துக் கொள்ளுங்கள்...ஆமாம்...இது எனது முறை....!


தேவா. S3 comments:

சுபத்ரா said...

அனுபவம் ஊறிய ஆசானது படைப்பு.

Krishna Moorthy S said...

//கொடுக்கும் வரை கொண்டாடி, கொடுக்க முடியாவிட்டால் நீ எல்லாம் என்ன மானங்கெட்ட கடவுள் என்று சீண்டிப்பார்க்கும் உன்னத நிலையை எனக்கும் கொடுத்துப் பார்த்தான் சக மானுடன்.//

மானுடம் என்பது முழுமையானதல்ல. மிருகத்துக்கும் தெய்வத்தன்மைக்கும் இடைப்பட்ட நிலை, பெரும்பாலும், மிருகத்தன்மை கொண்டதாகவே இருக்கும். கீழ்நிலை உணர்வுகளை வென்று, உயரும்போது, மிருகத்தன்மைக்கு நேரெதிரான கடவுட்தன்மை அமையும் என்றே அனுபவித்த பெரியோர்கள் சொல்கிறார்கள்.

வாழி நலம் சூழ!

சே. குமார் said...

உங்கள் வார்த்தைகள் படிக்க படிக்க இனிமை.
அருமையான படைப்பு.