Pages

Thursday, June 21, 2012

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்..!
கனவுகளுக்கு தீப்பிடித்துக் கொண்ட மாயாஜால நாட்கள் அவை. வாழ்க்கையின் மொத்த சந்தோசத்தையும் ஒரு இடத்தில் குவித்து வைத்து திளைத்துக் களித்து கிடந்த பூமியின் சொர்க்கம் அது....! வார்த்தைகளுக்குள் ஒட்டு மொத்த உணர்வினையும் கொட்டித் தீர்த்து விட முடியாமல் ஒரு பிச்சைகாரனாய் வானம் பார்த்து வார்த்தைகள் கடந்து ஏதேனும் ஒரு அதிசயத்தை என் மூளைக்குள் பரப்பிப் போடு இறைவா...! 

என் கல்லூரி நாட்களென்னும் காவியத்தை படைத்துப் போட ஏதேனும் புதியதொரு யுத்தி கொடு என்று இறைஞ்சி இறைஞ்சி, கனவில் ஓட முடியாத சராசரி மானுடனாய் மீண்டும் வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு வரிகளில் என் உயிரினைத் தடவி இங்கே உங்களின் விழிகளுக்காக படைக்கிறேன்...!

உயர் நிலைப்பள்ளியிலிருந்து கிட்டதட்ட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கூட்டுப்புழுவாயிருந்து சிறகடிக்கும் ஒரு பட்டாம் பூச்சியாய்த்தான் கல்லூரி என்னும் தோட்டத்திற்குள் திசைகளைத் தொலைத்த ஒரு புது உயிராய் மீண்டும் ஜனிக்கிறார்கள். 12 ஆம் வகுப்பு வரை வாழ்க்கை ஏதேதோ பிடிப்புக்களை திணித்து வைத்திருக்க அரும்பு மீசைகளும், புதிதாய் உடுத்திய பாவடை தாவணிகளும் சுடிதார்களுமென கல்லூரிக்குள் வலம் வரும் ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் மாஸ் ஹீரோவாக, ஹீரோயினாகத் தான் உலாவருகிறார்கள்....

ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி....!

காக்கைக்கு எப்படி தன் குஞ்சு பொன் குஞ்சோ அப்படித்தான் எங்களுக்கும் அப்ஸா (APSA) கல்லூரியும். பள்ளி முடித்து கல்லூரி புகும் ஒரு திமிரே உச்சத் திமிராய் உடம்புக்குள் தினவெடுக்க மிச்சமிருக்கும் வாழ்க்கையின் பிரமாண்டப்  பிரச்சினைகளை எல்லாம் அலட்சியமாய் பார்க்கச் சொல்லும் வயது...., 

கற்றுக் கொடுக்கும் ஆசிரியராய் இருந்தாலும் கோபமாய் பேசினால் மீண்டும் அவரை முறைத்துப் பார்த்து சட்டை கையை மடித்து விட்டு கொண்டு...." டேய் மாப்ள எஸ்.கே என்ன திட்டிட்ட்டாண்டா ......வக்காலி விடுவேனா ஒரு மொற மொறச்சேன்.....பயந்துட்டான் மாப்ள..." என்று சொல்லிக் கொண்டே.. "என்னடா பாக்குறீங்க....மாப்ளைக்கு ஒரு டீய சொல்லுங்கடா...." என்று திமிரை நட்பாய் மாற்றுமிடத்தில் என்ன பயம் எங்களுக்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்..?

வகுப்பறையில் நன்றாகப் படிப்பவனை பால்வாடி என்று நாங்கள் ஒதுக்கித் தள்ளி அவனை கிண்டல் செய்யும் மனோபாவத்தை தவறு என்று மிகைப்பட்டவர்கள் விமர்சித்து எங்களின் பாதைகளைக் கடந்து போகலாம், ஆனால்..எங்களின் இயலாமையைத் தன்னம்பிக்கையாக்கிய இடம் அது என்பதையும் அவர்கள் மறந்து போகக்கூடாது.


'என்ன மாப்ள... டீய டீய குடிச்சுட்டு எந்துருச்சு போற.....ஒரு தம்மப் போடு' என்று சொல்லிக் கொண்டே....' என்ன பக்ஸ்சு...பாத்துக்கிட்டே நிக்குறீக....மாப்ளக்கி ஒரு கிங்ஸ கொடுங்க பாசு.......' என்று சொல்லி ஒரு சிகரட்டை எடுத்து முன்னால் நீட்டி...' இல்ல மாப்ள குடிச்சு பழக்கமில்லடா' என்று மறுத்த போது.....

' டேய்..கொண்டே புடுவேன்...மொதல்ல சிகரட்ட கையில புடி.....இந்தா பத்த வச்சாச்சு......இப்ப என்ன பண்ர....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு மொள்ள வெறும் வாயால இழு....' என்று சிகரட்டைக் கொடுக்காமலேயே...வெறும் வாயால் 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....' போட வைத்து....' என்ன இழுத்துட்டியா ...? இந்தா இப்ப சிகரெட்ட இழு....இழுத்துட்டு...மெல்ல ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு உள்ள இழு.....' என்று செய்து காட்டி.

' இழுத்த உடனே கொஞ்ச நேரத்துல ஆட்டோமேட்டிக்கா நீயா வெளில ஊதுவ பாரு.... இம்புட்டுதான் மாப்பு தம்மு.....என்னம்மோ பகுமானம் காட்டுற....ஆத்தாடி....ஆக்கெட்ட (ஆக்ட்) கொடுக்குற பயபுள்ளையா இருக்கியேடா நீய்யு.....' 

அன்று சொல்லிக்காட்டிய என் மாப்பிள்ளை சுப்ரமணி....என்னை கெடுத்து விட்டான் என்று யாரேனும் விளங்கிக் கொண்டால் அது அவர்களின் புரிதலில் இருக்கும் தவறு. அந்த சூழலின் தேவையாய் நினைத்து புகைத்த என்னால் இன்று புகை இல்லாமலேயே இருக்க முடிகிறது எனில்....எல்லா செயல்களுமே தனிமனித விருப்பத்தில் நிகழ்பவைதான் யாரும் யாரையும் மாற்ற முடியாது என்பதை ஒத்துக் கொள்வீர்கள்தானே.....

அழகப்பன், ஆறுமுகராஜா, துரைச்சாமி, ஜாபர், சசி, செந்தில், சுப்ரமணி, சேகர், ராஜேஸ், ஜெரால்ட் வில்சன், ராம்கி, கேசவன், காளிதாஸ், சிறுகுடி ராமு, சரவணன், தாஸ், பழம் பதி, சிவா என்று விரிந்து கொண்டே செல்லும் என் பட்டியலின் இன்னொரு பக்கத்தில் தோழிகளின் பட்டியலும் போட்டியிட்டு நீளும். 

வகுப்பறையில் வாத்தியார் கேள்வி கேட்டு பதில் சொல்லி விட்டால் அதை விட ஒரு அவமானம் எங்களுக்கு இருந்ததில்லை. இதில் நாங்கள் படிக்கவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்...' அந்த வெண்ணை கேட்ட உடனே இந்த வெளக்கெண்ணை உடனே பதிலச் சொல்லிருச்சாக்கும்....அடியப்போடுங்கடா இவனுக்கு' என்று அதற்குப் பிறகு கிடைக்கும் அவமான அபிசேகத்தில் நானோ அல்லது என் நண்பனோ சோரம் போன ஆணாய்ப் போய் விடக்கூடாது அல்லவா....?

அதற்காகவே கேள்வி கேட்ட புரபசரை திருப்பி பார்த்து முறைக்கும் ஒரு சம்பிரதாயம் எங்களிடம் இருந்தது. கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் புரஃபசர் கெட் அவுட் என்று சொல்லி...அவுட்ட்ட்ட் என்று கடைசி 'ட்' டை சொல்லி முடிப்பதற்குள் வெளியே சென்று விடவேண்டும் என்ற ஒரு கொள்கையோடு வாழ்ந்தும் இருக்கிறோம்.

இந்த வீர வரலாறு மாஸ் கட் என்னும் அளவிற்கு பரிணமித்து லேப் அட்டண்டர் கல்லூரிக்கு வெளியில் இருக்கும் பக்ஸ் கடை வரை வந்த்து ' அட உள்ள் வாங்கப்பா...எச்.ஓ.டி ஒங்கள கூட்டிட்டு வரச் சொன்னாரு....' என்று கெஞ்சி ' வரமாட்டோம் போய்யா ' என்று நாங்கள் விரட்டுமளவிற்கு போயிருக்கிறது.

நாங்கள் வீரமானவர்கள் என்று இன்னொரு நண்பனை ஒத்துக் கொண்டு அவனை எங்கள் கூட சேர்த்துக் கொள்ள வேண்டுமெனில் அவன் குறைந்த பட்சம் ஒரு தம்மாவது அடித்திருக்கவேண்டும்......மற்ற படி எந்த பெண்களிடமும் போய் வழிய போய் பேசி விடக்கூடாது என்ற திடமான சட்டத்தையும் அப்போது படிக்கும் போதே திருமயம் ஜெயலலிதா பேரவை தலைவராக இருந்த என் மானமுள்ள மாப்பிள்ளை சிங்கப்பூர் ஜாபர் கடுமையாக கடைபிடிப்பான்....! எனக்கு மட்டும் இதில் ஸ்பெசல் சலுகை கொடுத்து அவ்வப்போது ஒரு சில முறைத்தல்களோடு மன்னித்து இறுக அணைத்தும் கொள்வான்....!

மீண்டும், நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில் சர்வ நிச்சயமாய் எனக்கு சிறகு முளைத்து நான் பின்னோக்கிப் பறந்து சென்று எங்கள் கல்லூரியினைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன் என்பதை நம்புங்கள் தோழர்களே....!

வாழ்க்கையில் கடைசி, கடைசியாய் சந்தோசமாய் இருந்த அந்த சொர்க்க நாட்களை மீண்டும் மீட்டெடுத்து அசை போட யாருக்குத்தான் ஆசை இருக்காது...! எங்கள் நண்பர்கள் குழுவில் நாங்கள் மிக அற்புதமாய் படித்து நிறைய மதிப்பெண்கள் பெறமுடியாமல் போயிருந்தோம் என்பதும் உண்மைதான் என்றாலும்...அதற்குப் பின்னால் அபத்தமான கல்வி முறை தனது கோரப்பற்களை எங்களது கழுத்தில் அழுந்தப் பதிந்து ரத்தத்தை உறிஞ்சியது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி இருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை சுற்றி இருக்கும் அத்தனையும் கிராமங்கள். பட்டிக்காட்டு மண்ணிலிருந்து படித்து விட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நானும் என் நண்பர்களும்....வந்திருக்கும் குடும்பச் சூழலுக்கும் ஆங்கிலத்துக்கும் வெகு தூரம். ஆங்கிலம் என்பது எங்களுக்கு எல்லாம் ஒரு பாடம். அதுதான் எங்களுக்கு கல்வி பயிலும் முறை என்பதை நாங்கள் அறிந்து கொண்டதே கல்லூரியில்தான்..

பள்ளியில் ஒரு பாடமாய் ஒரு பீரியட் மட்டுமே ஆங்கிலம் படித்த எங்களுக்கு அதுவும் இளங்கலைப் பட்டத்தை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்த போது நானும், விராமதி சேகர் மாப்ளையும், ஏரியூர் துரைச்சாமி மாப்பிள்ளையும், கீழச்சேவபட்டி அழகப்பனும், நெய்வாசல் சந்திரனும், மலைக்குடிபட்டி சுப்ரமணியும், ராயபுரம் ராஜேசும், சிங்கம்புணரி செந்திலும், பிரான்மலை ராஜாவும், சிறுகுடி ராமுவும்......

திணறித்தான் போய்விட்டோம்....!

எங்களுக்கு வாழ்க்கையைக் கடந்து போக ஒரே வழி கல்விதான் என்ற அச்சத்தை மூட்டி கல்லூரியில் பணம் கட்டி சேர்க்கும் அளவிற்குதான் எங்கள் பெற்றோரின் புரிதல் இருந்தது. அவர்களின் உச்சபட்ச புரிதல் எல்லாம் பக்கத்து வீட்டிலும் எதிர்த்த வீட்டிலும் அடுத்த் தெருவிலும் அல்லது சொந்த பந்தங்களில் யாரோ ஒருவர், இருவர் படித்து நல்லவேளையில் இருப்பவர்களாய்ப் பார்த்து எங்களை ஒப்பீடு செய்வதோடு நின்று போனது....

வழிகாட்டுதல் என்பதை எங்களுக்கு யாரும் ஒரு தோழனாய் தோளில் கைபோட்டு சொல்லிக் கொடுக்கவில்லை...மாறாக பிரம்பினை கையிலெடுத்துக் கொண்டு மிரட்டி, மிரட்டி ஒரு போலிஸ்காரனைப் போலத்தான் எங்களை பயிலச் சொன்னார்கள்....

மிரட்சியில் சுதந்திரம் வேண்டி நாங்கள் உடைத்துப் போட்ட அடக்குமுறைகளுக்குப் பின்னால் எங்களின் இயலாமைதான் மிகுந்திருந்தது. எங்களின் விருப்பங்களை எல்லாம் எங்கோ புதைத்து விட்டு நாங்கள் கெமிஸ்ட்ரி படிக்க வந்ததால் என்ன நடந்தது...? காலையில் இரண்டாம் பீரியடை கட் அடித்து விட்டு நாச்சியார் தியேட்டரில் காலைக் காட்சியில் நண்பர்களோடான ஆட்டமு பாட்டமும்தான் நடந்தது........!

எது எப்படியோ...படிக்கிறேன் பேர்வழி என்று நடித்துக் கொண்டு வாழ்க்கையை நாங்கள் கோட்டை விடவில்லை.....! பிஸிக்ஸ் பிராட்டிக்கள் அன்றைக்கு முதல்நாள் மஞ்சுளா தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் தரை டிக்கெட் எடுத்துக் கொண்டு போய் தரையில் அமர்ந்து கொண்டு சிகரெட் இல்லாத குறையை பீடியால் போக்கி விட்டு அடுத்த நாள் பரீட்சையை வென்றெடுத்தோம்...!

பரீட்சை ஆரம்பித்த உடனே யார் பேப்பரை கட்டிக் கொடுத்து விட்டு முதலில் செல்வது என்று போட்டியிட்ட மாப்பிள்ளை சேகரும், ஜாபரும் இன்றைக்கு சிங்கப்பூரில் வாழ்க்கையை ஜெயித்திருக்கிறார்கள். விழுந்து விழுந்து படித்து 60 அல்லது எழுபது பர்செண்டேஜ்க்கு மேல் எடுத்த எப்போதும் புத்தகத்திற்குள் கிடந்த சில நண்பர்கள் இன்றைக்கு அழுத்துக் கொண்டு ஊரில் ஏதோ ஒரு நிறுவனத்தில்...கடிகார முட்களோடு சுழன்று கொண்டிருக்கிறார்கள்....


இன்னும் எத்தனை அரியர்ஸ் இருக்கிறது என்று கணக்கு செய்து பார்க்காத மாப்ள பிரான்மலை ராஜா...கோயம்புத்தூரில் மிகப்பெரிய மருந்து பொருட்களை விற்கும் நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறான்....! நள்ளிரவு படித்துக் கொண்டிருக்கையில் படிக்க முடியாமல் என்னருகே வந்து ' மாப்ள படிக்கத்தான் முடியாது....வர்றியா ஓட்டப்பந்தயம் வச்சுப் பாத்துக்குவோம்....ஜெயிச்சுப் புடுவியாக்கும் ' என்று என்னிடம் தன் சொந்த திறமையை விட்டு விட்டு வேறு ஏதோ செய்து கொண்டிருப்பதை அறியாமல் நகைச்சுவையாய் சொன்ன துரைச்சாமி மாப்பிள்ளை துபாயில் நிர்வாக மேலாண்மையில் இருக்கிறான்.... 

படிக்கும் போது எந்த சிரத்தையும் இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் ஜாலியாகவே இருந்த ஜெரால்ட் வில்சன் மாப்ஸ் இப்போது பி.எச்டி முடித்து விட்டு....செளதியில் ஒரு கல்லூரியில் பேராசிரியாராக இருக்கிறான்....

வாழ்க்கை எதை இழக்க விட்டாலும் அவரவர் சொந்த திறமைகளால் எப்போதும் எங்கோ கொண்டு வந்து நம்மை விட்டு விடத்தான் செய்கிறது....! 1993 டு 1996 வாக்கில் கல்லூரியை விட்டு நாங்கள் வெளியேறிய போது இப்போது இருக்கும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் சுவடுகள் கூட இல்லை. ஆளுக்கொரு டயரியில் ஆட்டோகிராஃபை வாங்கிக் கொண்டு நாங்கள் பிரிந்த அந்த கண்ணீரான கடைசி நாளை பற்றி நான் வேறொரு கட்டுரையில்தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் ஒரு நாவலைப் போல இந்தக் கட்டுரை நீளும் அபாயம் இருக்கிறது.

16 வருடம் கழித்து வில்சனைப் துபாயில் பார்த்த போது மீண்டு என் உடலின் செல்கள் எல்லாம் உயிர் பெற்று மீண்டும் என் கல்லூரிகாலங்களுக்குச் சென்று விட்ட ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. இப்போது இருக்கும் எந்த ஒரு தகுதிகளும் இல்லாமல் உயிராய் நேசித்து பழகிய நண்பர்கள் கூட்டத்தை காலம்தான் பிரித்தது...இன்று அதே காலம் மீண்டும் எங்களை ஒவ்வொருவராய் சேர்த்துக் கொண்டிருக்கிறது. துரைசாமியை துபாயில் சந்தித்த அந்த நொடியில் மீண்டும் வாழ்க்கையில் கலர் கலாரய் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பிக்க...

திருமணம், பிள்ளைகள், பிரச்சினைகள், காலம் காட்டிக் கொடுத்த சுயநல நட்புகள் எல்லாம் கடந்து நீண்டு கொண்டிருக்கும் எங்கள் கல்லூரி நட்பு......கண்ணடித்து சிரித்து ஒரு தாயாய் அணைக்கத்தான் செய்கிறது......!

வண்ணப்படம்....கருப்பு வெள்ளையாய் மாறி......மீண்டும்............வண்ணமயமாகி இருக்கிறது....!

தொடர்ந்து கல்லூரி நண்பர்களைப் பெற்று தந்து கொண்டிருக்கும் பேஸ்புக் போன்ற சமூக இணைவு இணைய தளங்களில் ஆயிரத்தெட்டு அபத்தங்கள் இருந்த்தாலும்...எங்களைப் போன்றவர்களுக்கு வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொடுத்த ஒரு அரிய பொக்கிஷமாகத்தான் அது இருக்கிறது....! 


தேவா. S10 comments:

Anonymous said...

மிக இனிமையான கல்லூரிக் கால மலரும் நினைவுகள் ! பகிர்ந்த விதம் அருமை.

tamil panel said...

உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?


Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை
மேலும் விபரங்களுக்கு www.tamilpanel.com

நன்றி

john said...

Bro, AAlvarappan, Kaalidoss, PKP yellam vittuteengale,

வைகை said...

அழகப்பன், ஆறுமுகராஜா, துரைச்சாமி, ஜாபர், சசி, செந்தில், சுப்ரமணி, சேகர், ராஜேஸ், ஜெரால்ட் வில்சன், ராம்கி, கேசவன், காளிதாஸ், சிறுகுடி ராமு, சரவணன், தாஸ், பழம் பதி, சிவா என்று விரிந்து கொண்டே செல்லும் என் பட்டியலின் இன்னொரு பக்கத்தில் தோழிகளின் பட்டியலும் போட்டியிட்டு நீளும். ///////


ஆண்கள் பெயரை மட்டும்
பட்டியல் போட்டு விட்டு தோழிகள் பெயரை மட்டும் கவனமாக தவிர்த்தது அண்ணி கையில் இருக்கும் பூரிக் கட்டையை நினைத்தா? :-))

Shankar M said...

Good memories... one small request: reduce the literary advancement when writing old memories...In those areas, it gives an artificial flavor. புரிதலுக்கு நன்றி

சே. குமார் said...

அண்ணா... APSA காலேஜில் படித்தை நீங்கள் எழுதியிருக்கும் விதம் அருமை.
உண்மைதான் அன்று கல்லூரியில் கிடைத்த நட்பு இன்றும் மனசுக்குள் இனிப்பாய்...
நாச்சியார் தியேட்டர் எல்லாம் மூடியாச்சில்ல இப்ப... காலேசுக்கு எதிரிலேயே தியேட்டர்... குடுத்து வச்சவங்க நீங்கள்லாம்...
ஆனா அப்ப அப்சா காலேசுல ரொம்ப கண்டிசன் இருக்குமுன்னு சொல்லுவாங்க...
எங்க சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி இப்ப கண்டிசன் அதிகம் இருக்க கல்லூரியாம்... நாங்க படிக்கும் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்...
அருமை...

NAAI-NAKKS said...

கல்லூரி நாட்கள் மறக்ககூடியதா.....

இந்த பதிவை படிப்பவர் அனைவரையும் மீண்டும்
கல்லூரிக்கு அழைத்துசென்றுவிட்டீர்கள்...தேவா....

நன்றி...

வில்சன் said...

நமது கல்லூரி வாழ்வை எப்போது நினைத்தாலும் கண்களில் முட்டிக் கொண்டு வருகிறது. மீண்டும் ஒரு முறையாவது நாம் அனைவரும் அங்கு ஒன்று கூட வேண்டும் மாப்ஸ். கால சக்கரத்தின் வேக சுழற்சியில் சிதறிப் போன நம்மை பதினைந்து வருடம் கழித்து ORKUT இணைத்து FACEBOOK கொண்டாடுகிறது. வியாழக்கிழமை மதியங்களில் கல்லூரியை விட நாச்சியார் தியேட்டரில் தானே நமக்கு அட்டெண்டன்ஸ் அதிகமாக எடுக்கப்படும். நமக்காக திரையிடப்படும் 'சிறப்பு' காட்சிகள் வேறு. பதிவுக்கு நன்றி மாப்ஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஏன்யா பிட்டுப்படம் பாத்தத சொல்லவே இல்ல.............?

தருமி said...

நினைக்கும்போதே இனிக்கும் மாணவ பருவம்....