Pages

Friday, June 15, 2012

சூடா என்ன சார் இருக்கு....?ஏதாவது எழுதுவதற்கு முன்னால் இதை, இதை எழுத வேண்டும் என்று மனம் ஒரு கணக்குப் போடும். உலகத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளையும் எழுத்தில் கொண்டு வந்து விடவேண்டும் என்று பேராசைப்படும். உள்ளுக்குள் ஒரு அதீதமான வலி இல்லாமல் என்னால் இங்கே எழுத முடியாது அல்லது எழுத பிடிக்காது என்பதுதான் நிதர்சனம்.

சமூக கட்டுரைகளை எழுதுவது பெரிய வேலை இல்லை. எல்லா செய்திகளையும் மேய்ந்து கொண்டிருக்கையில் இதை எழுதவேண்டும் என்று ஒரு தளம் கிடைத்து விடும். அறச்சீற்றம் என்பது தன்னிச்சையாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எப்போதும் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அது மனித இயல்பு. மனிதன் தனது தேவைகளைப் பொறுத்து ஏதோ ஒரு சூழலை அல்லது இயக்கத்தை மனிதர்களை ஆதரிக்கப் போகும் போது அறச்சீற்றம் என்பது சுயநலமாகிப் போய் விடுகிறது.

தனக்கு பிடித்த தலைவரையும், கட்சியையும், மதத்தையும் சாதியையும் எவ்வளவு இழிவாய் இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காய் மனிதர்கள் ஆதரித்துப் போவது மிகப்பெரிய சமூக சாபக்கேடு. எனக்கு தெரிந்து சுதந்திரமாக சிந்திக்கும், செயல்படும், கருத்து தெரிவிக்கும் மனிதர்கள் இங்கு குறைவு... மிக மிக குறைவு.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையும் கூகிள் பிளஸ் போன்ற தளங்களையும் பார்க்கும் போது சமூகத்தில் அதுவும் இணைய உலகில் இருக்கும் மனிதர்கள் எல்லாம் எவ்வளவு சமூக நல் நோக்கு கொண்டிருக்கிறார்கள் என்று சட்டைக் காலரை தூக்கி விட்டு கொள்ளத் தோன்றும். அந்த அளவு உடனக்குடன் தட்ஸ் தமிழ், தினகரன், தினத்தந்தி, தினமனி, ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்னும் ஏதேதோ செயற்கை கோள் தொலைகாட்சிகளைக் கண்டு விட்டு...நிலைத் தகவல்கள் (ஸ்டேட்டஸ் மெசேஜ்னு போட்டாதான் புரியுமோ...!!!) கொடுக்கும் மனிதர்களைக் கண்டு ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். (அவுங்க ஆஃபீஸ்ல அவுங்களுக்கு நேரம் இருக்குது உனக்கு என்னயா பிரச்சினைன்னு கேக்குறீங்களா...!!! அதுவும் சரிதேன்...)

இனவாதம், பிரதேசவாதம், திராவிடம், தமிழ் தேசியம், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம், இன்னும் ஏதேதோ சாதி அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்று தனித்தனி பக்கங்களை பேஸ்புக்கில் உருவாக்கிக் கொண்டு அடி பட்டையைக் கிளப்புகிறார்கள். இந்த சமூகம் எல்லா நவீனத்தையும் தனது சுயநலத்துக்காய்தான் பயன்படுத்தும் என்றாலும் அதிலும் ஒரு தர்மம் வேண்டாமா? மனசாட்சி வேண்டாமா..? 

கேள்வி கேட்க யாரும் இல்லை மேலும் நான் எழுதுவதை விமர்சிக்கவும் ஆள் இல்லை தண்டனைகள் எல்லாம் ஒன்றும் கிடையாது என்று ....இங்கே நடக்கும் அத்துமீறல்களுக்காய் இன்னுமொரு முறை அந்த தேவன் சிலுவையேற வேண்டி வரும் போல இருக்கிறது.

பெண்களை மதிக்கும் என் தாய்நாட்டில் தாய்நாடு, தாய்மண், இருக்கும் நதிகளுக்கு எல்லாம் பெண்கள் பெயர்கள், என்று மிகப்பெரிய கண்ணியத்தை நாம் கொண்டிருப்பதாக அடிக்கடி கூறிக் கொண்டாலும் அமீரகம் போன்ற நாடுகளில் பெண்களை எப்படி கண்ணியப்படுத்துகிறார்கள், எப்படி முன்னுரிமை கொடுக்கிறார்கள்...? 

பொது இடங்களில் எப்படியான மரியாதை கொடுக்கிறார்கள் என்பது எல்லாம் இங்கு வந்து பார்த்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். அது தெரியாதவர்கள் என் நாட்டை குறை சொல்லிவிட்டாயா தேசத் துரோகி ....!!! நீ பிழைக்க போன இடத்தில் இருந்து கொன்டு என்னவேண்டுமானாலும் பேசலாமா என்று சத்தம் கூட போடலாம்.... எது எப்படி இருந்தாலும் உண்மை உண்மைதானே.....!!!!

பெண்களை மதிக்கிறோமென்று சொல்லிக் கொண்டே சினிமா நடிகைகள் அல்லது வேறு ஏதேனும் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி விட்டு பொது வெளியில் அவர்களின் அங்க லட்சணங்களைப் பற்றி கிண்டலடித்து சிரித்து நக்கலடித்து புளகாங்கிதம் அடைந்து கொள்கிறோம். ஏதாவது சொல்லப் போனால் இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது...? எவ்வளவோ அசிங்கங்கள் நடக்கின்றன.....வாரப்பத்திரிக்கைகளும், சினிமாப்படங்களும் தொலைக்காட்சிகளும் காட்டாததையா நாங்கள் பேசி விட்டோம் என்று.. கூட்டத்தோடு சேர்ந்து குளிர் காய்வார்கள்.

ஒரு சினிமா நடிகை தனது உடலைக் காட்டி நடிப்பதும் அதை ரசிப்பதும் ரசனை என்று கொண்டால் அதைப்பற்றி வர்ணித்து மோசமான கமெண்ட்கள் பாஸ் செய்து கிண்டலடித்துக் கொள்வது வக்கிரம். ரசனையான பார்வைக்கும் வக்கிரமான பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. 

இதைப்பற்றி பேசிக்கொண்டே போகலாம்...வண்டியை ஒடிச்சு அப்டியே வேற பக்கம் திருப்பிக்குவோம்.

ரெண்டு நாளைக்கு முன்னால கழுகுல புதுக்கோட்டையிலிருக்கும் ஞானாலயா என்னும் புத்தக சேகரம் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 70 வயதைக் கடந்த ஐயா கிருஷ்ண மூர்த்தி அவர்களும் அவுங்க துணைவியாரும் அவுங்க காலத்துல வாங்கிச் சேர்த்த மலை போல குவிஞ்சு கிடக்குற சுமார் 90,000க்கும் அதிகமான புத்தகங்களை வச்சு அதுக்குன்னு 9 லட்ச ரூபாய்க்கு ஒரு பெரிய கட்டிடத்தை அவுங்களுக்கு ஓய்வூதியமா கிடைச்ச பணத்தை வச்சு கட்டியும் இருக்காங்க. 

இதுல என்ன சிறப்புன்னா, தமிழ்நாட்ல இருக்க கூடிய எல்லா வி.வி.ஐ.பிக்களும், எழுத்தாளர்களும் இங்க வந்து பழமையான புத்தகங்களை வாசித்து நிறைய நூல்களை எழுதி ரொம்ப பெரிய ஆளா ஆகி இருக்காங்க. இன்னும் நிறைய பேரு இங்க வந்து வாசித்து நிறைய ஆராய்ச்சியும் செஞ்சு இருக்காங்க.

இங்க நிறைய பழமையான அரிய தழிழ்ப் புத்தகங்கள் குவிஞ்சு கிடக்குது. பராமரிக்க நிறைய தமிழ் ஆர்வாலர்கள் உதவி தேவைப்படுது. இது பற்றி கழுகுல விபரமா வாசிச்சுக்கோங்க..! இதை ஏன் சொல்ல வந்தேன்னா...அந்த கட்டுரையை எழுதிட்டு...ஐயா காசு பணம் கொடுக்கலேன்னாலும் பரவாயில்லை சாமிகளா, நிறைய பேருகிட்ட இது பற்றி சொல்லுங்க....அப்டி சொல்லும் போது இருக்கப் பெற்றவங்க உதவுவாங்க அதனால இந்தக் கட்டுரைய பகிருங்க நிறைய பேருகிட்ட சொல்லுங்கன்னு வேண்டுகோளும் வச்சோம்.

அம்புட்டுதான்.....

சமூகத்தை திருத்தியே தீருவேன்னு சொல்றவங்களும்,  இந்த கட்சி ஆகாது எங்க கட்சிதான் பெஸ்ட்டுனு மார்க்கெட்டிங் பண்றவங்களும், தமிழ் தமிழ்ன்னு தமிழ வச்சு பொழப்பு நடத்துறவங்களூம்..., ச்ச்சும்மக்காச்சுக்கும் ஒக்காந்து நாங்க வெட்டி நாயம் பேசுனாலும் பேசுவோம்..ஆனா ஒங்க கட்டுரைய பகிர மாட்டோம் அப்பு......! அப்புடி செஞ்சுட்டா யாராச்சும் உதவி செய்றவங்க செஞ்சுட்டா அப்புறம் எங்க பேக் அக்கவுண்ட்ல இருந்து பணம் கொறஞ்சுடும் பாருங்க அப்டீன்ற மாதிரி நம்ம பக்கமே அதிகமா யாரும் திரும்பலைங்க...., ஆனாலும் மனிதாபிமானமும், உணர்வும், உண்மையான சமூக நோக்கும் இருக்கும் சில நண்பர்கள் இந்த கட்டுரையைப் பகிரவும் செஞ்சு இருந்தாங்க....!

சரி ரைட்டு.. இது எல்லாம் ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட விருப்பு வெறுப்புன்னு வச்சுக்கோங்களேன்..விட்டுத் தள்ளிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்னு விட்டாச்சு....! சாகறப்ப யாரச்சும் ஒருத்தருக்கு நான் உணர்வோட உண்மைய சொன்னேன் அவர் கேட்டாரு அப்டீன்ற நிறைவு நமக்கு இருக்கும்ல அது போதுங்கறேன்..!  

பேஸ்புக்கலயும், கூகிள் பிளஸ்லயும் ஒவ்வொரு சேதியையும் பகிர காசு கொடுத்துதாண்டா பயலுவளா நீங்க பகிர முடியும்னு ஒரு ரூல்ஸ் போட ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுப்பா பழனி மலை முருகா.....

நான் நடை பயணமா வந்து அலகுக் குத்தி உனக்கு காவடி எடுக்குறேன்.......அரோகரா......!!!!!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா..........!!!!!


தேவா. S


3 comments:

Anonymous said...

nice message deva..

with regards,

raaga

நிகழ்காலத்தில் சிவா said...

இணையத்தில் நண்பர்கள் இணைவது என்பது பொதுவாக ஒரு டைம்பாஸ்..கூடிக்கலையும் இடமாகத்தான் இருக்கின்றது தேவா..

தமிழ்நூல்களின் அரிய நூல்களின் தொகுப்பான மிகப்பெரிய நூலகம் ஒன்று சிங்களர்களால் அழிக்கப்பட்டது. இது குறித்த எந்த பிரஞ்சையும் இல்லாமல் இருக்கிறோம்.

சமகாலத்து நூல்களும் பாதுகாக்கப்படவேண்டியவையே.. தனி ஒரு மனிதனின் உள்ளத்தில் உள்ள தீ சமூகத்தில் இல்லைதான் :(

ஆனால் நம் க்டமையைச் செய்வோம் தேவா !

சுபத்ரா said...

இந்த விஷயத்தை இப்போ தான் பாக்குறேன் தேவா!