Skip to main content

வெந்து தணிந்தது காடு...!

























சேதுக்கரையிலிருந்துதான் இராமர் ஈழத்துக்குப் பாலம் கட்டியதாகச் சொன்னார்கள். பிரம்மாண்டமான வங்காள விரிகுடா என் முன் விரிந்து கிடந்தது. சேதுக்கரையின் கடல் நீல நிறம் கிடையாது. கருமையும் நீலமும் நிறைந்த ஒரு ரகசியங்கள் நிறைந்த நிறம் அது. நெரிசல் அதிகம் இல்லாமல் ஓரளவு அமைதியைக் தாங்கிக் கிடந்த அந்த இடத்தில் திவசம் கொடுப்பதில் இருந்து கருமாதி காரியங்கள் வரை எல்லாம் ஏதோ ஒரு அவசர கதியில் நடந்து கொண்டிருந்தன.

ஈர வேட்டியுடன் வெற்றுடம்புடன் முழுதும் மழிக்கப்பட்ட தலையோடு கடற்கரை மண்ணில் நானும் என் இரு தம்பிகளும் அமர்ந்திர்ந்தோம். காலை பத்து மணி வெயிலை கட்டுப்படுத்தி கொண்டிருந்த மேகக்கூட்டங்களை நிமிர்ந்து பார்த்தேன். கடற்காற்று ஈர உடம்பில் பட்டு சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. பிரபஞ்ச ரகசியங்களைத் தன்னுள் தேக்கிக் கொண்டு ஆழ் கடலும் நீலவானமும் எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆமாம்.. அது சேதுக்கரை என்னும் கடற்கரை கிராமம். அங்கிருந்த்துதான் இராமர் ஈழத்துக்கு சென்று இராவணனோடு போரிட பாலம் கட்டினாராம். நாங்கள் எங்கள் தந்தையின் 16 ஆம் நாள் காரியத்துக்காக கடந்த ஜூன் 7 ஆம் தேதி அந்த கடற்கரையில் வற்றிப் போன கண்ணீரோடு அமர்ந்திருந்தோம்.

சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திக் கொண்டிருந்தவரை சாலையை விட்டு இறங்கிய டாட்டா-ஏசி சிறு லாரி அடித்து தலையில் அடிபட்டு எங்கள் உயிர் பறித்த கதை பற்றி நான் இங்கு பேசவரவில்லை. அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பெருஞ்சக்திக்கும் இருக்கும் ஒரு வழக்கு. வழக்கு தொடுத்திருப்பவன் நான். குற்றம் சாட்டப்பட்டிருப்பது அண்ட சராசரத்தையும் ஆட்டிப்படைக்கும் அந்த சக்தி. கையிலிருந்த பொருளைத் தட்டிப் பறித்தது போல அவனுக்கு என்ன அப்படி ஒரு அவசரம் என்பதுதான் எனது கோபம். வழக்கம் போல ஏதேனும் நியாயத்தைக் விதி என்ற பெயரிலோ அல்லது பிரபஞ்ச சுழற்சி என்ற நீதியைச் சொல்லியோ அந்த பெருஞ்சக்தி என்னிடம் வாதிடலாம்...

என் கேள்வி எல்லாம் ஏன் என் தந்தைக்கு மரணம் வந்தது என்பதல்ல...ஏன் கள்ளத்தனமாய் இப்படி பின்னால் இருந்து வந்து உயிர் பறித்தாய் என்பது மட்டுமே...!

ஒருவேளை ஜென்மாந்திரக் கணக்குகளை எடுத்துக் கொண்டு வந்து, இது கடந்து போன பிறவியின் கர்மபலன் என்று காலம் என்னிடம் சொல்லலாம். அதை விட்டு விடுங்கள் அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் பெருஞ்சக்திக்கும் இடையே உள்ள பிரச்சினை. நான் என்ன யாரோவா? நானும் இந்தப் பிரபஞ்சத்தின் பகுதிதானே? எல்லாம் வல்லவன் என்றால் அவனிலிருந்து தனித்து விழுந்த நானும் எல்லாம் வல்லவன் தானே? நான் என்ன மனமென்னும் மாயைக்குள் அகப்பட்டு சிக்கல் கொண்ட மனிதனாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வந்த வேலையைச் செய்து முடித்து நானும் மீண்டும் என் மூலத்திற்கு தானே மீள்வேன். நீதி கேட்பது எனது உரிமை, நீதி சொல்லவேண்டியது இயற்கையின் கடமை.

ஜனனம் என்ற ஒன்று இருந்தால் மரணம் என்பது நிச்சயம் தானே ....நீ என்ன பித்தனா என்று கூட நீங்கள் என்னைக் கேட்கலாம்? நான் பித்தன் தான். அவனும் பித்தன் தான். இடைவிடாது சுடுகாட்டில் சுற்றி திரிந்தானே சுடலை என்ற பெயரில், நிலையாமை அறிய மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு அலைந்தானே கபாலி என்ற பெயரில், அசைவற்ற மூலத்தை சிவம் என்று அறிந்து அதை உணர்ந்து பின் பெருமான் ஆனானே அவனும் பித்தன் தான்.. நானும் பித்தன் தான்.

சேதுக்கரையில் எங்களுக்காக காரியங்களை செய்ய எங்கள் எதிரே இருந்த அந்த வேதம் படித்த பிராமணனுக்கு முறைப்படி பிரபஞ்ச சக்தியை வேண்டிய படி உரிமைகள் கொடுத்தோம். ஒவ்வொரு மந்திரமும் சொல்லி அதன் தமிழ் மொழி விளக்கத்தையும் சொல்லி வாஞ்சையோடு காரியங்கள் செய்து கொண்டிருந்தவரும், என்னைச் சுற்றி இருந்தவர்களும் எனக்கு என் சிவனாய்த்தான் தெரிந்தார்கள். அவனின்றி வேறு என்ன இருக்கிறது இங்கே? அவர் தவறுதலாய் வைணவ கோத்திரம் என்று சொல்ல நான் சிவகோத்திரம் என்று திருத்தினேன். காரியங்கள் மன திருப்தி. ஒருவர் எம் எதிரே கர்ம சிரத்தையாய் எம் தந்தையின் ஆன்மா முக்தியடைய பிரார்த்திக்கிறார் என்னும் நம்பிக்கையும், எங்களின் கூர்மையான மனம் குவித்தலும் எம்  தந்தையின் ஆன்மாவை பக்குவ நிலைக்குக் கொண்டு செல்லும் என்று நானறிவேன்.

இயல்பிலேயே பக்குவமான ஆன்மா கொண்ட சிங்கம் என் தந்தை. சிவகோத்திரம் என்று நான் அழுத்தம் திருத்தமாய் கூறியதற்கு காரணம் இருக்கிறது. சிவம் என்னும் பிரபஞ்சத்தின் பூர்வாங்க ஆதி நிலையை உணர்ந்து தலைமுறை தலை முறையாய் " தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..." என்று சாம்பலை அள்ளி நெற்றி நிறைய பூசிய பின்புதான் எங்களின் பொழுது தொடங்கும். மதத்தன்மையைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. சைவம் அல்லது சிவம் என்னும் ஒழுக்க நெறிக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞான உண்மையைச் சொல்ல விரும்பிகிறேன்.

மேலோட்டமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக இதை உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கை நகரும் போது நிலையாமை ஆழமாக நமது உள்ளே இறங்கி விடுகிறது. நிலையாமை உள்ளே இறங்கிய பின் சக மனிதரை வாழும் காலம் வரை நேசிக்கத் தொடங்கி விடுகிறோம். சக மனிதரை நேசிக்கும் போது அறிந்து நாம் அநீதிகள் செய்யவே மாட்டோம். எல்லோரும் நேசிக்க அன்பே சிவம் என்பது புரியும். சிவம் என்பது  யாரோ ஒரு மனித உருக் கொண்ட நபரல்ல, இத்தனை ஜனசமுத்திரத்தையும், இப்பிரபஞ்சம் முழுதும் பரவி விரவிக் கிடக்கிற அசையும் அசையா அத்தனை வஸ்துக்களையும் உள்ளடக்கிய பெருஞ்சக்தி என்று உணர முடியும். பிறகு மரணம் இலகுவாகிப் போகும். உயிர் பிரிதல் சுவாசித்தலைப் போன்ற சுகமான அனுபவமாய் முடிந்து போகும். உயிர் பிரிகையில் உடல் உகுக்கிறோம் என்ற புரிதலோடு பெரும் நிம்மதியை ஏந்தியபடியே உடல் விட்டு நகர்ந்து போவோம்.

இப்போது புரிகிறதா எனக்கும் என் சிவனுக்கும் ஏன் வழக்கு அல்லது என்ன வழக்கு என்று...? அவன் என் தந்தையின் உயிர் பிரிதலை அவரை உணரச் செய்யாமல் கையிலிருக்கும் பொருளைத் தட்டிப் பறித்தது போல கொண்டு போனதன் காரணம் எனக்கு வேண்டும் அவ்வளவுதான். பிரபஞ்சத்தின் அசைவுகளில் எம் தந்தையின் ஆன்ம பலமும், எம்மின் பிரார்த்தனைகளும் எப்போது நாங்கள் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரமும் எம் தந்தையை கடைத்தேற்றும் என்பதை நானறிவேன்..!  சூட்சும ரூபத்தில் இருக்கும் எமது மூதாதையர்களும், நன் ஆன்மாக்களும், பதினெட்டுச் சித்தர்களும், அறுபத்தி நான்கு நாயன்மார்களும் மேலும் பிரபஞ்ச பேரதிர்வும் எம் தந்தையின் ஆன்மாவை அரவணைத்து தலை வருடிக் கொடுத்து, அதிர்வுகளால் சாந்தப்படுத்தி மேல் நிலைக்கு உயர்த்தி இருப்பதை நான் அறிவேன். 

நான் உடலாய் இருப்பதால் என் உடல் சார்ந்த நினைவுகள் எழுப்பும் கேள்வியைத்தான் இன்று என் ஈசனிடம் வைத்திருக்கிறேன்...! ஏனென்றால் முறையாய் எடுத்துச் செல்வதில் இருக்கும் நியாயம் தட்டிப்பறிப்பதில் இல்லைதானே...?

தந்தையின் கர்மாக்களை எல்லாம் சமப்படுத்தி ஆதி நிலைக்கு செல்ல பிரார்த்தனைகள் செய்து விட்டு சேதுக்கரையிலிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வாகனத்தில் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். காற்றால் என் கேசம் கலைக்க முடியாமல் தலையைத் தடவியபடியே மெளனமாய் என் முகத்தில் அறைந்தது. மாரநாடு கருப்பையா பிள்ளையின் மகனான, இராமசாமி பிள்ளையின் மகனான, செல்லையா பிள்ளையின் மகன் சுப்பையா பிள்ளை என்னும்  எனது தந்தையின் பூலோக வாழ்கை முற்றும் பெற்றது. யாதொரு குறைகளும், எதிரிகளும் இல்லாமல் நிறைவாய் வாழ்ந்து முடித்து ஒரு சிம்மம் போல கம்பீரமாய் இவ்வாழ்க்கையை விட்டு முறுக்கிய மீசையோடு வெளியேறிய எம் தந்தை எனக்கு மிகவும் கம்பீரமாய் தெரிந்தார். ஒட்டு மொத்த என் சொந்த  பந்தங்களுக்கும், நட்புகளுக்கும் இடையே கம்பீரமாய் வாழ்ந்து முடித்த நட்சத்திரம் அவர். அவரை அறிந்தவர் அவரை அறிவர்!

ஒரு  மிகப்பெரிய நாவலை வாசித்து முடிக்கையில், நல்ல திரைப்படத்தை பார்த்து முடிக்கையில், தொன்மையான கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஆழ் தியானம் விட்டு எழுந்து அமர்கையில் பெரும் திருப்தி ஒன்று நம்மைச் சூழ்வதோடு அதன் தாக்கமும் நம்மை புரட்டிப் போடும். என் ஆயுள் முழுவதற்குமான தாக்கத்தைக் கொடுத்த திருப்தியில் காலம் தன் சுழற்சியை தொடர்ந்து கொண்டிருக்க..

இந்த ஜென்மம் முழுதும் நான் என் தந்தையை மனதில் சுமந்த படியேதான் நகரமுடியும் என்று எனக்குப் புரிந்தது. அம்மாவை எனது இரு தம்பிகளை, எனது சகோதரியை, நான் வாஞ்சையோடு அணைத்துக் கொண்டிருக்கிறேன்.....கதறி அழ எனக்கு வாழ்க்கை அவகாசம் கொடுக்கவில்லை....எனக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு ஆசைதான் இப்போது....

" என் அப்பா மாதிரி நான் வாழ்ந்துட்டு சாகணும்....எல்லோரையும் அரவணைச்சு.....அவ்ளோதான்..."

வண்டி எங்கள் ஊர் நோக்கிப் பறந்து கொண்டிருந்ததது. தம்பிகள் பார்க்காதவண்ணம் நான் துண்டுக்குள் முகம் புதைத்து நான் தேம்பிக் கொண்டிருந்தேன்.


தேவா சுப்பையா...




Comments

உயிராய் இருந்த அப்பாவின் மறைவை நீங்கள் எதிர் கொண்ட விதம் புரிகிறது..
நேரில் வர.,தொடர்பு கொள்ள குழுமத்தின் மூலம் முயன்றேன். சாத்தியக்கூறுகள் இல்லை..உடனிருக்கிறேன்.
ஆத்மார்த்தமான ஒரு பதிவு .

அப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும் அண்ணா .
ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும் என்ற ஒரு வசனம் திருக்குர்'ஆனில் உள்ளது.
யோசித்துப்பாருங்கள் தேவா, தட்டிப்பரிக்காமல் சொல்லிவிட்டோ அல்லது கேட்டுக்கொண்டோ உயிர் பிரிந்து இருந்தால், வலி இன்னும் இன்னும் அதிகமாகியிருக்க வாய்ப்புள்ளதே! அதை தர அந்த கருணையாளன் விரும்பியிருக்கமாட்டான். அதனால்தான் இப்படியோ?
இப்படித்தான் நாம் நம்மை தேற்றிக்கொள்ளவேண்டும். போருமையாக இருங்கள் தேவா. நீங்கள்தான் உங்கள் தாயை ஆருதல் செய்யவேண்டும். என்னை பொருத்தவரை அவருக்குத்தான் இழப்பு மிக அதிகம். please take care of her.
தாபின் காலடியில்தான் ஒருவனுக்கு சொர்க்கம் இருக்கிறது.
ஆழ்ந்த இரங்கல்கள்.

உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்தனைகள்.
ஆழ்ந்த அஞ்சலிகள் மகனே. கூகுல் ப்ளஸ் மூலம்தான் அறிந்தேன். தொடர்பிற்கு வழியற்று தவிப்பாக இருந்தது. இப்பவும், இதை வாசிக்கையிலும் அப்படியே உணர்கிறேன். என்ன சொல்லட்டும் தேவா?..சரி..அப்பா கனவுகளை நிஜப்படுத்துங்கள். சித்தப்பான்னு கூப்பிடுகிற என்னை இனி அப்பான்னே கூப்பிடுங்க தேவா.


அப்பா கூட இருக்கட்டும். நானும், நாங்களும் கூட இருக்கிறோம் மகனே. அழை எண் தெரியப்படுத்துங்கள் rajaram.b.krishnan@gmail.com
Unknown said…
அப்பாவின் ஆத்மா சமாதனம் அடைய எனது ப்ராத்தனைகளும்
ஒம் நமச்சியவாய..
@ தேவா......

கட்டப்பட்ட சிறகுகள்....இனி முளைக்கட்டும்....

what to say.......???????????????

PLEASE....!!!!!!!!!!!!!!!!!!!!
kanchana said…
Very Sorry Deva!God Be with your family!
தந்தையின் ஆன்மா முக்தி அடைய எனது ப்ரார்த்தனைகளும்....
Shankar M said…
"என் கேள்வி எல்லாம் ஏன் என் தந்தைக்கு மரணம் வந்தது என்பதல்ல...ஏன் கள்ளத்தனமாய் இப்படி பின்னால் இருந்து வந்து உயிர் பறித்தாய் என்பது மட்டுமே...!" பிரபஞ்ச சக்திக்கு நின் தந்தையை நேராக எதிர்கொள்ளும் சக்தியில்லாததால் கள்ளத்தனமாய் ?? தேம்பி அழுது விடு.... முழுவதுமாய். உன் தந்தையின் வெற்றி அவரைப் போல நீ இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமை அடைந்தது. உனக்கும் சிவனுக்குமான வழக்கில் சில உண்மைகள் வெளிப்படும். கண்டிப்பாக... கால அளவுகள் பதில் சொல்லும். பதில் கிடைத்துத் தான் ஆக வேண்டும் என்பதும் ஆகம விதி. தந்தையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கும் பலரில் நானும் ஒருவன். நீ தனியானவனில்லை.... தோழர்களாய் தோள் கொடுப்போம்.
அப்பாவை பற்றிய உங்க பதிவுகளை முன்னாடி நான் படிச்சிருக்கேன்...விஷயம் பிளஸ் இல் பார்த்ததில் இருந்து ரொம்ப வேதனையா இருக்கு தேவா..இந்த பதிவை படிச்ச பிறகு ...அப்பா இந்த மாதிரி ஒரு அருமையான பையனை இன்னும் கொஞ்சம் நாள் கூட இருந்து பார்க்காமல் போய்ட்ட வேதனை அதிகமாய் வந்தது...என்ன சொல்றதுன்னு தெரியல தேவா :-(
அண்ணா...

அப்பாவின் இழப்பு பேரிழப்புத்தான்...
சிவனின் மீது வழக்குத் தொடுக்கும் உங்கள் வரிகளில் தெரிகிறது அப்பா மீதான பாசம்...

படிக்கும் போது கண்கள் நீரில் நீந்துவதை தடுக்க முடியவில்லை அண்ணா.

அப்பாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

துபாய் வந்துவிட்டீர்களா?
சீனு said…
நண்பர் ஜீவன் சுப்பு மூலம் அறிந்த போது மிகக் கஷ்டமாய் இருந்தது, அத்தனை நல்ஆன்மாக்கள் கொடுக்கும் நல அதிர்வுகள் மூலம் அவ்வுலகில் உங்களுக்காய் பிராத்திபார்,அவர் ஆன்மா அமைதியடையட்டும்
Robert said…
சில இழப்புகளின் வேதனை எதனாலும் ஈடு செய்ய இயலாது. தங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தி அடையவும் தங்கள் குடும்பத்தருக்கு தேற்றுதலை தரவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த