Pages

Wednesday, July 23, 2014

எப்பவும் நான் ராஜா - IIஎன்கிட்ட கதை ஒண்ணு இருக்கு அதுக்கு ஒரு மெட்டுப்போடு பார்க்கலாம் என்று பஞ்சு அருணச்சலம் அந்த இளைஞனிடம் கூறியதுதான் தாமதம். மெட்டோடு சில வார்த்தைகளையும் சேர்த்து அவன் பாடவே தொடங்கி இருந்தான். தன்னத் தனனா... தனானானே......தன்னனானேனனனா... அன்னக்கிளியே உன்னைதேடுதே......என்று அவன் உச்சரித்த பின்புதான் நாம் இன்று கட்டுண்டு கிடக்கும் இசைபெருவெளி மெல்ல விரியத்தொடங்கியது. அவன் உச்சரித்த வார்த்தையே அந்தப் படத்தின் பெயரும் ஆனது. 

எவ்வளவு தேடல் நிறைந்தது தனது பயணம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளுமொரு வாய்ப்பாய் ராஜா சாருக்கு அமைந்து போனது அந்தப் பாடல். ஏக்கம் என்பது ஒரு உணர்வு அதை எப்படி இவ்வளவு சரியாய் ஒரு இசைக்குள் பதியம் போட முடியும் என்ற பிரமிப்பிலிருந்து அந்தப்பாடலைக் கேட்கும் யாராலும் மீள முடியாது. ஒரு மாதிரியான சந்தோசமான பாடல்தான் அது என்றாலும் அதற்குள் நிறைந்து கிடக்குமொரு வெறுமையும், நிலையாமையும்  அலாதியானது. நீ யாரென்று எனக்குத் தெரியாது,  நீ எவ்வடிவமாய் இருப்பதையும் நானறியேன், ஆனால் நீதான் எனக்கு வேண்டும்...

என்ற இலக்கற்ற ஆசையை ஒரு பெண் வெளிப்படுத்துகிறாள்.  அந்த நளினத்தை ஏந்திக் கொண்டு தத்தித் தத்திப் பயணிக்கிறது ராஜாவின் பேரிசை இந்தப் பாடலுக்குள். பாடலைக்  கேட்டுக் கொண்டிருக்கும் போதே வெறுமனே அதைக் கடந்து சென்று விடாமல் சில இடங்களில் பலமாய் நம் மனதை பாடலோடு முடிச்சுப் போட்டுவிடுகிறார் ராஜா சார்....”மழைபெய்ஞ்சா.....” என்று ஜானகி அம்மாவின் குரல் நம்மை வாரி அணைத்து இழுத்து வைத்து உச்சிமுகர்ந்து கட்டியணைத்துக் கொண்டிருக்கும் போதே அதற்குப் பின்னால் உருளும் தபேலா மீண்டும் அழுத்தமின்றி நம்மைப் பாட்டுக்குள் கொண்டும் வந்து விடுகிறது. பாடலின் மூன்று சரணங்களிலும் அவர் இப்படியான மூன்று முடிச்சைப் போட்டு வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்...?

எப்படி யோசித்திருப்பான் இந்தக் கலைஞன்? ஒரு சூழலைச் சொன்னவுடன் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது அந்த மெட்டு என்பதெல்லாம் நம் கற்பனைகளுக்குள் எளிதாய் சிக்கிவிடாது. அழகு எப்போதும் ரசிக்கப்படவேண்டியது ஆராயப்படவேண்டியதல்ல அது போலத்தான் ராஜா சாரின் இசையும் அந்த முழுமையை உணரும் போது உள்ளுக்குள் பூ பூக்கத் தொடங்குகிறது. என் மண்ணிற்கு என்று ஒரு உணர்விருக்கிறது, ஒரு கலாச்சாரம் இருக்கிறது, ஆசைகள், அபிலாஷைகள், கோபங்கள், என்று எல்லாவற்றையும் இசையாய் சொல்ல வேண்டுமெனில் அவன் எல்லா உணர்வுகளுக்குள்ளும் தன்னை கரைத்துக் கொள்ளக் கூடியவனாய் இருக்கவேண்டும். ராஜா சார் வெறுமனே பாடலுக்கு மெட்டுப் போடும் கார்ப்பரேட் ரெடிமேட் மியூசிக் டைரக்டர் கிடையாது.....

அவர் ஒரு கதையைக் கேட்கும் பொழுதே அந்தக் கதைக்குள் வாழத் தொடங்கிவிடுகிறார். ஒவ்வொரு சூழலிலும் அந்த கதாபாத்திரத்தின் மனோநிலை என்ன? காட்சிச்சூழல் என்ன? இதற்கு எங்கிருந்து தொடங்கவேண்டும்? இப்படி கதைக்காய், சூழலுக்காய் நான் அமைக்கும் இசை என் பாடலைக் கேட்க வரும் ரசிகனுக்குள் எப்படி இருந்தால் சரியாய் போய் உட்கார்ந்து கொள்ளும்....என்றெல்லாம் அவர் ஆராய்கிறார்....பின் அந்த சிந்தனையில் ஊறி ஊறி மெளனிக்க அந்த மெளனம் அந்த பெரும் சூன்யமாய் மாறிப்போக அவருக்குள் மெட்டுக்கள் மெல்ல பூக்கத்தொடங்குகின்றன.

எந்த இசைக் கருவியைத் தட்டினால் மனித உடலில் என்ன மாற்றம் நிகழும் என்பதெல்லாம் ராஜா சாருக்கு அத்துப்படி. உங்களுக்கு எல்லாம் ஒன்று தெரியுமா தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் இன்றைக்கு மறைமுகமாய் ஆளுமை செய்து கொண்டிருப்பது ராஜா சாரின் இசை தான்! 1970 களுக்குப் பிறந்த பிள்ளைகள் அத்தனை பேரும் பாக்கியவான்கள்....அவர்களை எல்லாம் ராஜா சாரின் இசைதான் வளர்த்தெடுத்தது... உண்ணவும், உறங்கவும் அவரது பாடல்களே பெருமளவில் உதவின....!

இன்னும் சொல்லப்போனால் தமிழர் வாழ்வின் மனச் சிக்கல்களை அவரின் இசை சுமூகமாய்த் தீர்த்தும் வைத்திருக்கிறது. காதலைச் சொல்லவும் அவர் உதவி இருக்கிறார், திருமணம் செய்த பின்பு வாழ்க்கையை ரசித்து நகரவும் அவரது இசை உதவி இருக்கிறது, வெற்றியின் போதும் தோல்வியின் போதும் துரோகங்களின் போதும்...ராஜா சாரின் இசையே நமக்குத் துணை. ராஜா சாரின் மெட்டுக்கள் நிறைய கவிஞர்களை உருவாக்கியது, வளர்த்தெடுத்தது.. கவிஞர் வைரமுத்துவின் முற்பாதி சினிமா வாழ்கையில் வந்த பாடல்களை எல்லாம் எடுத்துப் பாருங்கள்...அத்தனையும் வைரமாய் ஜொலிக்கும். ராஜா சாரின் மெட்டுக்கள் கொடுத்த ரசனையில் விரிந்த தாமரைகள் அவை....

” ஓ... கொத்து மலரே...
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று....” என்றெல்லாம் வைரமுத்து மெட்டுகளுக்காய் எழுதிய வார்த்தைகளின் வசீகர ஆளுமையும், ராஜா சாரின் இசையும் தோளோடு தோள் நின்று பாடலுக்கு வலுவூட்ட நமக்கு ஏற்பட்டதுதான் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்னும் பரவச அனுபவம்.


வைரமுத்துவின் பிற்பாதி அதாவது ராஜா சாரை விட்டு அவர் நகர்ந்த பின்பு அவருக்கு வேண்டுமானால் தேசிய விருதுகள் கிடைத்திருக்கலாம்...ஆனால்....அவரது கவிதை வரிகள் அவ்வளவு ஆழமாய் தமிழர்களின் மனதில் விழுந்து விருட்சமாகாமல் மேற்கத்திய சப்தங்களுக்குள்ளும், பேரிறைச்சலுக்குள்லும் தன்னை முடக்கிக் கொண்டு வெற்று முனகலாய்த்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிறரின் இசை வைரமுத்துவின் கவிதை வரிகளைத் தின்று செரித்து ஏப்பம் விட்டு விட்டு வெறும் வாத்தியக் கூச்சலாய்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது...ஆனால் ராஜா சாரின் இசை அப்படியானது அல்ல அது தாயன்பு மிக்கது.

மண்டையைப் பிளக்கும் ஒரு உச்சி வெயிலில் காதில் ஹெட்போனோடு சென்னை அண்ணா சாலையின் ஒரு போக்குவரத்து நெரிசலுக்குள் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வியர்வை சட்டையை நனைக்க இங்கும் அங்கும் நகரமுடியாத அளவு வாகனங்களும், வாகனங்களின் புகையும் உங்களை எரிச்சல் படுத்த வெகு கடுப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் ...

அந்த சூழலில்....உங்கள் ஸ்மார்ட் போனிலோ அல்லது எம்.பி3 ப்ளேயரிலோ ஹேராமின் இந்தப் பாடலை தட்டி விடுங்கள்,  பிறகு பாருங்கள் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று....

பாடல் ஆரம்பிக்கும் போதே ஒரு போதை கிறு கிறுவென்று உங்கள் தலைக்கேறும்...., அதிரடியான இசை உங்களைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டுபோய் ஒரு குளு குளு அறையில்  கிடத்தி  அந்த மயக்கும் பாடலை அஜய் சக்கரவர்த்தி பாடத் தொடங்குகையில் நீங்கள் பகுதி விழிப்பு நிலைக்குள் சென்றே விடுவீர்கள்...! உங்களின் எரிச்சலூட்டும் புறசூழல் ஒடுங்கிக் கொள்ள ஒரு ராட்சசனாய் ராஜா சாரின் இசை உங்களை ஆளும் அற்புதத் தருணம் அது. கிறக்கம் என்பது வேறு ஏக்கம் என்பது வேறு போன ’அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ என்று ஒரு பெண்ணின் ஏக்கம் நிறைந்த உணர்வுகளைப் பரிமாறிய இசை.....

இப்போது இந்தப்பாடலில் மூலம் கிறக்கம் நிறைந்த ஒரு மனிதனின் காதலை, காமத்தை, மதுவின் போதையை, குளுமையான அந்த இரவின் வாளிப்பை நமக்குக் கொடுத்து ஒரு கதகதப்பையும் உருவாக்கி விடுகிறது. இப்போது சொல்லுங்கள்...

நம்மை ஆட்டிவிக்கும் ராஜாசாரின் இசை எத்தகையது....? ராஜா சார் யார் என்று....? வடஇந்தியச் சாயலைப் பிழிந்தெடுத்து அந்த சாயத்தில் ராஜா சார் நிகழ்த்தி இருக்கும் அந்த அதிசயத்தை நீங்கள் இப்போது வேண்டுமானலும் கேட்டுப்பாருங்களேன்....


மேலே நான் சொன்ன எல்லாம் உங்களுக்குள் நடக்கும்....

உயிர்களே...
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி
கிரஹத்துக்கு வந்ததே......


                              (ராஜாவின் படையெடுப்பு தொடரும்...)
தேவா சுப்பையா...


3 comments:

Raj said...

Wonderful writing about Raja Sir...all you said is true.

Rajaram said...

மிக அருமை தம்பி, இன்னும் நிறைய எழுதுங்க!! தொடரட்டும், உங்கள் பணி!!

satheesh prabhu said...

Super sir, please continue to unearth Raja's treasure .we are eagerly waiting