Pages

Saturday, July 5, 2014

தக்க்ஷின் குட் ஈவினிங் - 3


இதுவரைஇனி...

12 வருடம் என்பது ஒரு சிறு காலச் சுழற்சி. அந்த சுழற்சிக்குள் எதுவுமே நடந்து விடாதது மாதிரி தோன்றினாலும் காலம் மிகையானவற்றை விழுங்கியபடியே வேகமாய் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த இந்த வாழ்க்கையில் இன்பம் துய்க்க வேண்டிய ஆசையில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மறுக்காமல் காலம் கொடுக்கும் பரிசுதான் மரணம்.

ஆனந்த்குமார் சார் இறந்து போய்விட்டார் என்பதை கேட்ட நான் நிஜமாய் ஸ்தம்பித்துப் போனேன். இதே போலத்தான் என்னுடைய அப்பா எப்போதும் துணி தைக்க என்னை அழைத்துச் செல்லும் பியூட்டி டெய்லர்ஸ்க்கு நான் கடந்த முறை சென்ற போது எப்போதும் அப்பாவுக்கு அளவெடுக்கும் சிவதாசன் சார் போட்டோவிற்கு மாலையிடப்பட்டிருந்தது. அவரின் மகன்கள் இப்போது அந்த தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னை கடைக்கு சிறுவயதில் அழைத்துச் சென்று ஒரு அறிமுகத்தைக் கொடுத்த என் அப்பாவும் இன்று இல்லை அப்பாவுக்கு துணி தைத்த சிவதாசன் சாரும் இல்லை. எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. மாறாமல் ஒரு பேரியக்கம் மட்டும் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

என்ன தேவ்... அப்டியே நின்னுட்ட....? எம்.டி சாரும் இல்லை அவுங்க மனைவியும் இப்ப இல்லை..ரெண்டு பேருமே இறந்துட்டாங்கப்பா.....ஹரி அண்ணா என் தோளில் கை வைத்தார். நான் எம்.டி சாரின் ஜீப்பை பார்த்துக் கொண்டே அதன் அருகில் சென்றேன். துருப்பிடித்து நொறுங்கிப் போய் கிடந்தது அது. ஸ்டேரிங்கில் கை வைத்து  தடவிப் பார்த்தேன். சூட்சுமமாய் அங்கே ஒரு இருப்பு இருப்பது போல எனக்குத் தோன்றியது. மனிதர்கள் மரித்துப் போன பின்பு அவர்கள் உபயோகம் செய்த பொருட்கள் கைவிடப்பட்டு விடுகின்றன. அவர்கள் உடுத்திய உடை. உபயோகம் செய்த பொருட்கள், வைத்திருந்த பொருட்கள் எல்லாமே..... ஒரு மிகப்பெரிய அமைதியைச் சுமந்தபடிதான் ஏதோ ஒரு மூலையில் கிடக்கின்றன.

என் தாத்தாவின் சட்டையும் வேஷ்டியும், அப்பத்தாவின் சுங்கிடிச் சேலைகளும் இன்னமும் கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டின் அறைவீட்டிற்குள்  ஒரு ட்ரங் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. ரகசியம் என்று அவர்கள் காத்து வைத்திருந்த கடிதங்கள், பத்திரங்கள், இன்ன பிற பாண்டங்கள் எல்லாம் பொதுவில்  வந்து விட்டன. அவர்கள் உபயோகம் செய்தவற்றை வேறு யாரிடமும் கொடுக்க பெரும்பாலும் நமக்கு மனம் வருவதுமில்லை, நாம் பயன்படுத்துவதும் இல்லை. 

மிகப்பெரிய சோகத்தோடு நின்று கொண்டிருந்த அந்த ஜீப்பிற்குள் தலையை விட்டு பார்த்தேன். தூசி படிந்து கிடந்தது அங்கே என்னுடைய பழைய நினைவுகள். வண்டியில் சிறு சப்தம் வந்தாலும் துடி துடித்துப் போய் சர்வீசுக்கு வண்டியை அனுப்புய்யா என்று சப்தம் போட்ட அந்த மனிதர் எங்கே இப்போது? துருப்பிடித்து இத்துப் போயிருக்கும் இந்த வண்டியைப் பார்த்தால் அவர் என்ன சொல்லுவார் இப்போது? பாழடைந்து இன்னமும் கைவிடப்பட்டுக் கிடக்கும் இந்த ஹோட்டலைப் பார்த்தால் அவர் இன்னும் வேதனைதானே அடைவார்...? ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி காலம் மனிதர்களைக் கொண்டு சென்று விடுவது நல்லதுதானோ என்று எனக்குத் தோன்றியது.

எங்கே சென்று கொண்டிருக்கீறீர்கள் மனிதர்களே? 
உங்கள் அங்கீகாரத்தை விழுங்கப் போகும்
காலப் பெரும்பாறையின் உங்கள் நுனிக்கா?
பேசிக் கொண்டே இருக்கும் உங்கள் நாவுகளை
இந்தக் காலம் ஒரு நாள் எழும்பவே விடாது...
என்பது தெரியுமா உங்களுக்கு..?
நான் இல்லாமல் ஒன்றும் நகராது என்று சப்தமிட்டவர்களெல்லாம்
எங்கே போனார்கள் இன்று...?
சிரஞ்சீவியாய் ஜீவித்து நிற்பேன் என்றவர்களும்
யுகங்களின் நாயகர்கள் என்று வர்ணணை செய்யப்பட்டவர்களும்
பதுங்கிக் கிடக்கும் பிரதேசம் எதுவென்று தெரியுமா
இந்த பிரபஞ்சத்தில்...?

இல்லண்ணா.... திடீர்ன்னு கேட்ட உடனே அதிர்ச்சியாயிடுச்சு. சமாளித்தபடியே எப்டிண்ணா இறந்தாங்க  என்று ஹரி அண்ணாவிடம் கேட்டதற்கு நான் எதிர்ப்பார்த்திருந்த ஹார்ட் அட்டாக்கே பதிலாய் வந்தது. இறப்பதற்கு முன்பு மிகவும் சங்கடமான சூழலில் அவர் இருந்ததாக ஹரி அண்ணா சொன்னார்.  கேட்டுக் கொண்டே மெதுவாக ஹோட்டலைச் சுற்றி வந்தேன். மீண்டும் ஹோட்டல் லாபிக்கு வந்தேன். ரிஷப்சன் கவுண்டருக்குள் சென்று நின்று பார்த்தேன்.  அங்கேதான் என்னுடைய உத்தியோகம் வாழ்க்கை தொடங்கியது. இன்றைய நானின் ஆரம்ப நுனி அந்த ரிஷப்சன் கவுண்டர்தான். 

" தக்க்ஷின் குட் ஈவினிங்....." மனதிற்குள் கூறிப்பார்த்தேன்.  அழுகை வந்தது. கவுண்டர்  டெஸ்க்கை கையால் துடைத்து விட்டு கையை மடித்து முகம் வைத்து கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். என்னை மீறி மீண்டும் கண்ணீர் வந்தது. தக்க்ஷின் மீண்டும் எழாது என்றே எனக்குத் தோன்றியது. ஹரி அண்ணா கூல்ட்ரிங்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். குடிக்க சொல்லி விட்டு அவரது குடும்ப சூழல் மற்றும் பிள்ளைகள் பற்றி பேசினார். கல்லூரி இறுதியாண்டில் இருக்கும் அவரது மூத்த மகனைப் பற்றிச் சொன்னார். வாய்ப்பு இருந்தால் துபாய்க்கு கூட்டிட்டுப் போப்பா....சொல்லி விட்டு தோளில் கைபோட்டு இறுக்கிக் கொண்டார்.

பைண்ணா... என்று  சொல்லி விட்டு....மீண்டுமொரு முறை தக்க்ஷினைப் பார்த்தேன்.


கட்டிடம் என்பது உயிரில்லாததுதான் ஆனால் அதன் உள்ளே மிகப்பெரிய வாழ்க்கை இருந்தது. எத்தனையோ குடும்பங்களின் பிழைப்பு இருந்தது. யார் யாருக்கோ  அந்த  கட்டிடத்தால் திருமணம் நடந்திருக்கிறது, பிள்ளைப் பேறுகள் நடந்திருக்கின்றன. எத்தனையோ குடும்பங்களின் கடன்கள் அடைக்கப்பட்டிருக்கின்றன்.  பிள்ளைகள் படித்து பட்டதாரி ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வந்த விருந்தினர்கள் அத்தனை பேரும் உற்சாகமாய் வந்து தங்கிச் சென்றிருக்கின்றார்கள் என்னைப் போல எத்தனையோ பேர்களுக்கு வாழ்க்கையை வாரி வழங்கி இருக்கிறது அந்த கட்டிடம். எந்த ஒரு நிறுவனமோ அல்லது வீடோ வெறுமனே ஒரு கட்டிடம் மட்டுமல்ல அது அங்கிருக்கும் சூழலாலும் மனிதர்களாலும் ஜீவன் நிறைந்தே எப்போதும் இருக்கிறது.

சரிகளும் தவறுகளும் இடைவிடாது நிகழ்ந்த அந்த தக்க்ஷின் என்னும் கட்டிடம் இப்போது அந்திமத்தில் தன் இளமையை நினைவு கூர்ந்த படி வீட்டின் மூலையில் கிடக்கும் வயதான மனிதரைப் போல சென்னை, நந்தனம் வெங்கட்நாராயணா சாலையில் மெளனமாய் நின்று கொண்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் அவசர வேலைகளுக்காய் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு அதுவும் ஒரு கட்டிடம் அவ்வளவுதான்....

ஆனால்....

என்னைப் போன்ற எத்தனையோ பேர்களுக்கு இது போன்ற வாழ்க்கையை அளித்த, அளிக்க காத்திருக்கும் கட்டிடங்கள் எத்தனை எத்தனையோ கோடிகள் இந்த உலகம் முழுதும் இருக்கின்றன. 

சென்னையின் மதியம் 3 மணி கோடை வெயிலைத் தாங்க முடியாமல் ஹெல்மெட்டின் புழுக்கத்தில் வண்டியை போரூர் நோக்கி விரட்டிக் கொண்டிருந்தேன். நான்...!  

மனம் முழுதும் தக்க்ஷின் வலியாய் நிரம்பிக் கிடந்தது.......!தேவா சுப்பையா...
1 comment:

சே. குமார் said...

படிக்கும் போது கண்கள் கலங்குவதை தடுக்க முடியவில்லை அண்ணா...

உங்கள் எழுத்து வரிகளோடு வாசிக்க மட்டுமல்ல சுவாசிக்கவும் வைத்துவிடுகின்றன...