Pages

Tuesday, April 16, 2013

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....!பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க நேரமின்மையும், நமது கலாச்சாரம் என்பதே செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் மூலம்தான் நமது பிள்ளைகளுக்கு சென்றடைய முடியும் என்ற நிர்ப்பந்தமும் நமக்கு ஏற்பட்டுப் போனால் அது எவ்வளவு பெரிய சாபம். எவ்வளவு பெரிய கொடுமை. ஆமாம்..பெரும்பாலும் வெளிநாட்டில் வாழும் அத்தனை பேருக்கும் இந்த கொடுமையும் சாபமும் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் நமது கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லும் பண்டிகைகளுக்கும்,  திருமணங்களுக்கும்
எப்போதாவதுதான் தாய் நாட்டில் செல்லும் வாய்ப்பு நமது குழந்தைகளுக்கு இருக்கிறது.

வாழும் சூழல் நமது தாய் மொழியோடு பந்தப்பட்டு இருக்காவிடில் அவர்கள் எப்படி தங்களைத் தமிழ்ப் பிள்ளைகளாக உணர்வார்கள்? தமிழ் என்னும் மொழியின் வளத்தையும் தமிழர்களுக்கென்று இருக்கும் பாரம்பரிய கலாச்சாரத்தையும், நமது முத்தமிழின் சுவையையும் அறிவார்கள்...? எட்டு வருடமாக என் மகளுக்கு அப்படியான ஒரு சூழலை எங்களால் அமைத்துக் கொடுக்க முடியாமல் ஒரு குற்ற உணர்ச்சியுடன் தான் எங்களின் அமீரக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. தமிழ்த்துளி பற்றி என்னுடைய கல்லூரி சீனியர்  சங்கர் அண்ணன் கூறிய பின்பு அதில் நிறைய தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை மையப்படுத்தி திருமதி. ப்ரியா ராஜன் நிறைய செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து இணைந்த உடன் இன்று அந்த குற்ற உணர்ச்சி சிறிதேனும் எனக்கு குறைந்திருக்கிறது.

தமிழின் பெயரால் எத்தனையோ அமைப்புகள் அமீரகத்தில் இருந்தாலும் தமிழ்த்துளியின் செயல்பாடுகள் அவற்றில் இருந்து வேறுபட்டது. தமிழ்த் துளி கிளைகளையும், இலைகளையும், பழங்களையும் நோக்கி செல்லாமல், அதன் சீரமைப்புகள் நேரடியாக விதைகளைச் சென்று செப்பனிடுவதுதான் இதன் சிறப்பு. தமிழ்ப்பிள்ளைகள் தமிழிலேயே பேசவேண்டும் என்பதோடு வீட்டில் பெற்றோர்களும் தமிழிலேயே பேசுங்கள் என்று வலியுறுத்தும் தமிழ்த் துளி போன்ற அமைப்புகள் சர்வ நிச்சயமாய் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

கடந்த வாரம் தமிழ்த்துளியின் இரண்டாம் ஆண்டு விழாவினை திங்கள் விழா என்ற பெயரில் நாங்கள் கொண்டாடிய பொழுது எங்களின் நிகழ்ச்சிகளை எமது பிள்ளைகளே முன் நின்று நடத்தினர். தமிழ் படிக்கவும் எழுதவும் சூழல் அமையாத தளிர்கள் எல்லாம் தமிழ்த் துளியின் அரவணைப்பால் செந்தமிழில் பேசியும், நமது கலாச்சார நடனங்களை ஆடியும் எம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். தமிழ்த் துளி குழந்தைகளுக்கான அமைப்பு. குழந்தைகளே அதன் உறுப்பினர்கள் என்ற ரீதீயில் செம்மையாய் வடிவமைத்திருக்கும் ப்ரியா ராஜன் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

அதிவேக ரயிலொன்றின் வேகத்தை ஒத்த அமீரக வாழ்க்கையில் நமது மொழிக்காய், நமது பிள்ளைகளின் தெளிவுக்காய் நேரம் ஒதுக்கி இத்தகைய அமைப்புகளை நடத்துவதும், அவ்வப்போது அவர்களுக்கான தனித்திறன்போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து செய்தலும் எளிதான காரியம் அல்ல. தமிழ் என்பது வெறும் மொழியல்ல அது நமது உணர்வு என்பதால்தான் எல்லா கடுமையான அலுவல்களுக்கும் நடுவே தமிழ்த்துளி இயங்கிக் கொண்டிருக்கிறது.


தமிழ்த்துளியின் இரண்டாம் ஆண்டு விழாவான திங்கள் விழாவின் சிறப்பு விருந்தினராய் சொல்லரசி தேச மங்கையர்க்கரசி விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்தார். இறையால் ஆசிர்வதிக்கப்பட்ட சிறப்பு ஆளுமை கொண்ட சொல்லரசி தேச மங்கையர்க்கரசியின் சில ஆன்மீகச் சொற்பொழிவுகளை கேட்டிருந்த எனக்கு...

தமிழ்த்துளியின் திங்கள் விழாவில் அவர் பாய்ந்த தமிழ்ப்பாய்ச்சலைக் கண்டு பிரமிப்பும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. அம்மா என்றும் அப்பா என்றும் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை அழைக்க வேண்டியதின் அறிவியல் நிர்ப்பந்தத்தை அவர் விளக்கினார். ' அ ' என்பது உயிரெழுத்து.. 'ம்' என்பது மெய்யெழுத்து இந்த உயிரும் மெய்யும்  கூடி உயிர்மெய் எழுத்தான 'மா' வை பெற்றெடுக்கிறது, இதே போலத்தான் அப்பா என்ற சொல்லும்.... என்று விளக்கிய அவர் அம்மா என்றும் அப்பா என்றும் நாம் அழுத்தமாய்  உச்சரிக்கும் போது மூளையில் சிந்தனையைத் தூண்டக் கூடிய திரவம் இயல்பிலேயே சுரக்கிறது என்றும் விவரித்தார்.

அவசர யுகத்தில் எல்லாமே நாகரீகத்தின் பொருட்டு பழமையாய்ப் பார்க்கப்பட்டு மாற்றிக் கொள்ளப்படுகிறது ஆனால் மொழி விசயத்தில் நாம் அப்படி இருக்கக் கூடாது. தமிழ் ஆயுளை வளர்க்கும் மொழி. என்றும் இனிய தமிழ் உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளையும் விட சுவையான மொழி. பாரதியார் எல்லா மொழிகளையும்  கற்றவர் ஆனாலும்.... யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்றார் என்றால் தமிழ் எவ்வளவு வளமான மொழி என்று அறிக;

இப்படியாய் தொடர்ச்சியாய் தமிழை மையப்படுத்தி திருமதி. தேச மங்கையர்க்கரசி  சொற்பொழிவாற்றியதோடு தமிழ்த்துளியின் திங்கள் விழா அட்டகாசமாய் நிறைவுற்றது.


திங்கள் விழா என்னும் கருப்பொருளில் தமிழ்த்துளி வடிவமைத்திருந்தது வெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் அல்ல... அது ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் மையப்படுத்திய பாடல்கள், உரையாடல்கள் மற்றும் நடனங்கள் என்று கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்தானே...!!ஆமாம்...இப்போது எங்கள் பிள்ளைகளுக்கு, பாரதியோடு பாரதிதாசன், கண்ணதாசன், திருவள்ளுவர், என்று தமிழ்ப் பெரும் புலவர்களையும் தெரியும், தமிழ் மாதங்களும் தெரியும்...தமிழ் மொழியின் வளமும் அதை பேச வேண்டிய அறிய வேண்டிய அவசியமும் தெரியும்...

பிஞ்சுகளின் வாயில்...
தமிழ்ச் சொற்களாய் 
தத்தித் தத்தி 
நடை பயின்ற 
கொஞ்சு தமிழின்
அழகில் பறிபோனதே
எமது நெஞ்சம்...!

தாய்த் தமிழகத்தில் இருந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசும் மோகம் கொண்ட என் உறவுகளே....உங்கள் பிள்ளைகளிடம் தமிழில் பேசுங்கள்...! தமிழின் ஆளுமையையும் தமிழராய் இருக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்தியம்புங்கள்...!

தமிழ் நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழின் பெயரால் அமைப்புக்கள் வைத்திருக்கும் தோழர்களே...உங்கள் அமைப்பின் செயல்பாட்டினை தமிழின் வளர்ச்சியை மையப்படுத்தியே நகருங்கள்.... தமிழ் பேசா, தமிழின் சிறப்பு இயம்பா எந்தச் செயலையும் தமிழின் பெயர் சொல்லி இனியும் செய்யாதீர்கள்...! தமிழ்த் துளி போன்ற அமைப்புகள் அமீரகம் மட்டுமின்றி இன்னும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உருவாகி எம் செந்தமிழினை  எமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கட்டும்..!

" தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் "


தேவா. S
4 comments:

கவியாழி கண்ணதாசன் said...

உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

தேச மங்கையர்க்கரசி அவர்களின் அம்மா அப்பா விளக்கம் நன்று... நன்றி...

சீனு said...

மிக அருமையான பணியை அமீரகத்தில் செய்து வருகிறீர்கள்... அம்மா என்றும் அப்பா என்று அழைப்பதன் பின் இருக்கும் அறிவியல் காரணம் புதுமை சார்...

Shankar M said...

நன்றி தேவா... அருமையாய் வடிவமைக்கப்பட்டப் பதிவு. தமிழ் மாதங்கள் 12ஐயும் சிறு குழந்தைகள் சொன்ன விதம், தமிழில் நிகழ்ச்சியினை முன்னின்று நடத்திய இளம் தளிர்கள், ஒவ்வொரு மாதத்தின் சிறப்பினையும் குழந்தைகள் முத்தமிழாம் இயல், இசை, நாடகம் என்று எடுத்தியம்பியது, சொல்லரசி தேச மங்கையர்க்கரசி பேசிய பேச்சு, நன்றியுரை, நடுவில் நடந்த புத்தக வெளீயீடு என எல்லாவுமாய் சேர்ந்து ஒரு இனிய தமிழ் இரவு.... இந்த தமிழ் துளிக்கு வித்திட்ட ப்ரியா ராஜன், இணைந்து பணியாற்றும் ஒத்த கருத்துடைய தமிழ் ஆர்வம் மிக்க சிலர்.... தேச மங்கையர்க்கரசியின் பேச்சில் சொன்ன மற்றுமொரு கருத்து: எந்த மொழியிலும் எழுதப்படும் எழுத்தின் வடிவம் கோடுகள், அரை வட்டம் மற்றும் முழுவட்டம். இவை அனைத்தும் சேர்ந்து இருப்பது தமிழின் முதல் எழுத்தாம் 'அ'. வளர்க தமிழ்....