Pages

Saturday, April 6, 2013

துன்பம் நேர்கையில்...யாழெடுத்து..நீ..!யாம் எமது தமிழையே எல்லா சூழ்நிலைகளுக்கும் துணைப்படுத்திக் கொண்டு நகர்ந்திருக்கிறோம். எமது வலிகளை எல்லாம் வார்த்தைகளாக்க முயலும் தருணங்களில் தாய்த்தமிழே எமது சிந்தையிலிருந்து தாயாய் தாலாட்டுப்பாடல்கள் பாடவும் செய்திருக்கிறது, குழந்தையாய் வரிகளில் தவழ்ந்தோடி எமக்கு இன்பம் சேர்த்துமிருக்கிறது. எமது காதலைச் சொல்ல யாம் கவிதைகள் புனைவதுண்டு. எமது வீர செருக்கினை சீறிப்பாயும் வரிகளில் பரவ விட்டதுமுண்டு. கேளிக்கை குதூகலங்களை வார்த்தைகளுக்குள் சொருகி துள்ளிக் குதித்ததுமுண்டு. எமது மொழியே எமது யாக்கைகளின் வெளிப்பாடாகிப் போக சுவாசிக்கும் உயிர்க்காற்றாய் எம்முள் நிறைந்தே அது எப்போதும் கிடக்கிறது.

ஞானத்தைப் பேசவும், போகத்தைப் பேசவும், பக்தியைப் பேசவும், பகுத்தறிவைப் பேசவும் எம்மிடம் இருக்கும் வளமையான எம் மொழி எப்போதும் சோடை போனதில்லை. ஏதோ ஒன்றை யாம் பகிரவிரும்பும் முன்னரே வில்லில் தானே ஏறி நின்று நாணேற்றிக் கொண்டு விறைத்து நிற்கும் அம்பாய் எம் வார்த்தைகள் எய்யப்போகும் இலக்கினை துடிப்பாய் எதிர் நோக்கி நிற்கும். இப்படியாய் எம் மொழியினைக் கொண்டு எமது உணர்வுகளை வடிக்கும் யாம்....துன்பம் நேர்கையில் மட்டும் சோர்ந்து விடுவோமா என்ன....

யாழெடுத்து மீட்டி எம்மை மகிழ்விக்க எம் நெஞ்சுக்கினியவளை(ரை) நாம் அழைக்கும் பொழுதிலே தனியாளாய் அவள்(ர்) வேண்டாம் கூட தமிழும் வேண்டும் என்ற பெரும் விருப்பங்களையே யாம் கொண்டிருந்தோம். ஆதலால்....

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

என்ற விண்ணப்பத்தை வைத்து விட்டு. எமது இன்பம் என்ன என்பதை மறை பொருளாக்குகையில் மறை பொருளில் அர்த்தங்கள் மறைந்து போய்விடக்கூடாதென்று....

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே

அன்பில்லாத எமது நெஞ்சில் தமிழ் இல்லாமல் போனதால்தான்...இத்தனை அல்லலும் சூழ்ந்ததென்று அறிக என் உயிரே அதனால்....நீ தமிழில் பாடி யாழினை இசைத்தால் என் அல்லல் நீங்கித்தான் போகுமென்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன் ஏனென்றால் தமிழ் என்றால் அது ஒரு வெறுமனே பத்தோடு பதினோராவது மொழியல்ல....

ஆதியில் உணர்வுகளை வெளிக்காட்ட மனிதன் தனது சப்தங்களைப் பயன்படுத்தி சக மனிதர்களை தொடர்பு கொண்டான். அந்த சப்தங்கள் இப்போது மொழியென திரிந்து அலங்கரித்துக் கொண்டு, உலகெங்கிலும் ஒவ்வொரு நிலத்திற்கேற்றார் போல, வாழும் சூழலுக்கு ஏற்றார்போல, தட்ப வெட்ப புவியியல் அமைப்புக்கு ஏற்றார் போல, இருந்த தனது இயல்பினை இழந்திருக்கிறது.

தமிழும் ஆதி சப்தங்களின் கோர்வைதான் என்றாலும் அதன் செழுமையும் உணர்வுகளை வெளிப்படுத்துகையில் இன்னமும் இருக்கும் அதன் பூர்வாங்க கன்னித்தன்மையும் இயல்பாய் நம் உணர்வுகளை மீட்டத்தான் செய்கின்றன. தமிழ் செம்மொழி. உணர்வுகள் என்னும் சூட்சுமத்தின் ஸ்தூல வடிவம். அதனால் நீ எம் தாய்த் தமிழில் ஒரு பண் பாடி இந்த யாழினை இசைக்கையில் எமது துயரங்கள் எல்லாம் ஓடித்தானே கண்ணே போய்விடும். 

என்று தமிழில் எழுதி தமிழால் தன் துயர் போக்கிக் கொள்ளும் பாவேந்தர் பாரதிதாசன் ஐயா அவர்கள் எந்த அளவுக்கு தமிழை நேசித்திருக்கிறார் என்று நினைக்கும் போது நமக்கு ஆனந்தக் கண்ணீர்தான் வருகிறது.

இனி துன்பம் நேர்கையில்...நீங்களும் நானும் கவலையுற வேண்டாம். நம் தாய்த் தமிழ் இருக்கிறது. தமிழ் மொழியின் செழுமையில் வெளிப்பட்டு நிற்கும் வல்லமை நிறைந்த கவிதைகளும் கட்டுரைகளும், கதைகளும், இசையும் நம்மிடம் கொட்டிக் கிடக்கின்றன..! ப்ரியம் நிறைந்த பாடல் ஒன்றை வசீகரிக்கும் குரல் ஒன்று வெளிப்படுத்தும் போது வார்த்தைகளின் அழுத்தங்களும், மொழியின் வளமையும் இசைக்குள் போய் ஒளிந்து கொண்டு நம்மிடம் கண்ணாமூச்சி ஆடுகின்றன. இன்பத்தில் திளைப்பதென்றால் என்னவென்று நம்மால் உணரமுடியும் தருணங்கள் அதி அற்புதமானவை.

இப்படித்தான் பாரதிதாசனின் இந்தப்பாடலை இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது பல்வேறு அறியப்பட்ட பிரபலங்களின் குரல்களில் இசைக்கருவிகளோடு நிறையவே காணொளிகள் இருந்தாலும் எந்த வித தாளக் கருவிகளும் இல்லாமல், பாடலின் முழுமையான வலியையும் தனது குரலுக்குள் கொண்டு வந்து உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் சவீதாவின்  இந்தக் காணொளிக்குள் விழுந்த என்னால் வெகு நேரம் வெளிவர முடியவில்லை.

தமிழின் சுவையோடு நாம் நகர்ந்து கொண்டிருக்கையில் வார்த்தைகளுக்கு கட்டுப்படாத ஒரு காதலுணர்வும்  சூழ்ந்து கொள்ள,  எனது  உணர்வுகள் விழிப்பு நிலையிலேயே துன்பத்திலிருந்து இன்பம் நோக்கி இடம் பெயர எனது பொழுது ரம்யமானது..

வாசித்தலும், கேட்டலும் சுகம். அதை விளங்கி வெளிப்படுத்துதல் என்பது இறையின் ஆசிர்வாதம். துன்பம் நிறைந்த மனதோடு காணொளியை கேட்க ஆரம்பித்த எனக்கு....யாழெடுத்து எல்லாம் வல்ல பெருஞ்சக்தி தமிழில் பாடி....ஆசுவாசப்படுத்தியதைப் போல உணர்ந்தேனாதலால்...யாம் பெற்ற இன்பத்தை உங்களிடமும் சமர்ப்பிக்கிறேன்.தமிழ் படித்து துயரறுப்போம்....தமிழ் படித்து உயர்வுறுவோம்....! வாழ்க தமிழ்!!!!


தேவா.S3 comments:

ஜீவன் சுப்பு said...

பிரமாதம் அண்ணா ...!

ஒரே ஒரு வேண்டுகோள் : தமிழைப்பற்றி எழுதியுள்ளீர்கள் . அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுத்துப்பிழை இருப்பதாக தெரிகிறது . பாருங்க அண்ணா ...!

dheva said...

ஜீவன் சுப்பு @ சரி பண்ணி இருக்கேன் தம்பி!

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை ஆட்கொள்ளும், பரவசப்படுத்தும், அமைதிப்படுத்தும் பல பாடல்களில், ஒரு பாடலை ஆழ்ந்து... உணர்ந்து... தமிழின் சிறப்பிற்கு நன்றி... வாழ்த்துக்கள்...