Pages

Tuesday, February 12, 2013

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!காதலிக்கும் அத்தனை பேரும் ஒரு ஆணின் வடிவிலும் பெண்ணின் வடிவிலும் அந்த அற்புத சக்தியை உணர்ந்திருக்கும் போது காதலர் தினம் கொண்டாடி விட்டுததான் போகட்டுமே... என்று நான் சொல்லி முடித்த மூன்றாவது விநாடியில் உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் அவர்களை காதலிக்க விடுவீர்களா? அவர்களின் காதலை ஆதரிப்பீர்களா என்று முன்னூறு உதடுகள் என்னைச் சுற்றி  முணு முணுப்பதின் பின்னணியில்... ஐயம் அக்மார்க் க்ளியர் பெர்சனாலிட்டி என்று விளம்பரம் செய்து கொள்ள முனையும் மனோபாவம் இருப்பது எனக்கு தெரியாமலில்லை..

காதலை ஏதாவது செய்து தடுத்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? தடுத்து நின்று விட்டால் அது எப்படி சார் காதல் ஆகும்..? இப்போது யாரும் காதலிப்பதில்லை அது வெறும் காமத்திற்கான முன்னேற்பாடுதான் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... உங்களின் எனதின்  காதல் புகைவண்டிகள் காம ஊருக்குள் செல்லாமல் தான் பயணித்தது என்பதை உறுதி செய்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது. முத்தமிடுதலை ரகசியமாய், கலவரத்தோடு நாம் செய்யும் போது சாதாரண முத்தமிடுதல் கூட காமத்தின் உச்சமாய் பார்க்கப்படுகிறது நம்மால்...

காமமே பொதுப்படையாக சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்ற புரிதலை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கையில் நீங்கள் காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று சொல்வது எப்படி சரி..? வேண்டுமென்றால் எப்படி காதலர் தினம் கொண்டாடுவது என்று கற்றுக் கொடுங்கள்... என்று நான் சொல்வதும் உங்களுக்கு சரிப்பட்டு வராது, ஏனென்றால் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொடுக்க அதன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்தானே...? காதல் என்று சொல்லவே கூச்சப்படும் நமக்கு எப்படி காதல் தெரியும்..? இப்போது  கூட நான் காதல் ... காதல் .. காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் பலரின் தலைக்குள் காமம்.. காமம்.. காமம்.... என்றே பலமாய் ஒலித்துக் கொண்டிருக்கும்.

கற்றுக் கொடுக்க அடிப்படையில் ஒரு புரிதல் வேண்டும் ஆனால் மறுப்பதற்கு எந்தவித அறிவும் தேவையில்லை. ஒரு விசயத்தை மறுக்க நீங்கள் அந்த விசயத்தில் எக்ஸ்பர்ட்டாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் முரண்கள் மட்டுமே போதும். இறுக காதுகளை பொத்திக் கொண்டு.. நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன்..... உன் வார்த்தைகளைக் கடந்து உன்னை நான் உற்று நோக்கமாட்டேன்.. நான் ஒரு வட்டத்திற்குள் சுற்றி வரும் வண்டு... இப்படியே பேசிப் பேசி மூர்க்கமாய் பொதுவில் மறுத்ததையெல்லாம் கள்ளத்தனமாய் யாரும் காணாவண்ணம் செய்து விட்டு....

அமர்க்களமாய் ஒரு நாள் செத்துப் போய்விடலாம் என்ற பிடிவாதம் நமக்கு. ஒரு பெண் ஆணை காதலிப்பதையும், ஆண் பெண்ணை காதலிப்பதையும் அடிப்படையில் இங்கே மதத்தை இறுக்கமாய் கட்டிக் கொண்டு ஒழுக்க நெறிகளைப் பற்றி பேசுபவர்கள் வேகமாய் மறுக்கிறார்கள். காதல் என்பது காலை 7:30ல் இருந்து 9:40க்குள்  ஒரு ஸ்விட்ச் போட்ட உடனே வரவேண்டும்...ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டால் போய்விட வேண்டும் என்னும் ரீதியில் காதலுக்கு வரையறை கொடுப்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.......!

இன்னும் சொல்லப்போனால் காதல் என்பது இவர்களின் பாஷையில் சர்வ நிச்சயமாய் ஆண், பெண் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.. இந்த ஆணுக்கு இந்த பெண்ணிடம் மட்டுமே வரவேண்டும் என்ற கொள்கை வேலிகளை போட்டுக் கொண்டதும் கூட. காதலை காதலாய் கொண்டிருந்தால் இந்த கொள்கை வேலிகளும் கட்டுப்பாடுகளும் தேவையற்றது என்பதை இவர்கள் ஒரு போதும் உணர்ந்திருக்கவில்லை...

ஏனென்றால் இவர்களின் காதல் புலிப்பாய்ச்சலில் ஒரு கணத்திற்குள் காமத்தை எட்டிப்பிடிக்கும் பிண்டங்கள் தழுவும் காமத்தை பறிறியே எப்போதும் சிந்திக்கிறது. காதலை உணர்வாய் உள்ளுக்குள் தேக்கி வைத்திருக்க இவர்களுக்குத் தெரியாது. நேசிக்க இவர்களுக்கு இவர்கள் சொல்படி கேட்கும் ஒரு பொம்மை ஒன்று எதிரே இருக்கவேண்டும். அந்த பொம்மை இவர்கள் சொல்படி மட்டுமே கேட்கவேண்டும்.. அந்த பொம்மை சொல்வதை இவர்கள் கேட்பதாய் உறுதியும் செய்து கொள்வார்கள்.

அவ்வளவுதான் காதல்...முடிந்து போயிற்று...! ஒருவரை ஒருவர் இரும்புச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு நிபந்தனைக் கத்தியை ஒருவர் கழுத்தில் ஒருவர் வைத்துக் என்னை உனக்குப் பிடித்தால் உன்னையும் எனக்குப் பிடிக்கும். உன்னை எனக்கு பிடிக்க வேண்டுமெனில் நீ நான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்று மாறி மாறி சுயத்தை அழித்துக் கொள்ளும் செயல்தான் இங்கே காதல் என்று பெரும்பாலும் அறியப்படுகிறது.

எனது பருவத்தில் எனக்குள் எட்டிப்பார்த்த காதலை முடக்கிப் போட்டது என்னைச் சுற்றியிருந்த சூழல்தானே அன்றி காதல் ஒன்றும் புரிதலோடு யாரோ தடுத்ததால் மடங்கிக் கொள்ளவில்லை. ஆணும் பெண்ணும் காதலிப்பதை தவறென்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் இலக்கியங்கள் எல்லாம் திளைக்கத் திளைக்க காதலைப் பற்றி நிறையவே பேசி இருக்கின்றன. அறிவு சார்ந்து காதலை வகைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வழிகாட்ட வக்கற்ற மூத்த சமூகம்தான் இன்று காதலை தவறென்று கற்பித்து, காதலுக்கு என்று ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெருங்குற்றம் என்று கொடிபிடித்து  அதை எரித்துப் போட முயலுகிறது.

திருமணம் என்னும் பந்தம் புனிதமானது என்று சொல்லி நாம் நிறுவ காலம் காலமாய் முயன்று கொண்டிருக்கிறோம் ஆனால் சமீபத்திய "சொல்வதெல்லாம் உண்மை" போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வெளிச்சத்தில் நமது சமூகத்தினூடே இருக்கும் அழுக்குகள் வெளியே தெரியவும் தொடங்கிருக்கின்றன. நீங்கள் காதலிப்பது தவறென்று கூறி பக்குவமற்ற சில கதைகளை என்னிடம் படித்துக்காட்ட முயன்றால்.... உங்களின்  சோ கால்ட் புனித வரலாறுகளைப் பற்றியும் நான் பேசலாமா என்று உங்களிடம் அனுமதி கேட்கவும் கூடும்...! மாட்சிமை பொருந்திய என் சமூகம் காதலை குறைந்த பட்சம் ஆண் பெண் நேசித்தலுக்காய் ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து கொண்டாடுகிறதே என்று சந்தோசப் படாமல் அதை அடக்க நினைப்பது எந்த வகையில் சரி...? 

நான் காதலர் தினத்தை தினமும் கொண்டாடுவதுண்டு. சிலேட்டில் அனா...ஆவன்னா.. என்று எழுதிப் பழகுவது போல முன்னொரு காலத்தில் யாரோ ஒரு பெண்ணுக்காய் எனக்குள் குடி கொண்டிருந்த காதல்  காலப்போக்கில் தனது சுயரூபத்தை எனக்கு  காட்ட ஆரம்பித்தது.

அப்புறமென்ன... தூளியில் எத்தனை நாள் குழந்தையைப் போடுவீர்கள்....? எத்தனை  நாள் தான் பெரு மரமொன்று சிறு தொட்டியில் செடியாகவே இருக்க முடியும்..? ஒரு தருணத்தில் கட்டுக்கள் உடைந்துதானே போகவேண்டும்...? தொட்டிகள் எல்லாம் உடைந்து செடி மண்ணில் வேர்பதித்து பரவி நீரினை உறிஞ்சி, கிளைகளோடும், இலைகளோடும் பூத்து, குலுங்கி, வழிப்போக்கர்களுக்கு நிழல் கொடுத்து, பழம் கொடுத்து, பறவைகளுக்கு வசிப்பிடமாகி....

பிரமாண்டப்பட்டுப் போகும் நிலை அது. முதலில் பாலினம் கடந்து,  பின் மனிதம் கடந்து, விலங்குகளையும், பறவைகளையும், சிலையான கடவுளர்களையும் விட்டு நகர்ந்து, பின் உருவம் கடந்து....இயற்கையை உணர்வால் நேசிக்கத் தொடங்கிய நொடியில் காதலின் கன பரிமாணங்கள் எனக்குள் பூ பூக்கத் தொடங்கி இருந்தன 

இங்கே காதலை ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும், இன்னும் அதிகபட்சமாய் பிள்ளைகளிடமும், உறவுகளிடம் மட்டுமே எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். கடைசிவரை இவர்களின் காதல் வளர்ந்தும் தொட்டிலில்  கிடந்து அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறது. காதல் என்பதின் அடிப்படை நேசித்தல். அந்த நேசித்தலை ஒரு ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் தான் இயற்கையின் படி முதலில் தொடங்க வேண்டும். காதல் என்பது பிரபஞ்சத்தின் ஆதி உணர்வு. தன்னை தானாய் வெளிப்படுத்திக் காணவேண்டியே பெருங்காதலில் பல்கிப் பெருகியது இந்தப் பிரபஞ்சம்.

அண்ட சராசரமும் விவரிக்க முடியாத ஒரு பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கே காதலை ஏற்றுக் கொள்ளும் நவீனத்தின் சிற்பிகளில் பலர் தங்களின் முக்காலே மூணே இஞ்ச்  கட்டுக்குள் காதலை வைத்து கொள்ளச் சொல்கிறார்கள்...! கட்டுக்குள் இருப்பது காதலைப் போன்ற ஒன்றாய்த்தான் இருக்க முடிமே இன்றி சர்வ நிச்சயமாய் அது காதலாய் இருக்க முடியாது. நான் காதலால் நிரம்பி வழிகிறேன் என்று சொல்லும் என் கலாச்சார காதலர்களே...

காதலர் தினத்து  அன்றாவது உங்கள் காதல் உங்களின் அவளை நேசிப்பது அவளின் சுதந்திரத்தை பூரணமாக்குவது என்று உறுதி பூணுங்கள்...

எப்போதும் தத்தமது காதலனை தன் சொற்படி கேட்டு நடக்க வைப்பதில்தான் உங்களின் காதல் வெற்றி பெறும் என்று நினைத்து அதற்கான யுத்திகளை கையாளுவதை விட்டு விட்டு உங்கள் அவனின் ப்ரியங்களை கண்ணியப்படுத்துங்கள்...

காதலை எப்போதும் மனதிலே சுமந்து, சுமந்து ஏதோ ஒரு உருவத்திடம் பயிற்சி எடுத்து, உருவம் தொலைக்கும் விசுவரூபத்திற்குள் நுழையுங்கள். காலங்களாய் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியின் ஓட்டத்தை ப்ரியமாய் உள்வாங்கப் பழகுங்கள். எப்போதும் நமது வாழ்க்கையின் ஜீவனாய் இருக்கும்  சூரியனை காணவில்லையே  என்று இரவு முழுதும் படுக்கையில் புரண்டு புரண்டு உறக்கம் தொலையுங்கள்...

அதிகாலையில் சூரியனின் வரவுக்காய் இருளோடு இருளாய் எதிர்பார்த்து காத்திருங்கள்....வெளிச்சமாய் அவன் மேல் எழும்பி வருகையில் பெருகி வரும் கண்ணீரை காதலாக்கி ஆனந்தமாய் அழுது தீருங்கள்...

அடர் பனி நாளொன்றில் வீசும் குளிரோடு காது மறைத்துக் கொண்டு ஏதேனும் ரகசியங்கள் பேசுங்கள்... நாளை இரவும் நீ வருவாயா என்று கிசுகிசுப்பாய் நிலவிடம் கேட்டு வராத பதிலை மெளனமாக்கி அந்த சம்மதத்தை கவிதையாக்கி காகிதத்தோடு கரைந்து கிடங்கள்...

விடியலில் வாசல் மறித்து நிற்கும் ஒரு பூனையையும், நாயையும் கண்டு ஒதுங்கிச் செல்லாமல்.... ஹவ் ஆர் யூ டுடே..? என்று கண்கள் பார்த்து காதலாய் கேளுங்கள்....உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் அவை தங்களின் காதலை ஏதேனும் ஒரு சப்தமெழுப்பி காட்டவும் கூட செய்யலாம்....; வாரத்தில் ஒரு நாளில் பறவைகள் சூழ்ந்த மரமொன்றுக்கு தனியே செல்லுங்கள்...உங்கள் ப்ரியத்தை மெளனமாக்கி பரவச் செய்து அங்கே பேசிக் கொண்டிருக்கும் பறவைகளின் மொழியோடு கரைந்தும் போங்கள்....

இப்படியெல்லாம் நீங்கள் மாற வேண்டுமெனில் முதலில் யாரையாவது முழுமையாய் காதலியுங்கள். முழுமையில் அங்கே சரணாகதி ஒன்று நிகழ....நான் என்னும் ஆணவம் அழிந்து போகிறது. ஆணவம் அழிந்து போக எதிரே இருப்பவரால் என்ன ஆதாயம் என்று கள்ளக் கணக்குகள் போடாமல் நேசிக்க முடிகிறது.

"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம்; சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! "

- பாரதி


அதனால் காதலை தினமும் கொண்டாடுங்கள்... காதலர் தினத்தை அதன் அடையாள தினமாக கொள்ளுங்கள்...!


தேவா. S


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

காதலை காதல் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்...

சுபத்ரா said...

நாளை இரவும் நீ வருவாயா என்று கிசுகிசுப்பாய் நிலவிடம் கேட்டு வராத பதிலை மெளனமாக்கி அந்த சம்மதத்தை கவிதையாக்கி காகிதத்தோடு கரைந்து கிடங்கள்...//

நல்லாத் தான் இருக்கு. ஆனா இந்த மாதிரி உணர்வுகள்.. புரிதல்.. எல்லாம் இயற்கையாக வருவது. இப்படிச் சொல்லிக் கொடுத்தால் எங்களுக்கு எப்படிப் புரியும்?

Advanced Valentine's Day Wishes! :)

அனைவருக்கும் அன்பு  said...

//எத்தனை நாள் தான் பெரு மரமொன்று சிறு தொட்டியில் செடியாகவே இருக்க முடியும்..? ஒரு தருணத்தில் கட்டுக்கள் உடைந்துதானே போகவேண்டும்...? தொட்டிகள் எல்லாம் உடைந்து செடி மண்ணில் வேர்பதித்து பரவி நீரினை உறிஞ்சி, கிளைகளோடும், இலைகளோடும் பூத்து, குலுங்கி, வழிப்போக்கர்களுக்கு நிழல் கொடுத்து, பழம் கொடுத்து, பறவைகளுக்கு வசிப்பிடமாகி../இதை விட ஆழ்ந்த ஒரு காதலின் வெளிபாடு நன் இதுவரை கேட்டதில்லை அருமையாக விரிவாக உங்கள் கருத்துகளை பதிவு செய்து எங்கள் மனதில் பதித்து போகிறீர்கள் வாழ்த்துக்கள்