Skip to main content

ஈழப்படுகொலைகளும்....இந்தியாவின் கூட்டு மனசாட்சியும்...!



எதையும் இங்கே நிறுவி பேசுவது கடினமாக இருக்கிறது. எல்லா செய்திகளையுமே மேம்போக்காக பார்ப்பவர்களாகவும், பொழுது போக்குக்காய் பேசுபவர்களாகவுமே மிகையான பேர்கள் இருப்பதால் ஆழமான உட்விசயங்களில் இருக்கும் சத்தியங்கள் ஆழத்திலேயே செத்துப் போய்விடுகின்றன. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களின் சரி தவறுகளை ஆராய எதையும் சாராத மனோநிலையில் இருக்கவேண்டும்.

தூக்கு தண்டனைகள் தொடர்ச்சியாக நிறைவேறிக் கொண்டிருக்கும் ஒரு காலச்சூழலில் தூக்கு தண்டனைகள் கூடாது என்று சொல்லும் இடம் மிகப்பெரிய புரிதலோடு கூடிய தெளிவு நிலை. தண்டனையே வேண்டாம் என்பதுதான் தவறு. அதுவும் நமது தேசத்தில் விதிக்கப்படும் தூக்கு தண்டனைகள் வேடிக்கையானவை. பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

அஜ்மல் கசாப்பை தூக்கிலேற்றி விட்டதோடு தீவிரவாதத்தின் அடிவேரினை இந்திய தேசம் வேரறுத்து விட்டது என்று நீங்களும் நானும் நம்பிக்கொண்டு ஒரு சூப்பர் ஹீரோவாக இந்தச் செயலை செய்தவர்களை நாம் பார்க்கிறோம் அல்லவா? அஜ்மல் கசாப் இந்த தேசத்துக்குள் வந்து அத்தனை கொலைபாதகச் செயல்களையும் செய்ய காரணமாயிருந்தவர்கள் யார்? அந்த சம்பவத்தின் ஆணிவேர் என்ன என்று எல்லாம் இந்தியாவிற்கு தெரியாமலா இருக்கிறது?  இருப்பினும் பணத்திற்காய், இறைவனின் பெயரைச் சொல்லி அவனின் வறுமையை மூலதனமாக்கியவர்களுக்கு இரையாகிப் போன அஜ்மல் கசாப்....

படுகொலை செய்து அத்தனை பேரை கொன்ற போது ஒரு கொடூர மிருகமாய் தானிருந்தான். மிருகத்தை, கொடியவனை எதிரியை களத்திலேயே அழிப்பது போர் மரபு.. அங்கேயே அவன் சுடப்பட்டிருந்தால் மிருகத்தை கொன்றவர்களாயிருப்போம்...ஆனால் அவனை உயிரோடு பிடித்ததின் நோக்கம் அவன் எந்த அமைப்பைச் சார்ந்தவன்? யார் விட்ட அம்பு...? என்று அறியும் பொருட்டுதானே..? எல்லாம் அறிந்த பின்... தவறை உணர்ந்து கடைசிவரை ஏதோ ஒரு இருட்டு அறையில் தண்டனையாய் உயிரோடு வாழ ஆசைப்பட்டவனை நாம் தூக்கிலேற்றி விட்டோம். 

மிருகமாய் இந்தியாவிற்குள் வந்தவன் மனிதனாய் செத்துப் போனான்.

நூறு பேரைக் கொன்றவனைக் பிடித்து சித்திரவதைகள் செய்து விசயத்தை எல்லாம் கேட்டுக் கொண்டு அவனைக் கொல்லாமல் விட நாம் என்ன மடையர்களா? ரத்தத்துக்கு ரத்தம். பழிக்குப் பழி.. கொலைக்கு கொலை என்னும் நியாயத்தோடு அவனின் கல்லறையில் நீதி தேவதையை புன்னகைக்கச் செய்தோம்.

அம்பு செத்துப் போக எய்தவனை பற்றிய அக்கறை இல்லாமல் அண்டை நாட்டுடன் சுமூக உறவுக்காய் இன்னமும்  கொடுக்கும் அரசியலை யார் தூக்கில் போடுவது..? அஜ்மல்கசாப்பை கொன்றது நியாயம்தான் என்ற நமது கூட்டு மனசாட்சிக்கு இன்னும் அரிப்பெடுக்க...

அதை சரி செய்ய அப்சல் குருவின் மரணம் நமக்குத் தேவைப்பட்டது. அஜ்மல் கசாப்பை கண் எதிரே கண்டோம்...துப்பாக்கியோடு அவன் செய்த கொலைகள் அவனது தூக்கை நம்மிடம் நியாயப்படுத்தி இருந்தன, ஆனால் வாதாட வாய்ப்பளிக்கப்படாமல் செத்துப் போன அப்சல் குருவின் இன்னொரு பக்கத்தை, ஆங்கில நாளிதழுக்கு  அவர் கொடுத்திருந்த பேட்டியை படித்தபோது உணர முடிந்தது. அப்சல் குருவை தூக்கில் போட்டது சரி என்று என்னிடம் பேசிய அனேகர் அவரைப் பற்றிய முழுவிபரத்தையும் வாசிக்காதவர்களாகவே இருந்தார்கள். சரி தவறுகளை யார் முடிவு செய்கிறார்கள் நமது தேசத்தில்....? என்ற பயம் எனக்குள் ஏற்பட்டு...பலமிக்க அரசியல்வாதிகள் நினைத்தால் ஊடகங்களின் துணையோடு யாரை வேண்டுமானாலும் தீவிரவாதியாய் சித்தரித்து விடலாம்.. என்ற அச்சம் எனக்குள் தோன்றியது.

வழக்கறிஞர்கள் யாரும் வாதாட முன்வராமல், வழக்கினை ஏற்றவரும்...அழிச்சாட்டியமாய் விட்டு விட...இந்திய கூட்டு மனசாட்சி....மீண்டுமொரு கழுத்தை நெறித்து நீதியை நிறுவிக் கொண்டது.

என் தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் எவனொருவனையும்...விட்டு விடமாட்டேன் கொன்று போடுவேன்... என்பது நமது வீர மரபு. கொலைகள் யுத்தக் களத்தில் நிகழும் போது அது வீரமாகிறது. தண்டனைகள் என்ற பெயரில் பல வருடங்கள் கழித்து ஒருவனை சாகடித்து தேதி குறித்து விடியற்காலையில் கொல்லும் போது அது வக்கிரமாகிறது.

எந்த அநீதிக்கும் நான் நியாயம் கற்பிக்க இங்கே எழுதவில்லை. என் கேள்வி எல்லாம் நீதி என்பது மனிதர்களை செப்பனிடுவதற்கா இல்லை சாகடிப்பதற்கா?

இப்படி ஒரு மனோநிலையில் நான் எழுதினாலும்....டெல்லி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்டு இருப்பவர்களை அந்தப் பெண் இறந்த அன்றே தூக்கில் போட்டால் என்ன என்று கூட எனக்குத் தோன்றியது. கையும் களவுமாய் பிடிபட்டு ஒரு கொடிய மரணத்தை நிகழ்த்திய அரக்கர்களை...நமது தேசத்தின் நீதி என்ன செய்யும் தெரியுமா? தண்டனைகள் ஏதும் கொடுக்காமல்...ஒரு 30 வருடம் அவர்களை மரணக் கொட்டடியில் வைத்து அவனை மகாத்மாவாக்கி பிறகு கொல்வார்கள். இது எப்படி சரி என்று எனக்குத் தெரியவில்லை...

இந்தக் கட்டுரை எந்தவித கருத்தையும் வலியுறுத்தி நகராமல்...ஒரு மத்திம நிலையில் மத்தியான நேரத்தில் சாலை கடக்கும் எருமை மாடாகவே நகரட்டும்.  சரி தவறுகளை வாசிப்பவரின் மனோநிலைக்கும் தர்மத்திற்குமே நான் விட்டு விடுகிறேன்.

1993 நடந்த கண்ணி வெடி தாக்குதலை செய்த சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு உதவிகள் செய்ததற்காக நான்கு பேரின் முன்பு இப்போது தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அசுரகதியில் வழக்கை விசாரித்து, இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பை வழங்கி நீதி வழங்க காத்திருக்கும் சத்தியத்தை கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது..?

ஓய்வு பெற்ற நீதியரசர் ஐயா கிருஷ்ண அய்யர் மரண தண்டனைகள் கூடாது என்று ஏன் சொல்கிறார் என்று அறிய அவர் எழுதிய புத்தகத்தை ஒரு முறை வாசித்து விட்டும், உலக நாடுகளில் மிகையானவை எல்லாம் ஏன் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லி அதை நிறுத்தி விட்டன...என்பன போன்ற விடயங்களை எல்லாம் அறிந்து கொண்டும்...பிறகு கருத்துக்களை கூறுங்கள்...

அது போகட்டும்....

சத்திய புருசனாய் தன்னை வர்ணித்துக் கொண்டு நியாயத்தை பேசும் இந்திய கூட்டு மனசாட்சி எங்கள் பிள்ளையை, பச்சைப் பாலகனை,பெற்றோரை விட்டு, உறவுகளை இழந்து தனித்திருந்த எங்கள் செல்வத்தை கொடுமைகள் செய்து, ....இரக்கமில்லாமல் கொன்று போட்டதற்கு என்ன கருத்து தெரிவிக்கப் போகிறது...?

பிரபாகரன் உனக்கு எதிரி..., எங்கள் அண்ணன், தம்பிமார்கள் என்று வயது வந்த எத்தனையோ பேரை நீ கொன்றாய் சரி...., பிஞ்சுகள் என்ன பாவமடா செய்ததது பாதகனே...? என்று அரக்கன் ராஜபக்சேயைப் பார்த்து என் இந்திய தேசம்  ஏன் கேள்வி கேட்காமல் கொலைகாரனுக்கு பூரண கும்பம் வைத்து மரியாதை செய்கிறது...?

பிஸ்கட் வாங்கிக்  கொடுப்பவன் எதிரியென்று அறிந்தும் அதை வாங்கி உண்ட பிஞ்சை கொல்ல எப்படியடா உங்களுக்கு மனம் வந்தது...? என்று சத்தியம் பேசும் தேசம் ஏன் ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பவில்லை...?

அழுதாயா பிள்ளையே...? நம் இனம் அழுந்து போயிற்று, நமது விடியல் எரிந்து போயிற்று என்று....புலம்பினாயா மகனே...? உனக்கு உறக்கம் வந்ததா ஐயா? உறக்கத்தில் கொடுங்கனவு கண்டு தாயின் அரவணைப்பு தேடி அலறி எழுந்து... அரக்கர்களின் இயந்திரத் துப்பாக்கிகளைக் கண்டு ஒடுங்கிப் போனாயா செல்வமே ? 

என்ன செய்து விடுவான் இந்தப்  பாலகன் என்று நீ கொன்று போட்டாய் அரக்க இலங்கையே என்று ஏன் நீதி பேசும் இந்தியா கேட்கவில்லை...? 100 பேரைக் கொன்றான் என்று நீ அகப்பட்ட ஒருவனை கொன்று நிரூபித்துக் கொண்ட உன் வீரத்துக்கு ஆண்மையான குரல் கூடவா இல்லை...?

லட்சங்களில் உயிர்களைக் குடித்த அரக்கனை கண்டித்துப் பேச...ராஜாங்க தொடர்புகளை அறுக்க.. திரணியற்றுப் போன நீ....பிள்ளைப்பூச்சிகளைக் கொன்று விட்டு எங்களிடம் நீதி பேசுகிறாய்....

தூக்கு தண்டனைகளை விதித்து நீதியை நிறுவிய உன் இரத்தைக் கைகள்தான்....பாலகர்களைக் கொன்ற அரக்கர்கர்களொடு கை குலுக்கி சர்வதேச சமூகத்தின் மேன்மை பற்றியும் பேசுகிறது...! 

மன்னிப்பதிலும், தண்டனை வழங்குவதிலும் மிகுந்த கருணை கொண்ட ஒரு தேசமே புனிதர்கள் வாழும் தேசமாகிறது...

நாம் எந்த மாதிரியான தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...! 


தேவா. S



Comments

கோவி said…
//பிஸ்கட் வாங்கிக் கொடுப்பவன் எதிரியென்று அறிந்தும் அதை வாங்கி உண்ட பிஞ்சை கொல்ல எப்படியடா உங்களுக்கு மனம் வந்தது...? என்று சத்தியம் பேசும் தேசம் ஏன் ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பவில்லை...?
மனம் அழுந்தும் பதிவு..//
மிக நல்ல பதிவு, நிறைய எங்கள் இருக்கின்றன, பதில் சொல்வார்தான் யாரும் இல்லை.
சுட்டவனுக்கு தூக்கம் வருமா?பாவம் அந்த குழந்தை.என்ன நடக்க போகிறது என்றே தெரியாமல் பசியாற்றி கொண்டிருக்கிறது.
Adirai Iqbal said…
பிஸ்கட் வாங்கிக் கொடுப்பவன் எதிரியென்று அறிந்தும் அதை வாங்கி உண்ட பிஞ்சை கொல்ல எப்படியடா உங்களுக்கு மனம் வந்தது...? என்று சத்தியம் பேசும் தேசம் ஏன் ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பவில்லை...?

//அழுதாயா பிள்ளையே...? நம் இனம் அழுந்து போயிற்று, நமது விடியல் எரிந்து போயிற்று என்று....புலம்பினாயா மகனே...? உனக்கு உறக்கம் வந்தா ஐயா? உறக்கத்தில் கொடுங்கனவு கண்டு தாயின் அரவணைப்பு தேடி அலறி எழுந்து... அரக்கர்களின் இயந்திரத் துப்பாகிகளைக் கண்டு ஒடுங்கிப் போனாயா செல்வமே ? //

சத்தியமாய் அழுதுவிட்டேன்
மனம்
மீண்டும்மீண்டும்
துயரத்தில் ஆழ்ந்துபோகிறது
வெதும்புகிறது.
jgmlanka said…
பேச வார்த்தையின்றிக் கண்ணீரோடு கடந்து செல்கிறேன்... நீங்கள் எமக்காக எழுப்பும் குரல்களின் பலத்தை மட்டும் வேண்டிக் கொண்டு...
Anonymous said…
மனது வலிக்கிறது....

இந்தியா ஒரு கோழை நாடு...வெட்கக் கேடு..


----Maakkaan.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...