
இதுவரை பேசப்பட்ட, பேசப்படும், பேசப்பட போகும் எல்லா விமர்சனங்களையும் விசயத்தை உள்வாங்கிக் கொள்ளும் பாத்திரத்தின் தன்மையாய் கருதி அதன் முரண்களை என் நினைவுகளுக்குள் இருந்து அழித்துக் கொள்கிறேன். இப்போதுதான் பூத்த ஒரு முல்லைப் பூவைப் போல பளிச்சென்ற.. தன் வெண்ணிறம் காட்டி வாசனையாய் எனக்குள் பரவிக்கிடக்கிறது ஒரு அற்புத கலைஞனின் கலைப் பொக்கிஷம்.
ஒட்டு மொத்த கலைப்படைப்பின் தாக்கத்தையும் எழுத்தாக்கும் பாக்கியம் ஒன்று எனக்கும் அருளப்பட்டிருக்கிறது. ஒரு தலை சிறந்த புத்தகத்தை சட்டென்று வாசித்து முடித்து விட்டால் அது சீக்கிரம் முடிந்து போகுமே என்று பக்கம், பக்கமாய் வாசித்து ஒவ்வொரு பக்கத்திலும் லயித்து, அது கொடுக்கும் பிரம்மாண்ட பிரளயத்தை ஒத்த அனுபவத்தில் திளைத்து, திளைத்து ஊறிக் கிடந்து மெல்ல கண் விழித்து கிறக்கமாய் உலகோடு இருக்கும் பொருளாதாய நினைவுகளை விட்டு நகர்ந்து.....
தக தக தக
தின தின தின
நக நக நக
திகிட தான தான தான
திகிட திகிட தாக்கின தான
தாக்குட தான
திக்கிட்டு தாக்கத்தா தி தி தி
தான தானகின்
தடானு தான தானகின்
தலானு தான தானகின்
தலானு
என்பது போன்ற அருவியாய் விழும் ஜதியின் ஏற்ற இறக்கங்களில் பயணித்து ஆக்ரோசமான நீரின் சுழற்சிக்குள் முங்கித் திளைத்து எழுவது போல எழுந்து அந்த நீரின் குளிர்ச்சியில் உடலோடு சேர்ந்து புத்தியும் குளிர்ந்து கிடக்க..., வாழ்க்கையின் கன பரிமாணங்களை அந்தப் படைப்பு நமக்குள் மென்மையான மயிலிறகால் வருடுவது போல வருடிக் கொடுத்து ஏதேதோ பாடம் சொல்லும் போது...
பூரணத்தின் முழுமையில் எதுவுமில்லாத ஒன்றைத் தொட்டு தடவி சூட்சுமமாய் உணர்ந்து வெறுமையில் கிடந்து, இறை என்னும் விசயத்தை ஒரு நபராக உணராமல் பிரபஞ்சத்தில் பரவிக் கிடக்கும் எல்லாமாக உணர முற்படும் வினாடிகளுக்கு முன்பு, அதாவது ஆழமான நீரின் ஆழத்தில் எங்கே தரை.. எங்கே தரை... எங்கே இதன் முழுமை, எங்கே எங்கே என்று லயித்து தரை தேடிச் சென்று தரையை முழுமையாய் தொட முயலும் போது நீரானது மீண்டும் மேலே இழுக்க நடு விரலை ஆழத்தில் வெகு ஆழத்தில் இருக்கும் அந்த தரையின் மீது அழுத்தமாய் கீறிய படியே முழுதுமாய் தொட்டு கை பதித்தும் பதிக்க முடியாமல் மீண்டும் மேலெழும்பி நீரின் மேற்பரப்பை நோக்கி எம்பி வருவோமே... அல்லது நம்மை உந்தித் தள்ளுமே ஒரு சக்தி...
அப்படியான ஒரு மத்திம நிலையில் இப்போது மேலெழும்பிக் கொண்டிருக்கிறேன் நான்.
இறைவன் என்று தனித்து ஒன்றும் இல்லை... இருப்பது எல்லாமே இறைதான் என்று உணர்ந்து சூன்யத்தை சுகித்து வெறுமைக்குள் செல்லும் முன்பு மீண்டும் பக்தி என்னும் வாழ்வியல் அர்த்ததிற்குள் உங்களை ஒரு பாடல் தள்ளிச் செல்ல முடியுமா? கதையையும், திரைப்படத்தின் அடிப்படையையும் பற்றி வேறு ஒரு சூழலில் நாம் பேசலாம்... ஏனென்றால் விசுவரூபம் என்னும் திரைப்படம் மிக அழகான ஆழமான ஒரு கலைப்படைப்பு. மேலோட்டமாய் அங்கே விளங்கிக் கொள்ள ஒன்றுமே இல்லை...
லியானர்டோவின் ஓவியம் போல அத்தனை ரகசியங்களையும் சூட்சுமங்களையும் ஒவ்வொரு காட்சியிலும் கமல் நிரப்பி இருக்கிறார். நியூட் ஐஸ் எனப்படும் சாதரண விழிகளுக்கு அவை புலப்படாமல் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. திரைப்படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளில் தோன்றும் அந்த கதக் மாஸ்டர் கமல்ஹாசன் அந்த கேரக்டரை, அந்த கருவை வைத்தே முழு நீளப்படத்தை எடுத்திருந்து இருக்கலாம் என்ற ஏக்கம் எனக்குத் தோன்றியது ஏனென்றால் அவ்வளவு நளினமானது அந்தப் பாத்திரம். நளினம் என்பது பெண்ணிற்கு மட்டுமே உரித்தான ஒரு இயல்பு அல்ல. அது அழகுணர்ச்சியின் மிகுதி. கூடலின் உச்சம். கலையின் சிகரம்.
எல்லா கலை படைப்புகளின் உச்சத்திலும் ஒரு நளினம் வெட்கத்தோடு எட்டிப்பார்ப்பதை புலனுணர்வு கடந்து பார்ப்பவர்களால் மட்டுமே உணர முடியும். ஒரு சிலையாகட்டும், ஒரு மலையாகட்டும், கதையாகட்டும், கவிதையாகட்டும், கட்டுரையாகட்டும், பாடலாகட்டும்......... அந்த படைப்பு உச்சம் தொடும் போது ஒரு வித பெண்மை என்று நாம் அறிந்து வைத்துள்ள அந்த இயல்பின் உச்சம் நளினம் என்னும் தெய்வீகத்துடன் எட்டிப்பார்க்கும்.
ஒரு பாடலில் கதக் ஆசிரியராக வருவதற்காய் பிர்ஜு மகராஜிடம் பயின்று அதை நடனம் மட்டுமில்லாமல், உடல் அசைவுகள், பேசும் வார்த்தையின் ஏற்ற இறக்கங்கள் என்று எல்லாவற்றிலும் பிரதிபலித்து மிரட்டு மிரட்டு என்று மிரட்டும் அற்புதக் கலைஞன் கமலை பார்த்து ஆனந்தக் கண்ணீர் மட்டுமே எனக்கு வந்தது. அப்போது விவரிக்க வர்த்தைகள் இல்லை என்னிடம். அர்ப்பணிப்பு என்னும் வார்த்தை வீரியத்தின் ஆழத்தை யாரும் அவ்வளவாக விளங்கிக் கொள்வதே இல்லை. முழுதுமாய் நம்மை அர்ப்பணிக்கும் போது நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம்.
முழுமையான அர்ப்பணிப்பு என்பது சலனமில்லாத ஆழ்மனதில் இருந்தே பிறக்கிறது. யாதொரு எண்ணக் குறுக்கீடுகளும் இல்லாமல்...கூர்மையான வாளினைப் போன்று அந்த அர்ப்பணிப்பு அற்புதக் கலைப் படைப்பாய் காண்பவர்களின் தெளிவிற்கு ஏற்றார் போல நடு நெஞ்சில் ஆழமாய் இறங்குகிறது. என்னைப் பொறுத்தவரை இசையமைப்பாளரின் அற்புதமான மெட்டோடு
" உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே……………"
என்று பாடி, ஆடி, கமல் என்னும் கலைஞன் என்னை கொன்றேதான் போட்டு விட்டான். கதையைச் சொல்லும் கலையே கதக் ஆகிப்போனதாக நான் வாசித்து இருக்கிறேன். உணர்ச்சிகளுடன் வார்த்தையின் ஏற்ற இறக்கங்களில் கதை சொல்வது எல்லோராலும் முடியும்... ஆனால் உணர்ச்சிகள் மிகுந்த ஒரு கதையை உணர்வுக்குள் திரட்டிச் சென்று அதை உள்வாங்கி உடல் மொழியால் சிறிதும் அதன் இயல்பு கெடாமல் வெளிப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. விழிகளும், விரல்களும் தனது அசைவுகளால் ஏதேதோ சொல்ல முகத்தினை சுருக்கி, விரித்து, கோணல் மாணல்களாய் அழுகையையும், சிரிப்பையும், காதலையும், விரக்தியையும் குழந்தைக்கு சோறு பிசைந்து ஊட்டி விடும் ஒரு தாயைப் போல வாஞ்சையாய் கொடுப்பது என்பதை தெய்வீகம் என்றுதானே நாம் சொல்ல முடியும்...?
பிர்ஜு மகராஜிடமிருந்து உள்வாங்கி அதை நமக்கு படைத்தளித்திருக்கும் கமலஹாசன் மட்டுமில்லை இங்கே.... அந்த நடனத்திற்கு பாடல் எழுதிய பாடலாசிரியார் கமலஹாசன் கூட உண்டு....
" நிதம் காண்கின்ற வான்கூட நிஜமல்ல...
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல...
நீ இல்லாமல் நான் இல்லையே..."
கமல் ஏக்கமாய் வெளிப்படுத்தும் அத்தனை உணர்வுகளிலும் புரிதலோடு அதைக் காணும் அத்தனை பேரும் ராதையாகிப் போக கண்ணண் உங்களுக்கும் எனக்கும் காதலனாகிப் போகிறான். சராசரி மனிதன் அல்ல என்னுடைய காதலன் அவனே எனக்கு கடவுள், அவனைக் காண்பதே எனக்கு சுகம்...அவனோடு கை கோர்த்துக் கொண்டு நடப்பதே இன்பம், அவன் இல்லாத பொழுதுகளில் அவனுக்காய் ஏங்கிக் கிடப்பது இன்னும் சுகம்...
நான் உன் மீது காதல் வயப்பட்டிருக்கிறேன் கண்ணா... ! என்னை உன் அன்பால் நிரப்பு...உன் காதலால் என்னை திக்கு முக்காடச் செய்..., ஏதேதோ கதைகள் சொல்..., அதி நவநீதா, அபிநய ராஜா, கோகுல பாலா, கோடி பிரகாஷா, விரக, நரக, ஸ்ரீ ரக்க்ஷகமலா, என் கண்ணா.. நான் எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன் ? இத்தவணை என்னை ஆட்கொள்வாயா...? என்று கேள்விகள் கேட்டு...
ஒரு சரணாகதிக்கு காத்திருக்கும் அவஸ்தையை வரிகளில் கொண்டு வந்திருக்கும் கமல் உங்களுக்கு ஜீனியஸாகத் தெரியவில்லை என்றால் நான் என்னைப் பைத்தியக்காரன் என்று அறிவித்துக் கொள்வதை பெருமையாக நினைக்கிறேன்.
"அவ்வாறு நோக்கினால்..
நான் எவ்வாறு நாணுவேன்..?
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டே..."
காதலை உடலுக்குள் ஏந்தித் திரிந்த அத்தனை பேருக்கும் தெரியும் தத்தமது வீட்டு நிலைக்கண்ணாடிகள் எவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்திருக்கும் என்பது....ஆணாய் இருந்தாலும் சரி பெண்ணாய் இருந்தாலும் சரி.. தத்தமது காதலனையோ காதலியையோ... காண்பிக்கப்போகும் முகபாவங்களை கண்ணாடி முன் நின்று முகத்தை கோணி, கோபித்து, உதடு பிதுக்கி, கண்கள் இடுக்கி, புருவம் உயர்த்தி எத்தனை அபிநயம் பிடித்திருப்போம்....?
முழுமையான ஒரு பாடலை நமக்கெல்லாம் மிகப்பெரிய அனுபவமாக்கி இருக்கும் கமலை மாயக்காரன் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆமாம்...
ஒரே ஒரு பாடலின் மூலம் அத்தனை பேரையும் பெண்களாக்கி, கண்ணனுக்காய் ஏங்கும் காதலிகளாய் ஆக்கிவிட்டானே அந்த பொல்லாதவன்.....அவனை மாயக்காரன் என்று சொல்லாமல்.... பின் எப்படிச் சொல்வதாம்...?
" இது நேராமலே நான் -
உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
…………………….
என்று அதை எண்ணி வீண் ஏக்கம்
ஏங்காமலே உன்னை மூச்சாக்கி
வாழ்வேனடா...."
ஹேட்ஸ் அப் கமல்!!!!!!
தேவா. S
Comments
சிலாகிக்க தெய்வீக மனம் வேண்டும்.
அதிலிருந்து பிறக்கும் பாராட்டே தெய்வவாக்கு.
நன்றி.
தமிழின் இனிமையை உணரவே ஏழு பிறப்பும் வேண்டும் போல..
ஒரு அற்புதக் கலைஞனின் அற்புதப் படைப்பு..
நன்றி தேவா அவர்களே..