Pages

Friday, April 27, 2012

ஈழப் போராட்டமும் தமிழகத்தின் பிழைப்பு அரசியலும்....!ஏனோ தெரியவில்லை இறைவன் ஒருவன் தனித்து இருந்திருக்க வேண்டுமென்றும், ஒரு மனிதனைப் போல அவ்வப்போது மனிதர்கள் முன் வந்து வந்து போயிருக்க வேண்டுமென்றும் ஒரு பெரு விருப்பம் எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

ஆமாம்....!!! அப்போதுதானே அவன் சட்டையைப் பிடித்து என்னால் கேள்வி கேட்க முடியும்...? என்ன திட்டத்தில் இப்படி அபத்தங்களை மனிதர்களாக்கிப் போட்டு வைத்திருக்கிறாய்? அசிங்கங்ளை புரிதல்கள் என்று அவர்களை கடை விரிக்கச் சொல்லியிருக்கிறாய்? அறிவென்ற போர்வை போர்த்திக் கொண்டு உணர்வுகளை பொசுக்கக் சொல்லியிருக்கிறாய்...? காசு என்னும் அடிப்படையைப் படைத்து மனிதநேயத்தை தடம் புரட்ட சொல்லியிருக்கிறாய்.. என்று...

நான் ஒரு சராசரி இளைஞன். சமூகக் கோபங்களை உள்ளுக்குள் தேக்கி வைத்துக் கொள்ளத் தெரியாத ஒரு பைத்தியக்காரன். அநீதிகளின் முகங்களுக்கு முன் கை நீட்டி கேள்வி கேட்க விரும்பும் ஒரு கலகக்காரன். நான் பிறந்து வளர்ந்த ஒரு மண்ணிற்கு கூப்பிடு தூரத்திலிருக்கும் என் இரத்த உறவுகள், மனிதர்களாய் ஜீவிக்க போராடிப் போராடி செத்து மடிந்த சோகத்தைக் கண்டு வெடித்து அழுதவன்.......அந்த அழுகையின் சப்தத்தை சக மானுடர்களுடன் எழுத்தாகவும், பேச்சாகவும் எப்போதும் பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் உயிர் திரட்சியில் உணர்வுகள் கூடுதலாய் கொண்ட ஒரு மானுடன்...

ஈழம் என்னும் தேசம் தமிழனுக்கு சொந்தமானது என்ற வரலாற்றை, பெற்ற தாயை விற்று விட்ட சோகத்துக்கு சமமாக நெஞ்சுக்குள் இருத்திக் கொண்டு எம் சொந்த தொப்புள் கொடி உறவுகளுக்கு சமகாலம் பிழைத்துப் போட்டிருக்கும் முரண்களில் இருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை கிடைத்து விடாதா என்று பகுத்தறிவு இருந்தும் மூட நம்பிக்கைகளுக்குள் விரும்பியே நுழைந்து ஏதோ ஒரு தெய்வத்தை வணங்கும் ஒரு காட்டு மிராண்டி நான்....

60 ஆண்டுகால ஈழப் போராட்டத்தையும் அப்படியான போராட்டம் தொடங்கிய முதல் இடமான மனிதம் நசுக்கப்பட்ட இடத்தில் படிந்திருக்கும் இரத்தக் கறைளையும், சுவாசிக்க முடியாமல் மூச்சடக்கி உரிமையை இழந்து இறந்து போன மக்களையும் உணர்வாய் தெரிந்து வைத்திருக்கிறேன். வரலாறு கவனமாய் நகர்ந்து, ஒரு இனத்தின் சுதந்திரப் போரட்டம் அறவழியில் இருந்து வலுக்கட்டாயமாக பாதை மாற்றப்பட்டு கருவி ஏந்திப் போராடும் பிரபாகரச் சூரியன்களை விடுதலைப் புலிகளாய் பெற்றுப் போட்டதை சாட்சி கூறும் கோடாணு கோடி உணர்வானவர்களில் நானும் ஒருவன்.

நான் சார்ந்திருக்கும் இந்திய பெரு தேசம் உலக அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அண்டை நாடுகளிடம் தன் ஏகாதிபத்திய கோரப்பற்களை இதற்கு முன்னமே இருந்த வல்லரசு நாடுகள் செய்தது போலவே தன்னைச் சுற்றியுள்ள சிறு. சிறு நாடுகளின் மீதும் பதித்தது. இது இயல்பு என்று நகர முடியாமல் ஈழப் போராட்டம் என்னும் எம் இனத்தின் விடுதலைப் போராட்டம் இந்திய பெருந்தேசத்தின் கோரப்பற்களுக்குள் சிக்கியதும்....அதன் நீட்சியாக தொடர்ந்து கொடுக்கப்பட்ட ஆதரவு அரசியலும்....

அடிப்படை உரிமைகளோடு தானும் தனது மண்ணில் ஒரு மனிதனாய் தலை நிமிர்ந்து வாழ்ந்து விடலாம் என்ற நியாயமான ஆசையை பேராசையாகக் கொண்டு, எல்லா விதத்திலும் அடக்குமுறையை ஏவி விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அழித்தொழித்து ஆதார உரிமைகளைப் பொசுக்கிப் போட்ட சிங்களப் பேரினவாத அரசின் கொடும் கைகளில் இருந்து தப்பிக்க கருவி ஏந்திப் போராடிய எம் மக்களின் மதியை மயக்கியதில் எந்த வித ஆச்சர்யமும் கிடையாது.

பசித்தவனின் வயிற்றுக்கு விதிமுறைகள் கிடையாது என்று போதித்த மனிதரை தேசப் பிதாவாக ஏற்றுக் கொண்டு கருணையை தனது இருவிழிகளிலும் ஏந்தித் திரியும் சத்தியத்தின் தேசமாய் தன்னை உலக அரங்கில் பரிணமித்துக் காட்டிக் கொண்டிருந்த இந்தியாவிற்கு அது ஒரு அரசியல் விளையாட்டு என்ற உபாயத்தை ஈழ தேசம் என்னும் கனவை நோக்கிப் போராடிக் கொண்டிருந்த மாவீரர்கள் அறியாமலில்லை. 

அறிந்திருந்தாலும் வேறு வழியில்லை. இயற்கையின் முரண். வலியவனை அண்டி நகரவேண்டிய உலகாதாய அரசியலோடு கை கோர்த்துச் செல்வது தேவை என்றுதான் இந்தியாவின் அத்தனை உதவிகளையும் தாயின் சேலையைப் பிடித்துக் கொண்டு நகரும் சிறுபிள்ளையாய் பெற்று, 1980களில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மற்றும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தலைவர்களின் பெரும் உதவியோடு.....

சீறிப்பாயும் புலியாய் சிங்களப் பேரினவாத அடக்குமுறை அரசை பல சமர்களில் களமாடி தோற்கடித்து புறமுதுகிட்டு ஓடச் செய்தது பிரபாகரன் உருவாக்கி வைத்திருந்த வீர மறவர்படை.  ராஜிவ் காந்தி கொலை என்னும் ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்தேறும் வரையில் ஈழ ஆதரவு என்னும் அரசியலும், அதன் பிறகு ஈழம் பற்றி பேசவே தொடை நடுங்கிப் போய் அப்படி பேசியவர்கள் எல்லாம் சிறையில் தடாவிலும், பொடாவிலும் அடைக்கப்பட்டு ஒரு இனத்தின் விடுதலை பற்றிய பார்வைகள் மறைந்து போவதற்கு ராஜிவ் கொலை பெரும் வகையில் இந்திய அரசுக்குப் பயன்பட்டது என்றுதான் கூற வேண்டும். 

1991 மே 21க்குப் பிறகு முடுக்கி விடப்பட்ட புலன் விசாரணைகளும், ராஜிவ் கொலைக்கு முழுமையான மூலம் யார் யார் என்ற உண்மைகளும், இந்திய தேசத்தின் ஒரு ஒப்பற்ற தேசிய கட்சியின் தலைவர் மரணித்த போது அவர் தலைமை தாங்கிய கட்சியின் தமிழக தலைவர்கள் அத்தனை பேரும் சிறு கீறல்கள் கூட இல்லாமல் தப்பித்ததும்.......சராசரியான பாமரனுக்கும் இன்னமும் புரியாத புதிராய்த்தான் இருக்கின்றன...!!!!

ராஜிவ் கொலையோடு தொடர்புள்ள முழுமையான தொடர்பு நிலைகளையும் அம்பலப்படுத்த சற்றேறக்குறைய 21 ஆண்டுகளாய் முடியாமல் போன கையாலாகாத ஒரு புலனாய்வுத் துறை எந்த அழுத்தங்களால் இந்த வழக்கினை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் மூச்சு திணறி நிற்கிறது என்று கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் யாரும் தயாரில்லை...

சரியான சூழலுக்கு காத்திருந்த ராஜிவின் துணைவியார் சோனியாகாந்திக்கு மேற்சொன்ன விசயங்கள் பற்றியெல்லாம் கவலைகள் இருந்திருக்கும் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது. மாஃபியாக்களை பிறப்பித்த ஒரு தேசத்தின் மூளை நேர்மையாய் சிந்திக்க முடியாதுதான்...ஆனால் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அதுவும் அவர்களோடு கை கோர்த்து அரசியல் செய்து அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் திராவிட மூளைகளுக்குமா அது தெரியாது...????

காலம் வெகுவேகமாய் கடந்து போனது. அப்படி போகிற போக்கில் ஈழத்தில் லட்ச லட்சமாய் உயிர்களை குடித்து விட்டு கடைவாயில் இரத்தம் ஒழுக.....வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களை எல்லாம் வீழ்த்தி விட்டோம் என்ற வீர வசனத்தை வெட்கமில்லாமல் பேசி விட்டு ஓடியே போனது. தமிழக தலைவர்கள், தமிழின் பெயரால் பதவி சுகங்களை அனுபவித்தவர்கள் எல்லாம் அதிகாரத்தை தலைக்கு சுருட்டி வைத்துக் கொண்டு மெரீனாக்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை இரண்டு மூன்று மணி நேரத்துக்குள் அவசர அவசரமாய் தத்தம் வீடுகளுக்குச் சென்று பிள்ளை குட்டிகள், மனைவிகள், மருமகள்கள், பேரன்கள் என்று குடும்பத்தோடு குதூகலித்து இருந்தார்கள்.

புரட்சித் தலைவிகள் எல்லாம் வை.கோக்களை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாய் பேசியதாலேயே ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலடைத்து விட்டு, புலிகள் என்றாலே தீவிரவாதிகள், அவர்களை தமிழகத்தில் இருந்து அழித்தொழுப்பதே தமது ஆதாரத் தொழில் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கொடைநாடுகளில் குளிர்காற்றினை உடம்புகளில் பரவவிட்டுக் கொண்டு....உடன்பிறவா சகோதரிகளோடு உறங்கிக் கொண்டிருந்தனர்.

முத்துகுமாரன்கள் செத்து விழுந்து இன விடுதலைக்காய் போராடும் மக்களை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்கு கண்டனங்களை தங்களது கருகிப் போன உடலை காட்டி விட்டு மறைந்து போனார்கள். ஆங்காங்கே வெடித்தெழுந்து ஈழத்தில் நடத்தப்படும் கொலை வெறித் தாக்குதல்களை, யுத்த மரபினை மீறிய அசுரனின் தாக்குதலை நிறுத்த வேண்டி போராடிய போது கருணாநிதிகளின் காங்கிரஸ் கூட்டணி கைகள் அவர்களை தேசியபாதுகாப்பு சட்டங்களால் சிறைக்குள் தள்ளவும் செய்தது.

எஜமான விசுவாசம் காட்டிய இந்திய ஊடகங்கள் வால் குழைத்து செய்திகளை அடக்கி வாசித்து தமிழக மக்களிடம் கடைசி வரை ஈழத்தில் நடாத்தப்பட்ட கொடும் செயல்களின் அவலத்தை, அதன் ஆழத்தை கொண்டு சேர்க்கவில்லை. தமிழ் இனம் செத்து விழுந்தது, தமிழினத் தலைவர்கள் ஈழம் சாத்தியமில்லை என்று வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டே இந்திய தேசத்தின் தலைமகளுக்கு கடிதாசு போட்டுக் கொண்டிருந்தார்களே அன்றி....

' ஏ.....இந்திய தேசமே.....முதலில் ஈழத்தில் நடக்கும் போரினை நிறுத்த வலிமையான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு கொடு.....!!!! அப்படி நீ கொடுக்கா விட்டால் உன்னோடான மத்திய அரசு கூட்டணியிலிருந்து விலகுவது மட்டுமில்லாமல், அத்தனை தமிழக எம்.பி.க்களையும் ராஜினாமா செய்யச் சொல்வதோடு.....எமது முதன்மை மந்திரிப் பதவியையும் அமைச்சரவையையும் சேர்ந்தே ராஜினாமா செய்வோம்....'

என்று இந்திய அரசை மிரட்டக் கூட முடியாத வகையில் முடங்கிக் கிடந்தது. போர் நடந்த போது எதிர் கட்சித் தலைவராய் இருந்த அதிமுகவின் தலைவர் யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிவிட்டு அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு... போயாஸ் கார்டனில் சண்டி ஹோமம் நடத்திக் கொண்டிருந்தார் 

முடிந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டது. எம் இனத்தை முடிந்த வரையில் கொன்றழித்து விட்டு மிச்சமிருப்பவர்களை மனநோயாளிகளாக முள் கம்பிகளுக்குள் இன்னமும் அடைத்து வைத்திருக்கிறான் சிங்களவன். இனக்கலப்பு செய்து சிங்களர்களை மிகுதியாக்க மாமிச உடல்களைக் கொண்டு கற்பழிப்பு யுத்தங்கள் செய்வது, சிறு பிள்ளைகளைக் கொல்வது, இளைஞர்களை கடத்துவது என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இன்னமும் சிங்களவனின் இன வெறி.....

ஐ.நாக்கள் நிறைவேற்றிய தீர்மானக் குச்சியை உடைத்து பல் குத்திக் கொண்டே கொக்கரிக்கிறார்கள் ராஜபக்சேயும், கோத்தபயாவும் ....ஐ.நா தீர்மானம் எங்களை ஒன்றும் செய்யாது என்று...எவன் என்ன செய்ய முடியும்......? ஐ.நா நிறைவேற்றிய வெற்று தீர்மானத்துக்கு ஆதரவு கொடுக்கவே இந்திய தேசத்தின் கால்களில் விழுந்து புரண்டு தமிழர்கள் கெஞ்ச வேண்டிய நிலமையில்தானே இருந்தோம்...? பிச்சைக்காரனுக்கு பத்து பைசா தர்மம் செய்வது போல இதையாவது ஐ.நாவில் செய்ய முடிந்ததே என்று ஆங்காங்கே இன்னமும் வெட்கமில்லாமல் பேசிக் கொண்டுதானே இருக்கிறோம்...?

சேனல் போர் சேனல் தொலைக்காட்சி காட்டிய காணொளி காட்சிகளாலும், உண்மையான தமிழுணர்வாளர்களின் தொடர் பரப்புரைகளாலும் இப்போது தமிழகம் மெல்ல புரண்டு விழித்தெழுந்து ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட் கொடும் பயங்கரத்தை மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டு உணர்வு கொள்ள  ஆரம்பித்திருக்கிறது என்பதை அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தெளிவாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கும் காலம் இது. 

விடுதலைப் புலிகளைப் பிடிக்காத ஜெயலலிதா ஈழம் தான் தீர்வு என்று பேசி ஆக வேண்டிய சூழல்....

காங்கிரசோடு கை சேர்த்துக் கொண்டு எல்லா ஆட்டமும் ஆடிய திமுகவிற்கு தெரியாதா விடுதலைப் புலிகளும் மக்களும் வெவ்வேறு அல்ல.........மேலும் பிரபாகரன் என்னும் பெரு வீரன் ஈழம் வேண்டிப் போராடிய மாவீரன் என்று....

போர் நடந்த பொழுதில் மெளனித்து இருந்து விட்டு..இன்றைக்கு மீண்டும் ஈழம்தான் தீர்வு என்ற அரசியலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உங்களைக் கொண்டு வந்தது உங்களின் உணர்வு அல்ல........தற்போதைய தமிழக மக்களின் மனோநிலை என்பதை ஒத்துக் கொள்வீர்கள்தானே?

ஒருங்கிணைந்த இலங்கையே தீர்வு என்று முழங்கிக் கொண்டு கோமாளிகளை இலங்கைக்கு அனுப்பி சிங்களவன் காட்டிய திசைகளை எல்லாம் வேடிக்கைப் பார்த்து விட்டு வந்து இங்கே அறிக்கை சமர்ப்பித்து பொய் பரப்புரைகளை செய்யும் காங்கிரசோடு இன்னமும் கை கோர்த்துக் கொண்டு...

ஈழம்தான் தீர்வு என்று சொல்வதில் எப்படி உண்மை இருக்க முடியும் தோழர்களே...? 

சிந்திக்க வேண்டும். 

எப்போதும் போல தமிழக அரசியல் கட்சிகள் மீண்டும் ஈழத்தை தமிழர்களின் உணர்வாய் மாற்றி அவற்றை வாக்குப் பெட்டிகளில் போட்டு நிறைத்துக் கொள்ளத்தான் முயல்கின்றனவே அன்றி.....

வலியாலும், பசியாலும், மன உளைச்சலாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவ ஒரு தலைவனையும் தற்போது தமிழகம் கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.....

தாய் உறவுகள் அங்கே கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு கருகிக் கொண்டிருந்த போது, பெரும் போராட்டங்களை நடத்தி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க செய்ய முடியாத கையாலாகாத இரு திராவிடக் கட்சிகளும்........இனி ஈழம்........ஈழம்.....ஈழம் என்று ஓங்கி ஓங்கி கத்திக் கொண்டு இன்னும் ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு தங்களின் பிழைப்பை ஓட்டுவார்கள் என்பது மட்டும் சத்தியம்.

தெளிவான அரசியல் தலைவர்களை எவ்வளவுதான் முயன்றாலும் அடையாளம் காண முடியாத படி கவர்ச்சி அரசியலைக் கடை பரப்பி வைத்திருக்கும் இரு பெரும் திராவிட குடுமிகளின் காலடியில் அடிமையாய்க் கிடக்கும் தமிழினத்தில் நானும் ஒருவன் என்ற ஒரு குற்ற உணர்ச்சியோடும்....வேதனையோடும் இந்தக் கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன்னால்.....

தமிழராய் பிறந்த ஒரே காரணத்திற்காக தமிழக அரசியலின் பெரும் பகடைக்காயாய் போன என் தொப்புள் கொடி உறவுகளின் விடியல் தமிழக அரசியல் தலைவர்களைச் சார்ந்து இல்லை என்ற பெரும் உண்மையை வெட்கத்தோடு கூறிக் கொள்கிறேன்.

எது எப்படி இருந்தாலும் மானமுள்ள மிச்ச சொச்ச தமிழர்கள் ஒன்று கூடி ஈழத்தை வென்று எடுக்கப் போவது உறுதி அதற்கு எந்த கரைவேட்டிகளின் அவசியமும் இருக்காது.

தேவா. சு

9 comments:

ganesan sivanandam said...

en uririnum melana nanba, un unarchi konthalippai padithen. nee kottivittai. enakku blogspot illai. athanal nan oomaiyanenen. un karuthukkalodu ondri pokiren. nitchayam unathu yenathu namthu ela thamilanin kanavu koodiya viraivil nanavakum enru nambuvom.valga thamil.

ராஜ நடராஜன் said...

எழுத்துப் பிரளயம் தேவா!

ஹேமா said...

நன்றி....தேவா.வேறு சொல்லத் தெரியவில்லை !

Anonymous said...

சிறுகச் சிறுக நாம் மடிந்துகொண்டிருந்தாலும் அடுத்த எம் தலைமுறைக்காவது நாளை தமிழீழும் மலரவைத்தே மடிவோம் என்ற இலட்சியத்துடன் ஒவ்வோரு தமிழனும்.

Anonymous said...

சிறுகச் சிறுக நாம் மடிந்துகொண்டிருந்தாலும் அடுத்த எம் தலைமுறைக்காவது நாளை தமிழீழும் மலரவைத்தே மடிவோம் என்ற இலட்சியத்துடன் ஒவ்வோரு தமிழனும்.

நிரூபன் said...

அண்ணே கட்டுரைக்கு தலை வணங்கிறேன்! உங்கள் உணர்வுகளுக்கும் சேர்த்து! மிகுதி கருத்துடன் பின்னர் வருகிறேன்.

நிரூபன் said...

அண்ணே கட்டுரைக்கு தலை வணங்கிறேன்! உங்கள் உணர்வுகளுக்கும் சேர்த்து! மிகுதி கருத்துடன் பின்னர் வருகிறேன்.

Yoga.S. said...

வணக்கம் தேவா!தலை வணங்குகிறேன் அன்பரே!இப்படி விரிவாக ஈழம் குறித்த தமிழ் நாட்டுத் தமிழனின்,மன்னிக்கவும் தொப்புள் கொடி உறவின் ஆதங்கம் முதல் தடவையாக வெளிப்பட்டிருக்கிறது!பன்னாடைகள் என்ன வேண்டுமானாலும் உளறி விட்டுப் போகட்டும்!நாம் ஒன்றுபட்டிருப்போம்,எவன் என்ன எழுதி?????

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in