Pages

Tuesday, April 24, 2012

ஆன்மாவின்....பயணம்! இறுதி பாகம்..!
PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஒன்பதாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...

பாகம் I
பாகம் II

அப்போது...

எண்ணங்களற்று இருந்தேன், உடலற்று இருந்தேன், உயிர் என்ற ஒன்றை உணர்வாய் கொண்டிருந்தேன். நான் என்ற எண்ணமற்று விரவி, பரவிய எல்லாமாய் ஒட்டு மொத்த நகர்வாய் மிகப்பெரிய இயக்கமாய் ஏதோ ஒரு உத்வேகத்தில் இன்னதென்று சொல்ல முடியா, கேட்க ஆளில்லா வேகத்தில் என்னுள் நானே பல்கிப் பெருகி, நான் வெடித்துச் சிதறி, நானே சுருங்கி, நானே விரிந்து, ஊனாகி, உயிராகி, அசைந்தும் அசையாமலும் சுவையாயும் சுவையற்றதாயும்...குணங்களோடும் குணங்களின்றியும்....ஊ.....ஊ.. ஊ.......ஊ...என்ற ஓசை என்னுள் எங்கும் பற்றி பரவியிருக்க....

அணுக்களாய் அசைந்தும், அசையாமலும் இடமாயும், இடமற்றதாயும் தம்.....தும்....தும்...தம்...தம்.. தம்....இடைவிடாத ஆட்டம்....அது இடைவிடாத ஆட்டமாய் எல்லாம் ஒரு அதிர்வாய்...... ஆனால் ஒரே அதிர்வாய்....நகரும் மிகப்பெரிய பேரானுபவத்தில் விக்கித்துப் போய் கிடந்தது எவ்வளவு நேரம் என்று தீர்மானிக்க முடியாமலிருந்து கொண்டிருக்கையில்....

மெல்லிய தூறல்களாய் உடலை நீர்த்துளிகள் தொட..சிலிர்ப்பாய் அந்த உணர்ச்சியினை உடல் வாங்கி உடலின் செல்கள் வழியே உள்ளுக்குள் கடத்த முழுதாய் விழித்துக் கிடந்த புத்தி புலன்களுக்குள் சுருண்டு கொண்டு மீண்டும் ஸ்தூல உடலுக்குள் உட்புக உடலின் திடன் உணர்ந்து, அழுத்தம் உணர்ந்து மூளையிலிருந்து வெளிப்பட்ட புலன் உணர்வு மனமாய் மாறி விசுவரூபம் எடுக்க ஆரம்பித்த அந்த நொடியில் மெல்ல கண்களைத் திறந்தேன்....

மழை பெய்ய எத்தனித்துக் கொண்டிருந்த அந்தப் பொழுதில், பட்சிகளின் சிறு சப்தத்தினையும் திசை மாறி இடம் பெயர்ந்து இருந்த நிலவினையும் வைத்து இது விடியல் காலை என்று கணித்தேன். மெல்ல கை அசைத்து, கால் அசைத்து முழுதாய் புலன் உணர்வு நிலைக்குள் வந்து  எழுந்து அமர்ந்தேன். ஆழமாய் இழுத்து சுவாசித்தேன். பிராணன் உள்ளுக்குள் சென்று உடலின் நாடிகளையெல்லாம் தட்டி எழுப்பி முடிச்சுகளை எல்லாம் நீவி விட இரத்த ஓட்டம் சுரீரென்று உடலில் அலைந்து பரவ இதயத்தின் துடிப்பு சீரானது. ஈரக் காற்று உடலை ஒற்றி எடுக்க....முழுதாய் விழித்துக் கொண்ட புத்தி....என்னை ஏதேதோ உணர்வுகளுக்கு அனுப்பி வைத்த அந்தப் பெரியவரைத் தேடியது.

என்னைச் சுற்றி யாரும் இல்லை ஆனால் உள்ளுக்குள் அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தை கம்பீரமாய் ஒலித்துக் கொண்டே இருந்தது. இது....போகனின் பூமி என்றாரே...., அவர் போகரா..? சித்துக்களை உணர்ந்து அந்த சித்துக்களினை ஆத்ம முக்திக்கும் சக மனிதர்களை காலம் காலமாக வழி நடத்தவும், பயன் படுத்தவும் செய்யும் ஒரு சித்த புருசரையா நான் கண்டேன்....!!??? விஞ்ஞான முனி என்று ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் கூறும், நவ பாஷணங்களையும் கட்டி அந்த பழனியில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட சிலையை எழுப்பி, அந்த நவபாஷண சிலையை வணங்க வருகிறேன் பேர்வழி என்று தத்தம் வேண்டுதல்களை  கொண்டு வரும் மனிதர்கள் நவபாஷண சிலையில் அபிசேகம் செய்யும் நீரை குடிப்பதாலும், அந்த சிலையின் மீது பட்டு வரும் காற்றை சுவாசிப்பதாலும் வியாதிகள் குணமாகட்டும் என்ற பெரு நோக்கோடு சித்து விளையாடிய பெரு முனியையா நான் சந்தித்தேன்...?

சத்திய மார்க்கத்தை போதித்த சுத்த சன்மார்க்கனையா நான் சந்தித்தேன்..? 

கேள்விகள் என்னின் இயல்பிலிருந்து எழ...கேள்விகளை அந்த பெரியவர் விதைத்த ஞானம் என்னும் வாள் கொண்டு அறுத்தெறிந்தேன். அவர் யாரென்ற கேள்வி எனக்கெதற்கு....? அவர் கொடுத்த அனுபவத்தின் சாரம் என்னுள் உள்ளது. என் தேடலின் தூரங்களை சரியாய் அளந்து எனக்கு அவர் காட்டியிருக்கும் பாதை எனக்குள் அனுபவமாய் பதிந்து கிடக்கிறது. அவர் யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும்.....இன்னாரென்று அறிவதா இறை...? அல்ல அல்ல....அறிய முடியாதது இறை. அறியும் போது இல்லாமல் போவது இறை.

இறை என்று சொல்வதெல்லாம் இறை அல்ல. இது அல்ல, இது அல்ல என்று நேதி செய்து செய்து இறுதியில் எது இல்லை என்று சொல்ல முடியாததோ அதுதான் இறை. நான் செல்ல வேண்டிய பாதையை எனக்கு தெரிவித்த அந்த பெருஞ்சக்தியை மனம் குவித்து நமஸ்கரித்தேன். பிடிகள் விடுபட்டு ஒரு சுதந்திர புருசனாய் நான் மாறி இருந்தாலும் என்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் கபட மூளைகள் கொண்ட மனிதர்களையும், பணம் சேர்த்து விட்டதாலேயே தன்னைப் பெரிய மனிதர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நரிகளையும், அவைகள் தாம், தாம் என்ற இறுமாப்பில் அடுத்த மனிதரைப் பற்றி பரப்பும் அவதூறுகளையும், தன்னுணர்ச்சி இல்லாமல் புறம் பேசும் கேவலத்தையும், நினைத்துப் பார்க்கையில் முதலில் பெருங்கோபம் வந்தது...

' ஏ.....மனிதர்களே....! உங்களின் இறுமாப்பினை போக்கி அழிக்க, உம்மின் உடலில் வேதனையைக் கூட்ட, நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை இடம் மாற்றிப் போட்டு உங்களுக்கு நிலையாமையைக் காட்ட, உங்களின் பாவச் சுமைகளை உங்களின் சந்ததியினர்க்கு கடத்தி நீங்கள் தப்பிக்காமல், திருப்பி உங்களுக்கே சுமையாக்கி பாடம் புகட்ட, மிருகங்களைப் போல புணர்ச்சிக்காய் மட்டும் ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் தேடி, பிறகு மண் தேடி, கொண்டிருக்கும் உங்களின் புண் உடல்களை....காயப்படுத்த....

மனமற்று எங்கும் பரந்து விரிந்து இருக்கும் பெருஞ்சக்திக்கு ஒரு கணம் போதும். எல்லா சுயநல எண்ணங்களையும் தூர எறிந்து ஆழ சுவாசித்து அண்ணாந்து பார்த்து பெரும் பிரமாண்டத்தின் சக்தியை உங்களின் மீது பாய்ச்சி....கணத்தில் உங்களை ஆட்டம் காணச் செய்ய முடியும்....

கரைகளை கடலாக்கவும், கடல்களை கரையாக்கவும், தரிசு நிலங்களைச் செழிக்கச் செய்யவும், செழித்த நிலங்களை தரிசாக்கவும், மலைகளைப் பிடுங்கிப் பள்ளத்தாக்குகளில் வீசவும், பள்ளத்தாக்குகளை மலைகளாக்கவும், காடுகளை எரியூட்டவும்....கூட்டம் கூட்டமாக குரூரகளை அழித்துப் போடவும்...அந்தப் பெருஞ்சக்தியால் முடியும்....

இலக்கு மாற்றி பூமிப்பந்தினை சுற்ற வைத்து சூரியனோடு சீறிப் பாய்ந்து மோதச் செய்து மொத்த பூமியையும் பெரும் பிரபஞ்சத்தால் கணத்தில் குடித்து முடிக்கவும் முடியும்....."

என்று எண்ணிய மாத்திரத்திலேயே மீண்டும் அந்தப் பெரியவர் கூறிய வார்த்தை மீண்டும் செவிக்குள் ஒலித்தது. 

இயல்பில் இரு....இயல்பில் இரு.....இயல்பில்......இரு....


நான் இயல்பில் இருக்கிறேன். என் இயற்கையில் இருக்கிறேன். அகப்பட்ட இடத்தில் மிகைப்பட்டதாய் நான் நடக்கமாட்டேன். உடலுக்குள் அடைபட்டு உடலாய் நகர்ந்து, நகர்ந்து என் இயல்பில் நிற்கிறேன். அறியாமல் செய்யும் அத்தனை பேரும் மன்னிக்கப்பட்டுப் போவார்கள் தத்தம் செயல் விளைவை அனுபவித்த பின். இது இயல்பு. நானில்லை, நீயில்லை....அவனில்லை, அவளில்லை இது அருஞ்சக்தியின் பெரும் திருவிளையாடல். என் வலி, என் வாழ்க்கையால் எனக்கு கொடுக்கப்பட்டது, இதை வாங்கி, கொடுத்து இயல்பில் நகர்கிறேன்.

மழை தூறல் சுத்தமாய் நின்று போயிருந்தது. மெல்ல நகர்ந்து வழியில் எதிர்ப்பட்ட ஒரு சிறு ஓடையில் உடல் சிலிர்க்க, மனம் சிலிர்க்க, விழுந்து, விழுந்து குளித்தேன். உடலின் சூடு தணிய, புத்தி குளுமையாக.....நீரை அள்ளி, அள்ளி முகத்தில் அடித்தேன்.....தண்ணீரில் ஊறிக் கிடந்து தண்ணீராகவே நான் கிடந்து.....மெல்ல தலை தூக்கி எழும் சூரியனைக் கண்டு பரவசப்பட்டு எழுந்து நின்று மணிக்கணக்காய் சூரிய நமஸ்காரம் செய்தேன். 

கிடைத்த கிழங்குகளையும், பழங்களையும், பல நேரம் பல இலைகளையும் தழைகளையும், இன்னும் சில நேரம் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து, வெற்று மண்ணில் படுத்து புரண்டு, சிறு, பெரு மிருகங்கள் கடந்து செல்கையில் மெளனமாய் அன்பை பரவச் செய்து அவற்றின் சீண்டலில்லா நகர்வுகளில் ஆச்சர்யம் கொண்டு, துன்பப்படுத்தாத வரையில் எந்த உயிரும் நம்மை துன்பப்படுத்துவதில்லை என்று மானுட வாழ்க்கையின் மையம் அறிந்து, பல நேரம் பாறைகளில் மீது சலனமில்லாமல் ஆழமான தியானத்தில் லயித்து....

இலக்கில்லாமல் சுற்றி, சுற்றி, இங்கும் அங்கும் அலைந்து இதுதான் இறையென்று மூளை மடிப்புகளில் படிந்து கிடந்த எல்லா படிமாணங்களையும் எரித்துப் போட்டு, மனிதர்கள் இல்லா, பேச்சுக்கள் இல்லா, பரிமாறல் இல்லா, கேள்வி கேட்பார்கள் இல்லா ஒரு வாழ்க்கையில் தினம், தினம் நான் ஊறி ஊறித் திளைத்துக் கொண்டிருந்தேன். மரங்களும், செடிகளும் கொடிகளும், அருவிகளும், சிறு கற்களும், ஊர்வன, பறப்பன, எல்லாம் மனிதர்களை விட மிகவும் அற்புதமானவை....

அவையவை அவற்றின் ஒழுங்கில் இயங்கிக் கொன்டிருக்கின்றன. தத்தம் வேலை, தன் இயல்பு, தன் வாழ்க்கை என்று ஒரு மிகப்பெரிய புரிதல் இயற்கையிலேயே இருக்கிறது. ஐயகோ!!!! மனிதர்கள் மட்டுமே இயல்பில் இல்லை. அடுத்தவன் வீட்டு உலையில் என்ன இருக்கிறது? அடுத்தவன் என்ன சாப்பிடுகிறான்? அடுத்தவன் எப்படி பணம் சம்பாதிக்கிறான் ? என்றெல்லாம் எப்போதும் மனிதன் ஆராய்கிறான். தன்னை எப்போதும் பிறரை விட அதிகப்படியாக காட்டிக் கொள்ள எப்போதும் மிகப்பெரிய திட்டங்கள் தீட்டுகிறான்...

பெருமை........பெருமை..........பெருமை...........வாய் கோணி எச்சில் ஒழுக செத்து விழப்போகும் பிண்டங்களுக்குப் பெருமை. நான் இதைச் செய்தேன்......அதைச் செய்தேன்....என்று இடைவிடாமல் பெருமை.....மானங்கெட்ட பெருமை. கொளுத்தும் நெருப்பில் உடல் கருகிப் போகையில் பெருமையும் தலைக்கனமும் என்ன ஆகும்? மண்ணில் மட்கிப் போகையில் இறுமாப்பு என்னவாகும்?

வாழும் வரையில் யோசிப்பதே இல்லை.....இடைவிடாமல் பெருமை பேசி பேசி மரணிக்கும் தறுவாயில் மானங்கெட்ட புத்தி யோசித்துதான் என்ன பலன்? நிலையாமையை உணர்ந்துதான் என்ன பயன்? தெரு நாய் செத்துப் போனாலும் இழுத்துக் கொண்டு போய் புதைக்கிறார்கள்.......பெருமை பேசும் பெருந்தலைவரகளையும், தலைக்கனம் கொண்டு மனிதர்களுக்கு கேடு செய்து வாழ்ந்தவனையும் இழுத்துக் கொண்டு போய் புதைக்கிறார்கள். நல்லவனையும் கெட்டவனையும் ருசி பார்ப்பதில் நெருப்புக்கும் மண்ணிற்கும் ஒரு பேதமுமில்லை. எது மிச்சம் என்று கேள்வி கேட்டு பார்க்க முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை...?

என் வேலை முடிந்தது என்று எனக்குள் ஒரு உணர்வு வந்தது எத்தனையாவது நாள் என்று எனக்குத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் மனைவியும் அம்மாவும் மட்டும் கட்டிப் பிடித்து அழுதார்கள், பிள்ளை தூர நின்று வேடிக்கைப்பார்த்தது, சகோதரர்களும், அப்பாவும் ...தண்டம் தண்டம் பதினைஞ்சு நாள் வெட்டித்தனமா சுத்திட்டு வருது...என்று என்னை பார்த்து தலையிலடித்துக் கொண்டார்கள்.

என்னோடு பிண்டத் தொடர்பு கொண்டவர்கள் அவர்கள். புலன் உணர்வில் என்னை அறிந்தவர்கள் என் உறவுகள். எனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அளவினை அவர்களால் உணர முடியாது. அவர்கள் புலன் உணர்வுக்கு நான் எவ்வளவு எட்டுகிறேனோ அதை வைத்து என்னை கணித்து விடுகிறார்கள். நான் யாரென்று எனக்குத் தெரிந்தது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு தான் பெற்ற பிள்ளை என்றும் உடன் பிறந்த சகோதரன் என்றும் , கணவன் என்றும், நண்பன் என்றும் ஒரு அளவீடு, அதுவும் அவர்களின் இயல்பில் என்னை உணர்ந்த அளவீடு.....

நான் யாரென்று தெரிய அவர்களுக்கு அவர்கள் யாரென்று தெரிய வேண்டும். பாவம்.....அவர்களுக்குத்தான் அவர்கள் யாரென்றே தெரியாதே....பிறகெப்படி என்னைத் தெரியும்...?

நான் யார் மீதும் கோபமோ எரிச்சலோ படவில்லை. என்னை இகழ்பவர் அவரின் அறிவு நிலையை வெளிப்படுத்துகிறார். புகழ்பவரும் அவ்வாறே... நான் பிரபஞ்ச நியதியை ஒட்டி வாழப்போகிறவன்... என் இயல்பில் நிற்கப்போகிறவன்.... இவர்களுக்காக என் பிரார்த்தனைகளை கூட்டுவேனே அன்றி வார்த்தைகளால் இவர்களுக்கு என் பாடங்களை சொல்ல ஒரு போதும் முயலமாட்டேன்.

அவர்கள் அவர்கள் இயல்பில் இருக்கட்டும். நான் என் இயல்பில் இருக்கிறேன். 

இயல்பில் இரு என்றுதானே....எல்லாம் வல்ல இறை எனக்குப் போதித்தது. இதோ எழுதுவது என் இயல்பு நான் எழுதத் தொடங்குகிறேன். என் இயல்பில் தோன்றுவதை எழுத்துக்களாக கோர்த்து வைக்கிறேன். எந்த வலியுறுத்தலும் இல்லாமல் வாசித்து இயல்பில் விளங்குபவர்கள் விளங்கட்டும்.......

எவ்வளவோ எழுதி இருந்தாலும் பொதுவில் இனி எழுதுகிறேன்...! என் முதல் கவிதையை....நான் எழுதத் தொடங்கினேன்....!

(என் பயணம் முடிந்தது..........உங்கள்....பயணம்...????)


தேவா. சு3 comments:

ஹேமா said...

இந்தப் பயணம் முடிகிறது என்று நினைக்கிறீர்களா தேவா.இருக்காது.எழுத்தில் ஓரளவு எங்களையும் உங்களோடு இருத்திப் பயணித்த ஒரு வேகம்,களைப்பு.அவ்வளவுதான்.இன்னும் சொல்லிக்கொண்டேயிருக்க முடியும் உங்களால் !

எதுவும் இயல்போடு இருத்தல்தான் அழகு.இன்னொன்றை அதனோடு இணைக்கையில் அல்லது திணிக்கையில் அதன் அழகும் உருவமும் மாறுகிறது.இயல்பு தொலைந்தே போகிறது.உங்கள் இயல்புதான் உங்களுக்கு அழகு.நானும் அதுபோலவே !

உங்கள் எழுத்தின் அழுத்தம்...பாராட்டும் அளவுக்கு நானில்லை தேவா.வாழ்த்துகள்.இன்னும் இன்னும் எழுதுங்கள் !

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Anonymous said...

இந்த பயணம் உங்களுக்கு உண்மையில் நடந்ததா? மிகவும் தெளிவுடன் எழுதி இருக்கிறீர்கள். இப்போதும் அதே தெளிவு இருக்கின்றதா? வாழ்த்துக்கள்.