
வார்த்தை இல்லா வார்த்தை பேச வேண்டும்; அதில் யாரும் சொல்லாத சொற்கள் கொண்டு நான் நிரப்பவேண்டும்; இல்லாத கருத்தை நான் பகிர வேண்டும்; மொழியற்ற மொழி ஒன்றை கற்க வேண்டும் அதில் சொல்லாத மேன்மைகள் நான் சொல்லவேண்டும்.
படித்தன எல்லாம் சுமையாகிப் போயின; பகிர்ந்தவை எல்லாம் எண்ணமாக உருக்கொண்டு திடமாகிப்போயின; திட்டமெல்லாம் கலைந்து கொண்டே இருந்தன; மனிதரெல்லாம் மாண்டு கொண்டே இருந்தனர்; பொருளான எல்லாம் பொருளற்று போனது; பொருளற்றது எல்லாம் பொருளாகிப் போனது. விந்தை மனமோ அதற்கு ஆயிரம் கற்பிதங்கள் கொண்டது.
வீசும் காற்றும், கொட்டும் மழையும், பளிச்சிடும் மின்னலும், வெக்கையான வெயிலும், மரமும், செடியும், கொடியும் ,விலங்கும், பறவையுமென பரவி விரிந்த இவ்வுலகில் பார்த்தவை எல்லாம் அழியும் என்ற விந்தை வாழ்க்கைக்கு விளக்கங்கள் கேட்டு, பெற்று பொதி சுமக்கும் மனிதராய் ஆகிப்போய் ஒரு நாள்.... அந்த ஒரு நாள்... மறு பக்கம் கிடக்கும் எலும்புத் துண்டினை கவ்வ நினைத்து சாலை கடக்கும் நாய் சட்டென வந்த ஒரு கன வாகனத்தில் அடிப்பட்டு உயிர் விடுவது போல முடிந்து போகிறதே எம் வாழ்க்கை....
மிச்சமில்லை சொச்சமில்லை மொத்தமாய் கொண்டு போய்க் கொண்டு இருக்கின்ற வாழ்க்கையில், அறிஞர் என்றும், ஞானி என்றும், விஞ்ஞானி என்றும், தலைவர் என்றும், மன்னரென்றும் கூவி கூவி மார்தட்டி மாண்டு கொண்டிருந்தனர் மனிதரெல்லாம்.இவர் சென்றவிடம் எதுவன்றியாமல், எரிந்து போன அல்லது மண்ணோடு மட்கிப் போனதே இவரின் இறுதியென்றால் கூவி... கூவி... நான் இன்னாரென்று கூறுவதின் அர்த்தம்தான் என்ன?
இன்னதென்று அறிவேனில்லை; என்னவென்றும் புரிவேனில்லை ஆனால் நித்தம் நான் கட்டும் வேசத்துக்கொன்றும் குறைவு இல்லை. ஒரு நாளேனும் தனித்தமர்ந்து சிந்திப்பெனில்லை, வெட்டவெளி ஆகாயம் உற்று நோக்குவேனில்லை உருத்தெரியாமல் அழிவெய்யும் தேகத்தின் செயல் பாடு அறிவேனில்லை.
கற்பனையாய் யாரோ நானென்ற ஆத்திர அறிவகன்ற ஒரு கற்பனை வாழ்க்கை குதிரையில் பயணம் செய்யும் ஒரு மூடனாய்...என்னையே ஏமாற்றி ஏமாற்றி....பகலெல்லாம் ஜம்பம் பேசி...போகும் இடமெல்லாம் தடையின்றி புலன் பறக்கவிட்டு தெருவோர நாய் போல வாய்பிளந்து மூச்சிறைக்க கடந்து இரவென்னும் மற்றுமொறு ரகசியத்துக்குள் நுழைந்து பேய் போல பிணம்தழுவும் ஒரு காமம் கொண்டு அதற்கும் காதலென்ற வெற்றுப் பெயரிட்டு பூதமாய் உறங்குவேன் கடை வாய் எச்சில் ஒழுக மற்றுமொரு விடியலுக்காய் பொய்மையில் கரைத்த என் ஜம்பங்களின் விற்பனைக்காய்...
ஒரு புள்ளியாய் நான் கரைந்து போய்...போக்கிடம் இல்லாத ஒரு வெற்று பொருளற்ற பொருளாய், நிறமற்ற நிறமாய், சுவையற்ற சுவையாய், என்றுதான் கரையுமோ என் ஜீவன். சிறுவனாய் மிட்டாய்க்கும், தெருவோர விளையாட்டுக்கும் ஆசைப்பட்டு, பதின்ம வயதில் எதிர் பாலார் மீதிருந்த ஈர்ப்பினில் ஆசைப்பட்டு, இளைஞனாய் பதவிக்கும் பகட்டுக்கும் காமத்துக்கும் ஆசைப்பட்டு, மத்திம வயதில் தலைமுறைக்கு வேண்டுமென செல்வம் சேர்க்க ஆசைப்பட்டு, நரையோடிப் போய் நாடி தளர்ந்த வயதினில் மீண்டும் இளமைக்கு ஆசைப்பட்டு....மாயா புள்ளியை நோக்கி ஓடி ஓடி உடலில் பல நோய் சேர்ந்து....மரணிக்கும் முன்பு என்ன நிகழ்கிறதென்றறிய ஒரு தடிமனான மூளை கொண்டு....மரித்துப் போவதுதான் வாழ்க்கையோ.....?
பொய்மையில் சேராமல் நித்தம் உள் நோக்கி என்னின் தவம் அறிந்து வாழ்வின் பொருளறிந்து ஒரு மெல்லிய மலர் மலர்ந்து விதை பரப்பி பின் மடிவதுபோல நிகழாதோ எம் வாழ்க்கை? எம் மூளையின் மடிப்புகளி எத்தனை சிந்தனைகள் இருந்து என்ன பயன்? கோடி கோடி செல்வம் சேர்த்துதான் என்ன பயன்? எம்மின் கல்வியும் செல்வமும் ஆக்கமும் புறத்திலிருக்கும் எம்மை ஒத்த மானிடருக்கு பயன் தராவிடில் அவற்றை பெறுவதின் நோக்கம்தானென்ன? எம் இரைப்பை நிரப்பி எமக்கு வேண்டுவோர் இரைப்பை மட்டும் நிரப்பும் சுயநலம்தானா வாழ்க்கை?
உடலெல்லாம் அக்னி தின்னும் முன் அல்லது மண் அரிக்கும் முன் மரணித்த உடனே எடுக்கச் சொல்லியிருக்கிறேன் என்னின் உடலின் பாகமெல்லாம். எதுவெல்லாம் பயன் தருமோ அதுவெல்லாம் கொள்ளுங்கள்...என்ற சாசனம் எழுத்தில் உறுதி செய்து உறவுகளிடம் சமர்ப்பித்தேன்....! எமது கண்களும், சிறு நீரகமும், இன்னும் என்னவெல்லாம் உதவுமோ அத்தனையும் பிய்தெடுத்து உபயோகம் கொள்வீர் ஏனெனில் யாம் கொனர்ந்தெதென்று எதுவுமில்லையன்றோ?
இதைக் கூட மிகைப்பட்ட செயலென்ற ஒரு வேசம் கட்டி காண்பித்த மமதை கொண்ட மானம் கெட்ட மனதோடு சண்டையிட்டு...எம்மின் இவ்வறிவிப்பு மிகைப்பட்ட மனிதரின் சிந்தனைகளை உயிர்ப்பிக்கும்.....அந்த உயிர்ப்பிப்பில் கோடணு கோடி கண்கள் பார்க்கும்....., மனிதம் வாழும்....என்ற எண்ணம் திண்ணமானதின் விளைவு இக்கட்டுரை......
என்னவெல்லாம் செய்ய இயலும்? இயன்றவரை செய்வோமே....அதுவன்றி வெறுமனே மரித்துப் போனால்.....எதற்குதான் இந்த படைப்பு.....?
தேவா. S
Comments
கவிதை போன்ற எழுத்து நடையும் , நெகிழ்ச்சியான கருத்துகளும் தொடர்ந்து படித்து கொண்டே இருக்கிறேன், முற்று பெறவே இல்லை......
இது சூப்பர் இப்படி ஓரு அழகான வரி என்ன தத்துவம் அனைத்தும் இதில் அடங்கி இருக்கிறது
பிரமிக்க வைத்தது எழுத்தும்... கருத்தும்..
பேச்சற்று போகிறேன்..மேற்கொண்டு பேச...
ரூம் போட்டு யோசிச்சீங்களோ??>, அருமையான பதிவு, தொடருங்கள்.
//
யோசிக்கிறீர்களா தேவா?
பொருத்தவரை,,, கல்விக்காக பல உதவிகளை செய்துகொண்டே இருக்கவேண்டும் .
படைப்பு மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.
க.பார்த்திபன்
சிங்கப்பூர்.
சிந்தனை ஆழம் அதிகம்.
நல்லதையே செய்வோம்.
அருமை அண்ணா .. இதை தான் நான் உங்களுடைய இன்னொரு பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன் ..
//பொய்மையில் கரைத்த என் ஜம்பங்களின் விற்பனைக்காய்...//
ஐயோ .. எப்படி அண்ணா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க .. அருமை ..
//உடலெல்லாம் அக்னி தின்னும் முன் அல்லது மண் அரிக்கும் முன் மரணித்த உடனே எடுக்கச் சொல்லியிருக்கிறேன் என்னின் உடலின் பாகமெல்லாம். எதுவெல்லாம் பயன் தருமோ அதுவெல்லாம் கொள்ளுங்கள்...என்ற சாசனம் எழுத்தில் உறுதி செய்து உறவுகளிடம் சமர்ப்பித்தேன்....! எமது கண்களும், சிறு நீரகமும், இன்னும் என்னவெல்லாம் உதவுமோ அத்தனையும் பிய்தெடுத்து உபயோகம் கொள்வீர் ஏனெனில் யாம் கொனர்ந்தெதென்று எதுவுமில்லையன்றோ?//
உண்மை அண்ணா .. நிச்சயம் அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று ..!!
வாழ்க்கையின் யதார்த்தத்தை அழகா சொல்லி இருக்கீங்க அண்ணா . ஒவ்வொரு கல்வியற்ற பாமரன் மனசும் கூட இரக்கும் கடைசி துளிகளில் நினைத்து இருக்க கூடும் இவைகளை, எழுத்துக்களை அமைத்த விதம் மிக அழகா இருக்குங்க அண்ணா . நிச்சயம் அடிப்படை கல்வியரிவாலன் கூட இந்த மனித வாழ்க்கையின் யதார்த்தத்தை உங்க எழுத்து மூலம் புரிஞ்சுக்க முடியும் அண்ணா .மிக அழகான பதிவு என்பதை காட்டிலும், மிக அவசியமான பதிவு இது என்று கூறுவது மிக பொருத்தமாய் இருக்கும் ..
எப்பவும் போல இந்த பதிவுலயும் கலக்கி இருக்கீங்க ..
நன்றி ஜெய்....... ! பயத்தினால் நான் மிகைப்பட்டவர்கள் என்றூ போடவில்லை அப்படியிருந்தால் கட்டுரை எப்படி எழுதுவேன்.
நிறைவு செய்யும் போது எதிர்மறையான எண்ணத்தோடு வாசகர்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் செல்லக்கூடாது என்று நினைத்தேன். மேலும் எதிர் மறை எண்ணங்களை விதைப்பதும், அவலங்களை எடுத்துக்காட்டும் அளவில் நிற்பது ஒரு வித சுயவிளம்பரம் என்பது எனது ஒரு அபிப்ராயம்..... ஒரு தீர்வினை எட்டவேண்டும் என்று நினைப்பது உண்மையான சமூக அக்கறை.....
IF WE ARE NOT PART OF SOLUTION, THEN....WE ARE THE PROBLEM!
நன்றி ஜெய்!