Skip to main content

எனது ஆன்மீகப் பயணம்....!














எங்கிருந்து தொடங்க...என்னுடைய ஆன்மீகப் பயணத்தை? பிறப்பிலிருந்தா? இல்லை கருவாய் ஜனித்த பொழுதா? இல்லை அதற்கு முன்பு சக்தியாய் அணுக்களாய் நான் விரவியிருந்த காலமில்லா காலத்திலிருந்தா? சரியான கட்டுரை வடிக்க சரியான மனோ நிலை வேண்டும். சரியான மனோ நிலைக்காக காத்திருந்தேன்....வானம் பார்த்த பூமியில் மழைக்காய் காத்திருக்கும் விவசாயி போல... ! ஒரு மழை அடித்துப் பெய்யும் அந்த தினம்தான் வானம் பார்த்த விவசாயி வாழ்க்கையின் தவம் முடிந்த வரம்.....!

இன்று என்னுடைய வரம்.....

சிவனைத் தொழும் சிவகோத்திரம்....பரம்பரை பரம்பரையா வெண்ணீறு தரித்து " தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற சப்தமான குரல்களை பிறந்தது முதல் கேட்டு வளர்ந்த ஒரு புறச்சூழல். காலையிலும் மாலையிலும் "கந்தர் சஷ்டி கவசமும் " " ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று" என்று கணக்கில்லா சாமி படங்கள் இருந்த பூஜை அறையில் ஒங்கி ஓங்கி உரக்க வழிபடுவது என....எல்லாமே வளர்ப்பிலேயே உடன் வளர்ந்ததேயன்றி இன்றுதான் ஆரம்பித்தது என்று தெளிவாக சொல்லத் தெரியவில்லை எனது ஆன்மீகப் பயணம்.

தோட்டத்தில் தட்டான் பிடிக்கும் ஒரு 12 வயது சிறுவனான...என்னிடம் தட்டானை கொல்லாதே அடுத்த பிறவியில் நீ தட்டானைப் பிறப்பாய் தட்டான் உன்னைத் துன்புறுத்தும் என்று அப்பத்தா கேட்ட அடுத்த வினாடியில், போன பிறவியில் தட்டான் என்னை அடித்திருக்குமோ என்று அனிச்சையாய் எழுந்த கேள்வியை என்னால் மறுக்க முடியவில்லை.

சொர்க்கம் நரகம் பற்றிய கதைகளில் இரவுகளில் உறக்கம் வராமல் தவித்து கனவில் வந்த எண்ணெய் கொப்பரையையும் அதில் தள்ளப்படுகிற மனிதர்களின் அலறல்களையும், சுற்றி நின்று பயமுறுத்தும் கொம்பு வைத்த பல் நீண்ட அரக்கர்களையும் கண்டு பலமுறை நான் உறக்கத்திலிருந்து அலறி எழுந்த போது என்னின் பயம் நீக்க அப்பா....."மந்திரமாவது நீறு " என்று திரு நீற்றுப் பதிகம் பாடி ஓங்கி தலையில் திருநீரால் அடித்து அந்த நடுநிசி உறக்கம் கலைத்து நெற்றியில் விபூதி பூசிய நேரங்களில் எல்லாம் பயம் குறைந்து கண்ட கனவினை வெளியே சொல்லாமல்.... அப்பா பாடிய மந்திரம் இருக்கு, நெற்றியில் விபூதி இருக்கு என்ற தைரியத்தில் உறக்கம் என்னைத் தழுவ நிம்மதியாக உறங்கிய தருணங்களில் எனக்குத் தெரியாது இவை எல்லாம் மனித பயம் போக்க, நம்பிக்கை கொடுக்க மனிதனால் உருவாக்கப்பட உத்தி என்று....

வளர வளர.....கேள்விகளால் நான் நிரம்பி வழிய பதிலே இல்லாமல் மௌனமாய் சாமிப் படங்களைப் பார்த்து விட்டு மிகைப்பட்ட கேள்விகளை தெரிந்த பெரியவர்களிடம் " சாமிக்கு எதுக்கு கண்ணு, கை எல்லாம் இருக்கணும் அவுங்களுக்கு தான் சக்தி இருக்கே" நினைச்சா நினைச்சது கிடைச்சுடாதா என்ற கேட்டு வைக்க... பதில் தெரியாத அல்லது சொல்ல விரும்பாத பெரியவர்களின் முறைப்புகளும், இவன் உருப்படமாட்டான் அதிக பிரசங்கித்தனமா பேசுறான் என்று அப்பாவிடம் வத்தி வைத்த அம்பவங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயந்து என்னுள்ளே அடக்கிய கேள்விகளும், கேலிகளும் லட்சத்தை தாண்டும்.


மிகைப்பட்ட இஸ்லாம் நண்பர்கள் எனக்கு... அவர்களிடம் இருந்து தனித்து தெரியக் கூடாது என்று நான் விபூதி பூசுவதை விடுத்து அவர்களில் ஒருவாராய் இருந்த எனது பதின்ம வயதுகளில் உருவமில்லா கடவுள் கொண்ட இஸ்லாம் என்னை ஈர்க்கவே செய்தது. அவர்களிடம் இருந்து வித்தியாசப்படாமல் இருக்க எனக்கு இஸ்லாம் பற்றிய அறிவு வேண்டும் என்று விளையாட்டாய் முகமது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து படித்து முடிக்கும் முன்பு கண்கள் கசிந்து உள்ளம் உருகி திருகுர் ஆனை படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கையில் எடுத்து படிக்க ஆரம்பித்த நான்....படுத்துக் கொண்டு படித்தேன் பின் ஏன் மெல்ல எழுந்தேன்....அமர்ந்தேன்....பின் பவ்யமாக அந்த வேதத்தை மேலான ஒரு மேசையில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன்....என்று தெரியாமல் தொடர்ந்து வாசித்தேன்...

" இறைவன் உருவமில்லாதவன்; அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை; அலியுமில்லை "

ஏதோ ஒன்று உள்ளிருந்து மெல்ல நகர....என் மூலக் கேள்விக்கு பதில் மங்கலாய் தெரிந்த போது எனக்கு வயது 18. அது +2 பரீட்சை முடிந்த மே மாத விடுமுறை. வெயில் வெளியேயும் எனக்கு உள்ளேயும் சுட்டெரித்தது. இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவன் எல்லோருக்கும் பொது.....சரிதானே...? அவன் வெவ்வேறாக இருக்க சாத்தியம் இல்லை என்ற எண்னம் என் சிற்றறிவுக்குள் எட்டிப்பார்த்தது..

இதனைத் தொடர்ந்து அடுத்த படியாக பைபிளுக்குள் மூழ்கி வெளியே வந்த பின் இயேசு கிறிஸ்துவின் மலை உபதேசமும், கருணையே வடிவான இயல்பும், மனிதர்களை நேசிக்கும் மகத்துவமும் உணர முடிந்தது. மிக அதிகமாக கிறிஸ்துவைப் படித்த பின்பு, இயேசு கிறிஸ்து மிக சந்தோசமான மனிதராக, எப்போதும் மக்கள் கூட்டத்துடன் கூடிக்களித்தவராக, அன்பே வடிவானவராக, இருந்திருக்கிறார். அவரின் சித்தாந்தம் பழைமைவாதிகளான யூதர்களுக்கு பிடிக்காமல் சிலுவையில் அறைந்திருக்கின்றனர். ஆனால் சந்தோசமான ஒரு புருஷனை ஏன் சோகமாக படங்களில் காட்டவேண்டும் என்ற கேள்வியும் என் மூளைக்குள் எழுந்ததை என்னால தவிர்க்க முடியவில்லை.

என்னைச் சுற்றியிருந்த மூன்று மிகப்பெரிய மதங்களை என் அறிவுக்கு விளங்கினாலும்... மூன்றின் மூலமும் ஒன்றுதான் என்று எனக்குள் இருந்த ஒன்று நம்பத்தொடங்கியது...இது மனசு சொல்லும் நம்பிக்கையில்லை...ஒரு குழந்தையைப் பார்த்தால் தோன்றுமே சந்தோசம் அது போல...கன்று பசுவிடம் பால் குடிக்கும்போது ஏற்படுமே ஒரு பரவசம் அது போல உணர்ந்தேன். ஆனால் கேள்விகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஏன் வேறு வேறு பாதைகள்....? மதங்கள் சொல்வது போல சொர்க்கம் நரகம் உண்டா? அப்புறம் கடவுள் ஏன் புராணத்திலும் வரலாறுகளிலுமே இருக்கிறார் நம் முன் அல்லது இது வரை அவர் வந்ததை பல பேர் ஒரு சேர ஏன் பார்க்கவில்லை?

பார்த்தவர் எல்லாம் தான் தனித்து பார்த்ததாக கூறும் சூட்சுமம் என்ன? அதை அப்படியே பின்பற்றாமல் அறிவியலோடு சேர்த்து கடவுள் இருப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடன் சண்டையிட்டதின் விளைவு....... ஐன்ஸ்டீன், நீல்ஸ்போர், டார்வின், காரல் மார்க்ஸ், லெனின், நீட்ஸே, ப்ரெடரிக் ஏங்கல்ஸ், சிக்மண்ட் ப்ராய்டு, லாவோட்சூ, கன்பூசியஸ், ஓஷோ, பாலகுமாரன், சுஜாதா, பெரியார், விவேகாந்தர், என்று தொடர்ந்து படிக்க வைத்தது. பெரியாரின் கொள்கைகளையும் ஏன் கடவுள் இல்லை என்று அவர் கூறினார்....? மேலும் இப்படி பகிரங்கமாய் கூறியும் ஏன் அந்தக் கொள்கை வேரூன்ற வில்லை.....மனிதர்கள் ஆன்மீக ஈடுபாடும், கோவில்களும் சர்ச்சுகளும் மசூதிகளும் ஏன் அதிகரிக்கின்றன....என்ற கேள்விகளுடன் கல்லூரி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த போது நான் சந்தித்தவர் தான்

செல்வமணி மாமா....

பலகேள்விகளுக்கு செவுட்டில் அறைந்தது போல இவர் சொன்ன பதில்களும், எதற்கு கோவில் என்று இவர் கொடுத்த விளக்கங்களும், உருவமில்லா ஏதோ ஒன்றை நோக்கி இழுத்துச் செல்லவும் அதே நேரத்தில் சக மனிதனிடம் சந்தோசமாய், பாசமாய், மனிதர்களுக்குள் பிணக்கு வராமல் இருக்க பாமர மக்களுக்காக விபரம் தெரிந்த ஞானிகளாலும், சத்தியம் உணர்ந்த மகான்களாலும் வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்தான் மதங்கள் என்றும் சொர்க்கம் நரகம் என்று சொன்னால் மனிதன் சகமனிதனை ஒழுங்காய் நடத்துவான், மேலும் தண்டனைகள் கிடைக்கும் என்று பயந்து கட்டுப்பாடுகளுக்குள் நடப்பான் என்றும்...மதங்கள் உருவான நோக்கமே...மனிதம் செழிக்கத்தான் என்றும்.....வரிசையாக ஒவ்வொன்றாய் அவர் சொல்லிச் செல்ல...என்னுள் இருந்த எல்லா கற்பனைக் கட்டிடங்களும் தூள் தூளானதும்.....தவிர்க்க முடியாத என் வாழ்வின் தருணங்கள்......

ஒரு சக்தி ஓட்டம் நம்மைச் சுற்றி இருக்கிறது மனிதனாய்....விலங்காய்...இயற்கையாய்...இன்னும் எது எதுவாகவோ.....இதை நாம் உணரமுடியும், பார்க்க முடியும் அதனால் இந்த சக்தி ஓட்டத்தை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் வாகன நெரிசல் உள்ள சாலைக்கு சாலைவிதிமுறைகள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியம்தான் மதங்கள் காட்டியிருக்கும் நெறி முறைகள்......பயிலும் வரை நெறிமுறைகளும் அவசியம்.... பயிற்றுவிப்பானும் அவசியம்.....ஆனால் பயிற்சி இருந்தால் அங்கே புரிதல் இருக்கும் புரிதலின் படி தானாக எல்லா வேலைகளும் நடக்கும்.

பிரேக் இட வேண்டிய இடத்தில் பிரேக் இடவும், வேகம் கூட்ட வேண்டிய இடத்தில் கூட்டியும், குறைக்க வேண்டிய இடத்தில் குறைத்தும், பெட்ரோல் போடவேண்டும் என்ற இடத்தில் பெட்ரோல் இட்டும் சீராக இயக்கம் இருக்கிறது. ஆனால் அதற்காக விதிமுறைகள் அறிந்த வண்டி ஒழுங்காய் ஓட்டும் சிலரை மட்டும் கணக்கில் கொண்டு விதிமுறையே வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அப்படி இருந்தால் எத்தனை கொடுமையான விபத்துக்கள் நடக்குமோ...கற்பனை செய்து பார்க்க முடியாது அல்லவா?

அப்படிப்பட்ட விதிமுறைகள்தான் மதங்கள்...தெளிவான பார்வையும் பயிற்றுவிப்பும் பக்கத்தில் இருக்கும் மனிதனின் வலியும் தெரிந்து விட்டால் பயணத்தில் சறுக்கல் இல்லை......பாமர மனிதனை பயிற்றுவிக்கவும், மனிதநேயத்தோடு வாழச் செய்யவுமே மதங்கள்......! சம காலத்தில் நம்மை நாமே துன்புறுத்திக் கொண்டு மதம் என்ற ஒரு கோட்பாடுக்குள் சிக்கி சக மனிதனை நேசிக்க முடியாமல் என் தெய்வம் இது, என் சாதி இது என்று மட்டுப் படுத்தி சக மனிதனை இழிவு படுத்துவோமேயானால்....எந்த மதத்தையும் எந்த வேதத்தையும் பின் பற்றுகிறோமோ அவற்றின் முதல் எதிரி நாம்தான்....

சக மனிதரை நேசிக்கச் சொல்லித்தான் எல்லா மதங்களும் கடவுளரும் சொல்கிறார்கள்......! சக மனிதரை இயல்பாகவே நேசித்து கருணையுடன் வாழத்தொடங்கி நாம் யார்? எங்கு சொல்கிறோம் என்று விசாரணையோடு தேடலை உள் நோக்கி நகர்த்துவோம்......அப்படிப் பட்டவருக்கு விதிமுறைகளும், கற்பிதம் கொள்ள கடவுளரும் தேவையில்லை என்பது எனது எண்ணம்.....

என் கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...

"பாஸ் பண்ணாத பையனுக்கு தான் 10 ட்யூசன்......100 மார்க் வாங்குபவனுக்கு எதற்கு ட்யூசன்?"

பின்குறிப்பு: நண்பர் கே.ஆர்.பி. செந்திலுக்கு..... இப்படி ஒரு தலைப்பில் எழுதச் சொன்னால் நான் தொடராகத்தான் எழுத வேண்டும்.....ஹா...ஹா...ஹா...ஏனெனில் எனது ஆன்மீகப் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பல தரப்பட்ட அனுபவஙக்ள் இன்று வரை நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. நாளைய தெளிவுகள் நேற்றைய நம்பிக்கைகளை தகர்க்கலாம் தகர்க்காமலும் போகலாம். மிக சுருக்கமாக ஓரளவிற்கு என் தெளிவினை எழுதியிருக்கிறேன்.

இது என்னுடைய பார்வையின் தெளிவு மட்டுமே....!

ஆறறிவு என்ற அக்னி தாண்டி....வெளியேற வேண்டும்....அப்போது வெளிப்படும் சத்தியத்தின் பரிமாணங்கள்!!!



தேவா. S

Comments

Unknown said…
மிகசரியான கட்டுரை நண்பரே.. நான் என்னை உங்களில் பார்க்கவைத்த கட்டுரை.. எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கிறது..
ஆனால் அதனை வியாபாரமாக்கி அசிங்கபடுத்தி விட்டனர்.. மக்களை சரியான பாதைக்கு இட்டு செல்லவே மதங்களை தோற்றுவித்தனர்..

அண்ணல் நபியோ, இயேசு பிரானோ, புத்தனோ, பகவான் கிருஷ்ணனோ உபதேசங்களை மக்களின் நன்மைக்காக மட்டுமே விட்டுச் சென்றனர்.. பின்னால் அவர்களின் வழிவந்த சிலர் திசை மாற்றி அழைத்துச் செல்கின்றனர்..

இப்படி ஆகும் என அறிந்துதான் நபி அவர்கள் மார்க்கமே இறுதியானது, நானே கடைசி இறைத்தூதன் என அறிவித்தார்.. ஆனால் மதத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு தீவிரவாதம் செய்யும் சில தீவிரவாதிகளினால்., ஓட்டு மொத்த இஸ்லாமிய மக்களையும் ஒதுக்கி வைக்கும் மனித நேயமற்ற செயல் ஆரம்பித்தது..

ஆசையை அறு என்றான் புத்தன்..அவனின் வழி வந்தவர்கள் சிலர் இலங்கையில் செய்த பாதகம் ஓட்டு மொத்த புத்த கொள்கைகளையும் நாம் மறுபரிசீலனை செய்ய வைத்தது..

மதங்கள் மனிதத்தை கூறுபோட்டுவிட்டன.. அதுதான் நம் போன்ற மனிதம் விரும்புபவர்களின் வருத்தமே...
VELU.G said…
//எந்த மதத்தையும் எந்த வேதத்தையும் பின் பற்றுகிறோமோ அவற்றின் முதல் எதிரி நாம்தான்....
//

சத்தியமான வார்த்தைகள்

உங்கள் சிந்தனைகள் அற்புதமான வெளிப்பாடாகவே எப்போதும் இருக்கிறது.

மீண்டும் தொடருங்கள்
அகம் பிரம்மாஸ்மி. உனது இந்த ஆன்மீக பயணம் சிறக்க எனது ஆசிகள்
விஜய் said…
முதலில் தேவா அண்ணாவுக்கு நன்றி,

மிக சரியாக சொன்னீர்கள்....உலக மத தத்துவங்கள் யாவும் அன்பை மட்டும் தான் போதிக்கிறது...இந்த அன்பை
மனிதனிடத்தில் கொண்டு செல்ல தான் கடவுளை மனிதன் படைத்தான் ..அங்கே தான் தவறு செய்து விட்டான் , தான் விருப்பப்பட்ட எண்ணங்களில், வண்ணங்களில் கடவுளை படைத்துவிட்டான்.

மனிதனின் எண்ணங்கள், உருவாக்கபட்ட கடவுளின் வண்ணத்தின் மேல் விழுந்துவிட்டன, அவை தான் இன்று கடவுளுக்காக வெட்டி சாகும் நிலையில் கொண்டு வந்து விட்டு இருக்கிறது ...

மதம் போதித்த அன்பு எனும் கருத்தை மறந்துவிட்டான், மதத்தின் வர்ணத்தை பிடித்துகொண்டு இது தான் கடவுளின் கருத்து என்று சக மனிதனை அழித்து கொண்டு இருக்கிறான் ..

அண்ணாவோட பதிவு ரொம்ப அழகா எப்பவும் போல நச்சுனு சொல்ல வந்தத மனசுக்குல பதிய வைச்சு இருக்கிறாரு நீங்க கலக்குங்க அண்ணா ..

வாழ்த்துக்கள்
-உங்க தம்பி
//சம காலத்தில் நம்மை நாமே துன்புறுத்திக் கொண்டு மதம் என்ற ஒரு கோட்பாடுக்குள் சிக்கி சக மனிதனை நேசிக்க முடியாமல் என் தெய்வம் இது, என் சாதி இது என்று மட்டுப் படுத்தி சக மனிதனை இழிவு படுத்துவோமேயானால்....எந்த மதத்தையும் எந்த வேதத்தையும் பின் பற்றுகிறோமோ அவற்றின் முதல் எதிரி நாம்தான்....//

"ந‌ச்"னு சொன்னீங்க‌
அன்பு ஒன்றே தீர்வு அன்பே சிவம் என்று சொல்வார்கள் அது உண்மைதான். அன்பு தான் முதல், உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும்
///போன பிறவியில் தட்டான் என்னை அடித்திருக்குமோ என்று அனிச்சையாய் எழுந்த கேள்வியை என்னால் மறுக்க முடியவில்லை.///
எனக்கும் இது போல அனுபவம் உண்டு அண்ணா ..!!
உண்மையிலேயே என்னால எதுவும் சொல்ல முடியலை.. நிச்சயம் கடவுளை பற்றி தேடவேண்டுமென்றால் அனைத்து மதங்களைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டுமென்ற உங்களது ஆர்வம் என்னை பிரமிக்க வைக்கிறது.. அதிலும் நீங்கள் கூறிய //ஐன்ஸ்டீன், நீல்ஸ்போர், டார்வின், காரல் மார்க்ஸ், லெனின், நீட்ஸே, ப்ரெடரிக் ஏங்கல்ஸ், சிக்மண்ட் ப்ராய்டு, லாவோட்சூ, கன்பூசியஸ், ஓஷோ, பாலகுமாரன், சுஜாதா, பெரியார், விவேகாந்தர், என்று தொடர்ந்து படிக்க வைத்தது. /// இவர்களில் ஒரு சிலரைத்தான் எனக்கு தெரியும். நிச்சயம் உங்களின் நட்பு கிடைத்தது பற்றி நான் மகிழ்கிறேன்..
//சக மனிதரை நேசிக்கச் சொல்லித்தான் எல்லா மதங்களும் கடவுளரும் சொல்கிறார்கள்......! சக மனிதரை இயல்பாகவே நேசித்து கருணையுடன் வாழத்தொடங்கி நாம் யார்? எங்கு சொல்கிறோம் என்று விசாரணையோடு தேடலை உள் நோக்கி நகர்த்துவோம்......அப்படிப் பட்டவருக்கு விதிமுறைகளும், கற்பிதம் கொள்ள கடவுளரும் தேவையில்லை என்பது எனது எண்ணம்.....// படத்திற்கு ஏற்ற அற்புதமான பதிவு. டிஸ்கி:அண்ணே நெசமாவே இது எனது சொந்தக்கருத்துன்னு சொன்ன நம்பவாப்போறீங்க.
நல்ல சிந்தனை, ஆழ்ந்த கருத்துக்கள். யோசிக்க வெச்சிட்டீங்க அண்ணா.
எதுவாக இருக்கிறது அது நாமாக இருக்கிறது :)
இவ்வளவு படிச்சிருக்கீங்களா? அதுதான் எழுத்துல இவ்வளவு தெளிவு. அன்பைத்தான் அத்தனை மதமும் போதித்தன. மக்கள் அதை மட்டும் கவனிக்காமல் என்னன்வோ செய்துகொண்டிருக்கிறார்கள்.
jothi said…
//எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கிறது..
ஆனால் அதனை வியாபாரமாக்கி அசிங்கபடுத்தி னர்.. மக்களை சரியான பாதைக்கு இட்டு செல்லவே மதங்களை தோற்றுவித்தனர்..

அண்ணல் நபியோ, இயேசு பிரானோ, புத்தனோ, பகவான் கிருஷ்ணனோ உபதேசங்களை மக்களின் நன்மைக்காக மட்டுமே விட்டுச் சென்றனர்.. பின்னால் அவர்களின் வழிவந்த சிலர் திசை மாற்றி அழைத்துச் செல்கின்றனர்..// //சக மனிதரை நேசிக்கச் சொல்லித்தான் எல்லா மதங்களும் கடவுளரும் சொல்கிறார்கள்......! சக மனிதரை இயல்பாகவே நேசித்து கருணையுடன் வாழத்தொடங்கி நாம் யார்? எங்கு சொல்கிறோம் என்று விசாரணையோடு தேடலை உள் நோக்கி நகர்த்துவோம்.....//எல்லாருடைய வாழ்வின் சிதாதமும் அதுவே,....... உணர்ந்தாள் அனைவரும் கடவுள்........
//சக மனிதரை நேசிக்கச் சொல்லித்தான் எல்லா மதங்களும் கடவுளரும் சொல்கிறார்கள்......! சக மனிதரை இயல்பாகவே நேசித்து கருணையுடன் வாழத்தொடங்கி நாம் யார்? எங்கு சொல்கிறோம் என்று விசாரணையோடு தேடலை உள் நோக்கி நகர்த்துவோம்......அப்படிப் பட்டவருக்கு விதிமுறைகளும், கற்பிதம் கொள்ள கடவுளரும் தேவையில்லை என்பது எனது எண்ணம்.....//

உண்மை . பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள்
பெருமையா இருக்கு தேவா...
பேசனும் தேவா... நிறைய பேசனும்... உங்க கூட.... ஜோதிஜி... செந்தில்... சௌந்தர்...இன்னும் நிறைய பேரு கூட எண்ணிக்கை கூடிகிட்டே போகுது...
திறந்த மனதுடன் உள்ளவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள். மதம்பிடித்து அலைபவர்கள் இதற்கும் கூட எதிர்ப்பு சொல்லலாம்.
mkr said…
சகோ. தேவா அவர்களே உங்கள் பிளாக் வருவதற்கு முன்பு நிங்களும் எனதூரை சேர்ந்த அன்பர் என்ற நிலைய தாண்டி உங்கள் மிதான மதிப்பிடு அதிகரிக்க செய்து விட்டது.தொடர்ந்து எழுதுங்கள் தேவா.உங்களிடம் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது
dheva said…
கருத்து பகிர்வு கொள்ளும் அத்துனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள். மிகைப்பட்ட விசயங்கள் அறியாமல் என் அறியாமையில் இருந்து விழுகின்றன இந்த வார்தைகள்.

உங்களின் அன்பும் புரிதலும் என்னை ஆட்சி செய்கின்றன....மீண்டும் எனது பணிவான நமஸ்காரங்கள்!
Anonymous said…
கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களுக்காக
கடவுளை கட்டிப்பிடித்து அழவும் வேண்டாம்,கடவுள்
இல்லை என்று சொல்பவர்களுக்காக கடவுளின் மீது
கல்லெறியவும் வேண்டாம்.

" சக மனிதரை நேசிப்போம் என்றும் அன்புடன் இருப்போம்."

நன்றி வண்க்கம்.

க.பார்த்திபன்
சிங்கப்பூர்.
ஹேமா said…
அருமையான கடவுள்,மதம் பற்றிய விளக்கம் தேவா.மனிதனை ஒழுங்காக வழி நடத்தவே கடவுள் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று நானும் நினைத்துக்கொள்வதுண்டு.
ஹேமா said…
அருமையான கடவுள்,மதம் பற்றிய விளக்கம் தேவா.மனிதனை ஒழுங்காக வழி நடத்தவே கடவுள் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று நானும் நினைத்துக்கொள்வதுண்டு.
SASIKUMAR said…
உங்களின் அன்பும் புரிதலும் என்னை ஆட்சி செய்கின்றன....
SASIKUMAR said…
உங்களின் அன்பும் புரிதலும் என்னை ஆட்சி செய்கின்றன....
//உருவமில்லா கடவுள் கொண்ட இஸ்லாம் என்னை ஈர்க்கவே செய்தது.//


இஸ்லாம் கடவுளுக்கு உருவமில்லைன்னு யார் சொன்னது!?

தன் சாயலில் மனிதர்களை கடவுள் படைத்தார் என்று தானே ஆபிரஹாம மதங்கள் சொல்லுது!?
தன் சாயல்னா என்ன?
Anonymous said…
//எந்த மதத்தையும் எந்த வேதத்தையும் பின் பற்றுகிறோமோ அவற்றின் முதல் எதிரி நாம்தான்....//


எல்லா மதங்களின் அடிப்படையான கருத்தை ஒரே இடத்தில் உங்களின் பார்வையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...இறைவனை நேசிப்பவர்களும், வெறுப்பவர்களும் உங்கள் எழுத்தை அவசியம் படிக்க வேண்டும்...மனிதம் ஒன்றே நன்று என்பது நினைவுக்கு வரும்...

என்னை சீர்படுத்தி கொள்ள, என் உணர்வுகளை செம்மை படுத்தி கொள்ள உங்களின் படைப்புகள் உதவுகின்றன அதில் இந்த பதிவும் ஒன்று.

ரசிகை
அருமையான கட்டுரை.
தமிழ்மணத்தில் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்...!
ஆமினா said…
தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் தேவா.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த