Skip to main content

காய்கள் நகர்த்தும் காங்கிரஸ்! ஐ.நாவில் அரங்கேறப் போகும் இலங்கை எதிர்ப்பு நாடகம்...!


ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரிய நாடகத்தை அப்போது பாரளுமன்றத் தேர்தலை சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஆளும் காங்கிரசு கட்சி மேற்கொண்டதை எம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

போரின் இறுதி நிலை என்று இலங்கை இராணுவம் அறிவித்து இந்தியாவின் உதவியுடன் தமிழ் மக்களை துவம்சம் செய்து கொண்டிருந்த போது தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக்கட்சித் தலைவரான திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் என்னும் ஒரு தற்காலிக நாடகத்தை சென்னை மெரினாவில் அரங்கேற்றிக் கொண்டே போரை இலங்கை அரசு நிறுத்தி விட்டதாக கூறி இந்திய ஊடகங்களைக் கொண்டு பரப்புரை செய்தது இந்திய அரசு. தமிழர்களாகிய நாமும் வாய் பிளந்து அட தமிழினத்தலைவரின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு சக்தியா என்று ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்த போதே....

பாரளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை தற்காலிக போர் நிறுத்தம் செய்து வைத்திருந்த இலங்கை பேரினவாத அரசு காங்கிரசு கட்சி மீண்டும் ஆட்சி பீடம் ஏறிய உடனேயே.. மீண்டும் தனது கோரத் தாக்குதலை தொடங்கியது. மே மாதம் 16 ஆம் தேதி 2009ல் பாரளுமன்றத்திற்கான முடிவு தெரிந்த உடனேயே இலங்கைக்கு க்ரீன் சிக்னலை ஆளும் காங்கிரஸ் அரசு கொடுக்க திட்டமிட்ட படி மே 17,18,19 களில் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டனர் தமிழர்கள்.

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையிலும், திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் பாரம்பரிய தமிழர் கட்சியோடு கூட்டு வைத்திருப்பதால் தமிழர் நலம் பேணப்படும் என்ற ஆசையாலும், பாரதிய ஜனதா என்ற மதவாதக் கட்சியின் மீது இருந்த நம்பிக்கையின்மையினாலும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களின் வாய்களுக்கு வாய்க்கரிசியைப் போட்டுவிட்டு உற்சாகமாய் பதவியேற்றுக் கொண்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசு...

மே 13 ஆம் தேதி பராளுமன்றத் தேர்தலில் தமிழர்களை காங்கிரஸ் கூட்டணி அரசு காக்கும் என்ற மாயை உண்டாக்க ஒரு நாடக உண்ணாவிரதம் ஏப்ரல் 27ல் அரங்கேற்றப்பட்டு..... தேர்தல் முடிவு வரும் வரையில் காத்திரு இலங்கையே என்று ஒரு ரகசிய கட்டளை இடப்பட்டு மே 13ல் தேர்தல் முடிந்து 16 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன்....ஆட்சியிலேறிய காங்கிரஸ் கொடுத்த சமிஞையை கண்டு கொலை வெறித் தாக்குதலை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தது கபட இலங்கை அரசு...!

கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது நாடகத்தை முன்னின்று நடத்திய அதே தமிழ்த் துரோகி ப.சிதம்பரம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்னும் கட்சி தடமில்லாமல் போய்க்கொண்டிருப்பதை கண் கூடாக கண்டு, மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி தலையெடுக்க வைப்பது? அப்படி வைத்தால் தானே மிச்சமுள்ள தன் வாழ்நாளின் பிழைப்பு ஓடும் என்று ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் மேலிடத்திற்கோ தனது கோரப்பற்கள் தமிழக மக்களுக்கு தெரிந்து விட்டதே இனி என்ன செய்வோம் என்று திருடன் கையில் தேள் கொட்டியது போல செய்வதறியாது விழி பிதுங்கி தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் வரப் போகிற நாடளுமன்றத் தேர்தலில் நாம் அம்பேல்தான் என்ற முடிவுக்கு வந்தேதான் விட்டது.

இப்படியன சூழலில் அமெரிக்கா உதவியுடன் ஐ.நாவில் நிறைவேற்றப்பட உள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய தீர்மானத்தைப் பற்றி பரபரப்பாகவே நாம் பேசிக் கொண்டும் ஆங்காங்கே படித்துக் கொண்டும் இருக்கிறோம். உணர்ச்சியின் உச்சத்தில் உலக நாடுகள் எல்லாம் ஆதரிப்பதோடு இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிக் கொண்டும் இருக்கிறோம்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று நம்மைப் போன்றவர்களுக்கு தெளிவாகத் தெரியாது ஆனால் ஆளும் இந்திய அரசுக்கும், மெளனமாய் வேடிக்கைப்பார்க்கும் இலங்கை அரசுக்கும் தெளிவாய்த் தெரியும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதால் தமிழரின் ஆதாரக் குரலான தனித் தமிழ் ஈழம் என்பதை பெற முடியாது. அதுவுமில்லாமல் சர்வ தேச சமுதாயம் விவாதிக்கபோவது போர்குற்றங்களை விசாரிக்க சிங்கள பேரினவாத அரசு நியமித்த நல்லிணக்க குழு என்னும் கொலைகாரன் நியமித்த கொலைகாரக் குழு கொடுத்திருக்கும் அறிக்கையின் முடிவுகளை செயல்படுத்தக் கூறியும், மேலும் தெளிவாக விசாரிக்கக் கோரியுமே இவர்கள் நிறைவேற்றப் படும் தீர்மானம் கோரப்போகிறது...!

இப்படியான சூழலில் சில கேள்விகளை உங்களுக்காக இந்தக் கட்டுரை முன் வைக்கிறது...

1) போர்க்குற்றம் செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டால் என்ன மாதிரி நெருக்கடிகள் ஏற்படும் என்று ஏன் நாம் ஒருவர் கூட ஆய்வு செய்யவில்லை?

2) இந்த தீர்மானம் நிறைவேறினால் தமிழ் ஈழ அரசு அமைய என்ன வாய்ப்புகளை சர்வதேச சமுதாயம் நமக்கு கையளிக்கப் போகிறது என்ற கேள்வி ஏன் நமக்கு எழவில்லை?

3) அத்தனை பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை கொன்றழித்த மாபாவிகளுக்கும் உடன் துணை புரிந்தோர்களுக்கும் என்னவிதமான தண்டனையை இந்த சர்வதேச வல்லாதிக்க நாடுகள் கொடுக்கப் போகின்றன?

இதற்கெல்லாம் பதில் எந்த தமிழனுக்காவது தெரியுமா? தெரியாதுதானே...? இந்திய ஊடகங்களின் தொடர் பரப்புரைகளால் நாம் இப்படி எல்லாம் கேள்விகள் கேட்க மறந்து இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமமே எழுப்பி வருகிறோம்? அப்படி ஆதரிக்காவிட்டால் ஆளும் காங்கிரஸ் தமிழர் விரோதகட்சியய் பார்க்கப்படும்....என்று மிரட்டியும் கொண்டிருக்கிறோம்...

நயவஞ்சக காங்கிரசுக்குத் தெரியும் இந்த தீர்மானத்தை நாம் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் இலங்கைக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை என்று...இருந்தாலும் இந்த நெருப்பினை ஊதி ஊதி இந்தியாவில் குறிப்பாய் தமிழர்கள் மத்தியில் பெரிதாக்கிய இந்த குள்ள நரி காங்கிரஸ்.....தாங்கள் இலங்கைக்கு எதிராக நடக்கமாட்டோம் என்பது போல ஒரு தோற்றத்தை எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் ப்ரணாப் முகர்ஜிக்கள் மூலம் பாரளுமன்றத்தில் அரங்கேற்றியது.

அதே நேரத்தில் இந்திய ஊடகங்களை குறிப்பாக தமிழக செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளுக்கான பிடியை மெல்ல தளர்த்தி விடவும் செய்து இது வரையில் இந்தியாவில் வெளியிடப்படமல் இருந்த கிட்டத் தட்ட தடை செய்து வைக்கப்பட்டிருந்த சானல் 4ன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற காணொளிகளை பரப்பிக் கொள்ள அனுமதியும் கொடுத்ததை அடுத்து தமிழக தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் தமிழர் ஆதரவுப் போக்கினை உணர்சிப் பூர்வமாக ஆனால் ரொம்பவே காலம் தாழ்த்தி காட்டிக் கொள்கிறோம் என்ற வெட்கம் இலலமல் காட்டி கொண்டன.

இதன் தொடர்ச்சியாக திமுகழக எம்.பிக்கள் யாருமே எதிர்பாராத விதமாக இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்று புலிப்பாய்ச்சல் பாய்ந்தனர். இதன் பின்ணயில் இருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி அரசியலும், காங்கிரஸ் கட்சியின் இராஜ தந்திர நடவடிக்கையையும் எம் மக்கள் அறிந்திருக்கவில்லை...!

இதோ....மார்ச் 23 மூன்றில் அமெரிக்கா கொண்டுவரபோகும் தீர்மானம் ஐ.நாவில் அரங்கேறப்போகிறது....! காங்கிரசும் திமுகவும் திட்டமிடப்பட்ட நாடக காட்சிகளின் மூலம் காய் நகர்த்தும் வேலைகளை தொடங்கி விட்டன...

இனி இந்தக்கட்டுரை கூறப் போவது எதுவும் நிகழாவிடில் நானும் உங்களோடு சேர்ந்து மிகவும் சந்தோசப்படுவேன் ஆனால் நடந்து விட்டால்.....துரோகிகளை, அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது நமது கடமையாகிறது.

தந்திரம் 1

மார்ச் 20 ஆம் தேதி கூடும் திமுக உயர்நிலைக் குழுவில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காவிடில் திமுகழகம் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்று முடிவெடுக்கப்படும்.( ஏற்கெனவே இந்தியா ஆதரிக்கும் என்ற தகவல் கிடைத்ததன் பேரில்)

இந்தியா ஆதரவு தெரிவித்தவுடன் ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்காக இந்த நிலைப்பாட்டை எடுக்க திமுக தான் காரணம் என்று மக்களிடையே பரப்புரை செய்து தங்களின் தமிழர் ஆதரவு போக்கினை வலுப்படுத்திக் கொள்வதோடு காங்கிரசடோன உறவை தொடரவும் இந்த தீர்மான ஆதரவு நிலைப்பாட்டையே காரணமாய்ச் சொல்லும்.

தந்திரம் 2

ப. சிதம்பரத்தின் வற்புறுத்துதலின் பேரில் இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது என்று செய்திகள் வரும் (இதற்கு தூபம் போடும் வகையில் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன).

தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவப் போகாத போலியான ஒரு தீர்மானத்தை ஆதரித்ததை பெரிதாக விளம்பரம் செய்து தமிழ் நாட்டில் ப. சிதம்பரத்தை வைத்து தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை காங்கிரஸ் ஆடத்துவங்கும். ஈழத்தமிழர்களுக்காக இந்தியா ஐ.நாவில் இலங்கையை எதிர்த்ததை பரப்புரை செய்து தமிழர் ஆதரவு என்னும் அரசியலை அரங்கேற்றி மக்களை வளைக்கும். இதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் முழு மூச்சாய் உதவி செய்யும்.

ஏற்கெனவே அலங்கோல ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அதிமுகவை வேரோடு சாய்த்தெறியும் திமுக பிரகாசமான எதிர்கால அரசியலில் இன்னும் வேகமாய் முன்னேறிச் செல்லும்...!

மக்களாகிய நாம் என்ன செய்வோம்...?

இந்த இராஜதந்திர அரசியலில் சிக்குண்டு அன்னை சோனியாவின் காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நாடு நலம் பெறும், நல்லாட்சி நடை பெறும், தமிழர்கள் வாழ்வார்கள்...(அதுதான் ஐ.நாவிலேயே இலங்கைக்கு எதிராய் வாக்களித்து விட்டார்களே..!!!) என்றெல்லாம் பேசிக் கொண்டு ஈழப்பிரச்சினையையும், அங்கே நிகழ்த்தப்பட்ட இன அழிப்பையும், வக்கிர கொலைகளையும் மறந்து விட்டு....

ஆளும் இந்திய (2013க்கு அப்புறமும்) காங்கிரஸ் நடத்தும் போலி நாடங்களைப் பார்த்து மகிழ்ந்தும், கொந்தளித்தும் கொண்டு ஆட்டு மந்தைகளாய்

' பாரத் மாத கீ ஜெ.....' என்று கோசம் போட்டுக் கொண்டு நம்து இந்திய தேச உணர்வை தொடர்ந்து காட்டிக் கொண்டிருப்போமே அன்றி....

" ஏண்டா நாய்களா.................கொத்து கொத்தாய் என் இனம் செத்து விழுந்தப்ப என்னாடா செஞ்சு கிழிச்சீங்க.....இப்ப வந்து ஆடுறீங்க ??????" என்று கேட்கவா போகிறோம்....தேவா. சு


பின் குறிப்பு: ஆட்சிப் பொறுப்பில் ஏறியதிலிருந்து தமிழர் ஆதரவுப் போக்கு நாடக காட்சியமைப்புகளில் அதீத கவனம் செலுத்திக் கொண்டு தனது நிர்வாகத் திறமையின்மையால் தமிழக மக்களை தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழக ஆளும் அதிமுக அரசு.....


பிரதமருக்கு கடிதங்களை தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டும்...இலங்கையை எதிர்த்துக் கொண்டும் தனது ஈழ ஆதரவு வேசத்தை மிக கவனமாகவே போட்டுக் கொண்டிருக்கிறது..

கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாக அறியப்பட்ட அதிமுக என்னும் பெருங்கட்சி, ஈழப் போரின் போது எந்தவித அழுத்தமான போராட்ட முன்னெடுப்புகளையும் எடுக்காமல், போர் என்றால் மனிதர்கள் மரிக்கத்தானே செய்வார்கள் என்று கூறிய சவுடால் பேச்சுக்களையும் நாம் மறக்கலாகாது...!
Comments

தேவா
இந்த தீர்மானத்திற்காக கொடுக்கப்படும் ஓவர் பில்டப்பை பார்த்தல்....
அமெரிக்கா, இந்தியா,இலங்கை.தமிழக ஆளும் கட்சிகள் ,இவர்களின் கூட்டணி ஏற்கனவே ஒத்திகை பார்த்த நாடகத்தை நிறைவேற்ற போவதுபோல் தெரிகிறது
ஏனென்றால் இந்த தீர்மானத்தால் விளையும் நன்மை என்ன என்று யாரும் சொல்லவில்லை...
அடிமேல் அடி வாங்கிய தமிழ் இனம் அனைவரையும் சந்தேகப்படுவது என்பது அவர்களின் படிப்பினையே அன்றி அவர்கள் குணமன்று .
Anonymous said…
To curtail Chinese influence in Sri Lanka
Anonymous said…
I mean to say that, Americans do not want Chinese influence in Sri Lanka.
சபாஷ்..!! நான் நினைத்த ஒன்றை சரியாக எழுத்தில் கொண்டு வந்திட்டீங்க . :-))


அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா ...!!என்ன தான் அடிச்சாலும் தமிழன் வலிக்காத மாதிரி நடிப்பதில் மிக கெட்டி :-(

வரும் தலைமுறைகள் நம்மை மன்னிக்குமா..??????
ஹேமா said…
//நாமல் ராஜபக்சவுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் இந்திய அரசாங்கம்
[ சனிக்கிழமை, 17 மார்ச் 2012, 07:52.06 AM GMT ] [ நக்கீரன் ]
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இந்திய அரசாங்கம், "சிறந்த சர்வதேச இளைஞன்" என்ற விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

இந்த விருதானது புதுடில்லியில் நடைபெறவுள்ள ஒரு பத்திரிக்கை விழாவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்விற்காக டெல்லிக்கு வரும் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இசட் (Z ) பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.

அதேவேளை, போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் போர்க்குற்றவாளியான மகிந்தவின் மகனான நாமலுக்கு இந்திய அரசாங்கம் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.//

தேவா...நேற்றுவரையிலான செய்தி இது.இதுக்குப்பிறகும் என்ன சொல்ல இருக்கு.உங்கள் முன்கூட்டிய அரசியல் சாத்திரம்....இதுதான் அரசியல்.நடுவில் அகப்பட்ட பாவிகள் நாங்கள் !
சிந்தனைக்குரிய பதிவுங்க, தேவா.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல