
கடவுளே...வினாயகா, முருகா, பெரமையா, ஏழுமலையானே, சரஸ்வதியே, லட்சுமி தாயே, பார்வதி தாயே, அய்யனாரே, வெட்டுடையாள் காளியே, கோட்டை மாரியம்மா, ஆதி பராசக்தி அம்மா, காத்தழிக்கும் என் சிவனே, அல்லா, இயேசு, புத்தா, என் குலம் காக்கும் மாரநாடு கருப்பு........என்னையும் என் குலத்தையும், என் சுற்றத்தையும், எல்லா மக்களையும் சந்தோசமாக இருக்கச் செய் ஆண்டவனே.......................................!
ஓங்கி ஓங்கி வேண்டி, எத்தனை கோவில்கள் போனாலும் முட்டி முட்டி வேண்டி, சூடமேற்றி, சுற்றி வந்து, தேங்காய் உடைத்து, மொட்டை அடித்து, காது குத்தி, அங்க பிரதட்சணம் செய்து, மாலை போட்டு, சர்ச்சில் போய் பிரேயர் செய்து, வசனங்கள் சொன்னவுடன் பழக்கப்பட்ட பைபிளுக்குள் இருந்து வாசகம் எடுத்து படித்து, திரு குர் ஆனின் தாத்பரியங்கள் விளங்கி ரசூலின் தியாகத்தில் உருகி, தொழுகையை விளங்கி ஐந்து நேரத்தில் என்னை அர்பணித்து, தம்ம பதத்துக்குள் புகுந்து, சென்னுக்குள் ஊடுருவி, லவோட்சூவின் தாவோயிசமும் கன்பூசியசின் தத்துவத்துக்குள்ளும் பரவி, ஐன்ஸ்டீனையும், ஹைசன் பெர்க்கையும் இன்ன பிற அறிவியலர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு, நீல்ஸ் போரின் ஆட்டம் மாடல் விளங்கி, ப்ராய்டின் மனோதத்துவ பகுப்பியல் பயின்று, ........என்று என் எல்லா பயணித்திலும் தொடர்ந்து கூட பயணித்த ஒன்றை கண்டு கொண்ட கணத்தில்.....என்னை விட்டு மேலே சொன்ன எல்லாம் கழன்று போயின.....!
கடவுள் மனித வசதி....! எனக்கும் ரொம்ப வசதியாய் இருந்த ஒரு ஊன்று கோல். கடவுள் என்ற ஒன்றை மனிதன் கற்பிக்காமல் போயிருந்தால் மனிதம் என்னவோ ஏதோ என்று கட்டுப்பாடின்றி இன்னும் கேவலமாய் சிதறிப்போயிருக்கும். கடவுளும் மூட நம்பிக்கைகளும் கொடுத்து இருக்கும் தீங்குகளை விட அது இன்னும் பல மடங்காய் இருந்திருக்கும்.
ஒரு பகலில் தம்பி தவறுதலாய் ஆர்.எஸ் பதி மருந்தை எடுத்து குடித்து விட்டான். என் கண்ணதிரே பார்த்துக் கொண்டிருந்த நான் சிரித்துக் கொண்டிருந்தேன்....ஏனென்றால் ஆர்.எஸ் பதி ஒன்றும் செய்யது என்று... நானும் அக்காவும் கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவன் வயது 13 எனக்கு 19.....அந்த கணத்தில் எங்கள் கண் முன்னாலேயே அவன் கண்கள் சொருகி துடிக்க ஆரம்பித்தான்....சடாரென்று வாரி கையிலெடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு ரோட்டில் பைத்தியக்காரனாய் ஓடினேன்....
மருத்துவரின் முதலுதவி... அவன் காப்பாற்றப்பட்டான். அந்த கணம் எங்கள் கையில் எதுவுமில்லை.... கொண்டு சேர்த்த நேரத்தில்....மருத்துவரிடமும் சரணாகதி அடைந்தோம். சரணாகதி என்பது புத்தியில் ஒன்றுமில்லாமல் மொத்தமாய் இன்னொருவரிடம் தன்னை கொடுப்பது. இன்னொருவர் மீது ஏற்படும் நம்பிக்கை அது. நம்மால் ஒன்றும் ஆகாது என்ற இடத்தில், அவர் என்ன வேண்டுமானலும் செய்யட்டும் அவரால் எனக்கு தீங்கு வராது என்பதுதான் சரணாகதி. மருத்துவர் கடவுளாய் எனக்கு தெரிந்தாலும்...மனம் ஏற்கவில்லை ... கடவுள் வேறு என்ற கணக்கு ஏற்கனவே மூளையில் பதிந்திருந்ததால்....!
அன்றைய இரவு ரொம்ப அடர்த்தியாய் இருந்தது எனக்கு. வீட்டுக்கு வந்தும்...என் குற்ற உணர்ச்சி என்னை குத்தியது. எவ்வளவு பெரிய காரியம் நான் நினைத்தால் தடுத்திருக்கலாம்...மயிரிழையில் தப்பியிருக்கிறான் என் தம்பி...இல்லை என்றால் என்னவாகியிருக்கும்...? இன்னும் பயம் என்னை முழுதாய் விடவில்லை. எல்லோரும் உறங்கிய பின்னும்.... நான் லைட்டை அணைக்காமல்...தம்பியின் தலை மாட்டில் அமர்ந்து சத்தமாய்...பாடத் துவங்கினேன்....
" சஷ்டியை நோக்க சரவண பவனார்...சிஷ்டருக்குதவுஞ்....செங்கதிர் வேலோன்....
...................
..............
..............
காக்க..காக்க கனகவேல் காக்க... நோக்க நோக்க நொடியில் நோக்க...தாக்க தாக்க தடையற தாக்க....."
இந்த வரிகளை கடக்கும் போது எனக்கு கண்ணீர் வந்தது. கண்ணீரின் பின் புலத்தில் ஏதோ ஒன்று வந்து என்னை காக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஏதோ ஒன்று இருப்பதை போலவும் அது நிச்சயமாய் உதவும் என்ற நம்பிக்கையும் நன்றியுணர்ச்சியும் இருந்தது. மனதில் தைரியம் பிறந்தது.
இரவு விடிந்து விட்டது. யாவரும் நலம். ஏதோ ஒரு கடவுள் காப்பாற்றியது என்பதை விட அந்த சூழலில் கந்தர் சஷ்டி கவசம் எனக்கு பிடிமானமாய் இருந்தது. எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்...ஆனால் அந்த தருணத்தின் பிடிமானம் அது...இன்றைய தெளிவுக்கு வழி அது.....!
கடவுளும் நானும் ரொம்ப தூரமாயிருந்தோம் வழிபாடுகளும் நேர்ச்சைகளும், இருந்த போதும் கடவுளை சிலையாய் மட்டுப்படுத்தி அறிந்த போதும், ஆனால் இன்று நானும் கடவுளும் நண்பர்களாய் நித்தம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
தவறான காரியம் செய்யும் போது உள்ளே இருந்து தடுக்கிறார்... நான் கவனித்து மாற்றிக்கொள்கிறேன். படங்களாகவும் சித்திரங்களாகவும், சிலையாவும் இருந்து யாரோ என்னவோ என்று எண்ணிய இறை எல்லாம் பனி உருகுவது போல உருகி என் சுவாசமாய் மாறி எனக்கு இன்று தோழன். தோழனாய் ஆக நான் கடந்து வந்த படி எனக்கு உதவியது.
ஒவ்வொரு படியிலும் கேள்வி கேட்டு விளங்கி ஆராய்ந்து.... வாழ்வில் இரண்டற கலந்த ஒன்றை அறிய கோவில்களும், புராணங்களும், உபனிடதங்களும் வேதங்களும் உதவின..... இன்று நானே சைக்கிள் ஓட்டுகிறேன்......இருந்தாலும் சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது கீழே விழுந்ததையும், கற்றுக் கொடுத்தவனையும் மனதில் தேக்கியே வைத்திருக்கிறேன் நினைவுகளாக.......எந்த கணத்தில் ஓட்டத் தொடங்கினேன் தெரியாது....ஆனால் கற்றுக் கொண்டு விட்டேன்.
நான் விளங்கியதை எல்லோரும் விளங்க வேண்டும் அல்லது விளங்க வைக்கவேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் கூவி கூவி வாதம் செய்து வாதம் செய்து ..... என் வீட்டில் இருப்பவர்களுக்கே, என் தம்பிக்கே, என் அக்காவுக்கே.. என்னால் விளக்கத்தை புகுத்த முடியவில்லை. மற்றவர்களுக்கு எப்படி? இந்த கேள்வி எழுந்த கணத்தில் எல்லோருக்கும் புரியவைக்க வேண்டும் என்று நினைத்த மமதை பட்டுப் போனது.
ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வியின் விடையாய் சைக்கிள் பயின்று கொண்டிருக்கிறார்கள் என்ற பதில் கிடைத்தது..... நிச்சயமாய் சைக்கிள் சொந்தமாய் ஓட்டுவார்கள்...ஒட்டும் வரை பயிற்சி...ஓட்டக் கற்றுக் கொண்டபின்.....தூரம் கடக்கும் ஆவலில் போய்க் கொண்டே இருப்போம்.....அப்போது யார் கற்றார் யார் கற்கவில்லை என்ற கேள்வியும் உடையும்.
பிரகாஷ் ராஜ் தனது சொல்லாததும் உண்மையில் சொல்லியிருப்பார்.......ஒருவரின் நம்பிக்கையை நீங்கள் உடைக்க முற்படும் முன்பு உங்களால் வேறு நம்பிக்கையை சொல்லி கேட்பவரை உணரவைத்து புரிதலை ஏற்படுத்த முடியுமெனில் நமது கருத்தை சொல்லலாம்.... அந்த வலு கேட்பவருக்கும் சொல்பவருக்கும் இல்லையெனில்...தேவையில்லாத குழப்பத்தை அல்லவா கேட்பவருக்கு நமது கருத்துக்கள் ஏற்படுத்தும்?
தான் செய்யும் பரத்தையர் தொழிலில் திருப்தியுற்று சந்தோஷமாயிருக்கும் இருக்கும் ஒருத்தியை சந்திக்கும் ஒரு கற்றறிந்த அறிவாளி...அவள் செய்யும் தொழிலின் அபத்தங்களை விவரித்து முடிக்கிறான். அவள் செய்வது குற்றம் என்று மனதில் பதிய வைக்கிறான். அவள் பரத்தை என்றறியாமல் அவளிடம் காதல் கொண்ட அவன் பரத்தை என்றறிந்த உடன் அவளை தொடாமலேயே...உறங்குகிறான்.
மறு நாள் காலையில் அவள் குற்ற உணர்ச்சியில் தூக்கில் தொங்கி விடுகிறாள்.....! அவள் செய்யும் தொழிலில் அவள் சந்தோசமாக இருந்தாள் என்பது உண்மை...குற்றமென்பது சமுதாய பார்வையென்றாலும் அவளளவில் அவள் மகிழ்ச்சியாய்தானிருந்தாள்....அதை குற்றமென்று கூறிய மனிதன் அதற்கு மாற்று வழி சொல்லாமலும் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று சொல்லாமலும், தானும் மணமுடிக்காமல் போனதாலும்.....அவள் தூக்கில் தொங்கி விட்டாள்....இப்படியாக போகும் அந்தக் கதை....
இப்படித்தான் நமது நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணித்து ஒரு நாளைக்கு எத்தனையோ பேரை மனதளவில் நாமும் தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுள் பற்றிய எனது மிகைப்பட்ட கட்டுரைகள் நிறைய பேருக்கு நான் புரிய வைக்க முற்படுவதில்லை. காரணம் குறைந்த பட்சம் அவர்களின் நம்பிக்கையை உடைக்க வேண்டாம் என்ற ஒரு எண்ணம்தான்....!
புரிதல் இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு கேள்வி எழும் அந்த கணத்தில் எல்லாம் புரியும் அன்று என்னுடைய என்றில்லை எவருடைய விளக்கமும் தேவையிருக்காது என்பதுதான் உண்மை. அந்த புரிதல் கேள்விகள் கேட்டு தானே தோன்ற வேண்டுமேயன்றி... நாம் எப்படி பூ பூக்க வைப்பது. பூத்தால் ரசிக்க மட்டுமே முடியும். பூ பூக்க சாதகமான சூழ் நிலை வரும் வரை காத்திருத்தல்தான் நலம்...பூத்துதான் ஆக வேண்டும் என்ற ஆவலில் நான் செய்யும் முயற்சிகள் என்னை இன்னும் பைத்தியக்காரனாக காட்டும்.
கடவுள் ஏன் தீமைகளை செய்கிறார்? மன நலமில்லாமால் குழந்தைகள் பிறக்க வைக்கிறார்? பூகம்பத்தை வரவைக்கிறார்? ஆழிப்பேரலை என்னும் சுனாமியை வரவைத்து கொலை செய்கிறார்? என்று..ஓராயிரம் கேள்விகள் மனிதருக்கு.....ஏற்படுகிறது.
இவை கடவுள் என்ற விசயத்தை ஒரு தனி நபராக பார்க்கும் போது ஏற்படும் மனப்பிறழ்ச்சிகள். அழகிய மலர்களையும், மனிதர்களையும், ஆறுகளையும் இயற்கையையும், இசையயையும், கவிதையையும், இன்னும் எத்தனையோ நல்ல விசயங்கள் என்று நீங்கள் நம்புவதையும் யார் படைத்தது....? தீமை விளைவிப்பது மட்டும் கடவுள் என்று பார்க்கும் மனித மனங்கள் நன்மைகளை தானே நிகழ்வதாக நம்புகிறது....
இரண்டையும் ஒருவர்தான் செய்திருக்க வேண்டும்...அது கடவுளெனினும், இயற்கையெனினினும் ....! நமக்கு நிகழும் நிகழ்வுகள் ஏனென்று கூர்ந்து பார்த்தால் நாமும், நம்மைப் போன்ற மனிதர்களும் காரணமாயிருப்பதும் தெரியவரும்.
விழிப்புணர்வு நிலை குறைந்தவர்களே பெரும்பாலும் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றனர்....! சுற்றியுள்ள மனிதர்களின் விழிப்புணர்வற்ற நிலையும் நம்மை பாதிக்கிறது.... ! தினமும் காரில் செல்லும் போது எலக்ரானிக் போர்டில் துபாய் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி..ஒவ்வொரு வாசகம் டிஸ்ப்ளே செய்வார்கள்....இன்று நான் கண்டது....
" BEWARE OF OTHER'S MISTAKE "
என்னுடைய தவறு மட்டுமல்ல....அடுத்தவரின் தவறும் என்னைப் பாதிக்கும்...அதனால் முழு பிரஞை ஆகிய எனது விழிப்புணர்வு நிலை உச்சத்தில் இருக்கும் போது என்னுடைய தவறையும்....அடுத்தவர் தவறையும் பெரும்பாலும் தவிர்க்கமுடியும். இந்த இருத்தல் அல்லது விழிப்புணர்வு நிலையை அல்லது பிரஞை நிலையை அடைய தவிர்க்க முடியாமல் பயணிக்க வேண்டிய களம் கடவுள் என்ற தளம்.
இந்த தளம் இல்லாமலேயே விழிப்புணர்வு நிலையை எட்டியவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்வேன்.... அதாவது... கடவுள் என்பது ஒரு வழிமுறை....!
என் கடவுள் என்னிடம்.... நானும் அதுவும் நெருக்கமாய் இருக்கிறோம்....!
நானும் கடவுளும் தோழர்கள்....!(இதுதானே தொடர் பதிவின் தலைப்பு)
என் இருப்புத்தனமையே கடவுள்... நானே என் இருப்பு....! " இரு... " இந்த கணத்தில் முழு விழிப்புணர்வோடு..எல்லாம் விளங்கும்...!
தொடர் பதிவுக்கு அழைத்த என் தம்பி செளந்தருக்கு நமஸ்காரங்கள்....!
தேவா. S
Comments
பதிவு எழுத்தாளர்களில் இந்த அளவிற்கு ஞானம் நிலையில் யாராகிலும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
உங்கள் சிந்தனைகள் வளரட்டும்! தமிழகத்திலும் ஐன்ஸ்டீன் ஒருவன் உதிக்கட்டும்!
:)
//
good post. thank u for sharing. god is every where.
Well Done Brother
வாழ்க வளமுடன்!!!
Sariyana matru valiyai solla mudiyadhapatchathil, thavarai suttikkatti, kutra unarvai yerpaduthamal iruppadhu nalladhu.
Ore padhivil rombavum yosikka vaikkireergal.
Sariyana matru valiyai solla mudiyadhapatchathil, thavarai suttikkatti, kutra unarvai yerpaduthamal iruppadhu nalladhu.
Ore padhivil rombavum yosikka vaikkireergal.
அழகான வரிகள். புரிதல் என்பது தானே நிகழவேண்டும்
....ம்ம்ம்ம்ம்ம்ம்.....
......உங்கள் நம்பிக்கையையும் புரிதலையும் தெளிவாக எழுதி இருக்கும் விதம், அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்!
கடவுள் ஒரு கருது அதற்க்கு கீழ்
செய்யவேண்டியது
ஜெபம்
தியானம்
நேர்மை
தியாகம்
இன்னும் நிறிய உள்ளன
அவற்றை லிஸ்ட் போடு செய்து பாருங்கள்
ஏகப்பட்ட பலன் உண்டு
ஒரு பிரச்சனைக்கு தீர்வு சொல்லாம பாதிக்கப்பட்டவங்களைக் குழப்பக்கூடாதுங்கற கருத்து ரொம்ப பிடிச்சிருக்கு..
dheva., excellent ... you have done it.