Pages

Thursday, September 30, 2010

நடை...!நான் அந்த நதிக்கரையின் ஓரமாய் நடந்து கொண்டிருந்த மாலைப் பொழுதில்....காற்றில் பறந்து வந்த சருகு ஒன்று தோள் தொட்டு தொடர்ந்து கொண்டிருந்தது அதன் பயணத்தை....!

வளைந்து சாய்ந்திருந்த நாணல்களின் தொடலில் சிணுங்கிக் கொண்டே ஒடிக் கொண்டிருந்தது நதி. நதியோரத்தில் வரிசையாயிருந்த மரங்களின் அழகில் வசீகரமாய் இருந்த அந்த மாலையின் ரம்யத்தை கூட்டவே ஒரு ஊதல் காற்று ஊடுருவி பரவிக் கொண்டே இருந்தது.

பொதுவாக மாலை வேளையில் அந்த நதிக்கரை ஓரம் மனிதர்கள் வருவதில்லை..என்பது எனக்கு மிக சாதகமாய் போய்விட்டது. என்னை மறந்து சில மணிகள் நான் நடக்கும் நேரங்களில் கலர்கலாய் கனவுகள் பூக்கும். சிலாகித்து சிலாகித்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து நடக்கும் தருணத்தில் ஏதோ ஒன்று உற்சாகமாய் உடல் விட்டு வெளியே பறந்து இன்னிசையாய் ஒரு கீதமிசைக்கும்.

என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்... என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது.

எப்படிப்பட்ட ஒரு படைப்பு மனிதன்... யார் படைத்தார் என்ற கேள்வி ஆபத்தான விவாதத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதால் கேள்வியை அப்படியே காற்றில் பறக்கவிட்டு....மேற்கொண்டு நகர்வோம்...! சுற்றிலும் இருக்கும் எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொண்டு உணரும் போது ஏற்படும் அனுபவத்திற்கு பேர்தானே பரவசம்.....

பசுமையான மரங்கள், மனதை மயக்கும் ரம்யமான மாலைப் பொழுது....கிறீச்சிடும் பறவைகள் ஒலி..இதற்கிடையே.. நதியோரம் மேய்ச்சலுக்கு நின்று கொண்டிருந்த கறவைகளும், எருதுகளும், ஆடுகளும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு வித ஓட்டமும் அதன் பிண்ணணில் அவற்றின் கழுத்து மணிகளும், குரலோசைகளும், வயலில் நாட்டியம் பயின்று கொண்டிருந்த காற்று என்று எல்லாம் ஒன்று கூடி ஒரு ஆச்சர்யமான ஓவியமாய் ஆளுமை செய்து கொண்டிருந்தன. அந்த சூழ் நிலையை மேலும் மையல் கொள்ளச்செய்ய.. பறவைகள் எல்லாம் தங்களின் வீடு திரும்பலில் அன்றைய நாளில் நடந்ததைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தன.

அதோ...அதோ... அங்கே பாருங்கள் அந்த சிட்டுக்குருவியை....என்னே அருமையாக நதியில் தன்னை நனைப்பதும் மீண்டும் கரையில் வந்து சிறகை உலர்த்துவதும் என்று ஒரு கவிதை எழுதிக் கொண்டிருந்தது எப்படி நீரினுள் இருந்த மீன்களுக்கு தெரிந்தது என்று தான் நான் போயிருந்தேன். ஆமாம் அவை தவணை முறையில் தாவிக் குதித்து சிட்டுக்குருவியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வதாம்?

நான் நடந்து கொண்டுதானிருந்தேன்.... ஒவ்வொரு அடியிலும் என் உயிருப்பும் இருப்புத்தன்மையும் இருப்பதை உணர்ந்தேதான் நடந்தேன்...குறைவற கிடைத்த ஆக்சிஜன் என்னின் நினைவுகளை உயிர்ப்பித்துக் கொண்டே இருந்ததோடு இல்லாமல் ஆழமான ஒரு சுவாச அனுபவத்தையும் கொடுத்துக் கொண்டுதானிருந்தது.

வாழ்வின் ஓட்டத்தில் நிகழும் அனுபவங்கள் மனிதர்களின் மூளையில் கறையை படிய வைத்து விடுகிறது. எல்லாவற்கும் ஆராய்ச்சிகளும் தத்துவங்களும் பேசிக் கொண்டு எதார்த்தத்தை தொலைக்கும் எந்திர மனிர்களை பார்த்து வியந்த நான்.....என்னை சுற்றி பறந்த பட்டாம் பூச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தேன்.

அடுத்த கணம் என்ன நிகழும் என்ற அறிவில்லா அறிவு பெற்ற ஐந்தறிவு ஜீவனின் சிறப்பு ஆறாமறிவால் பகுத்துப் பார்க்கப்படுவதில் எனக்கு சிரமம் இருப்பதாகப் படுவது என் குறை அறிவா? இல்லை நிறை அறிவா? எனக்குள் மோதிய கேள்வியை சிதறடித்தே போட்டது அந்த மாலையின் வானத்தில் பரவியிருந்த செம்மையான ஓவியம்.....அதற்கு பின்னால்....பிரிய மனமில்லாமல் பிரிய எத்தனித்த ஒரு ஆரஞ்சு பழ சூரியன்....

புலன்கள் புதுப்பிப்பட்டது எனக்கு…நிறைவில் இருந்த நான் நதிக் கரையோரம் இருந்த கல்லில் அமர்ந்து எவ்வளவு நேரம் ஆகிப் போனது என்பதை என்னைச் சூழ்ந்திருந்த இருட்டு உணர்த்திய பின்பு....

மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வாழ்வின் அற்புதங்களைத் தேக்கியபடி....


தேவா. S

18 comments:

வினோ said...

உனக்குள் இறங்கி உன்னை பார்...
அனைத்தும் ரகசியமே ..
அனைத்தும் பரவசமே...
அனைத்தும் இன்பமே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வாழ்வின் அற்புதங்களைத் தேக்கியபடி....//

எப்ப பாத்தாலும் வீட்டை நோக்கியே நடக்குரீங்களே. எப்பதான் வீடு போய் சேருவீங்க?

என்னது நானு யாரா? said...

மீண்டும் ஒரு அருமையான படைப்பு தேவா! ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அமைதி ஆறறிவு மனிதர்களுக்கு எளிதில் வாய்ப்பதில்லை. இந்த ஐம்புலன்களை சுட்டுக்காட்டும் ஆறறிவினை மனிதன் கடக்கும் போதே அவனுள்ளும் அமைதிக் குடிக்கொள்கிறது.

நம்பிக்கை தான் அமைதிக்கு அஸ்திவாரம். எல்லாவற்றையும் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் அமைதி என்பதே இல்லாமல் இருக்கும். அதைத் தான் நாம் இன்றைய சூழலில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சக மனிதர்களின் மீது சந்தேகம், உறவுகள் மீது சந்தேகம், அரசாங்கத்தின் மீது சந்தேகம், கடைசியில் இறைவனின் மீதே, அவன் இறுத்தலின் மீதே சந்தேகம்.

உங்கள் எழுத்துப் பல பல எண்ணங்களையும் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. நன்றி தேவா! அருமையான பகிர்விற்கு!

Balaji saravana said...

//புலன்கள் புதுப்பிப்பட்டது எனக்கு//
உங்களுக்கு மட்டுமில்ல அண்ணா.. எனக்கும் தான்..
சூப்பர்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரம்மியமா இருக்கு! படிக்கும்போதே பசுமை மணக்கிறது, வாழ்த்துக்கள் தேவன்!

மைந்தன் சிவா said...

அருமையான படைப்பு...தொடருங்கள்..தொடருவோம்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அமைதி ஆறறிவு மனிதர்களுக்கு எளிதில் வாய்ப்பதில்லை//உண்மைதான்.அவைகள் தேமே என்று இருக்கின்றன.நம்மால் அப்படி இருக்க முடியவில்லையே

அப்பாவி தங்கமணி said...

Good one

மோகன்ஜி said...

தேவா சார்! நல்ல பதிவுங்க.. கூடவே இருக்கும் படம் ஒரு கவிதை!ரசித்தேன் நண்பரே!

கமல் said...

கதை அருமை நண்பரே...உங்களோடு இயற்கையின் அழகை சொல்லி, உரையாடல் இல்லாமல் மிகவும் அருமையாக சொல்லிருக்கிர்கள்.


நன்றி... தொடர்ந்து படிக்கிறேன்

Ananthi said...

///என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்... என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது.///

இது சரி தான்.. அப்படியே அந்த அற்புத கணங்கள் கிடைத்தாலும்... நிம்மதியாய் யோசிக்க அவகாசம் இருப்பதில்லை..
உங்களுக்குள், உங்களை பார்க்கும் தருணம் உங்களுக்கு வாய்த்ததில் சந்தோசம்.... :-))

ப.செல்வக்குமார் said...

///என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்..//

அட அட .. நான் போய் மனோதத்துவம் படிச்சிட்டு வரேன் ..!!

ப.செல்வக்குமார் said...

//எப்படிப்பட்ட ஒரு படைப்பு மனிதன்... யார் படைத்தார் என்ற கேள்வி ஆபத்தான விவாதத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதால் கேள்வியை அப்படியே காற்றில் பறக்கவிட்டு...//

இதுல சண்டை எல்லாம் வருது ..!! அதனால இப்ப வேண்டாம் ..!!

சௌந்தர் said...

மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வாழ்வின் அற்புதங்களைத் தேக்கியபடி..///

நாங்களும் படித்து விட்டோம் வீடு நோக்கி நகர்கிறோம்

Kousalya said...

சூரியன் தன் அலுவல் நேரம் முடிந்து வீடு திரும்பும் மாலை நேரம்.....இந்த இனிமையான நேரத்தில் இயற்கையை ரசிப்பது என்பது பலருக்கும் கொடுத்து வைப்பது இல்லை.

உங்கள் எழுத்தை வாசிக்கும் நேரத்தில் மெல்ல மெல்ல அந்த சூழல் என் கண் முன் விரிவதை உணர முடிகிறது....அற்புதமான வர்ணிப்பு..... இயற்கையின் மேல் அதீத காதல் இல்லாமல் கற்பனையில் இது சாத்தியம் இல்லை.....துள்ளி குதிக்கும் மீன்கள் தவணை முறையில்..... உதாரணம் அருமை.....

இந்த தனிமை கொடுக்கும் அமைதி தான் என்ன....?! நம்மை நாம் உள்நோக்கி பார்க்க கூடிய தருணம் இது....

siva said...

meeeeeeeeeeeee

the first...

siva said...

ம் தேவா அண்ணா .

// என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது.//

நானும் தேடிகொண்டே இருக்கின்றேன்..கிடைக்கவில்லை
இருந்தாலும் முயற்சியை விடவில்லை.

அனுபவுமும் பரவசமும்
சொல்லமுடியாது அதை உணரத்தான் முடியும்...

எளிமையை புரிய வைத்து இருக்கீங்க..
இருந்தும் சில இடங்கள் புரியவில்லை...
உங்கள் எழுத்தின்
வாசகனாய்
என்னையும் தேடிக்கொண்டு
மீண்டும் வருவேன்.
"உற்றுபார்ப்பது அவ்ளோ எளிமையான செயலா"???

denim said...

மிக நல்ல பதிவு


http://denimmohan.blogspot.com/