Skip to main content

பார் காலமே.. பார்...!

















எம் சிறகினை முறித்துப் போட்டாய் காலமே...
கால்கள் கொண்டு திக்குகளெட்டும்
நடந்து காட்டினோம்...!
பேச்சற இரு என்று எம் நாவினை
நீ வெட்டி போட்டாய் காலமே...
எம் மெளனத்தால் அன்பென்னும்
பூக்களை எம்மைச் சுற்றி
கோடிக்கணக்கில் மலரச் செய்தோம்...!

எம் விழிகளை குருடாக்கினாய் காலமே...
இருளென்னும் கருமையில்
கலங்காது நின்று வர்ணங்களை
எம் புத்தியில் தேக்கி வைத்து
எமக்குள் யாமே மகிழ்ந்து காட்டினோம்!

சோகங்களை கொடுத்தாய்; பொருளாதாய உலகில்
மனிதர்களின் கோர முகங்களைக் காட்டினாய்;
பாசமென்னும் மாயையின் ஆழத்தைக் அறிவித்தாய்;
சுற்றி சுற்றி மாயைகள் விரட்ட
ஓடும் கால்களுக்கு எல்லாம்
எம்மை சொந்தமாக்கி விட்டு எக்காளமிட்டு சிரித்தாய்....!

என்னதான் செய்து விடுவாய் காலமே...நீ?
காலனை அனுப்பி எம்மை மரணிக்கச் செய்யும்
முன்பு நான் காலத்தை நிறுத்தி வாழ்பவன்
என்ற சத்தியம் உணர்..!

பொய்களின் நகர்வுகளில்
எமக்கு சமைக்கப்படும் சங்கடங்கள்
எல்லாம் சத்திய அக்னியில் எரிந்தே போகும்
என்ற நிதர்சனம் அறி!

கோபங்கள் கொள்ளும் மூளைகள்
எல்லாம் சதைக் கோளங்களாகி
புழுக்களைப் பிறப்பித்து மண்ணில்
மட்கி மறையும் என்பதை தெளி..!

எம்முள் படிந்து கிடப்பது
பரந்து கிடக்கும் சத்தியத்தின்
சப்தமிலா அணுத்துகள்கள் என்னும்
மூலம் உணர்; உணரலை அதிர்வுகளாக்கு;
அதிர்வுகளை எம்மைச் சூழ்ந்த
மானுட புத்திகளில் உணர்வுகளாக்கு...
நினைவு பக்கங்களை எல்லாம் திருத்தி எழுது;
சுவாசங்களாய் ஊடுருவி
எம்மின் செழுமையை மானுட
நாடிகளுக்கு நளினமாய் எடுத்துச் சொல்;
ஆழ்ந்த உறக்கங்களில் கனவுகளாய் போ
நிதர்சனத்தின் வடிவங்களை
செவுட்டில் அறைந்து பாடமாய்ச் சொல்!

ஐம்புலன் கொண்டு அகந்தை தேக்கி
வாழும் சக மானுடனல்ல...
நான் என்ற உண்மையை உரை;
பொருட்களின் கூட்டும், கூட்டுப் பொருட்களும்
ஜனித்ததின் மூலத்தை உணர்ந்தவெனென்று
மென்மையாய்ச் சொல்...!

மரணம் அறிந்தவன் என்று உரக்க உரை;
மமதை அழித்தவன் என்று அதிர்ந்து சொல்;
இறுதியாய்க் கேள்...
அவன் உங்களையும் அவனாய்த்தான்
பார்க்கிறானென்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா என்று?

வார்த்தைகளையும், எழுத்துகளையும்
சத்தியத்தை சொல்லும் சப்தங்களையும்
எளிதில் மனிதர்கள் கொன்றுதான் போட்டு விடுகிறார்கள்....

இனி....

என் மெளனத்தை என்னதான் செய்கிறார்கள்
என்று நானும் பார்க்கிறேன்...,
நீயும் பார் காலமே...பார்!

தேவா. S

Comments

கோபங்கள் கொள்ளும் மூளைகள்
எல்லாம் சதைக் கோளங்களாகி
புழுக்களைப் பிறப்பித்து மண்ணில்
மட்கி மறையும் என்பதை தெளி..!
வீரத்தை ஊட்டும் அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
//மரணம் அறிந்தவன் என்று உரக்க உரை;
மமதை அழித்தவன் என்று அதிர்ந்து சொல்;
இறுதியாய்க் கேள்...
அவன் உங்களையும் அவனாய்த்தான்
பார்க்கிறானென்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா என்று?

வார்த்தைகளையும், எழுத்துகளையும்
சத்தியத்தை சொல்லும் சப்தங்களையும்
எளிதில் மனிதர்கள் கொன்றுதான் போட்டு விடுகிறார்கள்....
//

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.
ADMIN said…
கவிதையில் உங்கள் எண்ண அதிர்வுகளுடன் நாமும் அதிர்ந்தோம்.. பகிர்வுக்கு நன்றி!!
ADMIN said…
எண்ணங்களுக்கு உரமேற்றுகிற வார்த்தைகளின் தொகுப்பாய் இந்தக் கவிதை..! மேலும் பல படைக்க எமது மனமார்ந்த வாழ்த்துகள்..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த