Skip to main content

மெளனத்தின் சப்தம்...!
















வெறுமையாய், ஒற்றை சொல் கூட மனதிலே உதிக்காத தன்னிச்சை சூழ்நிலைகளை எல்லாம் மேலோட்டமாய் பார்த்தால் அது வலி. ஆழ உணர்ந்து பார்க்கையில் அது சுகம். வலிகள் எல்லாம் சுகம். நாம் வலிகளை வேண்டாமென்றே பழகி விட்டோம் அதனாலேயே அவற்றை விட்டு ஓடி விடவே நினைக்கிறோம். ஆமாம் நீண்ட மெளனங்களும், ஆட்கள் அற்ற தனிமையும் மனிதர்களோடு திரிந்து திரிந்து பேசி பேசி கிடந்து விட்டு சட்டென்று ஏற்பட்டால் ஒரு பயம் ஏற்படத்தான் செய்யும்.

நிஜத்தில் மனிதர்களுக்கு பூக்கும் மெளனங்கள் எல்லாம் பெரும்பாலும் மெளனங்களாய் இருப்பது இல்லை. அவை தனிமை என்று முத்திரை குத்திக் கொண்ட போலிகளாய்த் தானிருக்கின்றன. தனிமையில் இருக்கும் மனிதர்களின் மனம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் அல்லது கிழக்கு மேற்காக, வடக்கு தெற்காக பயணித்துக் கொண்டே இருக்கும். இது பற்றிய ஒரு புரிதல் இல்லாமலேயே தனிமையில் இருந்ததாகவும் மெளனத்தில் லயித்திருந்ததாகவும் பல கதைகள் சொல்லும்.

மெளனம் பகிர முடியாதது. அது சோகத்தின் உச்சமாய்த் தெரியும் ஆனால் அதுதான் சந்தோசத்தின் முதல் நுனி. இங்கும் அங்கும் அலைந்து திரிந்து வியாக்கியானங்கள் பேசும் எல்லோருக்குமே தெரியும் அவையெல்லாம் பொய் என்றும் நாமெல்லாம் நடிக்கிறோம் என்றும்.....இயல்பில் லயித்துக் கிடக்கும் போது பகிர்தல் இல்லை.

எனக்கு ஏதோ ஒன்றினை உங்களுக்குச் சொல்லத் தோன்றுகிறது என்னும் இடத்தில் என்னை உங்களிடம் பகிங்கரப் படுத்தவே எண்ணுகிறேன். என்னை உங்களிடம் எடுத்தியம்பி நான் மிகப் பெரிய அவதாரப் புருசனென்று காட்டும் ஒரு மறைமுக முயற்சி. இது தவறு என்று கூறவில்லை. ஆனால் இதுதான் திரும்ப திரும்ப எல்லோரும் செய்கிறோம் இதன் ஆழத்தில் இருப்பது நமது இருப்பினை எடுத்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு தன்முனைப்பு.....

சமுதாயத்தின் முரண்களுக்கு காரணம் மனிதர்கள் என்றுதானே நாம் நினைக்கிறோம். சிலர் கெட்டவர்கள் சிலர் நல்லவர்கள் என்று தானே எண்ணுகிறோம்...ஆனால் அது ஒன்றும் முழுமையான உண்மை அல்ல. அது மேலோட்டமான லெளகீக எண்ணத்தின் ஓட்டத்தில் சரி என்று கொள்ளலாம் ஆனால் உண்மையில் முரண்கள் என்பவை இயற்கையே....! எதையும் முழுதாய் மாற்றி விட முடியாது என்று தெரிந்தும் மாற வேண்டும் அல்லது நல்லது நடக்க வேண்டும் என்று நாம் கூறுவது நாம் நமது தன்முனைப்பைக் காட்டிக் கொள்ளத்தான்.

தன்முனைப்பு என்பது எல்லோருக்கும் பொது. பெரும்பாலும் அது ஒத்த திசையை நோக்கியே செல்கிறது. அந்த திசைக்குப் பெயர் திருப்தி. உங்களின், எனதின் திருப்தி ஏதோ ஒரு செயலைச் செய்வதில் இருக்கிறது. அது நல்ல செயலாய் இருக்க வேண்டும் அல்லது அப்படி நல்ல செயல்கள் என்று சமுதாயத்தால் புத்திக்குள் திணிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பெரும்பாலும் பொது புத்திகள் சொல்லிக் கொடுத்திருக்கும் திருப்திகளுக்கு மாறாக செயல் செய்பவர்களை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. பொது புத்திக்கும் மிகைப்பட்ட மனிதர்களுக்கு ஒத்து வராத செயல்களைச் செய்பவர்களை நாம் எப்போதும் சமுதாயத்தை விட்டு பிரித்து அவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற் கூறி விடுகிறோம்.

அவர்களின் செயல்களில் இருக்கும் நியாங்களை எப்போதும் நாம் ஆராய்வது கிடையாது. ஒவ்வொருவரின் திருப்திகளின் திசைகள் வேறு....வேறாய் இருக்கும் அதனாலேயே செயல்களின் தன்மைகளும் மாறுபாடு கொண்டதாகவே இருக்கிறது. ஆழத்தில் பார்த்தால் செயல்கள் செய்து கொண்டே இருப்பது கூட ஒரு வித குறைதான். பூரணத்தில் நிகழ்வுகள் இல்லை. அது முழுமையானது.

நகரும் வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நாம் இருக்கிறோம் என்பதை வலுவாக இந்த உலகிற்கு அறிவிப்பதற்காகவே செய்கிறோம். இருக்கும் ஒன்றை இருக்கிறது இருக்கிறது என்று அறிவித்தல் மடமை என்று உணரும் தருணத்தில் ஒரு குழந்தையாய் வந்து இறுக்க அணைத்துக் கொள்ளும் மெளனத்தில் மொழியில்லை, பெயரில்லை, பொருளில்லை, நிறமில்லை குணமில்லை. அது அகண்ட வெளி...! அது சிவம். சக்தி ஒடுங்கிக் கிடக்கும் இடம் அல்லது இயங்க விருப்பமில்லாத இடம்.

எழுதுவதும், எழுதுவதை பலர் வாசிக்க வேண்டும் என்று எண்ணுவதும் நான் இப்படி எழுதுவேன் என்று இறுமாந்து கொள்வதும் குறைகள். வாசித்து, வாசிப்பவர்கள் பயனடைவார்களே...என்று கூட ஒரு கேள்வி நமக்குள் எழும். அந்த கேள்வியின் பின் புலத்தில் கூட தன் முனைப்புதான் இருக்கும். வாசித்து எத்தனை பேர் மாற முடியும். நிஜத்தில் யாரையும் யாரும் மாற்ற முடியாது....என்ற உண்மை உரைக்கும் இடைத்தில் வார்த்தைகள் புத்திக்குள் சிக்கிக் கொண்டு வெளியே எழுத்தாக வர மறுக்கின்றன.

வாசிப்பாளனுக்குள் இருக்கும் மனோ அமைப்பு தேடல், விருப்பம் இவைதான் எழுத்தினை உணர வைக்கும்.கலீல் ஜீப்ரான் சொன்னது போல காணும் காட்சியில் இல்லை விளக்கம்....ஆனால் பார்க்கும் மனிதனின் புத்தியில் இருக்கிறது. எழுதி நான் திருத்தினேன்...நான் சொல்லி இவன் மாறினான்...என்பது எல்லாம் வெளிபூச்சு ஜோடனைகள். நான் மாற...எனக்குள் இருக்கும் அமைப்பு உதவி செய்தது வெளியே இருந்து வரும் விடயம் அதை வேண்டுமானால் வேகமாக நகர வைக்க ஒரு ஊக்கியாய் இருந்திருக்கலாம். அவ்வளவே...!

பார்வை தெரிந்தது.....பார்ப்பதற்கு யாருமில்லை........பார்ப்பவனும் யாருமில்லை என்பதுதான் புத்தன் உணர்த்தி சென்ற விடயம். தெளிவுகளின் உச்சம் சாந்தம். சாந்தத்தின் உச்சத்தில் மனம் வேலை செய்வது இல்லை. மனம் ஒடுங்கிய இடம் மெளனம். மெளனத்தை பகிர முடியாது. முழுமையை நோக்கி நகரும் ஒரு ஓட்டத்தில் எழுதுவதும் ஒரு குறையான விடயமே.....!

ஒவ்வொரு முறை எதாவது எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றும் இடங்கள் எல்லாம் நான் கூனி குறுகி போகுமிடங்கள். தனிமையில் இருக்கும் போது அந்த ஏகாந்தத்தை எழுத்தாக்க வேண்டும் என்று எண்ணுமிடத்தில் என் லயித்தல் பறிபோகிறது. இன்னும் சொல்லப் போனால் இது ஒரு வியாதியாகவே தொற்றி கொண்டிருக்கிறது. அதனால்தான் அடிக்கடி சொல்வேன் படைப்பவனை விட ரசிப்பவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

நமக்கு ரசனைகள் எல்லாம் இயல்பாய் வந்து செல்வதில்லையே...அதை எழுத்தாக்க வேண்டும், பகிர வேண்டும் என்ற ஒரு கலப்பட கண்ணோட்டத்தில்தானே நிகழ்கிறது. வானம் வெளுத்திருக்கிறது. பூமி பூத்திருக்கிறது. மனிதர்கள் அங்கும் இங்கும் அலைகிறார்கள்..

வண்ணத்துப் பூச்சிகள் அதிக உயரம் செல்லாமல் இங்கும் அங்கும் செடிகளில் அமர்வதும் பறப்பதுமாய் இருக்கின்றன. சில பறவைகள் மரங்களிலும், சில அங்கும் இங்கும் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன...., யாரோ ஒருவன் ஒரு தெரு நாயை கல் விட்டு அடிக்கிறான் அது கத்திக் கொண்டே ஓடுகிறது....., வேறொருவன் மனிதர்களுக்கு நடுவே செல்லும் தன் சைக்கிளின் பெல்லை ஓயாமல் அடித்துக் கொண்டே செல்கிறான்...

ஒரு பேருந்து செல்கிறது, அடிக்கும் காற்றில் தெருமுனையில் குவிக்கப்பட்ட குப்பைகள் காற்றில் பறப்பதை ஆழமாய் ஒரு வயதானவர் சுருட்டினை புகைத்த படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்....

இப்படியான நிகழ்வுகளை ரசிப்பவன் ரசித்து அதை உள்வாங்கி நகர்ந்து விடுகிறான். நாம் அதை பார்த்து விட்டு இதை எப்படி எழுதலாம் என்று யோசிக்கிறோம். ஒரு புகைப்படக்கலைஞன் தன் ரசிப்பினை தான் ரசிப்பதை விட அதை எப்படி காட்சியாக்கலாம் என்று யோசிக்கிறான். ஒரு இசைக் கலைஞனுக்கு அந்த சூழல் ஏதோதோ உணர்வுகளை பரப்பிப் போட அவன் அதை ஸ்வரமாக்குகிறான்...ஒரு பத்திரிக்கையாளன் அதை செய்தியாக்குகிறான்....ஒரு அரசியல்வாதி அரசியலாக்குகிறான்...

இங்கே சொல்லுங்கள்.... யார் சூழலை அனுபவிப்பது? படைப்பாளியா? அல்ல அல்ல......ரசிப்பவன் ரசிக்கிறான். அப்படி ரசித்ததை எந்த வித பெரிது படுத்தலும் இல்லாமல் விட்டு விட்டு அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு நகர்ந்து விடுகிறான். ஆனால் படைக்கிறேன் பேர்வழி என்று படைத்து விட்டு அதை தலையில் சுமந்து கொண்டே அலைகிறோம் ..இது எப்படி நிறையாகும்....?

கலைஞர்கள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்..ஆனால் வாழ்க்கையை முழுமையாய் ரசிக்கிறார்களா? என்பதற்கு மனசாட்சியோடு கூடிய பதில் சொன்னால் இல்லை என்று தான் சொல்ல முடியும். அவரவர் துறை சார்ந்த விடயங்களை வேகமாக உள்வாங்கும் திறன் கொள்கிறார்கள் அப்படி திறன் கொள்வதும் தம்மை எடுத்தியம்பி வெளிப்படுத்திக் காட்டவே....என்ற ஒரு சர்ச்சைக்குரிய கருத்தையும் வைக்கிறேன். இது சரியாயிருக்கலாம் அல்லது தவறாய் இருக்கலாம் ஆனால் எனது பார்வை இதுதான்.

அனுபவத்தை ஆனந்தத்தை ரசிக்கையில் அது ரசனையோடு போய் விடுமெனில் அது பற்றிய நிகழ்வுகளை மொழிப்படுத்துதல், அல்லது காட்சிப்படுத்துதல் என்னுமிடத்தில் தான் இரசித்தது இதைச் செய்யத்தான் என்றாகி விடுகிறதுதானே...?

மீண்டும் புத்தருக்கு வருகிறேன்...அதனால்தான் புத்தர் எதையுமே பகிரவில்லை. லாவோட்சூ எதுவும் சொல்ல விரும்ப வில்லை. அவரை வலுக்காட்டயப்படுத்தி எழுதச் செய்யப்பட்டதுதான் தாவோயிசம். அந்த தாவோவும் மிக தெளிவாய் நான் மேலே சொன்ன விடயத்தைத்தான் கூறியிருக்கும்.

ஆகா மொத்தம் குறைகள் இருப்பதால் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறேன்.....! முழுமையில், புரிதலில் பேச்சும் எழுத்தும் நிற்கும். அப்படி நிற்பது திருப்தியின் அளவைப் பொறுத்து மாறுபடும். திருப்தி இல்லாதவரை எல்லாம் தொடரும்...நான் எதை எதையோ கிறுக்கிக் கொண்டிருப்பதைப் போல....!

விரைவில் திருப்தியின் நுனி தொடுகையில் மெல்ல மெல்ல இயக்கம் நிற்கும்.....பின் பகிர ஒன்றுமிருக்காது...பகிர ஒருவரும் இருக்கவும் மாட்டார்கள்....அதனை முழுமை எனலாம். அல்லது மெளனம் எனவும் கூறலாம். கூடிய விரைவில் மெளனிப்பேன்....அதற்கு இந்த பிரபஞ்ச பேரியக்கம் எனக்கு சர்வ நிச்சயமாய் உதவும்....!

எங்கோ ஆரம்பித்து எதிலோ முடித்து விட்டேன்.......நோ..இஸ்யூஸ்.......திட்டமிடாமல் நகர்வதுதான் இயல்பு....!

அப்போ....வர்ர்ர்ர்ட்ட்டா!!!!!


தேவா. S

Comments

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...