Pages

Saturday, October 21, 2017

மெர்சல்...!


ராஜ் டிவியில் எனக்குள் ஒருவன் என்றொரு சிவாஜி படம் ஓடிக் கொண்டிருந்தது. இந்த சிவாஜி வீட்டிற்குள் அந்த சிவாஜியும் அந்த சிவாஜி வீட்டில் இந்த சிவாஜியும் நடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு மாறி டபுள் ஆக்சன்கள் நடிப்பது போல எவ்வளவோ படங்கள் வந்துவிட்டது என்றாலும் அவற்றை எல்லாம் திரைக்கதைகள் மறக்கடித்து விடுகின்றன. எத்தனையோ படங்களை இப்படி நாம் கொண்டாடி இருக்கிறோம். அதே வரிசையில் கொண்டாடவேண்டிய படம்தான் மெர்சல். எ ப்ளாக் பஸ்டர் கமர்ஷியல் மூவி ஃபார் காமன் ஆடியன்ஸ் & சூப்பர் டூப்பர் மெகா ஷோ ஃபார் அண்ணா ஃபேன்ஸ்.

பர்ஸுல காசு எல்லாம் இருக்காதுங்க வீ ஆர் ஃப்ரம் டிஜிட்டல் இந்தியா, கேஷ் லெஷ் ட்ரான்ஸாக்சன் என்று வடிவேலு பர்ஸை பிரித்துக் காட்டும்   இடத்தில் சூப்பர் ஜெட் வேகத்தில் ஆரம்பிக்கும் படம் இடைவேளை வரும் வரை அதகளமாய் நகர்கிறது. நீ பற்ற வைத்த நெருப்பொன்று…என்று கரகரகுரலில் ஆரம்பித்து ஏத்தனையோ மாடுலேஷன்களைப் பேசி அசத்தியிருக்கிறார் இளைய தளபதி….சாரி சாரி தளபதி. டாக்டர் மாறன் பேசியிருக்கும் அத்தனை அரசியல் வசனங்களுக்கும் விசில் பறக்க தியேட்டர் கைதட்டலால் அதிர்கிறது. வெஃரி போல்ட் டிசிஸன் பை விஜய் அண்ட் அட்லி. அரசியல் நிர்ப்பந்தங்களால் சில வசனங்களை தயாரிப்பாளர் தரப்பு நீக்கியிருந்தாலும் அத்தனை வசனங்களும் இன்று பொதுவெளியில் விவாதிக்கப்படுகிறது/விமர்சிக்கப்படுகிறது.  ஒரு ப்ளட் டெஸ்ட் செய்து பார்த்து விட்டு அதன் பிறகு நோயாளியாகவே நிறைய பேர்கள் எப்படி ஆகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள்? மருத்துவத் துறையில் இருக்கும் அவலங்கள் அது வியாபாரமாய் போயிருக்கும் அவலம் என்று எதையும் விடவில்லை, விலாசித் தள்ளியிருக்கிறார்கள்.

கலை அரசியலில் இருந்து வேறுபட்டதல்ல. கலைதான் அரசியலை எல்லா காலங்களிலும் கோலேச்சியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் கலை வேறு அரசியல் வேறு கிடையாது. பேச்சும், எழுத்தும், நடிப்பும் மட்டுமல்ல கலை என்பது, புதுப் புது சிந்தனைகள் யாவுமே கலையின் வெளிப்பாடுகள்தான். சினிமா மாதிரி வெகுஜன ஊடகங்கள் ஏதோ ஒரு அரசியலைப் பேசிக்கொண்டேயிருக்கின்றன. கதாநாயகர்கள் அந்த அரசியலைப் பேசும் மிக முக்கியமானாவர்களாக திரையில் உலாவுகிறார்கள். தீமைக்கு எதிராய் போராடும் எல்லா திரைப்படங்களுமே அரசியல் திரைப்படங்கள்தாம். அரசியல் என்றால் தேர்தல் அரசியல் மட்டும்தான் நம் மக்களுக்குத் தெரியும். தேர்தல் அரசியலையும் கடந்த பல சமூக அரசியல்களை பல்வேறு கோணங்களில் தளங்களில் அலசும் வேலையை எல்லாக் காலங்களிலும் சினிமா செய்து கொண்டேயிருக்கிறது. அதனால்தான் நடிகர்கள் அரசியல் பேசும் போது அதன் வசீகரம் ஒரு பத்திரிக்கையாளரை விட அரசு அலுவலரை விட வியாபாரியை விட கூடுதலாய் நமக்குத் தெரிகிறது. காட்சி ஊடகத்தின் வலிமை அப்படி, சினிமா வெறுமனே கூத்தாடிகள் ஆடிச்செல்லும் இடமென்று நினைத்து ஒதுக்கி சென்று விடக்கூடிய இடமல்ல. கதாநாயகர்கள் தங்களின் திரை அரசியலை பொதுவெளி அரசியலாக மாற்ற முயலும் போது  வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ அவர்களை நோக்கிய ஒரு கவனம் கண்டிப்பாய் பொதுவெளியில் ஏற்படத்தான் செய்கிறது.

விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்கள் பயம் இல்லாமல் இப்படி ஆளும் அரசுகளைச் சாடுவதும், சமூக அவலங்களைப் பேசுவதும் அவர்களுக்கு அரசியலாகவே இருந்தாலும் பொதுவெளியில் பரவலாய் ஒரு கருத்து சேர இவர்கள் காரணமாய் இருப்பதாலேயே மெர்சல் போன்ற திரைப்படங்கள் வரவேற்கத் தகுந்தவையே.

கதையின் கரு காப்பி பேஸ்ட்டாய் இருக்கலாம் அதை கூறியிருக்கும் விதம் மற்ற நடிகர்களை பயபடுத்தியிருக்கும் லாவகம் எல்லாம் அட்லிக்கு சபாஷ் போடவைத்திருக்கிறது. வடிவேலு, கோவை சரளா, சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா என்று எல்லா பத்திரங்களையும் அடக்கி வாசிக்க வைத்து தளபதியை அடித்து ஆடவைத்திருக்கிறார். இன்டர்வெலுக்குப் பிறகான ப்ளாஷ் பேக்கில் மதுரை ஸ்லாங்கோடு ஐஸு ஐஸு….என்று காதல் செய்வதாக இருக்கட்டும், மீசையை முறுக்கியபடி சீறிப்பாய்வதாய் இருக்கட்டும், பிள்ளையை சுமந்தபடி அடிவாங்கி உறுமியபடி செத்துப் போகுமிடமாய் இருக்கட்டும்…. பின்னி இருக்கிறார் மனுஷன். 
ப்ளாஷ் பேக் இஸ் ரியல் ப்ளாஷ்….

ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே சூப்பர் ஹிட்தான் என்றாலும் திரையில் பார்க்கும் போதும் சலிப்பு ஏற்படவில்லை. நீதானே நீதானே…பாடல் இன்னும் கொஞ்ச மாதங்கள் எல்லோருக்குள்ளும் கேட்டுக் கொண்டே இருக்கும், காலர் ட்யூனாய் மாறும்….அத்தனை இனிமை.

விஜய் ரசிகாஸ்….யூ கேன் செலிபிரேட் திஸ் ஃப்லிம்.
அபூர்வ சகோதரர்கள் காப்பி, மூன்று முகம் காப்பி…ப்ளா….ப்ளா…ப்ளா என்று பேஸ்புக்கில் சகோதரர்கள் விஜயை ஓட்டுகிறேன் பேர்வழி என்று எழுதித் தள்ளலாம், அரசியல்வாதிகள் விமர்சிக்கலாம், சில வசனங்களை நீக்கிவிட்டார் கோழை என்று எழுதி 150 லைக்குகள் தேத்தலாம்…

என்றாலும்….மெர்சல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.


-தேவா சுப்பையா…
No comments: