Pages

Tuesday, March 25, 2014

MH 370 ஒரு அவிழ்க்க முடியாத ரகசியம்...!


ஒவ்வொரு முறை நண்பர்களையும், உறவுகளையும் சந்தித்திப் பிரியும் போது இன்முகத்தோடே செல்ல வேண்டுமென்று என் அப்பா அடிக்கடி கூறுவார். நிதர்சனமில்லாத இந்த வாழ்க்கையில் எது வேண்டுமானலும் அடுத்த கணம் நிகழலாம் என்ற ஒரே ஒரு உண்மையைத் தவிர வேறு பெரிய உண்மை ஒன்றும் கிடையாது. 

எம்.எச் 370 விமானத்தில் பயணித்தது 239 வெவ்வேறு வாழ்க்கைகள். அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மகள்கள், மகன்கள், கணவன்கள், மனைவிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், பணியாளர்கள், என்று பல்வேறு அடையாளங்களோடு அதில் பயணித்தது வாழ்க்கை. உற்சாகமாய் வழியனுப்பி வைத்தது எத்தனை உறவுகளோ? உற்சாகமாய் வரவேற்க காத்திருந்தது எத்தனை உறவுகளோ? எத்தனை பேரின் சந்தோசங்கள் இன்று நிலைகுலைந்து போயிருக்கிறது என்று எண்ணிப் பார்க்கவே முடியாத ஒரு பெருந்துயரம் இது.

ஒவ்வொரு வாக்குறுதிகள் கொடுக்கும் போதும் குறிப்பாக ஒவ்வொருமுறை விமானத்தில் ஏறும் போதும் இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தை எனக்குள் அசரீரியாய் கேட்டுக் கொண்டிருக்கும். பால்யத்திலிருந்து நான் வளர்ந்த, என்னை வளர்த்த சமூகம் அது ஆதலால் இஸ்லாத்தின் மீது அதிக பிடிப்புகள் எனக்கு உண்டு. சாந்தியையும் சமாதனத்தையும் பார்ப்பவர் மீதெல்லாம் நிலவ வேண்டிக்கொள்ளும் பெருங்கருணை கொண்ட மார்க்கம் அது. இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையின் பொருளை  மனிதர்கள் உணர்ந்து கொள்ள இந்த நிகழ்வின் மூலம் இயற்கை கடுமையான போதனையை நடத்தி இருக்கிறது. அதி நவீனமான போயிங் 777 எனப்படும் ராட்ஷச  விமானம்தான் அது. தொழில்நுட்பபெருக்கம் நிறைந்த இந்த வாழ்க்கையில் மில்லி மீட்டர் மில்லி மீட்டராய் பிரித்து மேய்ந்து தவறுகள் எதுவும் இல்லாமல், உறுதியான இறுதி அறிவிப்பு விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த பிறகுதான் இந்த உலகத்தில் அத்தனை விமான நிலையங்களிலும் இருந்து விமானங்கள் பறக்கவே ஆரம்பிக்கின்றன....

விமானம் பறக்க ஆரம்பித்து அது இலக்கைச் சென்று அடையும் வரையில் தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொண்டிருக்கும் வகையில் எல்லா நவீன அம்சங்களும் இப்போது உண்டு. பிறகு எங்கே நிகழ்ந்தது பிழை? எப்படி மறைந்தது விமானம்? எங்கே கிடக்கிறது அதன் உடைந்த பாகங்கள்....? கடலிலா? காடுகளிலா? கட்டாந்தரையிலா? மலைகளுக்கு நடுவா? அல்லது மொத்தமாய் எங்கே போனது அந்த விமானம்? எங்கே போயினர் அந்த விமானத்தில் பயணித்த அத்தனை பேரும்....? கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே திருப்தியடைந்து கொள்ளும் மனித மனங்கள் குழம்பித்தவித்தன. பலவிதமான அனுமானச் செய்திகளை வெளியிட்டும் கேட்டும் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தன. உலக நாடுகள் எல்லாம் இந்த பூமியைத் தங்கள் சக்திக்கு மீறி சல்லடை போட்டு சலித்தும் பார்த்துவிட்டன....

ஆனால்...எம்.எச் 370 என்னும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கடந்த சில வாரங்களாய் இந்த விமானம் பற்றிய பல அனுமானச் செய்திகளை எந்த உணர்ச்சியுமின்றி திக்பிரமை பிடித்தது போல கேட்டுக் கொண்டிருந்த விமானத்தில் பயணித்தவர்களின் உறவுகள் வெடித்து அழும்படியான செய்தியை மலேசியப் பிரதமர் நேற்று வெளியிட்டிருக்கிறார். இந்தியப் பெருங்கடலில் எம்.எச். 370 விபத்துக்குள்ளாகி மூழ்கி மறைந்து விட்டதென்றும் அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் அதிகாரப்பூர்வமாய் அறிவித்ததும் அது இந்த உலகத்தின் மீதே இடியை இறக்கியது போலத்தான் இருந்தது. அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் கால் தூசியைக் கூட தொட்டுவிட முடியாது என்பதுதான் இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.


மலேசியப் பிரதமர் இப்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதோ, அறிவியல் ரீதியானதோ அல்லது ஆராய்ச்சியின் முடிவோ அல்ல அது அனுமானத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட முடிவு. நம் வாழ்க்கையின் பெரும்பகுதி இப்படித்தான் இருக்கிறது நண்பர்களே...! எல்லாவற்றுக்கும் ஆதரத்தை தேடும் மனித மனம் பல இடங்களில் திகைத்துப் போய் விடையற்று நின்று போகையில்தான் எல்லாம் வல்ல பெருஞ்சக்தியின் திருவிளையாடல் எவ்வளவு வலிமையானது என்பது மெலிதாய் பிடிபட ஆரம்பிக்கிறது. சந்திரனுக்கும், செவ்வாய்கிரகத்துக்குப் போய் ஆராய்ச்சி செய்யும் அகில உலக விஞ்ஞான மூளைகள் இந்த பூமிக்குள் எங்கோ கிடக்கும் ஒருவிமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போய் நிற்பதைப் பார்க்கும் போது அறிவியலை மையமாக வைத்து பிரபஞ்ச பெருஞ்சக்தியைப் பற்றி வாதிட்டுக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு பெரிய அறியாமையில் இருக்கிறார்கள் என்றும் உணரமுடிகிறது.

மனித மூளைகளால் எட்டமுடியாத இடத்திற்கு எல்லாம் அவனின் உள்ளுணர்வுகள் பயணிக்கும். உள்ளுணர்வு என்பது விஞ்ஞானம் அல்ல அது மெய்ஞானம். உள்ளுணர்வு தெளிவாய் வேலை செய்ய நான் இன்னார் என்ற அகங்காரம் அற்ற உள்பார்வை வேண்டும். பார்க்கும் பொருளாய் இருக்கும் போது பார்வை தேவையில்லாமலேயே பல விசயங்களை உணர முடியும். அதாவது இருந்ததனை இருந்தது போல் இருந்து பார்க்கும் ஆன்மீக டெக்னிகாலிட்டியை அறிவியல் உணர்ந்து அதன் கூடவே பயணிக்க இனி பழகிக் கொள்ள வேண்டும். 

வாழ்வின் நிதர்சனமற்ற தன்மையை அறிவியலார், நவீனத்தின் உதவியோடு மானுடர்களுக்கு அதை ஒரு பெருஞ்செய்தியாய் இடைவிடாது அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். முடநம்பிக்கைகளுக்குள் மனிதர் விழுந்து கடவுள் பெயரால் போரிட்டுக் கொள்ளாத, கொலைகள் செய்யாத, பிளவுபட்டு நிற்காத சமூகத்தை உருவாக்க அரசுகளும் முயல வேண்டும். திருக்குர்-ஆனின் ஆயத்து ஒன்றில் வருவது போல இந்த பூமி எங்கும் ஓராயிரம் அத்தாட்சிகளை பேரிறை விட்டுவைத்தும், புதிது புதிதாய் சூழல்களின் மூலம் உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது....

விடியலில் எழுந்து உணவு உண்டு விட்டு மதிய உணவினை கண்டிப்பாய் நான் உண்ணுவேன் என்று ஒரு மனிதன் எண்ணிக் கொள்ளலாம் அது அவனது நம்பிக்கை. நம்பிக்கைகள் ஒரு புறமும் சாத்தியங்கள் மறுபுறமும் நிறைந்து கிடக்கும் இவ்வாழ்க்கையில் சாத்தியக்கூறுகளே எப்போதும் வெல்கின்றன. அப்படியாய் சாத்தியக்கூறுகள் வெல்லும் போதெல்லாம் அதை தனது நம்பிக்கை, விடாமுயற்சி, திட்டமிடல் என்று மனிதன் விளங்கிக் கொள்கிறான். எத்தனையோ கனவுகளோடு எம்.எச் 370 விமானத்தில் பயணித்தவர்கள் விமானத்தோடு கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்ற அனுமானத்தோடு இந்த நிகழ்வினை முடிவினுக்கு கொண்டு வர மலேசியா முயன்றிருக்கிறது. அதிக பயணிகள் தங்களின் நாட்டவராய் இருப்பதால் இந்த மலேசிய அறிவிப்புக்கு....சீனா ஆதராம் கேட்டிருக்கிறது.....


எது எப்படியோ கண்களால் காணப்படாதவரை, விமானத்தின் பாகங்களை பரிசோதித்து அறிந்து அது எம்.எச் 370 என்னும் அலுமினியப் பறவைதான் என்று அறிவியலார் உறுதி செய்யாதவரை அந்த விமானத்தின் பயணிகள் அத்தனை பேரும் நித்திய ஜீவன்களாய் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். ஏதோ ஒரு காலத்தில் விமானம் பற்றிய ரகசியத்தை இந்த பூமி வாய் திறந்து அறிவிக்கக் கூடும் அன்று அறிவியல் சில மைக்ரோ மில்லி மீட்டர்கள் முன்னேறியும் இருக்கக் கூடும்....

அது வரையிலும் அதற்குப் பிறகும்.....இந்த மானுடச் சமூகம் புரிந்து கொள்ள இயலாத இந்த வாழ்க்கை விளையாட்டின் அமானுஷ்யத் தன்மையை மறந்து விட்டு...நான் யார் தெரியுமா என்று மார் தட்டி கொக்கரித்துக் கொண்டே ஜனித்து மரித்து, மரித்து ஜனித்துக் கொண்டே இருக்கும்...!தேவா சுப்பையா...
11 comments:

வேங்கையின் மைந்தன் said...

இன்ஷா அல்லாஹ் {அல்லா நாடினால்}
இது ஒவ்வொரு முஸ்லிமின் நாவும் அடிகொருதடவை துதித்துக்கொண்டிருக்கும் வார்த்தை இதனுடைய முழுமையான தாத்பர்யத்தை மலேசிய விமான நிகழ்வின் மூலம் மற்றவர்கள் ஊணரப்பெற்றார்களோ இல்லையோ உன் எழுத்தின் மூலம் தெளிவாய் விளங்கியது தேவா.இதுதான் உண்மை

கும்மாச்சி said...

இத்துணை தொழில்நுட்பம் இருந்தும் கண்டுபிடிக்கமுடியாதது ஒரு பெரிய ஆச்சர்யம்.

Syed I H said...

எழுதி பழகுபவனா நீங்கள் நிச்சயமாக இருக்க முடியாது ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்குள்ள வரிகளை வாசித்த திருப்தி எனக்குள். வாழ்க தேவா

GSK said...

இறைவன் வகுத்திட்ட பாதை என்பதா!!!!! மனிதனின் பிழை என்பதா.....

நிகழ்காலத்தில்... said...

//அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் கால் தூசியைக் கூட தொட்டுவிட முடியாது என்பதுதான் இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.//
மறுக்க முடியாத உண்மை..இதுவே தான் அறிவியல் இன்னும் இன்னும் முன்னேற உந்துதலாக இருக்கும்...

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் வேதனை தரும் செய்தி! அறிவியலை வென்றுவிட்டது பிரபஞ்சம்!

அருணா செல்வம் said...

விமானம் குறித்த தகவல் கவலையைத் தந்தாலும்... அதைக்குறித்து நீங்கள் எழுதிய கட்டுரை மிக மிக அருமை.
ஒரு சில வாக்கியங்கள் மனத்தில் பதிந்து விட்டது. நன்றி.

ஆத்மா said...

திருப்தியான பதிவொன்று படித்ததாய் உண்ர்கிறேன்...

இன்று கூட என் பேஸ்புக் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்ட்ருந்தேன்
___
நான் இன்னமும் நம்புகிறேன்
மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி
இருக்க மாட்டாது என்று...
___

நம்பிக்கைதான் வாழ்க்கையென்று சொல்கிறார்கள்
நம்பைக்கை வைப்போமே விமானம் பாதுகாப்பாக உள்ளதென்று

'பரிவை' சே.குமார் said...

வேதனையின் உச்சம் அண்ணா...
தொலைந்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல்...
பிரபஞ்சத்தின் முன்னால் அறிவியல் பூஜ்யமாகிவிட்டது.

'பரிவை' சே.குமார் said...

வேதனையின் உச்சம் அண்ணா...
தொலைந்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல்...
பிரபஞ்சத்தின் முன்னால் அறிவியல் பூஜ்யமாகிவிட்டது.

நிலாமதி said...

நல்லதோர் பகிர்வு பாராட்டுக்கள்.