Pages

Thursday, March 20, 2014

நந்தி....!


எப்போதாவதுதான் வாய்க்கிறது இப்படியான மனோநிலை அடைமழைக் காலத்தில் இருண்டு இடக்கும் பகல் பொழுதில் மழைச்சாரலை உள்வாங்கியபடி திண்ணையில் அவித்த கடலையை அனுபவித்து கொறிப்பது போல. மழையின் தாளத்தை கேட்டிருக்கிறீர்களா நீங்கள்? தப.. தப.. தப்... தப...தப என்று ஒவ்வொரு மழைத் துளியிலும் நிலம் தொட்டு பின் மீண்டும் துள்ளி எழும் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா? அலாதி என்பதின் அர்த்தம் அப்போதுதான் விளங்கும். எங்கோ வெறித்தபடி பிடித்த இசையைக் கேட்டுக் கொண்டு ஒரு போர்வைக்குள் சுருண்டு கிடக்கும் கதகதப்பு நிமிடங்களைப் போல இருக்கிறது இன்று எனக்கு.

பேச ஏதுமில்லா தருணங்கள் எப்போதும் வந்து போகுமென்றாலும் எண்ணவே ஏதுமில்லா தருணத்தில் விழுந்து கிடப்பது வரம்தானே. மாட்டினைப் பார்த்திருக்கிறீர்களா? மேயும் போதும் நிதானமாயிருக்கும், ஓடும் போதும் நிதானமாயிருக்கும், வண்டியில் கட்டி ஓட்டினாலும் நிதானமாய் இருக்கும், உழவுக்கு கொண்டு சென்றாலும் நிதானமாயிருக்கும்.  நான் சிறுவயதில் சொந்த கிராமத்துக்கு செல்லும் போதெல்லாம் மேய்ச்சலுக்கு சென்றிருக்கிறேன். மாடு மேய்க்கதாண்டா நீ லாயக்கு என்று என்னை நிறைய பேர்கள் திட்டி இருக்கிறார்கள் சிறுபிராயத்தில். அவர்கள் திட்டியது போலவே நடந்து தொலைத்திருக்கக் கூடாதா என்று ஒரு ஏக்கம் வருகிறது இப்போது. மாடு மேய்த்தல் வெகு சுகமானது. பசுக்களையும், எருதுகளையும், எருமை மாடுகளையும், மொத்தமாய் ஓட்டிக் கொண்டு போய் புற்கள் நிரம்பிய இடத்தில் மேய விட்டு விட்டு மரத்தோர நிழலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சுகத்தினை வார்த்தைகளில் கொண்டு வந்து விடமுடியாது....

செவளை, கருப்பு, வெள்ளை, மோளை, தெப்பப் பசு, வீரன், சோம்பை, நோஞ்சான்.....பேர் சொல்லி அவற்றை அழைத்து ஓய்ய்ய்ய்ய் எங்ங்குட்டு போற மூதேவி... கண்ணுக்குத் தெரியாம ஓடிப்போயிட்டு பொழுது சாஞ்ச பெறகும் ஒன்னியத் தேடிக்கிட்டுத் திரிய முடியுமா....இங்குட்டு வாஞ்ச...என்று அவற்றை அன்பொழுகும் கோபத்தோடு கம்பெடுத்து மெலிதாய் வாலுக்கு அருகே முதுகில் அடித்து திருப்பும் மோது....சில நேரம் அடி சுளீர் என்றும் விழுந்து விடும்..... பாவமாய் நம்மை பார்த்தபடி ...ம்ம்ம்ம்ம்ம்ம்மா என்று அடித் தொண்டையிலிருந்து அவை கத்தும் போது நம் ஈரக்கொலையில் போய் அது சுளீர் என்று வலியாகும்.

ஆடுகளின் கண்கள் கொஞ்சம் போதையிலிருப்பது போலவே இருக்கும். ஒரு குடிகாரனைப் போல கொஞ்சம் மிதப்பில் இருக்கும் ஆடுகளின் கண்களில் ஒரு வெள்ளந்தித்தனம் இருக்காது. அவை சொக்கிப் போய்தான் எப்போதும் இருக்கும். மாடுகளின் கண்களில் பேரமைதி இருக்கும். கோபத்தைக் கூட நிதானமாய் காட்டத் தெரிந்த ஒரே மிருகம் மாடுதான். சொரசொரப்பான நாக்கினை முதலில் நீட்டி புல்லை தடவி இழுத்து முன் பற்களால் கடித்து இழுத்து வாய்க்குள் போட்டு அரைத்து சொடுக்கிடும் நேரத்திற்குள் இரைப்பைக்குள் தள்ளிவிடும். கூர்மையாய் ஒரு செயலை அனுபவித்து செய்கையில் அதில் வேகம் இருந்தாலும் நிதானம் கிடைத்து விடுகிறது. நிதானம் என்பது வேகத்தின் எதிர்ப்பதம் அல்ல. அது குழப்பத்தின் எதிர்ப்பதம்.

மாடு அசைபோடுவது போல வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு இப்போது. எங்கும் பார்க்காமல் மெலிதாய் கண்களை மூடிக் கொண்டு அவ்வப்போது மேலே உட்காரும் எறும்பு, ஈக்களை, சிறு சிறு பூச்சிகளை வாலாலும், தோலை உலுப்பியும் விரட்டிக் கொண்டு கால்கள் மடக்கி எங்கோ எதற்கோ என்னவோ நிகழட்டும் இந்தக் கணத்தில் இந்த உணவை மென்று கூழாக்கி அசைபோடுவதே என் வேலை. எத்தனை அதிசயம் வேண்டுமானாலும் இந்த உலகில் நடக்கட்டும். கட்டுக் கட்டாய் எத்தனை புற்கட்டுக்களை என் முன் போட்டாலும் நான் கவலைப் படமாட்டேன் என்பது போல அசை போடும் மாடுகளைப் போல...

வாழ்க்கையை அசைபோடத் தெரிந்துவிட்டால் வாழ்க்கையின் அழகு என்ன என்பது தெரிந்துவிடும். போன வாரம் சந்தித்து வெகு நாட்கள் ஆன நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. என்னுடைய நண்பர்களில் பெரும்பாலானோர்கள் தேடலில் இருப்பவர்கள். வாழ்க்கை பற்றி,  மதங்களைப் பற்றி, பல்வேறு கொள்கைகள், சித்தாந்தங்களைப் பற்றி, கடவுளைப் பற்றி நாங்கள் வெகு நேரம் மணிக்கணக்காக முன்பெல்லாம் பேசுவோம். அது ஒரு மாதிரியான காலம். என்னவோ ஏதோ என்று பதறிப் பதறி எதையோ ஒன்றை நிறுவி எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொள்ள முனைந்த ஒரு பருவம். ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு சிறு மெதுவடையாய் நினைத்துக் கொண்டு காகிதத்தில் வைத்து என்னை பிழிந்த அறியாமை நிறைந்த காலம். தர்க்கத்தின் மூலம் சத்தியத்தை நிறுவ விரும்பிய தன்முனைப்பும், எதிராளியின் நம்பிக்கையினை உடைத்தெறிய முனைந்த பைத்தியக்காரத்தனமும் மிகுந்து கிடந்த நாட்கள் அவை.

ஓஷோ மெல்ல மெல்ல என்னுள் புகுந்து கொண்டிருந்த அந்த 2002 ஆம் ஆண்டில் தொடங்கி 2004 வரை தொடர்ச்சியாய் ஓஷோவைத்தான் அதிகம் படித்துக் கொண்டிருந்தேன். அதன் நீட்சியாகத்தான் தத்துவங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கொள்கைகள், இன்ன பிற நிறுவல்களை  விட்டு எல்லாம் என்னால் வெளியே வர முடிந்தது. சுதந்திரம் என்பது எதையோ எல்லையில்லாமல் பின்பற்றுவது அல்ல, பின்பற்ற ஒன்றுமே இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு எதையுமே பின்பற்றாமல் இருப்பது. ஒரு முழு சுழற்சிக்குப் பிறகு சற்றேறக்குறைய பத்து வருடங்களுக்கு பிறகு அதே நண்பர்களை சந்தித்த போது.....

ஏன் யாரையும் இப்போதெல்லாம் அடிக்கடி தொடர்பு கொள்வது கூட இல்லை என்று கேட்டார்கள். அவர்களின் உரிமைக்குப் பின்னால் இருந்தது பேரன்பு. தொடர்பு கொள்வதும் கொள்ளாததும் பிடித்தலிலும் பிடிக்காததிலுமா இருக்கிறது? ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதம். என் வாழ்க்கை என்னவிதம் என்றே எனக்குச் சொல்லத் தெரியாத ஒரு மனோநிலையில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதை எப்படி அவர்களுக்கு நான் சொல்வது. சிரித்தபடியே ஒன்றுமில்லை சும்மா அப்படீயே போய்க்கொண்டிருக்கிறது பொழுது என்று நான் சொன்னதற்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள் என்று நிர்ப்பந்தக் கத்தியை என் கழுத்தில் உரிமையோடு வைத்தது நண்பர்கள் கூட்டம். நிஜமாகவே என்னிடம் பதில் ஏதும் இல்லை. சொல்ல ஒன்றுமே இல்லை என்பதை சொன்னால் யாரும் நம்புவதும் இல்லை. நிஜமாகவே யாருக்கான செய்தியும் என்னிடம் இல்லை. சமகால எந்த நிகழ்விலும் எனக்குப் பிடிப்பே கிடையாது என்றேன்...அவர்களிடம்.

இப்போது எந்த திசையில் பயணம்? ஓஷோதான் இன்னமுமா என்று பழைய கொட்டிலுக்குள் என்னை வா வா என்று அழைத்த நண்பரின் கையை ஆதரவாய் பற்றிக் கொண்டு சொன்னேன் நான் எதையுமே பின்பற்றுவது கிடையாது நண்பா இப்போது. எனக்கு மதமோ, சாதியோ, சித்தாந்தமோ, கொள்கையோ, கட்சியோ எதுவுமே கிடையாது. நான் வாழ்கிறேன். பிடித்ததை செய்யும் போதே அது பிடிக்காமல் போய்விடுகிறது. பிடிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அது பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. குளிரில் நின்று கொண்டு வெயிலை நினைத்து ஏங்குவதும், வெயிலில் நின்று கொண்டு குளிரை நினைத்து ஏங்குவதும்தான் இங்கே அனேகரின் வாழ்க்கையாய் இருக்கிறது. எனக்கு எதுவும் வேண்டாம். ஒவ்வொரு நாளும் எந்த திசையில் என்னை விரட்டுகிறதோ அங்கே ஓடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் சரி, நான் தவறு அல்லது நான் சரி நீங்கள் தவறு என்ற கோட்பாடுகளுக்குள்ளும் நான் வர விரும்பவில்லை. என்னை யாரோவாகவோ நீங்கள் பார்க்காதீர்கள். இதோ இந்த சரீரத்துக்குள் கொஞ்ச நாள் வாழ்ந்து போக வந்த ஒரு ஜீவன் என்று மட்டும் கருதுங்கள். பிழைப்புக்காய், உயிர் வளர்க்க இந்த வேஷம். இந்த வேஷம் கொஞ்ச நாளில் மாறும் என்றேன். நேரம் கிடைக்கும் போது வாருங்கள் நீங்கள் குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்று சொன்ன அந்த நண்பர்கள் அனைவருமே நல்லவர்கள். அன்றும் தேடலில் இருந்தார்கள், இன்றும் தேடலில் இருக்கிறார்கள். நாளையும் தேடிக் கொண்டிருப்பார்கள். 

போதும். வயிறு நிரம்பி இருக்கிறது. மேய்ச்சல், மேய்ச்சல் என்று புற்களையும், முட்களையும், தழைகளையும் இழைகளையும் திகட்ட திகட்ட தின்றாகி விட்டது. நான் அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன் இப்போது. நல்லதோ, கெட்டதோ தின்றது எல்லாம் புத்தி என்னும் இரைப்பையில் கருத்துக்களாய் படிந்து கிடக்கிறது. மீண்டும் அவற்றை எல்லாம் நினைவுபடுத்தி, அசைபோடுவதுதான் வேலை இனி. எது, எது எப்படியோ அவற்றை அப்படியே அசைபோட்டுக் கூழாக்கி செரித்து எரித்து விட வேண்டும். ஒன்றும் இருக்கக் கூடாது மிச்சமாய். ஒரு நாள் ஏதோ ஒரு விறகு அடுக்கின் மீது தீக்கு இரையாகிப் போகும் இந்த உடல், அல்லது பூமியின் ஏதோ ஒரு பகுதியின் மண் அரித்து தின்றுவிடும். எல்லா நினைவுகளையும் அசைபோட்டுக் கொண்டே ஒரு கோயில் காளை மாதிரி சிவனே என்று சிவன் முன் நந்தியாய் நான் கிடக்கிறேன்.

ஒட்டு மொத்த பிரபஞ்சமும் என் முன் சிவனாய் விரிந்து கிடக்க....கேட்கவும் சொல்லவும் எதுவுமற்று வெறுமனே அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.... இந்த வாழ்க்கையை வெறுமையாய் பார்த்தபடியே.....


எல்லாம் கொஞ்ச காலம்தான்...!தேவா சுப்பையா...

புகைப்படம் உதவி: சசிதரனின் பேஸ்புக் பக்கம்2 comments:

Unknown said...

இப்படியே அசைப் போட்டுக் கொண்டே இருந்தால் வாழ்வது எப்போது ?
த ம 2

வருண் said...

***எனக்கு எதுவும் வேண்டாம். ***

இப்படி சொல்லிவிட்டால் எப்படி? நம் ஆன்மீக எண்ணங்களை இப்படி கட்டுரையாக தமிழ் மணத்தில் இணைத்து எங்களைப்போல் நாலுபேருடன் பகிர்ந்து கொள்ளக்கூட ஆசை இல்லையா என்ன?

என்னவோ போங்க! வினோதமான மனித்ர்கள்தான்! உங்களைப் போல என்னைப்போல என்று எதிரும் புதிருமாக, அப்பாவி மற்றும் அயோக்கியர்களாக.. ஆன்மீகவாதியாக மற்றும் "அராத்து" களாக..