Pages

Saturday, March 22, 2014

பேசுவது யார்...கடவுளா?


எந்த நுனியை பற்றிக்கொள்வது என்பது தான் தெரியவில்லை. ஏதோ ஒரு நுனியைப் பற்றிக்கொள்ள அது எங்கோ இழுத்துச் சென்று விடுகிறது. இப்போது கூட அப்படித்தான்... எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஏதோ ஒன்றை படைக்க விரும்பும் பிரயத்தனத்தோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அலாதியான விசயங்களை எல்லாம் வார்த்தைப் படுத்த முடியாது என்றாலும் அந்த அனுபவத்தை எப்படியாவது பதிவு செய்து வைத்து விட வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் ஒரு படைப்பாளிக்கு உண்டு. கனவுகளில் சில பூக்களை நான் காண்பதுண்டு. அந்த பூக்களையும் விவரிக்க முடியாத சில பிரதேசங்களையும், எப்போதும் யாரிடமாவது காட்ட வேண்டும் என்ற ஆவலை என்னால் தடுக்க முடிவதேயில்லை.

அதிகாலையில் எழுந்த கொண்ட பின் மெலிதாய் சில கனவுகள் வந்து என் மனக்கதவினைத் தட்டும். யாருமற்ற சமவெளியில் எந்த வித நோக்கமுமின்றி நான் நடந்து கொண்டிருந்த.. அந்த பொழுதுகள் சட்டென்று எனது புத்திக்குள் எட்டிப் பார்க்கும். சமகாலத்தோடு தொடர்பு இல்லாத அந்த பொழுதுகளையெல்லாம், நான் ஒரு எறும்பு இரை சேர்ப்பது போல மெல்ல மெல்ல சேர்த்து என் நினைவுகளுக்குள் பதுக்கி எடுத்து வைத்துக்கொள்வேன்.

எப்போதாவது ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றும் பொழுது திட்டங்களில்லாமல்தான் என் பேனாவையும், வெள்ளை காகிதத்தையும் எடுத்துக்கொண்டு நான் அமர்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்குள் பதுங்கிக் கிடக்கும் இத்தகைய உணர்வுகள் மெல்ல மெல்ல எழுந்து வீட்டிற்கு வந்த முகமறியாத, யாரென்றறியாத ஆணைக் கூச்சத்தோடு கதவுகளுக்கு பின் நின்று எட்டிப்பார்ப்பது போல.... ஒவ்வொன்றாய் எட்டிப்பார்க்கும்.

அவற்றிடம் என்னை யாரென்று அறிமுகம் செய்து மெல்ல மெல்ல என்னை பரிட்சயப்படுத்திக்கொண்டு அவைகளோடு மெல்ல, மெல்ல நான் சம்பாஷணையைத்  தொடங்கும் போது  அவை தயங்கித் தயங்கி கேள்விக்கு விடையறியாத மாணவனாய் குழப்பமான விழிகளோடு என்னுடன் பேச ஆரம்பிக்கும். இப்படித் தயங்கித் தயங்கி தொடங்கும் தட்டுத் தடுமாறிய பரிமாறல்கள் ஒரு பேராசிரியரைப் போல போகப்போக மிகப்பெரிய விரிவுரையே எனக்கு நடத்தும்.  

இல்லாததில் இருந்து எல்லாமே தோன்றியதாமே... என்று என்னிடம் கேள்வி கேட்டு என் கற்பனையைக் கொஞ்சம் உசுப்பேத்தி விடும். அப்போது நட்சத்திரங்கள் இல்லாத வானத்தில் சிறகுகள் இல்லாமல் நான் மிதந்து கொண்டிருப்பேன். அது ஆழ்கடலில் மிதப்பதைப் போல இருக்கும். மெல்ல மெல்ல எட்டிச்சென்று ஏதோ ஒரு விஷயத்தை பிடித்து விடுவோம் என்ற கனவோடு நான் பிரக்ஞையற்று கற்பனையில் ஆழ்ந்திருப்பது உண்டு.. நீரில் மீன்கள் மிதப்பது போல. இது தான் இன்னதுதான் என்று அறிவதற்கு முன்பே ஏதோ ஒரு புறச் சூழ்நிலை என்னை வெளியே கொண்டு வந்து போட்டுவிடக்கூடாது என்ற கவனத்தோடு நான் பறப்பதாலேயே பல நேரங்களில் என் சிறகினை இழந்து விடுகின்றேன். 


இது இன்னது தான் என்று அறியாமல் எதையோ ஏதேதோ உணர்வுகளோடு பிரக்ஞை அற்று செய்யும்போது அது முழுமை ஆகிறது. யாருமற்ற ஒரு அருவிகள் நிறைந்த ஒரு மிகப்பெரிய கானகத்தினுள் நான் சென்று கொண்டிருந்தேன். காற்றின் சலசலப்பும், மரத்திலிருந்து விழும் சருகுகளின் சப்தமும், பறவைகளின் கீச்சொலியும் தாண்டி அங்கே வேறெதுவும் எனக்கு கேட்க வில்லை. அருவியொன்று தபதபவென்று விழுந்து கொண்டிருந்தது. இயற்கையில் தண்ணீர் பாறையில் மோதி தானே தனக்கு எழுதிக்கொள்ளும் கவிதைதான் அருவி என்பது. கவிதை என்பது எப்போதும் யாரோ யாருக்காகவோ எழுதுவதாக ஆகிவிடாது. மனிதர்கள் எழுதும் கவிதை மட்டும் அவர்களின் மனதைக் கடந்து யாருக்கோ எழுதுவது போல.. அவர்களிடமிருந்து பிரிந்து நின்று துவைதமாகிப் போகிறது.

இயற்கை அப்படி அல்ல அது தனக்கு தானே கவிதையை எழுதிக் கொள்கிறது. ஒரு மழை கவிதை என்று மனிதனுக்குப் படும். அந்தக் கவிதை அவனை உணர்ச்சியின் உச்சத்திற்கு கூட்டிச்சென்று ஏதேதோ உணர்வுகளை கிளறி விடவும் கூடச் செய்யலாம் ஆனால் ஒரு மழை ஒருபோதும் தன்னை வேறு யாருக்காகவும் வரைந்து  கொள்வதில்லை. மழை தனக்குத் தானே கவிதையாகிறது. இசை தனக்குத் தானே இசையாகிறது... ஒரு மெல்லிய தென்றல் காற்று தனக்குத்தானே தென்றலாகிக் கொள்கிறது இப்படித்தான் படைப்பு என்பது எதன் பொருட்டோ நிகழாத போது அது அதற்கே கவிதையாகிப் போகிறது. கவிதை என்பது திட்டமிடல் அல்ல. அது அந்தக் கணத்தின் வலி. அந்தக் கணத்தின் சந்தோசம். அனிச்சையாய் நிகழும் கூடல். அழுந்தப் பதியும் முத்தம். அடர் மெளனம். கேட்க முடியாத சப்தம். வரைமுறைகளற்ற இயக்கம். அது திமிர். அது கர்வம். அது கடவுள். மொத்தத்தில் அது எப்போது நிகழும் என்று யாருக்குமே தெரியாது. தென்றலாய் வருடிக் கொண்டே பெரும்புயலாய் அது அடித்து தீர்க்கும். இன்பம் என்ற மானுடர் கர்வத்தின் மீது நரக நெருப்பாய் எரிந்து அடங்கமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்யும். யாருக்காவும் அது நிகழ்வதில்லை.  

யாருக்காகவோ என்று ஏதோ ஒன்றை நாம் செய்யும் தருணத்தில் அங்கே எதிர்பார்ப்பு நிறைந்துவிடுகிறது. எதிர்பார்ப்பு திட்டமிடலைக் கொடுத்து விடுகிறது.. திட்டமிடல் வியாபாரத்தை புகுத்தி விடுகிறது.. வியாபாரம் பொருளாதாயத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. பொருள் மமதையைக் கொடுத்து அறியாமையில் தள்ளி விடுகிறது. அறியாமை ஞானத்திற்கு எதிர்பதம். ஞானம் பேரின்பத்தின் உச்சம். அறியாமை நரகம்...!

கவனமின்றி நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த வரிகளும் கூட ஒரு புரவியில் ஏறி திசைகளற்று எங்கோ செல்லும் ஒரு போர்வீரனின் மனநிலையை ஒத்ததுதான். ஏதோ ஒரு போர் எங்கோ இருக்க வேண்டும்.. ஏதோ ஒரு யுத்தம். யார் எதிரி என்றே தெரியாது, எதற்காகப் போர் என்றும் தெரியாது.. ஆனால் போரிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இங்கே பயணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது.

இலக்குகளின்று செல்லும் இந்த பயணம்..... கனவுகளுக்கு கூட்டிச் செல்லும். கனவுகளோடு கற்பனை வானத்தில் நாம் பறக்கலாம். ஆமாம்.. நீரில் மிதப்பதைப் போல...! புரியாமல் எதை எதையோ எழுதி வைத்து விட்டு அதைப் புரிந்துகொள்ள செய்யும் எல்லா முயற்சிகளையும் இந்த கட்டுரையிலும் நான் செய்து கொண்டிருக்கிறேன்..!

ஓ..கனவுகளே....
நீங்கள் கலைந்து போய் விடுங்கள்...
எனக்கான சித்திரத்தை...
நானே வரைந்து கொள்கிறேன்....
எனக்கான பாடலை நானே பாடிக்கொள்கிறேன்...!
என் பிரக்ஞை நிலைக்குள் 
வந்து விடாதீர்கள்...கற்பனைகளே..
அது வெண்ணிறமானது; அடர் கருப்பானது
ஒளியையும் இருளையும் அளவுகோலாக்கி
கணிக்க இயலாதது...!

இதோ நான் மரிக்கப் போகிறேன். கனவுகளோடு நான் சுற்றித் திரிந்ததெல்லாம் போதும். என் உடலை சர்வ நிச்சயமாய் நீங்கள் எரியூட்டிவிடுங்கள். என் வார்த்தைகளைத் தவிர நான் இருந்தேன் என்பதற்கான எந்த அடையாளத்தையும் நான் விட்டுச் செல்ல விரும்பவில்லை. என்னை எரியூட்டும் முன்பு என்னை ஒரு வெண்ணிற துணியால் மூடிவையுங்கள். எத்தனையோ வர்ணங்களில் எனக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் எண்ணங்கள் எல்லாம் அந்த வெண்மை நிறத்துக்குள் கரைந்து காணாமல் போகட்டும். தணலை மூட்டி அதி உக்கிரமாய் தீயை மூட்டி இந்த உடலை பஸ்மாக்கிப் போடும் உதவியை மட்டும் நீங்கள் செய்து விடுங்கள்.....காற்றில் கரைந்து எங்கெங்கோ பரவி சாம்பலாய் இந்த உடல் மறைந்து போகட்டும்....

நான் இப்போது பிரக்ஞை நிலையில்
தூளி உறங்கும் குழந்தையாய்
புரண்டு கொண்டிருக்கிறேன்.... 
ஓ...பிரபஞ்சமே....
நீ தாலாட்டை நிறுத்தி விடாதே....!தேவா சுப்பையா...

No comments: