Pages

Saturday, July 7, 2012

ஈ(ழ)ன பிழைப்பினை நிறுத்துங்கள் அரசியல்வாதிகளே....!அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். உரிமைகள் பறிக்கப்பட்டார்கள். தொன்று தொட்டு அந்த மண்ணை ஆண்ட ஒரு நீண்ட நெடிய பரம்பரையினர் என்றாலும் இழி பிறப்பினராய் கருதப்பட்டார்கள். இடையிலே வந்த பிறப்பிலே கோளாறு இருக்கும் பெயர் சொல்லி அழைக்க முடியாத இழி குலத்தவர்களின் அரசியல் சூழ்ச்சியில் சிக்குண்டு மிருகங்களை விட கேவலமாய் நடத்தப்பட்டார்கள்.

தெருமுனையில் ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாய் நிற்க வைத்து அசிங்கப்படுத்தியும், பிள்ளைகளுக்கு முன்னால் தாயின் கற்பை சூறையாடியும், சொந்த சகோதரர்களின் முன்பு சகோதரிகளின் கற்பை சூறையாடிம், பச்சிளம் பிள்ளைகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டு கொன்றும் அவர்கள் வெறியாட்டம் ஆடினார்கள்.

காரணம் அவர்கள் சிங்களவர்கள். உயர்வானவர்கள். அடக்கப்பட்டு மிதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். இழி குலத்தவராய் கருதப்பட்டவர்கள்.

இப்படியான சூழலில் தொடங்கிய ஒரு  போராட்டம் அறவழியில் போராடி போராடி களைப்புற்று இறுதியில் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்திய போராட்டமாய் வெடித்தது. கருப்பையிலிருந்து ஜனித்து விழுந்த ஒவ்வொரு பிள்ளையும் அழுவதற்குப் பதிலாக புலிகளாய் கர்ஜனை செய்தபடியே பிறக்கவும் செய்தனர்.

ஆமாம்..அவர்கள் போராடினார்கள். கழுத்திலே சயனைடு குப்பிகளோடு மரணத்தை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, ஏதோ ஒரு கணத்தில் நாம் இறப்போம், அப்படி இருக்கும் வரை  எம் தேசத்தின் விடியலுக்காய் களமாடிக் கொண்டே இருப்போம் என்ற உறுதியை திடமாய் கொண்டிருந்தனர். சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என்ற எந்த ஒரு பாகுபாடுகளுமின்றி.. நடந்து பழக ஆரம்பித்த உடனேயே ஆயுதமேந்த வேண்டும், அடிமைத்தளை போக வேண்டும் என்ற நெருப்பினை நெஞ்சில் ஏந்தியிருந்தனர்.

அவர்களுக்கு தலைவன் என்றொருவர் இருந்தார். அவரும் அந்த மக்களுக்கு நடுவிலே கடும் காட்டிலே வாழ்க்கையையே விடுதலைப் போரட்டத்திற்காய் அர்ப்பணித்து இருந்தார். அவர் எப்போதும் மக்களை வைத்து யாதொரு பிழைப்பு அரசியலையும் நடத்தி இருக்கவில்லை. பணத்திற்காகவும் பதவிக்காகவும் அரசியல் தேவடியாத்தனங்கள் செய்து கொண்டிருந்த மிருகமான ராஜபக்சேயோடு கை குலுக்க அவர் விரும்பியதே இல்லை. 

ஏதோ ஒரு பதவியைப் பெற்றுக் கொண்டு பிள்ளைகளை அயல் நாட்டில் படிக்க வைத்துவிட்டு சுற்றுப் பயணங்கள் சென்று உல்லாசமாய் இருப்பதில் அந்த தலைவனுக்கு ஒரு போதும் விருப்பம் இருந்ததில்லை.

அவன் சினிமாவில் நடிக்க வந்து விட்டு அந்த நடிப்பால் மக்களை வெள்ளித் திரையின் மூலமாக சேர்த்து விட்டு கவர்ச்சி அரசியல் செய்து மக்களின் தலைவனாகவுமில்லை, யாரோ ஒரு தலைவனை அண்டிப் பிழைத்து அவனின் புண்ணியத்தால் சேர்ந்த கூட்டத்தில்  அந்த தலைவனின் பெயர் சொல்லி அரசியல் செய்யவும் இல்லை. சொத்து குவிப்பு வழக்கு ஒன்றும் அவன் மீது இருக்கவில்லை. கோர்ட்டுகளின் படியேற வேண்டிய அவசியமும் அவனுக்கு இருந்திருக்க வில்லை. 

இருந்த பிள்ளைகளை சமரில் பலி கொடுக்கும் தீரம் மட்டுமே அவனிடம் இருந்தது மாறாக வளர்ப்பு பிள்ளைகளை வயதான காலத்தில் சுவீகரித்து விட்டு பட்டாடைகளும், தங்க நகைகளும் இட்டு அவனோ அவனின் குடும்பத்தினரோ பவனி வரவில்லை...! பிள்ளைகளுக்களுக்கு பதவி வேண்டி எவர் காலையும் அவன்  தொட்டு கெஞ்சி இருக்கவுமில்லை.

அவனுக்கு அவன் இனம் முக்கியமாயிருந்தது. சுதந்திரக்காற்றை தான் சுவாசித்து தன் மக்களுக்கும் கொடுக்கும் உத்வேகம்  அதிகமிருந்தது. இனத்தின் எதிரியாய் தன் குலத்தில் தழைத்தவர்களையும் அவன் கொன்றழித்த போது அவற்றை கொலைகள் என்றும் சகோதர யுத்தம் என்றும் துரோகிகள் சொன்னார்கள், நாங்கள் அவற்றை வதங்கள் என்று சொன்னோம்.

அவன் மக்களை போராட்டத்திற்கு பிரியாணி பொட்டலத்தையும் குவார்ட்டர் பாட்டிலையும் கொடுத்து எப்போதும் அழைக்கவில்லை. போராட வந்தால் உயர் பதவிகள் கொடுப்பேன் என்று எந்த ஒரு சில்லறைத்தனமான அரசியலையும் நடத்தி இருக்கவில்லை.

காலையில் சிறை நிரப்பி மாலையில் வீடு செல்லலாம் என்ற எந்த ஒரு உத்திரவாதமும் கொடுத்திருக்கவில்லை. மண்டபங்களில் அடைபட்டு, டீயும் வடையும் உண்டு விட்டு எப்படியும் விடுதலையாவோம் என்றறிந்த பொய்யான போராளிகளை அவரன் கொண்டிருக்கவில்லை. ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாய் சிறைப்படுவோம் என்று அறிந்தாலும், உயிரே போகும் என்று தெரிந்தாலும் அவர்கள் யாதொரு இடர்பாடுகளுமின்றி களமாடும் நெஞ்சுரத்தைக் கொண்டிருந்தனர்.

அவனின் சமர்களில் கையிழந்தோர், காலிழந்தோர், விழி இழந்தோர் அதிகமிருந்தாலும் உயிர் இழந்தோரே இன்னும் அதிகமிருந்தனர். 

அந்த புலிக்கூட்டம் எப்போது தங்களின் வெற்றிகளை வெற்றிகள் என்று அழைத்துக் கொள்ளவும் இல்லை, புரட்சி செய்து எழுச்சி செய்த பெரும்படை என்று அரற்றிக் கொள்ளவும் இல்லை. அவர்கள் போராடினார்கள் அவ்வளவுதான் அந்த போராட்டம் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், உரிமைகளைப் பெற்று சுதந்திர மனிதராய் வாழ்வதற்கான ஒரு இலக்கு நோக்கிய இலட்சியத்தைதான் கொண்டிருந்தது.

எல்லாம் சரியாயிருந்தும் அந்த போராட்டம் அவ்வப்போது விழுவதும், எழுவதுமாய் இருக்கையில் ஒரு கட்டத்தில் முழுதாய் முறியடிக்கப்பட்டதற்கான ஒரு சூழல் அமைந்து போனதுக்கு காரணமாய்.....

" இன அழிப்பிற்கு எதிரான ஒரு உக்கிரபோராய்  அது இருக்கும் போதே தான் பேசும் அதே மொழியைப் பேசும் தொட்டடுத்த தேசத்தில் தமிழ் பேசும் மாநிலத்தில் இருக்கும் தமிழர் கூட்டமும், அந்த தமிழர் கூட்டத்தை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல் கூத்தர்களாலும் உதவப்பட்டு தாங்கள் வென்று விடக்கூடும் என்று மலைபோல் அவர்கள் நம்பியதும் ஆகிப் போனது....

ஒரே காலத்தில் ஒரு இனம் மானத்தோடு போராடியதும், ஈனப்பட்டு அடிமை அரசியல் நடத்தியதும் இருவேறு தேசங்கள் என்ற அடைப்புக்குள் நடந்தேறியதை வரலாறு வேதனையோடு குறிப்பெடுத்துக் கொண்டது."

ஈழத்தில் மானத்திற்காய் தமிழன் போராடிக் கொண்டிருந்த போது, தமிழகத்தில் அரசியல் சுயநலத்திற்காய் வேட்டி, சேலைகளை எல்லாம் கழற்றி இந்திய தேசத்தின் ஒருமைப்பாடு என்ற மாயையின் காலடியில் வைத்து விட்டு, கூட்டாட்சி தத்துவத்தின் வகை தொகை தெரியாத தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணி ஆட்சி என்ற ஐஸ்கிரிமை சப்பிக் கொண்டே நடுவண் அரசுகளில், பங்கேற்று தங்களின் பிழைப்பினை உறுதி செய்து கொண்டன.

செத்து விழுந்த போராளிகளின் எண்ணிக்கையை எப்போதும் கணக்கிட்டு பார்த்து தமிழுக்காய், தமிழ் இனத்தின் விடுதலைக்காய் இவன் உயிர் கொடுத்தான் என்று அவனின் புகழ் பாட முடியாத என் ஈனத் தமிழ் இனம்....

இன்று எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன் என்பதை கின்னஸ் ரெக்காரிடில் பொறித்துக் கொள்ள விரும்பும் குறுக்கு வழிகளில் வென்ற அரசியல் புரட்சித் தலைவிகளையும்....

அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று  ஒரு நாள், மிஞ்சினால் இரண்டு நாள் என்று கணக்குகள் கூட்டிக் கொண்டு அரசுக்கு எதிரான போரட்டங்களில் தத்தம் கட்சிகளின் சார்பாக கலந்து கொண்டு அப்படி கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையினை கூட்டிக் கழித்து விளம்பரம் செய்து.....நாங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழினத் தலைவர்களையும்....

பார்த்துக் கொண்டு பகிர்வதற்கு வார்த்தைகளின்றி வலிகளால் நிரம்பிப் போன இதயத்தோடு ஈழத்து மண்ணில் மறைந்து போன மாவீரர்களுக்காய் கண்ணீர் வடிக்கத்தான் முடிந்தது.

ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் அருகதைகளை தமிழக அரசியல் கட்சிகள் இழந்து வெகு நாட்களாகி விட்டது என்ற வெட்கங் கெட்டதனத்தையாவது தற்போதைய தமிழக அரசியல் கட்சிகள் உணர்ந்து கொண்டு, 9 சிங்கள வீரர்களுக்கு விமானப் படை பயிற்சி அளிப்பதை வீறு கொண்டு எதிர்க்கும் மானங்கெட்ட வீரத்தை எல்லாம் மறந்து விட்டு....

குறைந்த பட்சம் தமிழக மக்களுக்கான ஒரு சுய மரியாதை அரசியலையவது செய்ய முன் வரவேண்டும்...!

ஈழம் தன்னால் பிறக்கும்...!!!!! கொஞ்சம் நஞ்சம் மானமுள்ள தமிழர்  கூட்டம் அதை வென்றெடுக்கும்....!!!!! மனித நேயமுள்ள சர்வதேச சமுதாயம் அதற்கு உதவும்...!

ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும், திருமாவளவன்களும், சீமான்களும்... தத்தமது உடைகளை திருந்த அணிந்து கொண்டு கெளரவமாய் வாழ முற்படுதலே நலம்... மாறாக ஈழ நேசம் என்ற வேசம் போடும் கயவாலித்தனத்தை செய்து தங்கள் அரசியல் பிழைப்புகளை நடத்த முயன்றால்....எல்லாம் வல்ல இயற்கை அவர்களை அழித்துப் போடும் என்பது மட்டும் உறுதி....!


தேவா. S


பின்குறிப்பு: எப்போதும் காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்பதும், எதிர்ப்பதும் ஒவ்வொரு தமிழனின் உயிர்க் கொள்கையாய் இருப்பதால்....காங்கிரஸ் என்னும் கட்சியைப் பற்றி தனித்துக் கூற இங்கு ஒன்றுமில்லை.


10 comments:

Anonymous said...

very good my friend .... this is the thought running in younger generation... Hats off .. u are bold

dheva said...

பெயரில்லாமல் வந்து தரக்குறைவாக பேசிய அன்பின் நண்பருக்கு நன்றிகள். உங்கள் கருத்துரைகள் அழிக்கப்பட்டது என்பதை மரியாதையாய் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் குடும்பத்தாருக்கு தங்களின் கீழ்த்தரமான வார்த்தைகளை திருப்பிக் கொடுக்குமளவிற்கு தங்களைப் போன்ற அறிவில் கீழானவன் நானல்ல...அந்த வார்த்தைகளைக் கொண்டு உங்களை நான் மன்னிக்கிறேன்.

பெயரோடு வந்தால் தங்களின் வீரத்தினை உரசிப்பார்க்க ஒரு வாய்ப்பிருக்கும். பெயர் அறிவிக்க முடியாத பிள்ளைப்பூச்சிகளுக்காய் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும் நான்..!

வேர்கள் said...

வேதனையை அருமை என்று சொல்லமுடியவில்லை தேவா
ஆனாலும் சொல்லநினைத்ததை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்
நன்றி...

வெளங்காதவன்™ said...

:((

சரண்யா said...

எழுச்சி உள்ள இளைஞர்கள் எழுத்துகளோடு தங்கள் உணர்ச்சிகளை நிறுத்தி கொள்வதால் யாருக்கு என்ன பயன்? வெறும் எழுத்துகளும் பேச்சுக்களும் எதையும் மாற்ற போவதில்லை ....... அரசிடம் எதிர் பார்ப்பது வீண்..... அரசு அதிக பட்சம் மானாட மயிலாட நமீதா குஷ்புவின் நடனத்தோடு புலிகளுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு தான் கடமையை முடித்து கொள்ளும்..........இனியொரு புரட்சி வரும் வரையில் இங்குள்ள தமிழர்களின் உயிர்க்கும் உத்தரவாதம் இல்லை என்பதே உண்மை.........

சரண்யா said...

எழுத்தின் தாக்கம் அருமை.....

நாய் நக்ஸ் said...

அருமை தேவா...
(நான் பதிவை சொன்னேன்...!!!)

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா.

தமிழ் மகன் said...

ஈழப் போராட்டத்தினை இத்தனை சுருக்கமாக தெளிவாக எவராலும் எழுத முடியாது ..
//ஈழம் தன்னால் பிறக்கும்...!!!!! கொஞ்சம் நஞ்சம் மானமுள்ள தமிழர் கூட்டம் அதை வென்றெடுக்கும்....!!!!! மனித நேயமுள்ள சர்வதேச சமுதாயம் அதற்கு உதவும்...!//

இவை சத்தியமான வார்த்தைகள்.
வீழ்ந்தது எழும் என்பது இயற்கை நீதி.

எழும் என்பதில் நம்பிக்கை கொள்வோம். நமது ஒருமித்த நம்பிக்கை ஈழத்தை கண்டிப்பாக மீட்டெடுக்கும்.

தனிமரம் said...

சரியாகச் சொன்னீர்கள் தமிழக தலைவர்கள் யாரும் நமக்கு நேர்மையான சிந்தனையாளர் இல்லை கரிகாலன் போல!ம்ம் நம் நிலை இப்படி!