Pages

Friday, July 6, 2012

இந்த கணம் இருக்கிறது உயிர்ப்போடு.....!
தகிடு தத்தம் ஆடும் வாழ்க்கையின் சுவாரஸ்யம்தான் என்ன? சடரென்று முகத்திலறைந்த கேள்விக்கு பதிலும் அதே வேகத்தில் கிடைத்தது. வாழ்க்கையின் சுவாரஸ்யமே வாழ்வதுதான்.. என்ற பதில் சுவாரஸ்யத்தை எங்கோ தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மிக சாதரணமாய் தெரிவதாலேயே பதிலை மாற்ற முடியாது பாஸ்....!

வாழ்க்கையின் சுவாரஸ்யம் வாழ்வது....!

இந்தக் கணத்தில் மூழ்கிக்கிடப்பது. ஒரு இசையோ, ஒரு பாடலோ, ஒரு திரைப்படமோ, ஒரு கவிதையை வாசித்தலோ அல்லது எழுதுதலோ, மனதுக்குப் பிடித்த புத்தகத்தை வாசித்து வாசித்து அதை புத்திக்குள் அதக்கிக் கொண்டு அசை போட்ட படியே புத்தகத்தை நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு பாதி உறக்கத்திற்குள் சென்று மீண்டெழுந்து மீண்டும் வாசித்தலோ, மனதுக்குப் பிடித்த பெண்ணோடு வார்த்தைகளுக்கு சிறகு பூட்டி பறக்க விட்டு பேசிக் கொண்டிருத்தலோ, பார்த்துக் கொண்டிருந்தலோ, முத்தமிடுதலோ அல்லது புணர்தலோ.....

ஒரு செடியின் சிறு துளிர் பார்த்து சில்லிட்டு நிற்பதோ, பூவின் மொட்டு வெடிக்கும் தருணத்திற்காய் நிமிடங்களைக் கடத்திக் கொண்டு காத்திருத்தலோ, வானத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மேகங்களை விழிகளால் தடவித் தடவி அதன் வடிவங்களை மனதில் வரைந்து பார்த்து ஏதோ ஒரு உருவத்தோடு ஒப்பிடுவதோ, கோபமாய் இருப்பதோ, சிரிப்பதோ, கவலையாய் இருப்பதோ, அழுவதோ, வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதோ, நடப்பதோ, உறங்குவதோ இல்லை தனியாய் பாத்ரூமில் பிடித்த பாடலைப்  பாடியபடி உடல் நனைய ஷவருக்குள் நனைந்து கிடப்பதோ, பிடிக்காத ஒருவருடன் மூச்சிறைக்க சண்டை போடுவதோ....

அல்லது மேலே சொன்ன எதுவும் செய்யாமல் இப்படி எழுதிக் கொண்டிருப்பதோ அல்லது இதை வாசித்துக் கொண்டிருப்பதோ என்று நாம் இந்தக் கணத்தில் இருக்கலாம்தானே...?

தர்க்கங்களையும் தத்துவங்களையும் எரித்து விட்டு அது பற்றிய சிந்தனைகள் அற்ற கொழுக் மொழுக் என்று ஆரோக்கியமான சப்தமாய் வாய் விட்டு சிரிக்கும் மனம் கொண்ட மனிதர்களை மட்டும் கொண்ட பூமி ஒன்று வேண்டும் என்பதுதான் எனது முதலும் கடைசியுமான ஆசையுமாய் இந்தக் கணத்தில் தோன்றுகிறது. ஆராய்ச்சியும் விவாதங்களும் எப்போதும் முடிவடையப் போவது இல்லை. இறுதி வரை தேடி அடைய முடியாத உண்மையாய் வாழ்க்கை இருக்கும் போது அதன் ஆதி முடிச்சும், இறுதி முடிச்சும் எப்போதும் அடைய முடியாதது  என்று உணர்ந்த பின்பு....

இந்தக் கணத்தில் பரிபூரணமாய் நாம் நமது அரியாசனம் ஏறலாம்தானே? வெறுப்பிலேயே நகரும் வாழ்க்கையின் மறுப்பக்கத்தில் ஆசைகள் நிறைந்திருக்கின்றன. வானம் நீல நிறம், கடல் உப்புக் கரிக்கிறது, பூக்கள் பரவசமாய் தினம் மலருகின்றன. வானத்தில் சிறகடிக்கும் பறவைகள் அந்த நிமிடத்தின் நகர்தலோடு ஒன்றிப் போய் இருக்கின்றன. அதோ அந்த நதி இப்போது நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மரங்கள் காற்றோடு ஏதேதோ பேசி சிரித்து தலையசைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த கணம் அவை எப்படி இருக்கின்றன என்பதை எதிர்காலத்தோடு தொடர்பு படுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அவற்றின் மகிழ்ச்சியும் பரிபூரணமாயிருக்கிறது.

என் அலுவலக வரவேற்பரைக்குப் பின்னால் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்குப் பின்னால் ஒரு மத்திம உயரத்திலான  செடி இருக்கிறது. அது என்ன செடி என்று எனக்குத் தெரியாது. தினமும் காலையில் வரும் போது அதை பார்ப்பேன். அது சிறு சலனத்தோடு மெலிதாய் தலையசைத்துக் கொண்டிருக்கும். முன் பகலில் மீண்டும் பார்ப்பேன்...அது மெல்ல தலையாட்டி சிரித்துக் கொண்டிருக்கும்.

நேரம் ஆக, ஆக எனது சக்தி எல்லாம் எங்கெங்கோ விரையமாகி, எது எதற்கோ நான் கோபப்பட்டு, தொலை பேசியில் அலுவலக விசயம் பேசும் போது வீட்டை நினைத்தும், அமைதியாய் இருக்கையில் அடுத்த அடுத்த நாளுக்கு செய்ய வேண்டிய ஏதோ ஒன்றை பற்றி கவலைப்பட்டும், முக்கியமான மின்னஞ்சல்களைத் தட்டச்சும் நேரத்தில் வொர்க் ஷாப்பில் இருக்கும் தொழிலாளர்களுக்கு என்ன என்ன சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டோ இருந்து எதை எதைச் செய்கிறோமோ அப்போது அதில் லயிக்காமல், எப்போதும் ஒரு வேலையின் போது வேறு எதோ ஒன்றைப் பற்றியே எண்ணி எண்ணி.....

அந்த அந்த கணங்களின் முழுமையை கவனமில்லாமல் தொலைத்திருக்கிறேன். உணவருந்தும் போது கூட அசுர கதியில் அதையும் ஒரு இயந்திரத்தைப் போல செய்து விட்டு மறுபடியும் ஓடி, ஓடி அங்கும் இங்கும் நகர்ந்து... ஒவ்வொரு நொடியையும் அந்த அந்த நொடியோடு தொடர்புள்ள செயல்களோடு முழுதுமாய் பந்தப்படுத்திக் கொள்ளாமல் ஒரு மேலோட்டமான வாழ்க்கையைத்தான் நகர்த்தி இருக்கிறேன்.

கடுமையான அலுவல் சுமைகளில் மூளையின் இரத்த அழுத்தம் கூடிப்போய் ஏதோ வேலையாக மீண்டும் பிற்பகலிலோ அல்லது மாலையிலோ அந்த வரவேற்பரைக்கு சென்று பின்னால் இருக்கும் செடியைப் பார்ப்பேன்...அது அப்போது அடிக்கும் காற்று எப்படி அடிக்கிறதோ அதற்கு ஏற்றார் போல வேகமாகவோ அல்லது மெதுவாகவோ தலையசைத்தபடி சிரித்துக் கொண்டிருக்கும் காலையில் இருந்த அதே புத்துணர்ச்சியோடு.....

நான் காலையில் புத்துணர்ச்சியாய் இருப்பேன்....மதியம் கொஞ்சம் ப்யூஸ் போய்....மாலையில் மொத்தம் ட்ரெயின்ட் அவுட் ஆகி.....பல்வேறு மனோநிலைகளில் ஒரே செடியைப் பார்க்க அந்த செடி ஒரே மாதிரியாய்தான் காலையில் இருந்து மாலை வரை இருக்கும்.  ஒரு நாள் திடீரென்று காலையில் பார்த்தால் அந்த செடியைக் காணவில்லை. என்ன ஆகி இருக்கும் என்று ஒரு ஆர்வத்தில் அலுவலக காம்பவுண்ட் விட்டு வெளியே வந்து பார்த்தால் தொலைபேசி வேலை செய்தவர்கள் அங்கே வேலை செய்ய வேண்டி அந்த செடியைப் பறித்துப் போட்டு இருந்தார்கள்...

உயிரற்றுக் கிடந்த அந்த செடியைப் பார்க்கையில் மனதை ஏதோ செய்தது. அது துள்ளிச் சிரித்து எப்போதும் தலையாட்டி தலையாட்டி காற்றுக்கு ஏற்றார்போல குதுகலித்து இருந்த உற்சாகம் சட்டென்று புத்திக்குள் எட்டிப்பார்க்க...நான் சோகமாய் திரும்பி நடக்கத் தொடங்கி சில நொடிகளில் மீண்டும் திரும்பி அந்த செடியைப் பார்த்தேன்....அப்போது வீசிய ஒரு மெல்லிய காற்றுக்கு அதன் உயிரற்ற இலைகள் வேகமாய் தலையசைத்து மீண்டும் மகிழ்ச்சியாய் ஆடிக் கொண்டிருந்தது....

ஒரு இரண்டு மூன்று நாள் கழித்து மீண்டும் சென்று பார்த்த போது அந்த செடி பரிபூரணமாய் கருகிப் போய்.... மண்ணோடு மண்ணாய் கலந்து முழுமையாய் மாறிப்போயிருந்தது. 

அவ்வளவுதான். 

வாழும் வரை வாழ்க்கை. அது முடிந்த பின்பு... எல்லாம் முடிந்து விடவில்லை. வேறு விதமான வாழ்க்கை.... என்று எதைச் செய்தாலும் அதன் முழுமையில் இருக்கும் நம்மை விட குறை அறிவு கொண்ட உயிர்களைப் போல ஏன் நம்மால் இருக்க முடியவில்லை? நமக்கு மனம் இருக்கிறது. அவற்றுக்கு மனம் இல்லை என்பது பரிணாம வளர்ச்சியில் நமக்கு கிடைத்த உச்ச நிலை அல்லவா? அத்தகைய மனம் முழு பலத்தோடு இல்லாமலேயே முழுமையான ஒரு அர்ப்பணிப்பினை விலங்குகளும், மரங்களும், செடிகளும், கொடிகளும்  செய்யும் போது மனம் என்ற ஒரு மிக அருமையான ஒரு வேலைக்காரனை வைத்துக் கொண்டு இந்த வாழ்க்கையை நம்மால் ஏன் சந்தோசமாக கழிக்க முடியவில்லை...?

முழுக்க முழுக்க கற்பனையை இறைத்துக் கொட்டி எதிர் காலத்துக் கனவுகளுக்குப் பயணப்படும் மனதை இந்தக் கணத்தில் நிறுத்திப் பாருங்கள்....! எதிரே வரும் மனிதருக்கும், காணும் காட்சிகளுக்கும் யாதொரு கருத்துக்களும் கொடுத்துப் பார்க்கதீர்கள்....! சிரிக்க வேண்டிய நேரத்தில் யாரோடும் சண்டையிட்டதை நினைக்காதீர்கள்...அதே போல சண்டையிடும் போது.....சிரித்தும் விடாதீர்கள்...ஆக்ரோஷமாய் சண்டையிடுங்கள்.

பைபிளில் ஜீசஸ் கிரைஸ்ட் தனது சீடர்களிடம் சொல்வதாக ஒரு வரி வரும்.... 

" அழகாய் பூத்திருக்கும் லில்லி மலர்களைப் பாருங்கள், அவற்றை யாரும் நூற்பதும் இல்லை நெய்வதும் இல்லை, இருந்தாலும் பேரரசர் சாலமனின் உடுத்தியிருக்கும் பட்டாடைகளை விட அதி அவை சிறந்தவைகளாக இருக்கின்றன...."

இவை சாதாரன வரிகள் இல்லை. ஆழ்ந்து தியானிக்க வேண்டிய வரிகள். அந்த கணத்தில் நிறைந்து இருக்கும் எல்லாம் பரிபூரணமானவை, ஒப்பற்றவை, அழகானவை அவை மலர்களாய் இருந்தாலும் சரி.....மனிதர்களாய் இருந்தாலும் சரி.....

நான் இருக்கிறேன்..நீங்கள் இருக்கிறீர்கள்.....இந்த கணமும் இருக்கிறது உயிர்ப்போடு.....


தேவா. S