Pages

Thursday, July 12, 2012

கனவுகள் ததும்பட்டும்.....!
நிஜங்கள் எப்போதும் எதார்த்தப் போர்வை போர்த்திக் கொண்டு இயல்புகளை வெளிக்காட்டினாலும் கனவுகளில் எப்போதும் சிறகடித்து எங்கெங்கோ பறக்க முடியும் ஒரு வாய்ப்பினையும் சேர்த்தேதான் பிரபஞ்சம் நமக்கு கொடுத்திருக்கிறது. இயல்புகளை அவ்வப்போது மென்மையாய் மறந்து விட்டு கனவுகளுக்கு வர்ணம் தீட்டி தீரத் தீர காதலிக்க நான் எப்போதும் தயங்குவதில்லை. 

ஒரு மழை, எங்கோ வேகமாய் செல்லும் வெண்மேகம், பேசாமல் பூத்துச் சிரிக்கும் ஏதோ ஒரு பூச்செடி, சல சலத்து ஓடும் ஒரு ஓடை, அடர் கானகம், யாரென்றே தெரியாமல் நம்மை வசீகரிக்கும் பேருந்தின் ஜன்னலோர ஒரு பெண்ணின் முகம், காதலிக்க விரும்பி காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு... மதிய உறக்கத்திற்குப் பின்னான ஒரு ஆழமான அழகிய சோகம்....அந்த சோகத்தை சூழ்ந்திருக்கும்  ஒரு அடர்த்தியான மெளனம்....

என்று எப்போதும் எங்கோ இழுத்துச் செல்லும் வாழ்வின் ரகசியங்களை மனதுக்குள் இருத்திக் கொண்டு நாம் என்ன வேண்டுமானலும் செய்யலாம்.... என்ன ஒன்று அதற்காக புறத்தொடர்பினை நாம் அறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். தத்துவங்களையும் கோட்பாடுகளையும், விவாதங்களையும் விட்டொழிக்கும் அந்தக் கணத்தில் காதல் ஒரு அரக்கனாய் விசுவரூபமெடுத்து நிற்பதை நம்மால் தவிர்க்க முடியாது ...

காதலால் நிறைந்து கிடக்கையில் சூரியனின் கதிர்களின் ஓரங்களில் கை தேய்த்து விளையாடலாம், மேகங்களின் மீது மல்லாந்து படுத்துக் கிடந்து வானத்தின் நீல நிறத்தில் நாம் கரைந்து போகலாம், மரங்களின் மீது ஒரு சிறு பூச்சியாய் ஊர்ந்து செல்லலாம், ஒரு வண்ணத்துப் பூச்சியாய் பூக்களை தொட்டும் தொடாமலும் மென்மையாய் புணர்ந்து சென்று ஜடங்களை ஜடங்கள் ஆளும் மானுட காமங்களுக்கு சவுக்கடிகள் கொடுத்து பாடங்கள் சொல்லலாம்...

ஏன்....யாருமற்ற சாலையில் நடந்து செல்கையில் தூரத்தில் பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களை உதடு குவித்து விசிலடித்து நம்முடன் கண்மாய்களுக்கு குளிக்க கூட்டிச் செல்லலாம்.... என்ன செய்ய முடியாது நம்மால்....? காதலாய் இருக்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...! வேண்டுமென்றால் யாரேனும் ஒரு பெண்ணைக் கூட லெளகீகமாய் காதலித்துக் கூட பார்க்கலாம்...., அவளின் கை பற்றி மென்மையாய் நம் ஸ்பரிசம் கொடுத்து அவளின் ஸ்பரிசத்தை உள்ளங்கை  இளஞ்சூட்டிலிருந்து கைப்பற்றி உயிருக்குள் மாற்றிக் கொண்டு அவளுக்கு கவிதைகள் கூட சொல்லலாம்...அட நிஜமாய் கவிதையாய் கவிதை சொல்லலாம்..

' தத்தித் தத்தி...
தானியம் பொறுக்க வரும் குருவியாய்
காதலில் திக்கித் திணறி எட்டிப் பார்க்கும் 
என் வார்த்தைகளைத்தான்
நீ கவிதை என்கிறாய்...! '

என்று நம் சுவாசத்தை வார்த்தைகளாக்கி காதலிக்காய் கடை விரிக்கலாம். ஆமாம் கனவுகள் சுகமானது, நிஜத்துக்கு எப்போதும் வெகு தூரமானது. நிஜம் ஒரு போதும் கனவின் பாதங்களைக் கூட தொட முடியாது. அது எப்போதும் எதார்த்தம் பேசும், விளக்கம் கேட்கும், அதற்கு எப்போதும் முரட்டுத் தனமான சாட்சிகளிலும், கரடு முரடான உண்மைகளிலுமே கவனமிருக்கும். மறந்தும் கூட புன்னைகைக்க தெரியாத நிஜத்தை விட எப்போதும் நேசிக்கும் கனவுகள் வசீகரமானவை.

கற்பனைக்கு அடுத்த வீடு கனவுகள் என்று கொண்டால் கற்பனையும் கனவும் சேர்ந்த கூட்டுக் கலவைதான் காதல். காதல் எப்போது நமக்குள் மிகையாகிறதோ அப்போதெல்லாம்  இப்படி கிறுக்கிக் கொண்டு கூட நாம் இருக்கலாம். 

யார் தடுப்பது? நமது எல்லைகளை தீர்மானிக்க  ஒரு இலக்கு இல்லாத போது நாம் மேற்கே பறந்து சட்டென்று தாழ இறங்கி, ஒடும் ஒரு நதியின் மீது பட்டும் படாமல் நடந்து, ஒரு கருநீலக் கடலின் ஆழத்தில் சென்று மண்ணள்ளி வந்து சுடு பாலைவனத்தில் தூவி, பாலைவனச் சூட்டை உடலில் ஏந்திச் சென்று ஒரு வயல் வெளியின் வரப்பின் மீது நின்று கொண்டு கூவும் குயிலை சண்டைக்கு இழுத்து விட்டு, ஊர்ந்து செல்லும் ஒரு சர்ப்பத்தின் முதுகிலேறி அதன் புற்றுக்குள் சென்று சுகமாய் முடங்கிக் கிடந்து அரை குறை தூக்கத்தில் அதிசமாய் ஒரு கனவு காணலாம்....

' அந்தக் கனவில்...
தேவதைகள் நம் காதுகளில்
கிசு கிசுப்பாய் ஏதேதோ..
ரகசியங்கள் சொல்லி முடிக்கையில்
காதலோடு அவற்றின் இடை வளைத்து
உதட்டில் முத்தமிட்டு 
உடம்பில் பரவும் மின்சாரத்தில்
ஒரு சில் வண்டாய் மாறி
ஏதோ ஒரு மலரில் தேன் குடித்து
கிறக்கத்தில் ஒரு 
புல் தரையில் தடுமாறி அலையலாம்....!

ஆமாம் நான் சொல்வது நிஜம்தான், கனவுகள் நிஜம்தான். நிஜத்தில் உங்களுக்கு பணம் தேவை, பொருள் தேவை, இடம் தேவை, அனுமதி தேவை, மனிதர்களின் அனுசரணை என்னும் அவஸ்தவைகள் எல்லாம் தேவை..! உங்களுக்கு திக்குகள் மறந்து உற்சாகமாய் அலைய விருப்பமா?இல்லை கடிகாரத்துக்குள் வாழ்க்கையை அடைத்து விட்டு கரன்சி நோட்டுக்களுக்காய் ஓடி ஓடி...  வாழ்க்கையை லயித்து வாழ்வது என்றால் என்னவென்று  தெரியாமல் மரிக்க விருப்பமா?

பொருள் ஈட்டுதலையும் புகழுக்காய் அலைதலையும் யார் வேண்டுமானலும் செய்யலாம். மீண்டும் மீண்டும் செய்யும் ஒரு வேலையை முழுக்கவனத்தோடு வலிகள் தாங்கி வரும் யாருமே வெற்றியாளர்கள்தான். அதற்கு ஒரு சூத்திரம் இருக்கிறது...,பல சூது வாதுகளும் இருக்கிறது, ஆனால் பணம் இருப்பவன் எல்லாம் சக மனிதரில் மேம்பட்டவன் என்றொரு எண்ணம் உங்களுக்கு இருக்குமெனில் அதை சட்டென்று இப்போதே  உடைத்துப் போடுங்கள்...

எத்தனை வேகமாய் ஓடினாலும் இயந்திரங்கள் எல்லாம் இயந்திரங்கள்தான், அட்டவணைக்குள் வாழ்க்கையை அடைத்துக் கொண்டு வெற்றியடைய வழி சொல்பவர்கள் எல்லாம் என்றாவது ஒரு நாள் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் ஒரு மரத்தை நலம் விசாரித்து இருப்பார்களா? அவர்கள் தோட்டத்துப் பூக்களோடு கை குலுக்கி இருப்பார்களா? பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாமல் வாழும் ஒரு வாழ்வியல் முறையில் இவர்கள் எப்படி இதை எல்லாம் செய்திருக்க முடியும்..?

ஓ...கடவுளே...என்னை ஒரு பட்டாம் பூச்சியாக்கி ஏதேனும் ஒரு வெட்டவெளியில் விட்டு விடு...., திசைகளை மறந்து விட்டு  நான் அங்குமெங்கும் திரிந்து விட்டு களைத்துப் போகையில் என் சிறகு  மடக்கி எங்கோ ஒரு இடத்தில் விழுந்து கிடக்கிறேன்...விழுந்த இடத்தில் மூச்சிறைக்க லயித்துக் கிடக்கிறேன்....!

கனவுகளை தொலைத்து விடாதீர்கள் மனிதர்களே...! அது மனித இருப்பின் சூட்சும சொர்க்கம்...! வார இறுதியிலாவது கனவுகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். கற்பனைகளில் ஒரு ஆடகவோ, மாடாகவோ, புல்லாகவோ, புழுவாகவோ, பூனையாகவோ சட்டென்று மாறுங்கள்..., யாரையேனும் காதலியுங்கள், காதலில் வெற்றி பெறுங்கள் அல்லது தோற்றுப் போங்கள்.., மனதால் அழுங்கள் அப்படி அழுததை எண்ணி சிரியுங்கள்...விடியலை அந்திக்கும் அந்தியை விடியலுக்கும்  மாற்றிப் போட்டு விளையாடுங்கள்...

மொத்தத்தில் நான் மனிதனே இல்லை என்று உரக்க கூவி கை விரித்து சிரியுங்கள்...! கனவுகளால் வாழ்க்கை ததும்பட்டும், கற்பனைகளில் லயித்து மெருகேற்றிக் கொள்ளும் மூளை எதார்த்ததில் வெற்றிகளைக் குவிக்கட்டும்...அப்படியாய் வெற்றியை குவிப்பது மீண்டும் கனவுகளில் லயிப்பதற்காய் இருக்கட்டும்.....

ஆமாம்....

கனவுகள்....மனித வாழ்க்கை என்னும் இருப்பின் சூட்சும சொர்க்கங்கள்...!


தேவா. S


2 comments:

சரண்யா said...

Amazing.......

Kousalya said...

//ஜடங்களை ஜடங்கள் ஆளும் மானுட காமங்களுக்கு சவுக்கடிகள் கொடுத்து பாடங்கள் சொல்லலாம்...//

//நாரைக் கூட்டங்களை உதடு குவித்து விசிலடித்து நம்முடன் கண்மாய்களுக்கு குளிக்க கூட்டிச் செல்லலாம்....//

ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்...நீங்கள் காணும்/காண சொல்லும் கனவுகள் அதி அற்புதம்!

ஆனால்,

இங்கே மனிதர்கள் காணும் கனவுகள் வேறு மாதிரியாக இருக்கிறதே...? அந்த கனவுகள் நிறைவேறவில்லையே என்று ஏங்கியே வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க மறந்து போய்விடும் அவலம் தானே இன்றைய மனிதனின் நிலை...!!

உங்களின் கனவுகள் இயந்திரத்தன உலகத்திற்கு மிக அவசியமானது. இத்தகைய கனவுகளை முதலில் கண்டு நம்மை புதுபித்து கொள்வோம்.(எனக்கும் சேர்த்து சொல்லிக்கிறேன்):)

"மொத்தத்தில் நான் மனிதனே இல்லை என்று உரக்க கூவி கை விரித்து சிரியுங்கள்"

உற்சாகமான மனநிலைக்கு அழைத்து செல்கிறது இந்த 'கனவுகள் ததும்பட்டும்' படைப்பு!!