Pages

Friday, March 18, 2011

சூரியன்....!பாலகுமாரனை புரட்டிக் கொண்டிருக்கும் போதே ஏதேதோ மாற்றங்கள் உள்ளுக்குள் எனக்கு நடைபெற்றது மறுக்கமுடியாத உண்மை. பலருக்கு அவரின் சமூக நாவல்களில் நாட்டம் அதிகமென்றால் நான் பாலகுமாரனை இறுக்கமாக பற்றிக் கொள்ள தொடங்கியது அவரின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு பிறகுதான். கல்லூரி காலங்களில் உடன் படிக்கும் பெண் தோழி ஒருவர் கொடுத்து இதையெல்லாம் படிக்க மாட்டியா நீன்னு கேட்டது கூட முக்கியமாக எனக்கு படவில்லை அந்த பெண் யாரோடும் பேசமாட்டாளா என்று கல்லூரியே சீப்பை எடுத்து சீவிக்கொண்டு அவள் பின்னால் அலைந்து கொண்டிருந்ததுதான் எனக்கு முக்கியமாகப்பட்டது.

புத்தகத்தை கையில் வாங்கிக்கொண்டு பாலாவின் புத்தகம் அது என்று சொல்வதை விட்டு விட்டு மாலினி கொடுத்தது அது என்ற பெருமையை என் தலையில் ஏற்றிக் கொண்டு கிட்டத்தட்ட எல்லோரிடமும் சொல்லி முடித்துவிட்டேன். புத்தகத்தை புரட்டவே இல்லை ஆனால் அன்றிலிருந்து பாலாவை படிக்கவேண்டும் என்ற ஒரு ஆவல் என்னுள் கிளைத்து விட்டிருந்தது. இது நடந்தது எனது கல்லூரி முதாலாம் ஆண்டின் இரண்டாம் செமஸ்டரில் அதற்கு முன்னால் தேவிபாலாவும், ராஜேஷ்குமாரும், பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் என்னை ஒரு ஏதேச்சதிகார அடக்குமுறையில் அடக்கி வைத்து இருந்தார்கள்

இப்போதூ ஆயிரம் தத்துவார்தமும் உலக திரைப்படமும் பார்த்து புளகாங்கிதம் அடைபவர்களுக்கு எல்லாம் ராஜேஷ் குமாரின் 'விவேக்கும் ரூபலாவும் ' பட்டுக்கோட்டையின் 'பரத் சுசியும் ' சுபாவின் ' நரேன் வைஜையந்தியும் ' தான் ஒரு காலத்தில் ஆதர்ஷன கனவு ஹீரோ ஹீரோயினாக இருந்திப்பார்கள். (உங்களுக்கு இல்லையா... அப்ப சரி...எனக்கு இருந்தார்கள்)

+2 படிக்கும் போது பட்டுக்கோட்டை தலையாரித் தெருவை தாண்டி வடசேரி ரோட்டில் எனக்கு கெமிஸ்ட்ரி மற்றும் கணக்கு ட்யூசன்....! தலையாரித் தெரிவில் அந்த பிரத்தியோக மெடிக்கல் ஷாப்பில் பட்டுக்கோட்டை பிரபாகர் அமர்ந்திருப்பார். அந்த மெடிக்கல் ஷாப் ஒட்டிதான் அவரின் வீடு. அடிக்கடி பார்ப்பேன்...ஏதாச்சும் எழுதிக்கிட்டு இருப்பாரா? என்று ஓராயிரம் தடவை ஆச்சர்யமாய் பார்ப்பேன்...ஆமாம்......அந்த மனிதர்தானே ஏ நாவல் டைம் என்ற ஒரு பாக்கெட் நாவலை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார் ஒரு காலத்தில் (இன்னமுமா....????? தெரியவில்லை)

சரி விடுங்க... தஞ்சாவூர் டிக்கெட் எடுத்துட்டு கன்னியாகுமரி போறதே நம்ம வேலையா போச்சு...ஹா...ஹா ஹா... நவ் பேக் டூ பாலகுமாரன்.

இரண்டாவது சூரியன் என்ற அந்த நாவலை அதான் பேர்னு நினைக்கிறேன் தலைப்பில் தவறு இருந்தால் சொல்லுங்க அதற்காக ஒரு மறுப்பு கடிதம் எல்லாம் எழுதி டோண்ட் வேஸ்ட் யுவர் வேலிட் டைம் ப்ளீஸ்...

ஊரேல்லாம் மாலினியிடம் வாங்கிய புத்தகத்தை தம்பட்டம் அடித்ததில் மாலினி என்னை கவனித்ததும் என்னிடம் மட்டும் ஏன் வாசிக்க கொடுக்க வேண்டும் என்று யோசித்து யோசித்து அது காதலாய்த்தான் இருக்க முடியும் என்று கணித்து முடித்திருந்தது அந்த 20 வயது மூளை. உற்சாகமான, மிகைப்பட்டவர்களின் வயிற்றெறிச்சல் கடந்த (அட...!!!!!!! பாலா புத்தகத்துக்காக இல்லை பாஸ்......மாலினி கொடுத்துச்சுல்ல அதான் வயிற்றெரிச்சல்... கண்டுக்காதீங்க) அந்த இரவில் பத்து மணி இரவு உணவு முடித்துவிட்டு அடுத்த நாள் கல்லூரி இருப்பதால் சக ரூம்மெட்ஸ் சீட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள்....!

என்னது கல்லூரி இருந்ததால சீட்டு விளையாடிட்டு இருந்தாங்களா? ஆச்சர்யமா கேக்குற உங்க மைண்ட் வாய்ஸ் அல்ரெடி எனக்கு ரீச் ஆகிடிச்சு பாஸ்.......ஆமாம்......அப்டி கல்லூரி இல்லேனா நெப்போலியனோ, ஜானிவாக்கரோ, வின்டேஜோ..........டீலிங்ல இருந்து இருக்கும்.(கல்லூரி மாணவர்கள் தண்ணியடிப்பது தவறு என்று கூறி கன்ன பின்னாவென டைட்டில் கார்ட் போட்டு எழுத விரும்புபவகள் ப்ளீஸ் கோ எகெட்.....எப்டி நம்ம ரோசனை....??)

சீட்டுக் கச்சேரியின் பந்தயம் ஒண்ணும் மகாபாரத தருமனைப் போல நாடு, வீடு பொண்டாட்டினு எல்லாம் ஒண்ணுமில்ல பாஸ்...தோத்துப் போனவங்க மிச்சமிருக்கிற எல்லோருக்கும் கீழ இருக்குற முத்து அண்ணன் கடையில் பாலும் பச்சை நாடா பழமும் வாங்கிக் கொடுக்கணும் அவ்ளோதான். ஆமாம் கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டத்திற்கு பின்னால் அல்கொய்தா மாதிரியா திட்டம் எல்லாம் இருக்கும்...?

அந்த வயதின் அதிக பட்ச சந்தோசமே...காதலும் கம்பீரமும்தான். அதை செஞ்சுட்டு போகட்டுமேன்னு எனக்கு ஒரு கருத்து இருக்கு....! ஏன்னா கல்லூரி முடிச்சு வெளில வந்த உடனேதான் சுடுதண்ணி ஊத்துன காக்கா மாதிரி சோம்பிப் போகுதே வாழ்க்கை.....

வேணா ஒண்ணே ஒண்ணு யோசிச்சுப் பாருங்க....! காலேஜ் டேய்ஸ்ன்னு இல்லை ஒரு குறிப்பிட்ட வயசு தாண்டி நல்லா சம்பாரிக்க ஆரம்பிச்சு, உலக விசயம் எல்லாம் கத்துகிட்டு வாழ்க்கை வாழும் போது.....பழைய துள்ளல் இருக்கா உங்ககிட்ட?

நெவர்....காலம் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிட்டு.....எல்லோருக்கும் செம ஹல்வா கொடுத்துட்டு போயிருக்கும். அப்போ சந்தோசமா இருந்தவங்க அதே நினைவுல 'ஜிந்தத்தா..ஜிந்தாத்தா.. ஜிந்தாத்ததா தா....'ன்னு ஒரு துள்ளலோட வாழ முயற்சி பண்ணிகிட்டு இருப்பாங்க. பேலன்ஸ் உள்ளவங்க எல்லாம்.....ரெம்ப சீரியஸா வாழ்க்கைய பிடிச்சுத் தொங்கிக்கிட்டு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் பேசிட்டு இருப்பாங்க...

ஏன்னா ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் வருஷம் வாழப்போறோம் பாருங்க...!(ஹா...ஹா.ஹா..என்ன ஒரு திமிருன்னு யாரோ ஒருத்தர் சொல்றது கேட்டுருச்சு....)

அச்சச்சோ........பேக் டூ மை காலேஜ் டேய்ஸ்....! எல்லோரும் சீட்டு விளையாடிக் கொண்டிருக்க.....டேபிளில் பாலகுமாரன் படபடத்து கொண்டிருந்தார் ஃபேன் காற்றில்.........ஒ.. மாலினி.......நீ கொடுத்த புத்தகம் அல்லவா...என்று காதல் கன்னா பின்னாவென்று தலைக்கேற...

' நான் வாசிக்க
நீ கொடுத்த புத்தகத்தில்
நம் வாழ்க்கை அல்லவா
ஒளிந்து கொண்டிருக்கிறது...'

அப்போ எல்லாம் வருச வருசம் டைரி .....(ம்ம்ம் ஏன் இப்பவும்தான்..இருக்கு ஆனா யாரு எழுதறது...???? ஹா ஹா..ஹா) டைரி வாங்கிடுவேன் 1996 களில் எல்லாம் டைரிதான் எனது வலைப்பூ.......அங்கே நானே வாசகன் அவ்வப்போது யாரேனும் சில முற்போக்கு நண்பர்களும், நான் கொஞ்சம் பந்தா பண்ண நினைக்கும் சில பெண்களும். டக்குனு எடுத்து ச்சும்மா எழுதிட்டே இருப்பேன். பாலா புத்தகத்தை படிக்கும் முன்னே ஒரு கவிதை எழுதி முடிச்சுட்டேன்..எம்புட்டு திமிரு இருக்கும் எனக்கு?

'எலேய்......ட்ரீம் அடிக்காம பொஸ்தகத்தை படிடா மாப்ள....மாலினி கொடுத்ததுல்ல.....ஹி... ஹி... ஹி' சீட்டு விளையாடிக் கொண்டிருந்த கல்லூரித்தோழனின் அடித்தொண்டையிலிருந்து வெளிவந்த குரல் என்னை கலைத்துப் போட்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள் ம்ம்ம்ம்ஹும் இல்லை பாஸ்....

' உன் நினைவென்னும்
பக்கங்களையே இன்னும்
புரட்டி முடிக்கவேயில்லை
நீ கொடுத்த புதக்த்தை
எப்படி பெண்ணே.....?

பேனா டைரியில் தில்லானா ஆடிக் கொண்டிருந்தது. அனேகமாக மாலினி அந்த நேரம் நல்லா வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு.....போர்வையை இழுத்துபோர்த்திக் கொண்டு தூங்கிதான் கொண்டிருப்பாள் ஆனால் நான் என்னவோ அவள் என்னை நினைத்து நான் என்ன செய்வேன் என்று யோசித்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றியது. ஆமாம் அப்படி யோசிக்க எனக்கு பிடித்து இருந்தது. எதார்த்தத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு கனவுகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதுதானே வாழ்க்கையின் சுவாராஷ்யமே..... கரெக்டா பாஸ்?

ஒரு வழியாக இரண்டு கவிதைகளையும் எக்கச்சக்கமான மாலினி பற்றியக் கனவுகளையும் என்னுள் தேக்கிக் கொண்டு என் வாழ்க்கையை மாற்றிப் போடப்போகும் பாலகுமாரனை காதலோடு என் கைகளுக்குள் கொண்டு வந்தேன். காதல் .........என்ற உணர்வை கொடுத்தது மாலினி ஆனால் அந்த காதல் பாலா மீது சீறிப் பாயப் போகிறது.........என்று அறியாமல்...எப்போதும் நான் வாசிக்குமொரு கதையைப் போல எடுத்து வரிகளுக்குள் என் விழிகளை செலுத்தினேன்...

' அது ஒரு காலை நேரம். காகம் ..கா...கா. என்று கத்தியது.... காகங்களில் பலவகை உண்டு..........' முதல் இரண்டு பக்கம் இப்படி காகம் பற்றி விவரித்த அந்த நாவலில் கதை எங்கே? என்று என் சராசரி மூளை என்னிடம் கேள்வி கேட்டு அடம் பிடித்து புத்தகத்தை மூடிவிடு என்று சொன்னது......

ஆமாம் மிகைப்பட்ட மனிதர்களுக்கு ' ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்........என்று ஆரம்பித்து கடைசியில் ஒரு முடிவு வேண்டும், சுபம் போடவேண்டும் மேலும் வரிசையாக நின்று கதாபாத்திரங்கள் கை கூப்பி வணக்கம் சொல்லவேண்டும்... அதுவும் சுபமான முடிவாய் இருக்கவேண்டும்....அதிலும் சோகமான முடிவென்றால் என்ன இப்படி முடிச்சுட்டாருன்னு ஒரு அங்காலாய்பு வேற...

எல்லாவற்றிலும் முடிவு தேவை என்று எதிர்பார்ப்பது மனித மனத்தின் இயல்பு ஆனால் அனுபவங்கள்தான் ரசனை மிகுந்தவை அது காதலாகட்டும், காமம் ஆகட்டும், வாழ்க்கையாகட்டும் முடிவின் மீது ஏன் கவனம் செலுத்தவேண்டும்? கீதை கூட கடமையைச் செய்.........என்று சொல்லி பலனை எதிர்பார்க்காதே என்று சொல்வதின் சாரம்....ச்ச்சுமா தண்ட கருமாந்திரமா வேலை செய் என்று அல்ல...

ஆனால் முடிவுகளின் மீது எப்போது கவனம் செலுத்தினாலும் ப்ரஸன்ட் போய்விடும் அங்கே ரசனையோடு ஈடுபட முடியாது...! அப்படித்தான் பாலாவும் இன்ன பிற படைப்பாளிகளும் கதை சொல்வதை விட...உங்களை வேறு ஒரு வாழ்க்கைத் தரத்துக்கு கண்டிப்பாக அழைத்துச் செல்வார்கள் வாசித்து முடித்தவுடன் அந்த கதை மறந்து போய் உங்களுக்குள் ஒரு பார்வை தெளிவு இருக்கும். இது ஒரு அசாதாரண புரிதல் அது புரிந்து விட்டால்....போதும். முடிவுகள் முக்கியமெனில் ஏன் முழு சினிமாவை பார்க்கவேன்டும்.... க்ளைமாக்ஸ் பார்த்து மேட்டர் என்னவென்று அறிய முடியாதா......

வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை சூசகமாய் உங்களின் நடு நெஞ்சினில் கத்தியை இறக்கி ஒரு அறுவை சிகிச்சை செய்வான் ஒரு படைப்பாளி அது உங்களுக்கே தெரியாது. பாலகுமாரன் போலத்தான் பாலுமகேந்திரா சாரும்....அவரின் கதை நேரம் பார்த்தவர்களுக்கும் தெரியும், படங்களைப் பார்ப்பவர்களுக்கும் புரியும். அந்த கதையோ அல்லது படமோ முடியும் போது வாழ்க்கை பற்றிய ஒரு புரிதல் கண்டிப்பாய் இருக்கும்...எனக்கு இருந்திருக்கிறது. உங்களுக்கு இருக்கலாம் இல்லாமல் போகலாம்....இது கூட என் அனுபவ பகிர்வாய் கொள்ளுங்கள்....

நான் வாசித்த பாலாவின் முதல் நாவலான.....இரண்டாவது சூரியனுக்குள் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தேன்... ! எத்தனை பக்கங்கள் வாசித்தேன் என்று கணக்கிடவில்லை.. ஆனால் வாசிப்பு ஈடுபாட்டுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது. முழு மூச்சில் முடித்த போது மணி 12:00 நள்ளிரவு.....!

நண்பர்கள் உறங்கி விட்டார்கள்....! மாலினி பற்றிய நினைவுகள் மறைந்து போய் பாலா பற்றிய யோசனை மிகுந்திருந்தது....! எப்படியெல்லாம் யோசிக்கிறாய் மனிதா நீ...?ஆச்சர்யம் தொண்டையடைத்தது!

ஏற்கனவே மாலினிக்காக எழுதிய கவிதையை கொஞ்சம் மாற்றியமைத்தேன்.....

' நான் வாசிக்க
கிடைத்த புத்தகத்தில்
என் வாழ்க்கை அல்லவா
ஒளிந்து கொண்டிருக்கிறது...'

கிறுக்கலாய் திருத்தி விட்டு அடுத்த கவிதைக்குள் நுழைந்தேன்....

உன் புத்தகத்தின்
பக்கங்களையெல்லாம் நான்...
புரட்ட புரட்ட...
உன் எழுத்துக்கள்
என்னை புரட்டுகிறதே
எப்படி பாலா...?

போர்வையை போர்த்திக் கொண்டு நான் நாளைக்கு வேறு பாலா புத்தகம் எடுத்து வாசிக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டிருந்த போதே உறக்கம் என்னை தர தரவென்று இழுத்து சென்று கொண்டிருந்தது.


தேவா. S


4 comments:

malgudi said...

//ஒரு குறிப்பிட்ட வயசு தாண்டி நல்லா சம்பாரிக்க ஆரம்பிச்சு, உலக விசயம் எல்லாம் கத்துகிட்டு வாழ்க்கை வாழும் போது.....பழைய துள்ளல் இருக்கா உங்ககிட்ட?//
நிச்சயமா இல்லை.சூப்பரா மேட்டர கொண்டுபோறீங்க.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Hey lovely written. My wishes.

சமுத்ரா said...

நல்ல நடை..பால குமாரனை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி..

ஹேமா said...

வாழ்வில் முடிவு என்று ஒன்றை முடிவெடுத்துவிட்டால் அடுத்த சுவாரஸ்யம் தொடராது.அடுத்து அடுத்து என்று தொடர்வதே வாழ்வின் சந்தோஷம்.அருமையாக எப்போதும்போல உங்கள் எழுத்து !