
கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் கடந்து நாம் பேசிக் கொண்டிருக்கும் போது கிளர்வில்லாத மனோநிலையில் இயல்பாகவே இருக்க முடிகிறது. சுற்றி நடக்கும் சமூக அவலங்கள் ஆக இருக்கட்டும், வாழ்க்கையின் போக்கில் மனிதர்களுக்கு நிகழும் அனுபவங்களாயிருக்கட்டும், அந்த அந்த கணத்தில் காணும் பொழுதில் ஒரு வித கையறு நிலைக்குப் போய் அங்கே இருந்து துளிர்க்கும் கோபம் சீற்றமாகி, சீற்றத்தில் என்ன செய்யலாமென உற்று நோக்க ஒரு ஆழ்ந்த அமைதியில் வாழ்க்கையில் நிகழும் பெரும்பாலான லாப நஷ்டங்களுக்கும், சந்தோச துக்கங்களும் மனித மனங்களில் உள்ள பிரச்சினைகளும் உற்று நோக்கும் கோணமுமே காரணம் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.
கடந்த வெள்ளியன்று உறவினர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று சாதாரணமாகக் கேட்டேன். நடுநிலையான எண்ணம் இருப்பவர்கள் தான் மிகுதியான குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாக்கு கேட்டு வருபவர்களிடம் உச்ச கட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறார்கள் என்றும் சொல்ல வெண்டும். இரண்டு பெரும் கட்சிக்காரர்களையும் சொந்த ஊரில் பகைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா என்ன?
பணம் மற்றும் வேறு ஏதேனும் உபகாரங்களை இந்தத் தேர்தலை முன்னிட்டு கொண்டு வருபவர்களை புறக்கணிக்கவும் பயமாயிருக்கிறது, வாங்கவும் மனசாட்சி இல்லை என்று சொன்ன எனது உறவினர், ஏதோ எவன் ஜெயிச்சு வந்தாலும் ஏதோ கொடுக்குறேன்னாச்சும் சொல்றாங்களே... ஏதோ கிடைச்ச வரைக்கும் லாபம். அவனுக சுருட்டுறதுல ஏதாச்சும் கொஞ்சம் கொடுத்தாதான் ஜெயிக்க முடியும்ன்றது கரண்ட் தமிழ்நாட்டு ட்ரண்ட் என்று சொல்லி முடித்தார்.
சமகாலத்தில் நேர்மையாய் வாழ்வது என்பது மிகப்பெரிய கொடுமையான விசயமாய் இருக்கும் போலிருக்கிறது. இலவசங்கள் ஏன் கொடுக்க கூடாது என்று சொல்கிறீர்கள்...? அவனுக எப்படி இருந்தாலும் பணம் சம்பாரிக்காமலா இருப்பானுக மக்களுக்கும் கொடுக்கட்டுமே என்ற மனோபாவத்தில் நிறைய பேர் நினைக்கிற நிலைமை வந்திருப்பது ஒரு வருத்தத்துக்குரிய விடயம்தான்.
ஒரு வட்டத்தை போட்டு அந்த வட்டத்தை சுற்றியே வரவேண்டும் என்று மூளைச் சலவை செய்யப்பட்டு அதற்கு மேல் யோசிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு அவல நிலையைக் காண முடிகிறது. தேர்தல் என்றால் என்ன? அரசு என்றால் யார்? ஏன் அவர்கள் வாக்கு கேட்கிறார்கள் அல்லது ஏன் நாம் வாக்களிக்க வேண்டும்? வாக்களிக்க ஏன் நமக்கு பணம் தரவேண்டும்? பணம் கொடுத்து இவர்கள் வாக்கு பெறுவதால் இவர்களுக்கு என்ன ஆதாயாம்?....
இலவசம் என்றால் அது யாருக்கு கொடுக்கப் படவேண்டும்? ஏன் கொடுக்கப்படவேண்டும்? இலவசம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரம் உயர பெறப்படும் பொருட்கள் எவ்விதம் உதவும்? எங்கே இருந்து இலவசங்கள் வருகின்றன? அதற்கான செலவு என்ன? எவ்வளவு வருமானம் மிதம் மிஞ்சி இருந்தால் இலவசங்கள் கொடுக்க ஒரு அரசால் முடியும்?
அவ்வளவு வருமானம் இருந்தால் ஏன் இன்னும் குடிசை வீடுகளும், அடுத்த வேளைக்கு சோறில்லா அன்றாடங்காய்ச்சிகளும் நமது நாட்டில் இருக்க வேண்டும்? கேவலமான குண்டும் குழியுமான சாலைகளும், சாக்கடைகளும் நிறைந்த ஒரு சுகாதாரக் கேடான சுற்றுப்புறம்களும் அப்படிப்பட்ட மித மிஞ்சிய வசதிகளால் சீரமைக்கப்பட கூடாதா?
அரசு பள்ளிகளின் தரம் எப்படி இருக்கிறது என்றும், தனியார் பள்ளிகளின் தரம் என்னவாயிருக்கிறது என்றும் அறிந்திருக்கும் நாம், மிதமிஞ்சிய பணம் வைத்துக் கொண்டு இலவசங்களை கொடுப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல் கட்சிகள்....
உலக தரத்தில் இலவசமாய் எம் பிள்ளைகளுக்கு கல்லூரி வரை படிப்பு சொல்லிக் கொடுக்க கூடாதா? எமது அறிவு விருத்தியில் எமது செழுமையில், எமது வருமானத்தில், நாங்களே வாங்கிக் கொள்ள மாட்டோமா மிக்ஸியையும், கிரண்டரரையும், இன்ன பிற பொருட்களையும்...ஏன் காலம் முழுதும் நீங்கள்தான் பிச்சையளிப்பீர்களா....?
ஒட்டிய வயிறோடு, பஞ்சடைத்த கண்களோடு நாங்கள் எல்லாம் ஐயா..சாமி... தரும துரை! பாத்து செய்ங்க மகராசா என்றே கத்திக் கொண்டேயிருக்க வேண்டுமா?
யோசித்துப் பாருங்கள் தோழர்களே!!!!
இன்றைக்கு அரசியலில் வேர்களைப் பரப்பி ஆலமரமாய் விரிந்து பரந்து நிற்பவர்களின் பூர்வீகமும், கடந்த பல ஆண்டுகளாக அவர்களின் வருமானங்களும் எப்படி வந்தன ? அந்த வருமானத்திலிருந்துதான் தழைத்ததா இவர்களின் ராஜ்யங்கள்? நம்மை எல்லாம் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கும் யுத்திதானே இலவச திட்டங்கள்? இலவசமாய் கொடுப்பதாக அறிவித்திருக்கும் பொருட்கள் எல்லாம்...ஆடம்பரப் பொருட்களா இல்லையா? உங்களின் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்?
நமது பிள்ளைகள் கல்வி கற்று அவர்களே சம்பாரிக்க வழி செய்தல் தேவையா? இல்லை....கிரைண்டரும் மிக்ஸியும் தேவையா?
இளம் பட்டதாரிகளுக்கு தொழில் செய்ய வங்கிக் கடன்கள் குறைந்த வட்டியில் தேவையா? இல்லை வாஷிங் மெசின் தேவையா?
எப்படி இப்படி ஒரு பகல் வேசம் போட்டு பகிரங்கமாக நம்மை ஏமாற்ற முடிந்தது? அல்லது நாம் எப்படி ஏமாறுகிறோம் என்று யோசித்துப் பார்த்தால் இவர்களின் தொடர்புகள் புரையோடிப் போன புண்ணாய் நமது வீடு வரைக்கும் வந்து சேர்ந்திருப்பதை உணர முடியும். நமது அண்ணண், மாமன், பெரியப்பன், சித்தப்பன், பொண்ணு கொடுத்தவன், எடுத்தவன், பங்காளி என்று நம்மை ஆட்டுவிக்கும் இரு கட்சிக்களுக்குள்ளும் நிரம்பிப் போயிருக்கின்றன நமது உறவுகளும் நட்புகளும்....
அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நமக்கு நல்லது, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நமக்கு நல்லது என்று பேசிப்பேசி நம் சுயநலத்துக்காக எதோ ஒரு கட்சியனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, வட்டத்தை பார்த்து அண்ணே என்றும், மாவட்டத்தைப் பார்த்து தலைவா என்றும் கட்சித் தலைவனைப் பார்த்து கடவுளே என்று கூப்பிட்டு கூப்பிட்டு வாழ்ந்தது போதும் தோழர்களே!!!!!
ஒரு வார்டு மெம்பருக்கு கூட பயந்து பயந்து வாழ்ந்து என்ன சாதித்திக் கிழித்து விட்டோம் இது வரைக்கும்...சொல்லுங்கள்....?
குறுக்குப் புத்தி உள்ளவனையும், அடுத்தவன் உழைப்பில் வாழ நினைப்வனையும், தலைக்கனம் கொண்டவனையும் அரசியல்வாதியாக்கி அழகு பார்த்து விட்டு படித்த இளைஞர்களும், நல்லவர்களும் அரசியல் ஒரு சாக்கடை எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டு இருக்கிறோம். சரியானவர்களால் நிரப்பப்படாத நாற்காலிகளை அயோக்கியர்கள் நிரப்பி விடுகிறார்கள். கொஞ்சம் நேர்மையாய் அரசியல் செய்ய நினைப்பவர்களையும் இப்போதிருக்கும் கட்சிகள் செய்ய விடுவதில்லை.....
இப்போது உள்ள தேர்தலை விடுங்கள்....அதற்கு அடுத்த ஐந்து வருடத்தையும் விட்டு விடுங்கள்....இன்னும் பத்து வருடம் கழித்து யார் நமது நாட்டை ஆளவேண்டும் என்று இப்போதே தீர்மானியுங்கள்....
நீங்கள் தீர்மானிக்க வேண்டிய 2021ன் தமிழக முதல்வர் இப்போது சூழ் நிலையின் காரணமாய் வளராத ஆர்ப்பாட்டங்கள் இல்லாதவராய் இருக்கலாம் ஆனால் அவரின் கொள்கைகள் தீர்மானமாய் இருக்கும் சமயச் சூழ்நிலைக்காக ஏதோ ஒரு கட்சிக்கு இப்போது ஆதரவைத் கொடுத்திருக்கலாம் ஆனால்....எல்லா பக்கமும் வியாபித்து தீமைகளை எரிக்கப்போகும் தலைமை அவருடையது என்று காலப்போக்கில் நீங்கள் உணரலாம்....
இரண்டு திராவிட கட்சிகள், மற்றும் காங்கிரஸ் ஸ்தாபனக் கட்சி தாண்டிய மாற்று அரசியல் கட்சிதான் தமிழ்நாட்டின் போக்கை மாற்றியமைக்கும் என்ற எண்ணத்தினை மனதினுள் கொள்ளுங்கள். இந்த தேர்தலில் ஒன்றும் செய்ய முடியாது இரண்டில் ஒன்றுதான் தேர்ந்தெடுத்தாக வேண்டிய சூழல் .. விருப்பத்தின் படி ஆலோசித்து வாக்களியுங்கள்.. ஆனால் மேலே சொன்ன எண்ணங்களை வெறுமனே உங்களுக்குள் எரியவிடுங்கள்...
தெரிந்தே தேர்ந்தெடுங்கள்! உங்களின் விழிப்புணர்வோடு..அடே.. முட்டாள்களா எங்களை இலவசங்கள் கொடுத்து ஆட்டு மந்தைகளாக்கவா பார்க்கிறீர்கள் என்ற வக்கிரத்தை நெஞ்சில் சுமந்த படி கடந்து வாருங்கள் இந்த கொடுமைகளை...
உற்று நோக்குங்கள், கொள்கை பிடிப்புள்ளவர்கள், தமிழ் நாட்டின் மீதும் தமிழன் மீதும் தீரா பற்றுள்ளவர்கள் எந்த பக்கம் இருக்கிறார்கள் என்று கணித்துப் போடுங்கள். சூழ்நிலையின் காரணமாய் ஏதோ ஒரு பக்கம் அவர்கள் இருக்கலாம்....அப்படியாக கணித்து வாக்களியுங்கள்.
இவ்வளவு நாள் ஏதோ ஒரு மனமயக்கத்தில் செய்த தவறை இன்று தெளிவாக உணர்ந்தே செய்வோம். 50 ஆண்டுக்கும் மேலான காயம் அல்லவா...அத்தனை சீக்கிரம் சரிசெய்ய முடியாது அதற்கு இன்னும் ஒரு 50 வருடமாவது ஆகலாம் தெளிவான நிலையை அடைய..ஆனால் விடாமல் வெஞ்சினத்தை மனதில் கொள்ளுங்கள்.
ம்ம்ம்ம் என் கோபத்தை எல்லாம் எழுத்தாக்கிக் கொண்டே இருந்தால் சீனப்பெருஞ்சுவராய் நீண்டு கொண்டே இருக்கும் வார்த்தைகள். நேற்றே வீட்டுக்குப் போன் செய்து வெளிநாட்டில் இருப்பதால் என்னால் வாக்களிக்க இயலாது என்பதை தெளிவாக சம்பந்தப்பட்ட துறையிடம் பதிந்து விடும் படி அப்பாவிடம் சொன்னேன்...ஒரு கள்ள ஓட்டாவது தவிர்க்கப்படுமே...(என்னாதான் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்தாலும் எல்லா கலப்படமும் செய்ய அறிந்தவர்கள் ஏராளம்தானே!!!!)
வெளிநாட்டில் இருந்து கொண்டு வாக்களிக்க இயலாதவர்களும், உள்ளூரில் தவிர்க்க முடியாத சூழ் நிலையால் வாக்களிக்க முடியாதவர்களும்...அந்த விபரத்தினை பதிந்து விடுங்கள்.
புரட்சி வெடிப்பது...எங்கே...? எப்படி ? என்ற சந்தேகமே வேண்டாம்..........உங்களுக்குள்ளும் எனக்குள்ளும், இன்னும் நம் நண்பர்களுக்குள்ளும் மூளும் தீ... அழித்துப் போட்டே தீரும் தீமைகளை....! நமது சந்ததிகளாவது ஒரு நேர்மையான, சுகாதரமான, தெளிவான நாட்டில் வாழ வழி செய்வோம்!!!!
மறக்காமல் வாக்களியுங்கள்....விழிப்புணர்வோடு...!
தேவா. S
Comments
முதல்ல இந்த எண்ணம் மாறனும் அண்ணா .. அப்பத்தான் நாம எதிர்பாக்குற நாள் வரும் ..
எவ்ளோ அர்த்தம் பொதிந்த படம், செலக்ட் பண்ணி இருக்கீங்க..
...அந்த பெரியவர் கண்ணைச் சுருக்கி, தூரமாய் ஏதோ தேடுவது போல இருக்குங்க.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை.. எந்த எழுச்சியும் தெரியலன்னு சொல்ற மாதிரி இருக்குங்க.
வாவ்... இன்றைய அரசியலால், மூத்த தலை முறைக்கும், இளைய தலை முறைக்கும்... எந்த பிரயோஜனமும் இல்லைங்கறத... உண்மையில் கிரேட்..!
.....விழிப்புணர்வோட வாக்களிக்கச் சொன்னது நல்ல விஷயம் தான்.
...அஞ்சு காசுக்கு பிரயோஜனம் இல்லாதவன் அண்ணே
...தகுதி இல்லாதவன் தலைவன்
...கண்ணெதிரில் கொள்ளை அடிப்பவன் கடவுள்
........வாழ்க்கையை குறித்த நல்ல புரிதல் வந்து இருப்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்! ஆரம்பத்தில் உள்ள எரிமலை பதிவுகளும், இப்பொழுது உள்ள ஆத்ம புரிதலுடன் உள்ள பதிவுகளும் நன்கு விளக்குகின்றன.
....rightly said!