
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலாக இருக்கட்டும், அல்லது பிள்ளையார் பட்டி கோவிலாகட்டும் அல்லது காரைக்குடி கொப்புடையம்மன் கோவிலாகட்டும், இல்லை கீழச்சேவல் பட்டி சிவன் கோவிலாகட்டும் கல்லூரி விடுமுறையில் கண்டிப்பாக விடியற்காலையில் அங்கே சென்று விடுவேன்.
கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஈர்ப்பு எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது சிறுவயது முதலாகவே, அதுவும் தனியாக கோவிலுக்குச் செல்வதில் எப்போதும் ஒரு லயிப்பும் சந்தோசமும் எனக்கு கிடைத்திருக்கிறது. கோவிலின் பிரகாரத்துக்குள் செல்வதற்கு முன்னாலேயே கொடி மரத்தை வணங்கிவிட்டு வாசல் தாண்டி உள்ளே செல்லும் போது உள்ளே இருந்து வீசும் பழைமையின் வாசமும் பிரமாண்டமான தூண்களுக்கு நடுவே பரவிக்கிடக்கும் இருளும், மனிதர்கள் உரக்க உரக்க பேசுவது கருங்கல் பாறைகளில் பட்டு எதிரொலித்து ஒரு மனக்கிலேசத்தை கொடுப்பதும் தவிர்க்க இயலாதது.
பெரும்பாலும் புராதனமான கோவில்களுக்குள் செல்லும் போது அங்கே காலங்கள் கடந்து வந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களின் மன அதிர்களையும் சேர்ந்தே அனுபவித்திருக்கிறேன். கோவில் என்பது ஆழ்மனதினுள் நன்றாகவே பதிந்து போயிருப்பதனாலோ என்னவோ அங்கே ஒரு அதீத பிடிப்பும் விருப்பமும் இயல்பாகவே எனக்குள் நிறைந்து போயிருக்கிறது.
குரோமோசோம்களாய் எனக்குள் பரவி குணமாய் என்னை இயக்கும் ஒரு சக்தியா? இல்லை பிறந்தது முதல் ஓங்கி ஓங்கி ...ஓம் நமசிவாயா என்று தொழுது திருநீறு பட்டையாய் அணிந்து பழகிய பழக்கமா? யார்தான் அறிவார் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்குக் பின்னால் இருக்கும் சூட்சுமங்களை....
கோவில்களின் உள்ளே சென்று திரும்பும் போது எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம்.... 'மனசுக்கு நிம்மதியா இருந்துச்சுல்ல' என்று.... ஆனால்.. அந்த மன நிம்மதியின் பின்னால் என்ன இருக்கும் என்று ஆராய தொடங்கினேன் நான்.
கோவிலினுள் செல்லும் போது ஒரு உணர்வாய்...நிலையாமை வந்து மனதில் அப்பி கொண்டு விடுகிறது. அந்த நிலையாமையில் எல்லாமே மாயை என்ற ஒரு உணர்வு நடனமாட சுற்றியிருக்கும் எல்லா பிரச்சினைகளும் போலியானவை என்ற எண்ணம் உதிக்க பிரச்சினைகள் நம்மை விட்டு பட்டுப்போய் உதிர்ந்து போவதாய் தோன்றும் அந்த கணத்தில் ஒரு வித அலட்சியம் வந்து விடுகிறது வாழ்க்கைப் பற்றி அதன் பின் இருக்கும் மனோநிலை தெளிவான நிலையில் இருப்பதால் கிடைக்கும் ஒரு உணர்வு இந்த நிம்மதி. மேலும் ஏதோ ஒரு ஒத்ததிர்வு கோவில்கள் முழுதும் பரவி நமது உடலை சுற்றியிருக்கும் அலைகளை சமப்படுத்தி புத்துணர்வு அளித்தலாலும் இந்த நிம்மதி கிடப்பதாக உணர்ந்திருக்கிறேன்.
மற்றுமொரு மகத்தான விசயமுமிருக்கிறது, கோவினுள் இருக்கும் நேரங்களில் வேறு மனிதர்கள் நம்மை ஆளுமை செய்வது இல்லை. நாமும் யாருடனும் பேசுவதும் இல்லை. வேறு மனிதர்கள் பெரும்பாலும் யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்கள் நம்மோடு தொடர்பு கொள்ளும் போதும் நாம் அவர்களுடம் உரையாடும் போதும் தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் தெளிவுகளையும், குழப்பங்களையும் சிக்கல்களையும் நமக்குள் பரிமாற்றம் செய்து விடுகிறார்கள்.
தெளிவானவர்களின் கூட்டு எப்போதும் மனதுக்கு ஒரு சந்துஷ்டியை தரும் மாறாக எப்போதும் தன்னை பற்றி எண்ணாமல் அடுத்தவரையே கவனித்துக் கொண்டு அவர்களைப் பற்றிய விசய நாட்டங்களை எடுத்துச் சென்று பரப்புபவர்கள் நம்மிடமும் குழப்பங்களை விதைத்தே செல்கிறார்கள்.
இதை விட்டு வெளியே வருவதும் அவர்கள் பரப்பிய நினைவுகளை அழிப்பதுமே பெரும்பாடாக நமக்கு இருக்கிறது. விழிப்புணர்வோடு இருக்கும் போதே இத்தனை மாற்றங்களை அடுத்தவர் நம் மீது இறக்கிவிடும்போது...விழிப்புணர்வு இல்லாதவர்களின் கதி கிட்டதட்ட மன நலம் குன்றிய நிலைக்குப் போய்.....குழம்பிக் கொண்டேதானே இருக்கும்...?
கோவில்கள் என்பது மதத்திற்கும், கடவுளுக்குமான இடமாக பார்க்கப்பட்டு அப்படியே பழகியும் விட்டோம், ஆனால் கோவில் ஒரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு. புவியியல் அமைப்பின் படி இந்த மண்ணை சேர்ந்த மனிதர்களின் மனோநிலையை சீரமைக்க இந்த ஒரு அமைப்பு தேவை என்று சூட்சுமமாய் உணர்ந்து வடிவமைக்கப்பட்ட அற்புதமான ஒரு மனோதத்துவ பயிற்சிக் கூடம்தான் கோவில்கள்.
மூடநம்பிக்கைகள் கோவிலுக்குள் மதத்தின் பேரால் நுழையும் முன்னால், கோவில்தான் நமது பலமாயிருந்திருக்கிறது. சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் நாம் அங்கேதான் ஓடியிருக்கிறோம். கலை மற்றும் இலக்கிய கூடமாகவும், சமூக கூடமாகவும் கோவில்கள்தான் இருந்திருக்கின்றன. புயல், வெள்ளம் என்ற இயற்கை சீரழிவு சமயத்தில் மனிதர்களை காக்கும் இடமாகவும் இருந்திருக்கின்றன. பிரமாண்டமான கோவில்களுக்குள் செல்லும் போது நான் எல்லாம் சிறு துரும்பு என்ற எண்ணம் வருவதற்காகவும், இந்த பிரபஞ்சம் பிரமாண்டமானது என்று உணர்த்தவும் விரிந்து பரந்து கோவில்கள் கட்டப்பட்டன.
இன்றைய மொபைல் சிம்கார்டுகளுக்குள் இருக்கும் பஞ்சலோகம்தான் கோவிலின் கருவறைக்கு மேலே இருக்கும் கும்ப கலசங்களுக்குள் இருக்கிறது என்று சிம்கார்டினை பகுத்துப்பார்த்த எனது நண்பர் வேதியலார் சசி சொன்னபோது கொஞ்சம் ஸ்தம்பித்துதான் போனேன்!
இந்த சிம்கார்டினுள் இருக்கும் உலோகம் ஒருவித அலைக்கற்றையை பெற்று ஒலியாய் மாற்றிக் கொடுக்கும் வல்லமை கொண்டது என்றால், கோவில் கும்ப கலசங்கள் எந்த மாதிரியான அலைக்கற்றையை பெற்று அதை எந்த வடிவத்தில் மனிதர்களுக்கு கொடுக்கிறது? அந்த ஒத்ததிர்வுதான் மன நிம்மதியா? தெளிவா? தியானமா? ஞானமா? கடவுளா? யார் இந்த தொழில் நுட்பத்தை வடிவமைத்தது அதற்கு ஆகம விதிகள் என்று பெயரிட்டு வைத்தது? கல்லை வணங்கு..இது கடவுள் என்று ஒரு கற்பிதத்தை கொடுத்ததற்கும் பின்னால் மறைந்து கிடக்கும் உண்மைகள் என்ன?
கேள்விகளாய் விரிந்து கிடக்கும் என் எண்ணங்கள் தோன்றியது எல்லாமே கோவில்களில்தான். மனிதர்களை ஒன்று கூட்டும் ஒரு மையமாய் திருவிழாக்களும், ஒற்றுமையை வெளிக்காட்ட தேர் இழுத்தலும் என்று ஒரு சூட்சும அறிவோடு சென்ற எம் கூட்டத்தின் வழியில் தன்னை வதைத்து இறை வழிபாடு செய்யும் ஒரு மூடத்தனம் எப்படி வந்தது என்ற கேள்வியும் என்னை சூழாமல் இல்லை. சங்க காலத்தில் அலகு குத்தியதற்கும் பறவைக் காவடி எடுத்ததற்கும், தீ மிதித்ததற்கும் ஏதேனும் சான்றுகள் பகிர முடியுமா? இல்லையே.... ! இடையில் வந்த மனப்புற்று எங்கே இருந்து வந்தது? யார் விதைத்தது....?
குழப்பங்கள் தனியாக இருந்தால் அடையாளம் கண்டுவிடுவோம் என்று திட்டமிட்டு சரிகளுக்குள் பொய்களை சரி போல நிரப்பிவிட்டனர். அதன் கோளாறுதான் இல்லாத கடவுளை எப்போதே நாம் அறிந்திருந்த போதிலும் மீண்டும் நமக்கு அறிவு கொடுக்க பகுத்தறிவுகள் என்ற பெயரிட்டுக் கொண்டு மனிதர்கள் வரவேண்டியிருந்தது.
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய்கலந்தவாறு பாவிகாள்! அறிகிலீர்
ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலனென்று சொல்லுவீர், கனாவிலும் அஃதில்லையே!
மேலே இருப்பதை சொல்லியிருப்பது சிவவாக்கிய சித்தர்; சொல்லிய காலம் தொன்மையானது. இப்போது சொல்லுங்கள் பகுத்தறிவு இல்லாமலா பாதைகள் வகுத்தார்கள் நமக்கு? காலத்தின் போக்கில் வந்து சூழ்ந்து விட்ட தீமைகளை மதம் என்ற பார்வையால் பார்த்து அங்கே இருக்கும் குற்றங்களே கண்களை மறைக்க நமது தொன்மையான அற்புதங்களை உணர முடியாமலேயே போகிறது.
உண்மையில் நம்மிடம் மதம் என்ற ஒன்றே இல்லை. இது ஒரு நெறிமுறை. அர்த்தங்கள் பொதிந்த வாழ்க்கையை அறிய தொகுக்கப்பட்ட வழிமுறை. கோவில்களுக்குச் செல்வது மூடநம்பிக்கை என்று எண்ணுவது சரியான தெளிவுகள் இல்லாததால் தான், என்னைக் கேட்டால் தெளிவில்லாமல் இப்படி நம்புவதுதான் மூட நம்பிக்கை.
அறிவியல் சொல்ல முயற்சிப்பதை எல்லாம் பாடல்களாக ஆக்கிச் சென்று விட்டனர் பல காலங்களுக்கும் முன்னால்? சிந்தித்து அறிவால்தான் கைக்கொள்ள வேண்டும் சூட்சும நிகழ்வுகளை....யாரும் யாருக்கும் காட்டலாகாது. கோவில்கள் எல்லாம் அற்புதமான சூட்சுமங்கள் நிறைந்த பொக்கிசங்கள்.
நவீனத்தை அங்கே புகுத்தி வேறு வேறு ரீதியில் கட்டமைக்கப்படும் நவீன கோவில்களில் கட்டிட தொழிநுட்பம் தாண்டிய பண்டைய சூட்சும நுட்பங்கள் இருக்குமா என்பது ஐயமே?
அறிவின் தெளிவோடு செல்லும் வாழ்க்கை நகர்வுக்கு யார்தான் தேவை? தேடலாகவே தொடரும் பயணத்தில்...கிடைப்பது எல்லாம் தெளிவுகள்தானே?
தேவா. S
Comments
வழக்கம் போல ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணா. ஆனா இந்த நிம்மதியா இருந்துச்சுல்ல அப்படிங்கிறது கொஞ்சம் சில சமயங்களில் பொய் ஆகிவிடுகிறது.
காரணம் என்னன்னா ஒரு அழகான பொண்ணப் பார்த்தோம்னா அப்புறம் பெரும்பாலும் சாமி கும்பிடறதே மறந்திட்டு அந்தப் பொண்ண பாக்க ஆரம்பிச்சிடுவோம். அப்புறம் எங்க நிம்மதி இருக்கும் ?
.....தெளிவுகள் என்று தெளிவாகவே சொல்லலாமே... எதற்கு கேள்விகுறி? :-)
ஆச்சரியமாக இருக்கிறது. 'கோவிலுக்கு சென்று வந்தால் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது' என்பது போன்ற வார்த்தைகள் வெறும் பேச்சுக்கள் அல்லவே...நானும் உணர்ந்திருக்கிறேன், இதற்கு என்ன காரணம் என்று யோசித்தது இல்லை.
நம் முன்னோர்கள் எல்லாவற்றிலும் ஒரு விந்தையை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று எண்ணும் போது பிரமிப்பையும் அதே நேரம் இதை உணராமல், புரிந்து தெளிந்து கொள்ளாமல் போனதிற்கு காரணம் எது அல்லது யார் என்ற கேள்வி எனக்கும் எழுகிறது.
//பகுத்தறிவு இல்லாமலா பாதைகள் வகுத்தார்கள் நமக்கு//
ஒருத்தர் இல்லை என்று சொன்னால் ஆமாம் இல்லை என்று சொல்ல மட்டுமே பழகிக்கொண்ட மனித கூட்டம் இந்த கேள்விக்கும் ஆமாம் இல்லை என்றே சொல்லும்.
தொன்மையை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம் அல்லது
இருந்ததை மீண்டும் தேட முயல்கிறோம் வேறு என்ன சொல்வது ?
கோவில்களின் மாண்பை குலைத்தது யார் என்று பொதுவில் விவாதிக்ககூட வகையற்று போன 'நாமே தொலைந்தவர்கள்...!'
அற்புத படைப்பு தேவா !!
பாராட்டுகள் !!
தொலைந்துபோனவர்கள்
உண்மை. சில விஷயங்களின் மேல் நமக்கு ஏன் அப்படி ஒரு ஈர்ப்பு என்று சொல்ல முடியாது
கோவிலுக்குள் ஏற்படும் உணர்வை சொல்லவும் தெரியாது. அது ஒரு தெய்வ தன்மை
தெரியாத வரை தான் சூட்சமம்
நல்ல பதிவுங்க தேவரே..