Skip to main content

தேடல்...30.04.2011

















ஒரு மழை அடித்துப் பெய்து முடித்த பின் பளீச் சென்று கழுவி விட்ட தார்ச் சாலைகள் போலவும், கரும் மேகங்கள் கலைந்த வானம் போலவும் இருக்கிறது மனது. கடந்த மூன்று மாதங்களாக இந்த ஒரு மனோநிலைக்கு நான் வரமுடியாமல் போனதற்கு காரணம் புறச்சூழல், உணவு மற்றும் ஒரு அலட்சியம்.

எப்போது எல்லாம் அகங்காரம் அற்றுப் போய் நான் நிற்கிறேனோ அப்போது எல்லாம் இப்படி ஒரு நிலை எய்துவதும் பல நாட்கள் இப்படியே நீடிப்பதும், எப்போது மாறியது என்று தெரியாமல் ஒரு வித இறுக்கம் உள்ளே பரவிப் போவதும், ஐந்து கால் (அது என்ன ஐந்து கால்? மனதுக்கு ஆயிரம் கால் கூட இருக்கும்) பாய்ச்சலில் மனம் புறம் நோக்கி ஓடுவதும் நடந்தேறிப் போகிறது.

மனித மூளை வற்றாத ஜீவ நதி, சரியான விகிதத்தில் ஆக்ஸிஜன் செல்லும் போது சரியான நினைவலைகளை அது கிளறி விடுகிறது. சரியான அளவில் ஆக்ஸிஜன் செல்ல சரியான அளவில் சுவாசிக்க வேண்டும். சரியான அளவில் சுவாசிக்க புறச்சூழலின் தாக்கம் சரியாக இருக்க வேண்டும். மனம் சம நிலையில் இருக்க வேண்டும். எல்லோரும் சுவாசித்துக் கொண்டுதான் இருப்போம் ஆனால் சுவாசிக்கும் வேகம் சீராயிருக்காது.

அகங்காரம் உள்ள மனம் கொண்டவர்களின் உடலில் எப்போதும் உஷ்ணம் கூடுதலாகவே இருக்கிறது. இந்த உஷ்ணத்தின் காரணமாக சுவாசிக்கும் வேகம் அதீத கதியில் நடக்கும் அப்போது சுவாசிக்கும் பிராணானும் உள்ளே இழுத்த வேகத்தில் சூடாக உள்ளே செல்கிறது. உஷ்ணமான பிராணன் எப்போதும் ஒருவித எரிச்சலுடன் எண்ணங்களை பரவ விடுகிறது.

இன்னும் சிலர் ஆழ சுவாசிப்பதே இல்லை மேலோட்டமாகவே சுவாசித்து குறைந்த அளவே ஆக்ஸிஜனை உள்ளே அனுப்பி நினைவுகளின் வலுவும் குறைந்தே இருக்கிறது. சுவாசம் சீராக இருக்க புத்தி குளுமையாய் இருக்கிறது. பதட்டமில்லாத மூளையில் இருந்து தெளிவான எண்ணங்கள் பிறக்கின்றன. ஒரு பிரச்சினையும், அதன் மூலமும் அதன் தீர்வுகளும் தெளிவாகவே தெரிகின்றன.

தற்போது நான் கண்டு உணர்ந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமுதாய சீர்கேடு என்னவென்றால் இணைய உலகம் என்ற மாயாலோகத்தில் மனிதர்களைப் பற்றியும் சூழலைப் பற்றியும் கற்பனையிலேயே கணித்து, கற்பனையில் ஒரு உலகம் தோன்ற அதில் லயித்து அங்கே இருந்து முடிவுகளை மிகைப்பட்ட மனிதர்கள் எடுக்கிறார்கள்.

இந்த விர்ச்சுவல் நினைவுகள் அத்தனையும் பொய்யானது என்பதை என்னால் அறுதியிட்டு கூற முடியும். இப்படி கற்பனையில் ஒரு உலகம், அங்கே அரசன், அங்கே ஞானி, அங்கே ஒரு விகடகவி, அங்கே ஒரு அமைச்சர், அங்கே ஒரு இளவரசன், இளவரசி, கதாநாயகன், கதாநாயகி, காதலி, ரெளடி, வில்லன், பொறுக்கி என்று ஒரு பெரிய மாயா பஜாரே இங்கே நடக்கிறது.

எதிரில் இருக்கும் சகோதரனும், சகோதரியும் பிள்ளைகளும், கணவனும், மனைவியும் ஆபத்தான சூழ்நிலைகளும், சந்தோச சூழ்நிலைகளும் இந்த கனவு உலகத்தின் முன்னால் வெறும் புள்ளியாய் இரண்டாம் தர வாழ்க்கையாய் போய் விடுகிறது. பொய்யின் முன்னால் எதார்த்தம் மண்டியிட நமக்கே தெரியாத ஒரு புற்று நோய் நிஜ வாழ்க்கையை அரிக்கத் தொடங்கியிருப்பதை உடனடியாக உணர முடியாது. ஆனால் இதன் விளைவுகள் கடுமையானவை என்பதை என் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

கற்பனையில் கவிதை படைக்கலாம், கதை எழுதலாம், கட்டுரை எழுதலாம் ஆனால் வாழ முடியாது என் சொந்தங்களே!!!! வாழ்க்கையின் எதார்த்த பக்கங்களில் கற்பனைக்கு வேலையே இல்லை. மன விவரித்தல்களில் அகப்பட்டு எங்கோ சென்று விடாதீர்கள்...இங்கே நாம் நம்பிக்க் கொண்டிருக்கும் சில அங்கீகாரங்கள் எல்லாமே வெற்று ஜோடனைகள்.....!

நமது நிகழ்காலம் மட்டுமே நிஜம். இங்கே நேரம் போக பொழுது போக்குவது தவறல்ல..ஆனால் இதை வாழ்க்கையாக பார்க்க ஒரு பக்குவமும் உயர்தர புரிதலும், அனுபவமும் தேவை. நாகரீக உலகின் ஒரு ஒப்பற்ற வெளியில் இருக்கும் ஒரு அபாய புள்ளியினை உற்று நோக்க மறவாதீர்கள்.

பாருங்களேன் நான் ஏதோ சொல்ல எங்கோ வந்து விட்டேன் எப்படியிருந்தாலும் ஏதோ ஒன்று மனதில் அழுந்திக் கிடந்தது அதை கூறிவிட்டேன்.

அதே போல ஒரு படைப்பாளியைப் பற்றியும் அதீத கற்பனையும் கொள்ளாதீர்கள் படைப்பினை ரசிக்கும் போது அதை படைப்பாளின் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி விடாதீர்கள். குறிப்பாக ஒரு காதல் கவிதை எழுத வேன்டுமெனில் நான் அதற்குண்டான மனோநிலைக்குப் போனால் போதும், ஒரு பாடலோ, ஒரு படமோ, ஒரு கவிதையோ அல்லது கடந்த கால நிகழ்வோ இத்தைகைய சிந்தனைக்கு உரமாய் போய்விடுகிறது. இங்கேதான் கற்பனை சிறகை விரித்து ஏகாந்த வானில் பறக்க முடியும். ஒரு காதல் கவிதையை ஏக்கத்தில் எழுதி விடுவதாலேயே அவன் காதல் ஏக்கத்தில் இருக்கிறான் என்ற எண்ணமும் தவறே...

நீங்கள் என்னை சக்கரவர்த்தியாக பாவித்தீர்களேயானால் சீக்கிரமே என்னை பிச்சைக்காரன் என்று கூறப் போகிறீர்கள். என்னை பிச்சைக்காரன் என்று நினைத்தால் என்னை சக்கரவர்த்தியாக பார்க்கப் போகிறீர்கள். ஆகையால் எந்த அனுமானமும் கொள்ளாதீர்கள். கட்டுரைக்குள் ஏதேனும் கருத்து கிடைத்தால் அதில் ஏதேனும் அர்த்தம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் நேரே குப்பைத் தொட்டிக்கு கட்டுரையை அனுப்பி விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். படைப்பாளியோடு தொடர்பே படுத்தாதீர்கள்!

ஆன்மீகத் தேடலில், அந்த ஆசையில் எனக்கு கிடைக்க வேண்டிய நான் அடைய வேண்டி வழிமுறைகளை நான் எழுத்தாக்கி இருக்கலாம். நான் பயிற்சி எடுக்கும் களமாக வலைப்பூ இருக்கலாம். முழுமையை நோக்கிய எனது பயணத்தில் இவை எல்லாம் எனக்கு மைல் கற்கள். நான் முழுமையாயிருந்தால் ஏன் கணினையைத் தட்டிக் கொண்டு, கதையும், கவிதையும் எழுதிக் கொண்டு இருக்கப் போகிறேன்?

எவ்வளவு காலம் இவையெல்லாம் தொடருவேன் என்று எனக்குத் தெரியாது ஆனால் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் கொடுப்பதிலும், அதிக வாசிப்பாளனைப் பெறுவதிலும் இல்லை என் திருப்தி....! மொத்தமாய் எனக்கு போதும் என்று தோன்றும் அன்று திரும்பிக் கூடப் பார்க்காமல் இவை எல்லாம் விட்டு போகத்தான் போகிறேன்.

அதுவரையில் அது நிகழ காத்திருக்கிறேன்!

சீக்கிரம் வா மழையே
உப்புக் கல்லாய் இருக்கும்
என்னை கரைத்தே ...
போட்டு விடு!


தேவா. S

Comments

உண்மையான தேடல் அண்ணா! உண்மைலேயே இங்க இருக்கிற , கிடைக்கிற பாராட்டுக்களும் , புகழ்ச்சிகளும் மாயையே!
ஆனா இங்கயும் நான் பெரிசு , நீ பெரிசுனு சண்டை ! கொடுமை.

அதே மாதிரி ஒரு படைப்பாளிய அவரோட எழுத்த வச்சு , நீங்க சொன்னது மாதிரி காதல் கதை எழுதினா காதலிக்கிறான் அப்படின்னு நினைப்பதெல்லாம் சரியில்லைனுதான் நினைக்கிறேன்.. அப்படிப்பார்த்தா கிரைம் நாவல் எழுதுறவங்க தினமும் கொலை பண்ணிட்டா இருக்காங்க ?

மொத்தத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கே இணையம்! அத சரியா புரிஞ்சிகிட்டா சண்டைகளும் , நீ பெரிசு நான் பெரிசுன்கிற விவாதங்களும் வராது :-))
//அதுவரையில் அது நிகழ காத்திருக்கிறேன்!//

இதே மனநிலையில் நானும்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...