
வெகுதூரம் வெளியே வந்துவிட்டேன். சப்தங்களில்லா மையத்தில் என் ஏகாந்த கனவுகளோடு நானே என்னில் இருந்த திசைகளும், காலமுமற்ற என் சுயத்தை விட்டு நகர்ந்துதான் வந்துவிட்டேன். தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றி கொண்டு இந்த இரைச்சலோடு கூடிய சராசரி வாழ்க்கைக்கு நடுவே விட்டு விட்டு பல்லிளித்து பரிகாசிக்கிறது மனப்பேய்.
வாசிப்பும் வாசிப்புகளின் ஆழமும் சேர்ந்து கருக்கொண்ட்ட எண்னங்களை எல்லாம் மெல்ல துடைத்தழித்துவிட்டு அதன் சாரத்தோடு சாறாக ஊறிக் கிடந்தவனை, புத்தகத்தில் படித்த தத்துவங்களை எல்லாம் வாழ்க்கை வீதிகளில் கொண்டு வந்து வைத்து மனித வாழ்க்கைக்கு தீர்வுகளைச் சொல்லும் மேதாவிகளின் உலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியே விட்டது காலம்.
இப்போது சுதாரிக்க விடில் நான் எப்போதும் இந்தக்கூட்டத்தில் ஒருவானாய் ஆகிப்போய்விடுவேன். இருட்டில் பொருளை தொலைத்து விட்டு வெளிச்சத்தில் தேடும் மனிதர்களும் அவர்களின் சித்தாந்தகளும், அதை நிறுவ இவர்கள் கொடுக்கும் தேற்றங்களும், மறுதலைகளும் விளக்கங்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு மரணம் தாண்டியும் என்னை தொடரும் அவலம் எனக்கெதற்கு?
இந்த புத்திமான்களின் கத்தி வீசும் தத்துவ வீதியில் ஒரு நாள் பசிக்கிறது என்றேன்... பசி என்றால் என்ன என்று பல மணிநேரம் பேசினார்கள். பசியின் மூலம் சொன்னார்கள், பசியுள்ள தேசத்தினை எல்லாம் பட்டியலிட்டார்கள், பசிக்கு யார் காரணம் என்றார்கள், இன்னும் சில பேர் படைத்தவனென்று ஒருவனில்லை இருந்தால் யாரையும் பசியோடு விட்டிருக்க மாட்டான் என்றூ பகுத்தறிவு வாதம் செய்தார்கள்.....
' யாருமே ஒரு வாய் உணவையும் கொடுக்கவில்லை, உணவை அடையும் வழியையும் பகிரவில்லை '
என்னை முன்னிலைப்படுத்த என் தன்முனைப்பை கூராக்கி நான் பெரிய மேதை என்று சமுதாயத்திற்கு காட்ட எனக்கெதற்கு ஒரு மூளை. உலகெல்லாம் அலைந்து திரிந்து அறிவை வளர்த்து நான் அறிஞன் என்ற ஏட்டுச் சுரைக்காய் வைத்துக் கொண்டு கறி எப்படி சமைப்பது?
கற்க கசடற என்ற இரு வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் பொருள் புரியாது வள்ளுவனின் வாழ்க்கையை ஆராய்ந்து முப்பாலுக்கும் விளக்கம் கொடுத்து தொடை தட்டி, தட்டிப் பேசி என்ன சாதிக்கப்போகிறேன் நான்? கூட்டம் கைதட்டும், விசிலடிக்கும், ஆனால் என் யோக்கிதை எனக்குத்தானே தெரியும். கற்றவற்றில் எல்லாம் இருந்து சரிகளை விளங்கியவனா நான்? மாசில்லாமல் கற்றவனா நான்? இதை ஆராயவே நேரமில்லாத போது ஊருக்கு கற்றுக் கொடுக்கும் மனோபாவம் எங்கிருந்து துளிர்த்தது எனக்கு?
கற்றபின் நான் அதற்கு தக நடந்தேனா? இதை என்னிடம் கேள்வியாய் கேட்டேனே? வாசித்த வேகத்தில் அதை வெளியே வந்து நான் இதை வாசித்தேன் அதை வாசித்தேன் என்று பேசினேனே நான் அதற்கு தகந்தேனா? இல்லையே? நான் என்னைப் பார்க்கும் கலையை விட்டு விட்டு...என்னை சரி செய்துகொள்ளும் யுத்தியை வெற்று விசய ஞானப்புத்தியிடம் தோற்க விட்டு விட்டு ஊரையல்லவா பார்க்கத் தொடங்கிவிட்டேன்.
சுய ஒழுக்கத்தின் மூலம் என்றால் என்னவென்று கடை வீதிகளிலா கோனார் நோட்ஸ் உரை போட்டு கிடைக்கும் அல்ல.. அல்ல அது என்னுள் ஜனித்து என்னை சாந்தப்படுத்தி என் செயல்களில் வெளிப்படவேண்டியது. கூச்சலான உலகத்தின் கோணல்களை சரி செய்ய முயலும் மனிதர்கள் முதலில் தத்தம் அகத்தினுள் நுழைந்து தம்மை சரி செய்தல் வெண்டும்....நான் என்னை சரி செய்யவேண்டும்....!
எனது வானம மிகப்பரந்தது...அங்கே கோடாணு கோடி நட்சத்திரங்கள் கண் சிமிட்டி ஜீவனோடு சிரித்துக் கொண்டிருக்கின்றன. சப்தமின்றி நான் வான் பார்க்க...பார்க்க பரந்து விரிந்த பிரமாண்டத்தின் முன்னால் மானுட பிண்டமாகிய நான் ஒன்றுமில்லாதவனாகிப் போய்விடுகிறேன். ஒன்றுமில்லாதவனுக்கு ஏன் கோபம்? அகங்காரம், நான் என்ற ஆணவம்? என்ற கேள்விகள் துணைக் கேள்விகளாய் ஜனித்து ஏதொ ஒரு தெளிவினை கொடுக்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகளும் பதில்களும் ஒவ்வொரு மனிதனும் கேட்டு கேட்டுதானே தெளிவு பெற முடியும்?
மனிதன் தனக்குத் தானே கேள்விகள் கேட்டு சரி செய்து முன்னேற வேண்டும். சூழல்கள் எல்லோருக்கும் வெவ்வேறு விதமான பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. மனிதர்களின் பார்வைகள் வீச்சிற்கு ஏற்றவாறு அதை அனுபவமாக்கிக் கொள்வது அவரவரினின் மனோபக்குவத்திற்கு ஏற்றார் போலத்தானே அமைகிறது. யாரும் யாரிடமும் பேசியோ, அல்லது எழுதியோ, அல்லது வேறு ஏதேனும் செய்தோ மாற்றமுடியாது. அவரவரின் பக்குவ நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப விசயங்களை வாங்கிக் கொள்கிறார்கள்.
ஒரு மனிதனின் பேச்சோ எழுத்தோ அதை வாங்கிக்கொள்ளும் மனிதருக்கு தாக்கத்தை கொடுக்காதவரை மாற்றம் சாத்தியம் இல்லை. ஏற்கனவே மனதினுள் பல்லாயிரம் கற்பிதங்களைக் கொண்டிருப்பவர்களின் பார்வைகள் செம்மைப்பட எல்லா கருத்துக்களையும் விட்டு வெளியே வருவது மட்டுமே அவசியமாகிறது. வெற்று வானத்தையும் வெள்ளை நிலவையும் பார்க்க, ஒடும் நதியில் முங்கிக் குளிக்க, அரச மரத்தின் காற்றை ஆழமா ஊடுருவி வாங்கிக்கொள்ள, ஒரு சந்தைக்கடை இரைச்சலில் மனித இருப்புகளை வாங்கிக் கொள்ள, ஒரு பசுமாட்டின் சாந்தத்தினை உணர, ஒரு ஆட்டின் அழகினை ரசிக்க...............எந்த தத்துவம் தேவை சொல்லுங்கள்...?
நாம் எப்போதும் நாமாய் இருப்பது இல்லை. கற்பனைகளில் எப்போதும் நாம் வேறு ஒருவராய்த்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். இவர் சொன்னது அவர் சொன்னது என்று நம்முள் ஏற்றி வைத்திருப்பது எல்லாமே கற்றை கற்றையாய் குப்பைகள். எப்போது எது பேசினாலும் எதார்த்தை விட்டு விட்டு புள்ளி விபரங்களை இறைக்கும் ஒரு எந்திர வாழ்க்கையின் உச்சத்தில் எல்லா கருத்துக்களோடுமா என்னை வழியனுப்பி வைக்கும் இந்த உலகம்? அரைஞான் கயிற்றைக் கூட அறுத்தெரிந்து உருத்தெரியாமால் ஆகப்போகும் இந்த மட உலகத்தின் மூளைகளை எல்லாம் கரையான் தானே அரிக்கப்போகிறது....?
கற்பதில் குற்றமற்று கற்கவும் கற்றபின் சுய பார்வை கொள்ளவும் தன்னைத் தானே உற்று நோக்க வேண்டும்...புறம் நோக்கியே பாயும் மனித மனது ஊருக்குக் உபதேசம் செய்யும் முயற்சிகளின் பின்னணியில் தன்னை நல்லவனாக காட்டும் விருப்பங்கள் மிகுந்திருப்பது மிகையாத்தானே இருக்கிறது.
வாள் வீசியே மரித்த
தலைமுறை கடந்த
ஜீன்களின் கூட்டங்கள்
பதித்துப் போட்டிருக்கும்
குணாதிசயங்கள் யார் சொல்லியும்
கேட்காமல் எப்போதும்
வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது
நேர்மறை திமிர்களாய்!
தலைக்கனங்களை உணர்ந்த
மாத்திரத்தில் தலை கொய்து
காலடியில் போட்டு மிதிக்கும்
எண்ணம் எதேச்சையாகவே
தோன்றுவது என் புத்திக் கோளாறா
இல்லை புலன்களின் பாய்ச்சலில்
புகுந்து கொண்ட எதார்த்தமான
உண்மைகளை வெளிப்படுத்தும் யுத்தியா?
கற்றதெல்லாம் இறுமாப்பாய் மாறி
வார்த்தைகளில் கர்வத்தை பரவவிட்டு
அறியா பாமரர்களின் கழுத்தை
நெறிக்கும் வழிமுறைதான் புத்தியெனில்
இப்போதே அதை தீயிடத் துணியும்
முதல் மூடனாக நானிருக்க ஆசையே...!
தத்துவங்களும் புள்ளிவிபரங்களுமே
எப்படி வாழ்க்கையின் தீர்வாகும்?
வயிற்றுப் பசியின் காரணத்தை...
அறிவியல் மூலத்தை விவரிக்கும் பொழுதில்
ஏழைகளின் பசிகள்
தானே தீர்ந்து போகுமா என்ன?
எல்லாம் கடந்து இயல்பாய் செயலுறும் போதும் அதை பகிரவேண்டிய தேவைகளற்று, ஒரு குழந்தையைப் போல சிரித்து, கனமின்றி கவிதயான மனம் கொண்ட பார்வைகள் கொண்டு, தீமையை அழிப்பதில் தீமையைவிட கொடுமையாய் நின்று நானாக நானிருத்தல்தானே விடுதலை....!
இதோ மெல்ல மெல்ல உள் நகர்ந்து, புறக்கூச்சல் ஒழித்து விட்டு நானாயிருக்கும் என் தனித்தலில் கிளைக்கத் தொடங்கிருக்கும் மூலத்தில் ஜனித்தலுக்கும், மரித்தலுக்கும் அப்பாற்பட்டு நான் வெறுமனே கிடக்கிறேன்.
இதோ இக்கணமே நிகழந்துவிட்டது என் ஆனந்த விடுதலை....!
தேவா. S
Comments
ஒன்று மட்டும் புரியுது. எனக்கு வோட்டு போடு என்று கண்ட கதை பேசாமல் கையில் காசு கொடுத்தால் தான் பசி தீரும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
--
JK
புரிதலுக்கு நன்றிகள்!
......ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வரீங்க, தேவா... சூப்பர்!
மாத்திரத்தில் தலை கொய்து
காலடியில் போட்டு மிதிக்கும்
எண்ணம்//
ஹ ஹ ஹா
நல்ல எண்ணம் :)
வணக்கம் சகோதரம், இயந்திர வாழ்க்கைக்கு நடுவே, இயந்திரமாய் நகர்ந்து கொண்டிருக்கும் மனத்தினை அழகாகப் படம் பிடித்து, மனப் பேய்க்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளீர்கள். ஆரம்பமே இலக்கிய ரசம் ததும்பி வழியும் வண்ணம் அமைந்துள்ளது.
வாழ்வியலை உணர்ந்தவனின் யதார்த்தமான கேள்விகளாக, உள்ளக் கருத்துக்களாக இவ் வரிகள் வந்து விழுகின்றன. மொழி நடை....அழகிய உரை நடையாய் தமிழ் மகளினைப் பதிவில் தவள விட்டது போன்ற உணர்வுடன் வியாபித்துச் செல்கிறது.
பசியினைப் போக்கிட வழியேதும் செய்யாது, விதண்டா வாதம் செய்வோரை, இங்கே அரசியல் வாதிகளுக்கு பூடகமாய் ஒப்பிட்டுக் கூறியுள்ளீர்கள். வாழ்த்துகக்ள்.
சபாஷ்..... பயனற்ற மூளையின் பயன்பாடெதற்கு எனும் வகையில் ஒரு சொல்லடியினைத் தருகிறீர்கள்.
இன்று தான் முதல் விஜயம் செய்தேன். பதிவே செம டச்சிங்காக இருக்கிறது.
இவ் வரிகளில் உங்களுக்கூடாக வீண் வாதம் பேசும் இலக்கியவாதிகளையும் சாடுகிறீர்கள் சகோ....
வரணனைச் சிறப்பும், குறியீட்டு விளக்கமும் இவ் இடத்தில் உச்சாணியாய் அமைந்து கொள்கின்றது.
வித்தியாசமான ஒரு பதிவினைப் படித்த உணர்வினை உங்கள் எழுத்து நடையும், பதிவும் தந்திருக்கிறது.
ஒரு படைப்பினை பகிர்ந்தபின் அதை படைத்தவனின் மூல எண்ணத்தில் இருந்து விளங்குவது கடினம்...ஆனால் வரிக்கு வரி...அனுபவித்து மீண்டும் என் உணர்வை பிரதிபலித்தமைக்கு நன்றிகள். படைப்பு முழுமை பெற்றது உங்களால் சகோதரம்!