Pages

Monday, April 11, 2011

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.....!

வெயிலு கொளுத்த ஆரம்பிச்சுருச்சு இல்ல...! எது சரியா நடக்குதோ இல்லையோ பூமி சுழற்சியும் இயற்கையும் அதன் அளவில் சரியான செயல்களை செஞ்சுகிட்டுதான் இருக்கு. யார் சொன்னாலும் கேக்குமா இயற்கை...? கேக்காது அதுக்கு தன்னுடைய செயல் செய்வதற்கான கூட்டு சூழல்தான் முக்கியம். அது எப்டி இருக்கோ அதை கேட்டு செஞ்சுகிட்டு போய்கிட்டே இருக்கும்...!

ஜப்பான்ல வந்த சுனாமிய பிரிச்சு எடுத்து வச்சு தனித் தனியா பாத்தா அது கொடுமை அது வலி. இயற்கையின் முன்னால் அது ஒரு செயல் அவ்வளவே! பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் அடுக்குகள் நகர உள்ளுக்குள் இருக்கும் கடல் கொஞ்சம் வெளில எட்டிப்பாத்து ஹாய் சொல்லிட்டு போகுது....அந்த மாற்றம் மனிதர்களின் செயலுக்கு எதிர்மறையா போய்டுது அதனால திட்டி தீத்துடுறோம் ....ஏய் கடவுளே, ஏ இயற்கையே அப்டின்னு கண்டமேனிக்கு கூச்சல் போடுறோம். அது நம்ம ஆதங்கம ஆனா இயற்கைக்கு அது பத்தி எல்லாம் கவலை இல்லை இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்துக்கு இது தேவையா இருக்கு.

இப்படி இயற்கையோட ஒரு நிகழ்வுக்கு நாம ஆடிப் போயிடுறோம், ஆனா பல சமயத்துல சரியான மழையா, நல்ல விளைச்சலா, மனித மூளைகளில் சிந்திக்கும் திசுக்களாய் இருந்து புதிது புதிதாய் கண்டு பிடித்து அதுக்கு விஞ்ஞானம்னு பேரிட்டு நமக்கு கொடுக்கும் நிகழ்வாய், வற்றாத ஆறுகளாய், நல்ல மனிதர்களை பிறப்பிக்கும் சக்தியாய், மனிதர்களுக்கு நேர்மறையான செயல்களை செய்யும் போது அதில் மகிழ்ந்து போகும் நாம் இயற்கையை சீராட்ட மறக்கிறோம். ஆனால் அப்போதும் இயற்கை தன்னளவில் தானே ஒரு புன்முறுவலோடு இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

தீமையும், நன்மையும் மனித பார்வைகளிலும் மனித தேவைகளிலும் இருக்கிறதே அன்றி நிஜத்தில் அப்படி ஒன்றுமில்லை. மிகைப்பட்ட மனிதர்கள் சுயநலமானவர்களாக ஆகிவிட்டால் அவர்களின் நன்மைகள் வேறு, அவர்களின் தீமைகள் வேறு. தன்னலமில்லாதவர்களாக மிகைப்பட்டவர்கள் இருந்தால் அங்கே பார்க்கப்படும் பார்வை வேறு.

இருவேறு வழிமுறைகள் இருக்கின்றன ஒன்று நமக்கு பிடித்தது. மற்றொன்று எல்லோருக்கும் நன்மை பயப்பது. நமக்கு பிடித்தது எல்லா நேரமும் மிகைப்பட்ட மனிதருக்கு நன்மையை கொடுக்கும் என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் பிடித்தது நமக்கு நன்றாக வரும் என்று சொல்லவும் முடியாது. ஒரு விதமான விசால பார்வையும் தெளிவுகளும் இருக்கும் போது இந்த இரண்டும் ஒத்துப் போகும் ஒரு அதிசயம் நடக்கும். அப்படி ஒத்துப் போன மனம், மற்றும் பார்வையைக் கொண்டு சமுதாயப் பணி ஆற்ற வருபவர்களின் செயல்கள் இயற்கையை ஒத்து தானிருக்கும்.

ஒரு செயலை செய்துவிட்டு அதனால் பாதிக்கப்படும் குறைகள் கூச்சலிடுவது பற்றியும் இவர்களுக்கு கவலையில்லை. மிகைகள் முக ஸ்துதி பாடி பாராட்டுவதைப் பற்றியும் இவர்களுக்கு கவலையில்லை....! செயல் செய்வதோடு இவர்கள் பணி முடிவடைகிறது அதற்கான பலனை எதிர்பார்த்து கற்பனைகளில் எப்போதும் லயிப்பது இல்லை.

இப்போ மேட்டருக்கு வர்றேன்.....

தமிழ் நாட்டில் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெரிய தலைவர்கள் வரைக்கும் இந்த சுயநலப் பேய் பிடித்து ஆட்டாமல் இல்லை. அதனால்தான் மக்களை திருப்திபடுத்த இலவசங்களையும், இன்ன பிற விசயங்களையும் அரசியல் கட்சிகள் இன்று நமது முன் லேகியம் விற்பவர்களைப் போல கடைவிரித்து வைத்துக் கொண்டு கூவி கூவி ஓட்டு சேகரிக்கிறார்கள்.

ஒரு ரூபாய் அரிசி கொடுப்பதை சாதனை என்று பார்ப்பதுதானே இப்போது மிகைப்பட்டவர்களின் பார்வை. இந்த பார்வையை கொஞ்சம் மாற்றுங்கள்....

" நான்கு, ஐந்து அல்லது பத்து ரூபாய்க்கு அரிசி விற்றால் வாங்க முடியாத சூழல் இருப்பவர்களை உருவாக்கியது யார்? வாங்கும் திறனற்றுப் போய்தானே 1 ரூபாய் அரிசியை மக்கள் வாங்குகிறார்கள்? நீங்களும் அதை பெரிய சாதனையாகச் சொல்கிறீர்கள்? உங்கள் அரசின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் சரி என்றால் 1 ரூபாய்க்கு எல்லா கடையிலும் அரிசி விற்க வேண்டும். மேலும் அப்படி இருப்பது ஒரு சாதாரண நிலையாக பார்க்கப்படவேண்டும் அப்படி இருந்தால்தானே உண்மையிலேயே சீரான வளர்ந்த ஒரு சூழலில் நாம் இருப்பதாக ஆகும்?

தமிழகத்துக்கு இலவசங்களை அறிவிக்கும் அரசு, கடன்களை தள்ளுபடி செய்யும் ஒரு அரசு, அதே தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது? அந்த கடன் எங்கிருந்து வந்தது என்று வடிவேலுகளை விட்டு குத்தாட்டம் போட்டு சொல்லச் சொல்லுமா?

ஒரு சரியில்லாத அரசியல் கட்சித் தலைவனான விஜயகாந்தை விமர்சிப்பதே, திட்டுவதே எம்மக்களுக்கு நல்லது செய்தது ஆகிவிடுமா? "

அறிஞர் அண்ணாவிடம் தி.மு.க என்ற ஆயுதம் இருந்தது அதை சரியாக உபோயகப்படுத்தி தன்னுடைய பெருங் கனவினை செயல்படுத்தி மக்களை சரியாக வ ழிநடத்தும் முன் போய் சேர்ந்து விட்டார் அந்த தலைவர். அவரின் பேச்சுக்களின் ஆழமும் பார்வையும் இன்று அவரை பின்பற்றி வருகிறேன் என்று கூறும் எந்த தலைவர்களிடமாவது இருக்கிறதா?

அறிஞர் அண்ணாவிற்கு பிறகு அரசியல் களத்தில் சினிமா கவர்ச்சியோடு இறங்கிய எம்.ஜி.ஆர். தொடர்ந்து ஆட்சி பீடத்தில் இருந்தது கூட ஒரு வித மாயை கட்டவிழ்த்து விட்டிருந்ததால்தான் என்றாலும் கூட ஏழை எளிய மக்களுக்கு முன்னால் ஒரு நிஜ தலைவனாக ஏழைப் பங்காளனாக கட்டிக் கொண்டாதோடு மட்டுமில்லாமல் தனது அரசியல் சாதுர்யத்தால் காங்கிரஸ் என்ற கட்சிக்கு இருந்த ஓட்டு வங்கியை சரியாக தனது கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியும் கொண்டார்.

தமிழக வாக்களர்கள் அறிவுசார் வாக்காளர்களாக வழி நடத்தி செல்லப்பட்டிருக்கவேண்டும். அறிஞர் அண்ணா அதைத்தான் செய்ய விரும்பினார் ஆனால் எம்.ஜி.ஆரின் காலத்திலிருந்து அது உணர்ச்சி சார் சமுதாயமாக மாற்றப்பட்டு விட்டது. பெரும்பாலும் எம்.ஜி.ஆருக்கு செலுத்தப்பட்ட வாக்குகள் எல்லாமே நன்றிக் கடன்கள்தான்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்பு அதிமுக வலுவிழந்து இரண்டாக பிரிந்திருந்த நேரத்தில் அரியணையை ஆசையோடு கட்டியணைத்தார் கலைஞர் கருணாநிதி. அரசியல் நாடகத்தில் காங்கிரசின் எதேச்சதிகார கை அப்போதைய பிரதமர் சந்திரசேகரை தூண்டிவிட...1989ல் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி சீறிப்பாய்ந்து தி.மு.க அரசினை கலைத்துப் போட்டது 356வது சட்டப்பிரிவு.

அதன் பிறகு தொடர்ச்சியாக 1991ல் அ.திமு.க (ராஜிவ் அலை), 1996ல் தி.மு.க (ஜெ. ஊழல் எதிர்ப்பலை) 2001ல் அதிமுக (கூட்டணி பலம் + கைதுகளுக்குப் பிறகு ஜெவின் மீது ஏற்பட்ட பச்சாதாபம்) 2006ல் மீண்டும் திமுக (கூட்டணி பலம் + விஜயகாந்த் என்ற ஒரு முரண்பாடு அரசியலுக்குள் வந்து பிரித்துப் போட்ட வாக்குகள்)

என்று கடந்த காலங்களில் தொடர்ந்து மாறி மாறி ஆட்சிகள் வந்திருப்பதில் பயந்துதான் ஒரு மைனாரிட்டி அரசாக காங்கிரசோடு கைகோர்த்த தி.மு.க. நலத் திட்டங்களை மக்களுக்காக நிஜமாவே நிறைவேற்றியதும் மறுக்க முடியாத உண்மை. தி.மு.க அரசு மக்களை கவர அதிடியான திட்டங்களை இடைவிடாது செயல்படுத்தினாலும் ஈழப்பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாட்டை எதிர்க்க முடியாமல் அதன் கரங்களை தமிழ்நாட்டு கூட்டணி அரசியல் கட்டிப்போட்டிருந்தது மட்டுமில்லாமல் சில சுகபோகங்களை தி.மு.கவின் தலைமை இழக்கவும் விரும்பவில்லை.அதோடு மட்டுமில்லாமல் மத்தியில் வலுவிழந்து போன பாரதிய ஜனதாகட்சியும் ஒரு காரணம்.

எதிர்கால மத்திய அரசியலுக்கும், மாநில அரசியலுக்கும் சேர்த்தே திட்டங்கள் தீட்டிய மு.க. ஈழப்பிரச்சினையில் குரங்கு அசைத்த ஆப்பாய் நன்றாக மாட்டிக் கொண்டுதான் விட்டார் என்பதை தி.மு.க உயர் நிர்வாகிகளே இன்று ஒத்துதான் கொள்கிறார்கள். காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி கொண்டிருக்கும் தமிழர் சார் அமைப்புகளும், சீமான் போன்ற தலைவர்களும் நிஜத்தில் காங்கிரசுக்கு ஒரு பிரச்சினையில்லை ஆனால் இப்போது அவர்கள்தான் தி.மு.கவின் தலைவலி.

தனது சாதனைகளை மட்டும் முன்னெடுத்து வைத்து இனி செய்யப்போகும் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தி, கூட்டணி ஒற்றுமையோடு இருக்கும் தி.மு.க அரசு ஈழப்பிரச்சினையையும், இராமேஸ்வரம் மீனவர் பிரச்சினையையும், ஸ்பெக்ட்ரம் ஊழலையும் மறந்துவிட்டு வாக்களியுங்கள் என்று கேட்கிறது?

2001 - 2006 வரை ஆட்சி செய்து விட்டு பின் ஆட்சியை இழந்த ஜெயலலிதாவிற்கு கனவிலும் கூட உதித்திராத இலவச திட்டங்களை கொடுத்து செயல்படுத்திவிட்ட கருணாநிதியை எதிர்கொள்ள இந்த தேர்தலில் ஜெயித்து தானும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி கருணாநிதியை ஓவர்டேக் செய்யவேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருப்பது அவரின் காப்பியடிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே தெரிகிறது.

இந்த வகையில் தமிழக ஊழலுக்கு அச்சாரம் போட்டு தொடங்கி வைத்து அதை பின்பற்றி 1991களில் ஜெயலலிதா ஊழலில் கொடி கட்டி பறந்து பின் அந்த ட்ராக்கை மாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இலவசங்களை கொடுத்து மக்களை மயக்கும் ஒரு வசியத்தை செய்யும் ஒரு புது ட்ரண்டினைத் தொடங்கி வைத்த பெருமையும் தமிழினத் தலைவரையே சேரும்.

தான் ஆட்சி அமைத்தே ஆகவேண்டும் என்று ஒரு முட்டாளோடு கூட்டணி அமைத்து 41 இடங்களையும் கொடுத்து வை.கோ போன்ற 100% அக்மார் அரசியல்வாதிகளை மதிக்காமல், கண்டுகொள்ளாமல் விட்டு விட்ட ஜெயலலிதா சுயநலத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்று யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை.

மீண்டும் தமிழக தேர்தலில் தி.மு.க ஜெயித்தால்..........தன்னை அசைக்க முடியாத சக்தியாய் கருதிக் கொண்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் அதே வேளையில் தமது சொந்த பந்தங்களை எல்லாம் இன்னும் வலுவாக்கிவிடுவார் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியும் தமிழின அழிப்பு என்பது எல்லாம் எங்களை ஒன்றும் பாதிக்காது.... தமிழன் எங்கள் தலையிலிருக்கும் ஏதோ ஒன்றுக்கு சமம் என்று எண்ணும் மனோபாவத்தில் இந்த வெற்றியினை காரணம் காட்டி எதிர்கால மத்திய அரசுக்கான தேர்தலில் பகடைக்காய்களை விளையாடும் அதற்கு தி.மு.கவும் துணை போகும்.!

ஜெயலலிதா என்னும் ஒரு எதேச்சதிகார மனோபாவம் கொண்ட அ.தி.மு.க தலைமையேறினால் இலவசங்கள் சகட்டு மேனிக்கு கிடைக்கும், மக்களை வசீகரிக்க எல்லா உத்தியையும் குறைவில்லாமல் செய்யப்போகும் இவர் மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை சொல்லப் போவதுமில்லை. பெரும்பான்மையோடு வெற்றிப் பெற்றால் விஜயகாந்த்களை செவுட்டில் அறைந்து வெளியேற்றப்போவதும் உண்மை.

ஈழப்பிரச்சினைக்கும், தமிழனுக்கும் பெரிதாக எதுவும் செய்யப் போகாத ஜெயலலிதா முடிந்த வரைக்கும் கலைஞர் குடும்பத்தை நடுத்தெருவுக்கு இழுக்க முயற்சிப்பார், ஏனென்றால் பழி வாங்குதல் அவரின் பிறவிக் குணம்...! இதுதான் அதிமுக ஜெயித்தால் நடக்கும்.....

இப்படிப்பட்ட சூழலில் தேர்தலை எதிர்கொள்ளப்போகும் என் இனம்....என்ன செய்யப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாய் இருக்கிறது. கணிக்க முடியாத ஒரு களமாய் இந்த தேர்தல் 2011 இருக்கிறது என்பதே உண்மை....!!!

காத்திருப்போம்...தமிழகத்தின் தலையெழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு எழுதப்போகும் ஆண்டவன் யாரென்று அறிய...

இயற்கையின் ஓட்டத்தில் எது நிகழ்ந்தாலும் அது பிரபஞ்ச சுழற்சிக்கு தேவையானதாகவே கருதிக் கொள்வோம்!!!!!

தேவா. S

பின் குறிப்பு: தமிழகத்துக்கு சரியான தலைவன் கிடைக்க இன்னும் இரண்டு. மூன்று சட்டமன்ற தேர்தலை கடந்து செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் எம் இனம் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கையறு நிலையில் பதியப்பட்ட பார்வைதான் இது.

7 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

nanpaa very long post! but it is great

ராஜ நடராஜன் said...

//தமிழக வாக்களர்கள் அறிவுசார் வாக்காளர்களாக வழி நடத்தி செல்லப்பட்டிருக்கவேண்டும்.//

அருமையாக சொன்னீர்கள்!

Chitra said...

காத்திருப்போம்...தமிழகத்தின் தலையெழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு எழுதப்போகும் ஆண்டவன் யாரென்று அறிய...

இயற்கையின் ஓட்டத்தில் எது நிகழ்ந்தாலும் அது பிரபஞ்ச சுழற்சிக்கு தேவையானதாகவே கருதிக் கொள்வோம்!!!!!


.....வித்தியாசமான அணுகுமுறை.... தேவாவின் தனித்துவம் பெற்ற இன்னொரு பதிவு. பாராட்டுக்கள்!

Rathnavel said...

நல்ல விரிவான பதிவு.
மக்கள் மனசு மதில் மேல் பூனையாக இருக்கிறது.
மே பதின்மூன்றில் பார்க்கலாம்.

siva said...

yes,true.

siva said...

yes,true.

ஹேமா said...

ஆதங்கம்...எதிர்பார்ப்பு....தமிழனுக்கென்றே எழுதப்பட்டது !