Pages

Tuesday, February 28, 2012

இசையோடு இசையாக..தொகுப்பு 4 !அயற்சியான நாட்கள், அழுத்தம் கொடுக்கும் நினைவுகள், புத்தியைப் பிழியும் சூழல்கள், மனிதர்களோடான சந்தோசங்கள், கோபங்கள், துக்கங்கள், சிரிப்புகள், அழுகைகள், எரிச்சல்கள், எதிர்பார்ப்புகள், அலைக்கழிப்புகள், ஆர்வங்கள், பரபரப்புகள், குற்ற உணர்ச்சிகள், தற்பெருமைகள், தாழ்வு மனப்பான்மைகள், சாந்தங்கள், அமைதிகள், கனத்த மனோநிலைகள், ப்ரியங்கள், நட்புகள், காதல்கள்....

விரிந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு நாளும் உப்பு மூட்டை சுமப்பது போல சுமந்து செல்கிறது. சுமையாய் நம்மைத் தூக்கிச் செல்கிறதே இந்த வாழ்க்கை என்று கருணை பொங்கும் போதே... நடு முதுகெலும்பு முறியும் படி படாரென்று கீழே " பொத் " என்று சுடும் வெயிலில் போட்டு விட்டு கை கொட்டி அதுவே சிரிக்கவும் செய்கிறது.

வெறும் காலோடு சூட்டில் ஓடி வருபவனை ஒற்றை மரத்தின் நிழல் எப்படி வாரியணைத்து நிழலுக்குள் தஞ்சம் கொடுத்து குளுமையான காற்றைக் கொடுக்கிறதோ அப்படியான அதிர்வுகள் மிகுந்த சில மணி நேரங்களை விரித்துப் போடும் இந்த இரவை எப்படிக் காதலிப்பது என்று சொல்லத் தெரியாமல் வார்த்தைளைத் தட்டச்சு செய்து நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை அழகானது. சிலருக்கு அதிசயமானது, சிலருக்கு மிகக் கொடுமையானது, இன்னும் பலருக்கோ பிடிபடாதது என்று விவரித்துக் கொண்டே வார்த்தைகளினூடே நான் வழுக்கிக் கொண்டு செல்ல முடியும்...ஆனால் என்னைப் பொறுத்தவரை ரொம்பவே சவாலானது. "ப்ப்ப்ளார்" என்று முதுகில் அறைந்து விட்டு ஓடி விடுகிறது, துரத்திப் பிடித்து நான் தோற்பேன் என்னும் இடத்தில் ஜெயித்து மறுபடி....வாழ்க்கைக்கு " ப்ப்ப்ப்ளார் " என்று ஒன்று கொடுத்து விட்டு நகர்கையில்...

கண நேரத்தில் கண் இமைக்கும் முன்பு கழுத்திற்கு ஒரு மயிர் இடைவெளியில் பளீச் என்று ஒரு வாள் வீசிப் பார்க்கிறது.... சரலேன்று விலகி வாள் வீசிய வாழ்க்கையின் பிடறி பிடித்து உலுக்கி முதுகில் குத்தி விரட்ட வேண்டியதாகிறது. இப்படியான சவால்களை கடந்து கடந்து களைப்பாறும் நேரங்களின் அழகும் நேர்த்தியும், ஓய்வும் இன்னும் வலுவாக ஓடச் சொல்லி வற்புறுத்திகிறது.

எல்லா இடர்பாடுகளையும் இரசித்து, இரசித்து, முன்னேறி, முன்னேறி இந்த விளையாட்டு கொடுக்கும் சுகம் அலாதியானது மட்டுமல்ல அசதியானதும் கூட.

 அசதிக்கும், மூளைச்சூட்டிற்கும் பிறகு, மெல்ல நிதானப்படுத்திக் கொண்டு ஒரு கட்டுரையிலோ, கவிதையிலோ, கதையிலோ மூழ்கும் நிமிடங்கள், அல்லது ஏதேனும் ஒரு பாடலை காதுகளால் சுகித்து சுகித்து அந்த இசை என்னும் போதையில் ஊறித் திளைத்து களைப்பினை எல்லாம் நீக்கி உற்சாகத்தில் ஒரு மாதிரியான தொய்வான நிலையில் நிறைய சக்திகளை பெற்றுக் கொண்டிருக்கையில் அது அடுத்த நாளை எதிர்கொள்ள எடுத்துக் கொள்ளும் பயிற்சி அல்லது உடலுக்குள் சக்தி நிறைத்தல் என்று எண்ணும் போது....சந்தோசம் இன்னும் இருமடங்காகிறது.

இப்படித்தான், ஏதேதோ பாடல்களை கண்களால் அளந்து கொண்டு நகர்ந்த பொழுது இந்த பாடலுக்குள் உள் நுழைந்து மயக்கும் குரல் மெல்ல என் செவிகளை வருடிக் கொடுத்து, புத்திக்குள் ராஜா சாரின் இசையை வழியவிட்டு, பாடல் முடிய, முடிய மீண்டும் மீண்டும் கேட்டு, கேட்டு உடல் முழுதும் இசை போதை பரவ...பாடலை விட்டு வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன்....

ஒரு காதல் அதை கடந்து விசுவரூபமெடுத்து நிற்கும் காமம், வேகம், மோகம், என்று எல்லாம் கலந்த ஒரு முரட்டு உணர்வை இசைக்குள் கொண்டு வரவேண்டும். காதலை சரியாய் வெளிப்படுத்த வார்த்தைகளின் அர்த்தங்களைக் கடந்த மிருதுவான குரலும், காமத்தை பிரமாண்டப்படுத்திக் காட்ட இசை அரசனின் இசைக்கச்சேரியும் என்று......

இந்தப் பாடல் முழுதும் மதமதப்பாய் காமமும், மலர்ச்சியாய் காதலும், ஒன்று கூடி, நம்மை இழுத்துச் செல்லும் தூரங்கள் வார்த்தைகளுக்குள் கண்டிப்பாய் கொண்டு வரமுடியாதவை.

இப்படி எல்லாம் உணர்வுகளை இசைவாத்தியங்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியுமா....? என்று ஆச்சரியமாய் கேட்டும் மனதை மண்டியிடத்தான் செய்துவிடுகிறது இசைச்சக்கரவர்த்தியின் இந்தக் இசைக்காவியம்....

அடா....அடா.....அடா....இவ்வளவு தூரம் வந்துட்டு அப்புறம் என்னங்க.......பாட்டுக்குள்ள வாங்க....! தேவா. சு


2 comments:

ஹேமா said...

வாழ்வோடு இளைகிறது இசை.நீங்கள் வாழ்கைக்கு ப்ளார்ன்னு அறையிறமாதிரி இங்கயும் அடிக்கடி நடக்கும்.என்னை அமைதிப்படுத்துறதே இப்படியான இசைதான்.ரசனையான பாடல் !

தனிமரம் said...

இசையில் மன உணர்வுகள்.அமைதிகானும் எனக்கும் இசைதான் .பிடிக்கும்