
இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கவனமாய் உள்வாங்கிக் கொண்டு தெளிவுகளை உணர்ந்து கொண்டு தெளிவின்மைகளை அறுத்தெறிந்து வெளியே வரவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைய அதுவும் இணையத்தை வலம் வரும் தமிழ் இளைஞர் கூட்டத்திற்கு இருக்கிறது என்ற ஒரு வேண்டுகோளினை சிவப்புக் கோடிட்டுக் காட்டி விட்டு கட்டுரையைத் தொடர்கிறேன்....!
சம காலத்தில் அரசியலை காழ்ப்புணர்ச்சிகளின் களமாய் ஆக்கி வைத்திருக்கும் இன்றைய மக்கள் தலைவர்களைக் கண்டு என் தேசத்து இளைஞன் அரசியல் என்றாலே சாக்கடை என்றும், அரசியல் களம் என்பது பொய்யும், புரட்டும், தனிமனித தாக்குதல்களும் கொண்ட மரியாதையற்ற ஆதிக்க சக்திகளின் இடம் என்று நினைத்து ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவாய் எதைச் சம்பாதித்திருக்கிறோம் தெரியுமா....?
மிரட்டும் தாதாக்களின் அடாவடிகளையும், பொருளைக் கொண்டு மனிதர்களை மிரட்டி அல்லது மூளைச்சலவைகள் செய்து வாக்குகள் பறிக்கும் பெருங்கூட்டத்தையும் நம்மைச் சுற்றி மிகுந்து போக வைத்திருக்கிறோம். உண்மையான தமிழர் நலம் காண இன்று களத்திலிருக்கும் எத்தனை கட்சிகள் முனைகின்றன...? அப்படியாய் முனைகிறோம் அல்லது செய்தோம் என்று சொல்பவர்கள் செதுக்கி வைத்திருக்கும் செம்மைகளின் விளைவுகள் என்ன....?
அரசு +இயல்... என்னும் அரசியல் என்பது மிகப்பெரிய கலை. அது மக்களுக்கான இயல். மக்களுக்கான சேவைகள் செய்யும் மனிதர்கள் தங்களை தங்களின் செயல்பாட்டினை அர்ப்பணிக்கும் ஒரு புனிதமான களம். இங்கே களமாடிக் கொண்டிருக்கும் வசீகர சக்திகள் கட்டியெழுப்பி இருக்கும் அரசியல் என்பது மக்களுக்கானது அல்ல..அது மக்களை நடு நடுங்க வைத்துக் கொண்டிருப்பது....
ஆதி சமுதாயத்தில் மனிதன் விலங்குகளை ஒத்து திரிந்து மெல்ல, மெல்ல பண்பட்டு கல்லின் உபயோகம் அறிந்து, நெருப்பின் பயன் புரிந்து, இரும்பின் வலிமை உணர்ந்து பிறகு தன்னை உணர்ந்து தான் தனித்து இயங்க இயலாது, தான் ஒரு சமூகம், சமூகத்தை சார்ந்த வாழ்க்கையே எமக்குச் சிறந்தது என்று தெளிந்து.....
அப்படியான தெளிதலில் தன் கூட்டத்தில் வலிவாய் இருந்தவன், தம்மையும் தம் சமூகத்தினரையும் காப்பான் என்று அவனை மன்னன் என்றும் அரசனென்றும் வணங்கி எம்மை, எமக்கான வாழ்க்கையை நீ நிர்வாகம் செய்...! உமக்கு எம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் நல்குவோம் என்று சிரம் பணிந்து தமக்குள் தாமே ஒரு தலைவனை ஏற்றுக் கொண்டு மன்னாராட்சி என்ற மாண்பினை படைத்தனர்...
காலத்தின் போக்கில் கிடைத்த புரிதல்கள், மானுடரின் புத்தியில் இன்னும் தெளிவென்னும் தீபத்தை ஏற்றி வைக்க விடிந்த ஒரு ஓப்பற்ற ஞானம்தான் மக்களாட்சி என்னும் ஜனநாயகம். மக்களால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஒரு குழுவினை மக்கள் தேர்ந்தெடுத்து.. நீவீர் எம்மை ஆளும்...! இது நமது நாடு, நாங்கள் உமது மக்கள்....எம்மை நிர்வாகம் செய்ய உம்மை தேர்ந்தெடுக்கிறோம் என்ற மக்களாட்சி என்னும் ஒரு ஒப்பற்ற நிலைக்கு நகர்ந்தனர்....!
மக்களைக் காக்க காவல்துறை, நட்டின் எல்லைகளைக் காக்க இராணுவம், இப்படியாக மக்களின் குறைகளைத் தெருவுக்கு தெரு தீர்த்து வைக்க உறுப்பினர்கள் என்று ஆரம்பித்து சட்டமன்றம், பாராளுமன்றம், மந்திரிகள், முதலமைச்சர், பிரதமர் என்று இந்த கட்டமைப்பு விரிந்து பரந்து பிரமாண்டமாகிறது.
ஏன் இந்த பிரமாண்டம்...? யாருக்காக இந்த கட்டமைப்பு....?
ஏன் இந்த பிரமாண்டம்...? யாருக்காக இந்த கட்டமைப்பு....?
மக்கள் நலனுக்காக....மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க....மக்களிடம் அமைதியை நிலை நாட்ட, மக்களின் அடிப்படைத் தேவைகளை தேர்ந்த நிர்வாகத் திறமையால் செம்மையாய் வழி நடத்த.....
இதற்குத் தானே...அரசியல்....? எம் நலம் பேணத்தானே அரசியல் தலைவர்கள்...? எம்மைக் காக்கத்தானே காவல் துறை...? எமக்காகத் தானே இத்தனை துறைகள்...?
ஆனால்...
என்ன நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது இப்போது...? அரசியல் என்னும் புனித வாளினை கையில் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை மிரட்டுவதும், ஒரு அரசியல்வாதி என்று தன்னை கற்பிதம் செய்து கொள்பவனை அதிகாரங்கள் குவிந்த ஒருவனாய் பார்த்து மக்கள் கூழைக் கும்பிடுகள் போடுவதும்...? மனுக்கள் கொடுத்து ஐயா.. தர்ம ராசா... எங்களுக்கு வழிகாட்டு என்று கெஞ்சுவதும்.....வெள்ளை வேட்டி சட்டைகள் கட்டிக் கொண்டு தேவ தூதர்களாய், வேற்று கிரக வாசிகளைப் போல நடந்து கொண்டு சாதாரண மக்களை கேவலமாக அரசியல்வாதிகள் பார்ப்பதும் என்று...
சீர்கெட்டுப் போய் அரசியல் என்பதற்கு ஒரு தெளிவில்லாத முரட்டு உதாரணத்தை சமகால அரசியல் வல்லாதிக்க சக்திகள் நிர்ணயம் செய்து கொண்டிருப்பது சரியான ஒரு நகர்வா...சொல்லுங்கள் என் தேசத்து இளைஞர்களே..?
மன்னராட்சி நடந்த கலத்திலேயே.... மக்களை மாண்போடு நடத்தி ஜனநாயகத்தை வேரூன்றச் செய்து, பெண்களை எல்லாம் அதிகாரிச்சிகளாக்கிப் பார்த்து அதிகாரங்களைக் கொடுத்து, மக்கள் கருத்தினை கேட்டு, மக்களுக்கான அரசு என்பதை மனதிலாக்கி, நல்லாட்சி கொடுத்த தமிழனின் பாரம்பரியத்தையும், அவனின் வீரத்தையும், மாண்பினையும் ஒழுக்கத்தையும் இந்த நவீன காலத்தில் ஜனநாயகம் என்னும் நாகரீக அரசியலைக் கைக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் செய்கிறார்களா?
பேருந்திலேயே பயணித்துப் பார்த்திராத, சாலைகளில் மக்களோடு நடந்து பழகிடாத, இரு சக்கர வாகனங்களை நெரிசலில் ஓட்டியோ அல்லது பயணித்தோ பார்த்திராத....மக்களோடு மக்களாக பழக திராணியற்ற, அரசியல் கட்சியின் தலைவர்களும், தலைவிகளும் என்ன தீர்வினை நமக்குச் சொல்லி விடப் போகிறார்கள்...என் அன்புத் தோழர்களே..?
சமகாலத்தில் நம்மைக் காக்க அவதாரம் பூண்டிருக்கும் இந்த தலைவர்கள் எல்லாம் யார்? இந்த தலைவர்கள் மற்றும் தலைவிகளின் நதி மூலம் ரிஷி மூலம் என்ன? எந்த எந்த தொழில் செய்து எப்படி இப்படியான ஒரு வசதியான வாழ்க்கையை எட்டிப் பிடித்தார்கள்...? இவர்களின் வருமானத்திற்கு இப்படியான ஒரு மிகப் பெரிய ஆசிர்வாதம் எங்கே இருந்து கிடைத்தது...?
யாரேனும் சொல்ல முடியுமா?
நம் அப்பாக்களின் காலத்திலிருந்த அரசியல் தலைவர்கள் இப்படி இருந்திருக்கவில்லை என்பதை நாம் அறிந்தவர்களாயிருக்கிறோமா என் தோழர்களே..? காமராசர் என்னும் மிகப்பெரிய மனிதர் தமிழகத்தின் முதல்வராய் இருந்தார்...தன் சொந்த வீட்டுக்கு குடிநீர் குழாயை தன் வயதான தயாருக்கு அதிகாரிகள் முதல்வரின் தாயார் என்ற காரணத்தினால் போட்டுக் கொடுத்ததை கழட்டி திரும்பக் கொடுக்க சொன்னார்....
காரணம்...காமராசரின் தாய்க்கு மட்டுமல்ல அந்த தெருவில் இருக்கும் அத்தனை பேருக்கும் வீட்டுக்குள் தண்ணீர்க் குழாய் வரும் போது தன் வீட்டுக்கும் வரட்டும் என்ற எண்ணம்தானே...? முதல்வரின் தாயார் என்பதால் எந்த ஒரு அதிகார துஷ்பிரயோகம் நடந்து விடக்கூடாது என்ற புனிதமான அரசியல் நல்நோக்குதானே...?
பேரறிஞர் அண்ணா முதல்வராய் இருந்த போது வாழ்ந்த வீட்டிற்கு ஒரு முறை நான் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது....அங்கே அண்ணாவின் வளர்ப்பு மகனான திரு. பரிமளம் அண்ணாத்துரையை காணும் வாய்ப்பும் கிடைத்தது. சாதாரண ஒரு வாழ்க்கை நிலையில் தன் சொந்த தொழில் மூலம் பொருள் ஈட்டி வாழும் ஒரு காலத்தின் கட்டாயத்தில் அவரை விட்டுச் சென்றிருக்கிறார் அறிஞர் அண்ணா..., காரணம்..அண்ணா அவர்கள் செய்ததும் மாசற்ற தெளிவான அரசியல்...! வாரிசுகளைக் கொண்டு வர அவர் விரும்பவில்லை....வாய்ப்புக்களும், திறமைகளும் இருந்தால் அவர்களே மேலே ஏறி வருவார்கள் என்ற மாபெரும் எண்ணம்....
அறிஞர் அண்ணாவும், ஐயா காமராசரும் போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என் அன்பானவர்களே..இதோ இப்போது நம் அப்பாக்களின் காலங்களில் நாம் பிறப்பதற்கு முன்னால் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள்....!
அந்த அரசியலையா இப்போது அவர்களின் பெயர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்யும் தலைவர்கள் செய்கிறார்கள்...? இல்லைதானே....தோழர்களே...????
தமிழனின் வீரமும், மானமும் தன்மானமும் எத்தகையது என்று நான் சொல்லி என் சமூகம் அறிய வேண்டியது இல்லை...! ஒவ்வொருவரின் உள்ளேயும் தன்மானமும் சுயமரியாதையும் மரபணுக்களாய் விதைக்கப்பட்டுதான் இருக்கிறது. கூடவே இந்த மரபணுவோடு நமது கூடுதலான நன்றியுணர்ச்சியும், சேர்ந்தே விதைக்கப்பட்டு இருப்பதுதான் தற்போதைய நமது பிரச்சினையே....
நமது நன்றியுணர்ச்சியை, தமிழுணர்வை, நமது வீரத்தை, நமது பாரம்பரியத்தை வைத்தே நம்மை ஒரு மகுடிக்கு மயங்கிய பாம்பாய் மயங்கவைத்து, இலவசங்களை வாரியிறைத்து அப்படி வாரிக் கொடுப்பதை என்னமோ அவர்களின் அப்பன் வீட்டு சொத்தில் இருந்து கொடுப்பது போல ஒரு மாயக்கட்டினை காட்டி நம்மை மயங்க வைத்து...இன்று வால் குழைத்து வாழ்க, ஒழிக கோஷம் போடும் ஒரு நாயாய் நம்மை மாற்றி வைத்திருக்கிறார்கள்....
என் தேசத்து இளைஞனே...நாயல்ல நாம்.....! வேங்கைககளின் கூட்டம்....உலகமெல்லாம் கட்டியாண்ட பாரம்பரியத்தின் வித்து...., உலகமே மொழியற்று காட்டுமிராண்டிகளாய்த் திரிந்த போது கவி செய்த பெருங்கூட்டம்....முத்தமிழை சுவாசித்து....செந்தமிழை புத்தியில் ஏந்திக் கொண்டிருக்கும் 54,000 வருடங்களுக்கும் முந்தைய தொன்மையான தேசிய இனம்......
நீங்களும் நானும்....என்ன வேண்டுமானாலும், படிப்போம்...., நேர்மையான எந்த தொழில் வேண்டுமானாலும் செய்வோம்...ஆனால் அரசியல் என்னும் ஒரு படி நிலையை கண்டிப்பாக விட்டுக் கொடுக்காமல் நமது பங்களிப்பினைக் சரியாய் செய்வோம்..!
அரசியலுக்குள் சரியானவர்கள் இல்லாததால் அது சரி இல்லாதவர்களின் கூடாரமாக...அவர்கள் சொல்வதே வேத வாக்காக நாம் நம்பும் ஒரு மாய கட்டமைப்பாக இருக்கிறது. அரசியல் எனக்குப் பிடிக்காது என்று கூறும் சகோதர்களே......அரசியல் இல்லாமல் நானும் நீங்களும், நம் பிள்ளைகளும் எப்போதும் இருக்கப்போவது இல்லை என்பதை உணருங்கள்...!
அனுபவக் கல்வியையும், ஏட்டுக் கல்வியையும், வாழ்க்கையின் எல்லா படி நிலைகளிலும் கற்றுணர்ந்த ஆன்றோர்களே..., இணையத்தைச் சுற்றி வரும்ச் சிங்க நிகர் இளைஞர் கூட்டமே... தெளிவாக இரு.....! நீ புரிதலோடு இரு....! எந்த மாயக்கட்டிலும் சிக்கி விடாதே.....
சரி தவறுகளை நாம் நேருக்கு நேராய் கண்களை பார்த்துக் கேட்க வேண்டுமெனில்....அரசியல் என்னும் ஆயுதத்தை சரியாக நாம் பயன்படுத்த வேண்டும்...! தேர்தல் என்னும் நெருப்பினை சரியாய் நம் தேசத்து மக்களிடம் பற்ற வைக்க வேண்டும்....! சம கால அரசியல் கட்சிகளை விட்டு வெளியே நின்று கவனிப்போம்...அரசியல் புரட்டுக்களைக் கூறி வசியம் செய்ய வரும் போது கவனமாய் இருப்போம்.
சரியான தலைவனும், மிகச்சரியான அரசியல் கட்சியும்....மக்கள் நலனையே நாடுவார்கள். அப்படியான ஒரு தலைவன் மக்களோடு மக்களாய்த்தான் இருப்பான்.., தமிழகம் நிஜமாகவே மின் பற்றாக்க்குறையால் பாதிக்கப்படுகிறது என்றால் அதைச் சரி செய்யும் வரை...சரசாரி மனிதர்கள் வாழும் தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் வசித்து அந்த பாதிப்பில் தன்னையும் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வான்....
ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கும் ஒரு நல்ல தலைவன்...தன் வீட்டில அந்த அரிசியைத்தான் பொங்கிச் சாப்பிடுவான்.....அவன் எப்போதும் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டவனாக... மக்களுக்கான ஒரு தலைவனாய் எப்போது தன் வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணித்திருப்பான்....
தெளிவுகளை கைக் கொள்வோம்...! இணையைத்தை சூழ்ந்திருக்கும் அரசியல் ஆபத்துக்களை தெளிவாக்கும் வண்ணம் இந்தக் கட்டுரை என்னும் சிறு நெருப்பு இங்கே கொளுத்தப்படுகிறது..இங்கே எழுதிப் பயனில்லை என்று கூறும் புரட்டு வாதங்களை தூர குப்பையில் எறிந்து விட்டு.....
இயன்ற வரையில் இந்த விழிப்புணர்வுத் தீயைப் பற்றிப் பரவச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளோடு கட்டுரையை நிறைவு செய்கிறேன்.....!
நாமார்க்கும் குடியல்லோம்......நமனை அஞ்சோம்....!
தேவா. S
Comments
புரட்சிகரமான துடிப்பு மிக்க எழுத்து !
அருமை.