Pages

Monday, February 20, 2012

அரசியல் என்னும் ஆயுதம்....! ஒரு கனவுப் பார்வை..!
வித்துக்கள் எல்லாம் வெற்று வித்துக்களாய் எந்த வித திட்டமிடலும் இன்றி இந்த தேசத்தில் விதைக்கப்படுவதாலேயே...வாழ்வியல் தேவைகளை அவை எதிர் கொள்ளும் போது அதை நேருக்கு நேராய் சந்திக்கும் திராணிகளற்று மடங்கி மட்கிப் போகின்றன.

கல்வி என்னும் கட்டாய வழிமுறையை மானுடரின் வாழ்க்கையில் உண்டாக்கி வைத்திருப்பதின் நோக்கம் இன்று சிதைந்து போய் கிடக்கிறது. கல்வியின் நோக்கம் மருவிப் போய் இன்று பொருள் ஈட்டும் ஒற்றை நோக்கை மட்டுமே எமது பிள்ளைகளிடம் புத்திகளில் புகுத்திக் கொண்டிருக்கிறது. 

பொருள் ஈட்டும் தொழில்நுட்ப, அறிவியல், பொருளாதார, நிர்வாக தொடர்பான பாடங்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் எமது பிள்ளைகள், கல்லூரியை விட்டு வெளியே வரும் பொழுது ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய விற்பன்னராய்த்தான் வருகின்றனர்....தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் தேர்ந்தவர்களாக, கணிணி அறிவுடன், அறிவியல் பார்வைகளுடன் நுனி நாக்கு ஆங்கிலத்துடன்....எல்லாவகையிலும் பொருளாதார பலத்தை கூட்டவே தங்களது நகர்வுகளை அமைத்தும் கொள்கிறார்கள்....

ஆனால்....

அரசியல் கல்வி என்னும் மிகப்பெரிய விடயத்தை எம் பிள்ளைகள் தமது வாழ்க்கையின் எந்த நிலையிலும் முறைப்படி அறிய முடிவதில்லை.  பட்டப் பிரிவில் அரசியல் விஞ்ஞானம் என்ற பாடம் இருந்தாலும் அதை மிகைப்பட்டவர்கள் எடுத்து படிப்பது கிடையாது என்பதோடு அங்கே கற்றுக் கொடுக்கப்படும் அரசியல் கல்வி முழுமையான தேசத்தின் போக்கை ஒரு மாணவன் உணர எந்த வகையிலும் உதவுவதும் கிடையாது.

இந்தியா என்னும் மிகப்பெரிய ஜனநாயக நாடு பல்வேறு வகையான அரசியல் கட்டுக்கள் கொண்டது. அரசியல் இல்லாமல் யாதொரு சிறு துரும்பும் நம்மைச் சுற்றி நகர்வதில்லை என்று இருக்கும் போது அரசியல் என்னும் கூற்றினை உணரவும் அறியவும் எம்பிள்ளைகள் சார்ந்திருக்க வேண்டியது ஏற்கெனவே இங்கே அரசியல் என்று பெயர் சூட்டி மானுடர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் கூத்துக்களைத்தான்..!

அரசியல் பாடம் என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் கட்டாயப் பாடமாய் ஆக்கப்படுவதோடு ஒவ்வொருவரும் தனது மாணவப் பருவத்திலிருந்தே தானும் தன்னைச் சுற்றி இயங்கும் அரசோடு எல்லாவிதத்திலும் தொடர்புடையவர்களே என்ற எண்ணத்தை இந்தக் கல்வி திண்ணமாய் மாணக்கர்களின் மனதில் விதைக்க வேண்டும்.

புள்ளி விபரங்களையும், வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் அரசியல் செய்வதற்காகவே இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இது அவர்கள் சார்ந்திருக்கும் துறை ஆதலால் அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ளவும், தங்களை நியாயப்படுத்தவும் எல்லாவிதமான நுணுக்கங்களையும் சுற்றிச் சுழன்று தங்களின் விரல் நுனியில் தேக்கிக் வைத்துக் கொள்கின்றனர், ஆனால் சாதாரண மக்கள் இந்த அரசின் அசைக்க முடியாத ஒரு அங்கமாயிருந்தும் தனக்கும் அரசுக்கும் இருக்கும் தொடர்பினை தனது விரல் நுனியில் ஒரு கருப்பு மையை வைத்துவிட்டு தேர்தலில் வாக்கு  செலுத்துவதோடு முடித்துக் கொள்கிறார்கள்.

சாதாரண எல்லா மக்களும் தன்னை ஆண்ட, ஆள்கின்ற, ஆளப்போகின்ற கட்சிகளின் செயல்பாடுகளையும் செயல் திட்டங்களையும் சுய ஆர்வமாகவே தனது வாழ்க்கையின் பகுதியாய் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஐந்தாண்டுகள் தன்னை ஆளும் அரசு என்ன மாதிரியான நிர்வாகத் திட்டங்கள் செய்கிறது? வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும் போது வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? எங்கே இருந்து நமக்கு இலவசங்கள் வருகின்றன? எங்கே வரிச்சுமைகள் நமக்கு கூட்டப்படுகின்றன? ஏன் கூட்டப்படுகின்றன..? என்ன மாதிரியான தொலை நோக்குப் பார்வைகளை இந்த அரசு கொண்டிருக்கிறது...

என்றெல்லாம் ஆராய்வது சர்வ சாதாரணமாய் எம் மக்களிடம் நிகழவேண்டும். எந்த துறையைச் சார்ந்தவராய் இருந்தாலும் தெரு முனைகளிலும், குழாயடிகளிலும், வீட்டு வாசலில் கதையடிக்கும் போதும், சமூக தளங்களில் அரட்டை அடிக்கும் போதும் , தொலை பேசியில் நண்பர்களிடமும், உறவுகளிடமும் உரையாடும் போதும் தன்னிச்சையாய் இது அரசியல் என்பதை தமது சுவாசமாக கொண்டிருக்க வேண்டும்.

இது எல்லாம் இப்போது நிகழ்கிறதா? கிடையவே கிடையாது. 

அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் சொந்தமானது என்றெண்ணிக் கொண்டு மக்கள் அவர்களைப் பற்றிய புரணிகளைப் பேசிக் கொண்டு அப்படி பேசுபவர்களின் வாய்களைப் பார்த்து ரசித்து விட்டு இன்னும் பத்து பேரிடம் பொழுது போக அரட்டை அடித்து விட்டு பின் குப்புறப் படுத்து குறட்டை விட்டு உறங்குவதும்தானே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் கண்டிப்பாய் மாற வேண்டாமா?

என்னுடைய துறை இது இல்லை என்று ஒரு மருத்துவரும், ஒரு பொறியாளரும், ஒரு கணிணித்துறையில் இருப்பவரும், மளிகைக்கடை வைத்திருப்பவரும், காய்கறி விற்பவரும் ஒதுங்கிச் செல்வதால்தானே...

எந்த அரசு என்ன செய்தது? எந்த அரசியல்வாதி என்ன செய்தார் என்பதை தெளிவாக நாம் உணர முடியாமல் மீண்டும் மீண்டும் தவறு செய்தவர்களையே அரியணை ஏற்றிக் கொண்டிருக்கிறோம்? அரசியல் என்பதை நாம் நமது வாழ்வியலாகப் பார்க்காமல் அதை பொழுது போக்கும் இடமாக வேடிக்கைப் பார்க்கும் ஒரு கேளிக்கையான நிகழ்வாகத்தான் பார்க்கின்றோம்....என்பதை நாம் மறுக்க முடியாதுதானே?

கல்வி கற்கும் மாணவர்களுகு அரசியல் விருப்ப பாடமாயிருக்க கூடாது என் அன்பான தோழர்களே...! அரசியல் என்பது மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயப்பாடமாய் இருக்க வேண்டும். இந்திய அரசியலைக் கல்லாமல் ஒரு மாணவனும் கல்லூரியை முடித்து விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை வரவேண்டும். அரசியல் பாடத்திற்கான தேர்வு முறைகள் எப்போதும் இருப்பது போல கேள்விக்கு பதில்கள் எழுதி ஒரு காகிதத்தை கட்டி கொடுத்து விட்டு செல்வது போல இருக்க கூடாது....


தேர்வு முறைகள் குழு விவாதம் மற்றும் கருத்தரங்குகளில் கேள்வி பதில்களை நேரடியாகக் கேட்டுப் பெறுதல், மற்றும் சூழல்களைக் கொடுத்து அதற்கு முடிவெடுக்கச் சொல்லுதல், மொழிவளம், போன்றன சார்ந்தும் இருக்க வேண்டும். அரசியல் கட்டாயப் பாடம் ஆகும் போது அதுவும் அதை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக தேர்ந்த பல தரப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பில் இருப்பவர்களைக் கொண்டு செய்யும் போது மாணவப் பருவத்திலேயே ஒவ்வொருவரிடமும் அரசியல் அறிவு வேரூன்றத்தானே தொடங்கும்.

கட்சிகளைச் சார்ந்திருக்கவும், அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளவும், பதவிகளைப் பயன்படுத்தி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுமே மிகையாக சமகாலத்தில் அரசியல் என்னும் விடயம் பயன்படுகிறது அல்லது அப்படியாய் ஆக்கிவிட்டார்கள். 

இது ஒரு போலியான ஜனநாயகம் அல்லவா?

ஒரு தேசத்தின் மக்கள் அரசியல் சார்ந்து வாழும் வாழ்க்கையில் அரசியல் தெளிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். கட்சிகளை நடத்தும் மனிதர்கள் மட்டுமே அரசியல் அறிவு பெற்றவர் என்ற நிலை மாறி இந்த தேசத்தில் எல்லா நிலையிலும் இருப்பவர்களுக்கும் அரசியல் அறிவு கட்டாய அறிவாய் புகுத்தப்படவும் வழிமுறைகளை நாம் கொண்டு வரவேண்டும். 

என் பிரியமான தோழர்களே....அரசியலை விட்டு விலகிச் செல்லாதீர்கள்...! அரசியல் என்பது நம்மோடு பின்னிப் பிணைந்தது. கால் கிலோ கத்திரிக்காய் வாங்குவதற்கு முன் ஆயிரத்தெட்டு சோதனைகள் செய்து விலையை சரிபார்த்து கடைக்காரரிடம் பேரம் பேசி வாங்குகிறோம் ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் நம்மை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளை பற்றி நாம் அதிக அக்கறை கொள்வதும் கிடையாது... அவர்கள் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்று கவனிப்பதும் கிடையாது.

இந்தியா போன்ற தேசங்களின் ஜனநாயகம் என்பது ஒரு ஐநூறு அறுநூறு அதிகாரமிக்க அரசியல் மற்றும் தொழில் சார்ந்த முதாலாளிகளையும் அவர்களால் கொண்டு வரப்படும் பன்னாட்டு இறக்குமதி பொருள்களையும், அவற்றை நுகரும் எந்த ஒரு அரசியல் விழிப்புணர்வும் இல்லாத மக்களையும் மிகையாக உள்ளடக்கியது என்பதை என்றாவது நாம் உணர்ந்திருக்கிறோமா?

இது மிகப்பெரிய தவறல்லவா....? 

இந்த ஆர்வமின்மையும், அரசியல் என்பது யாருக்கோ சொந்தமானது என்று எண்ணும் போக்கும்....நம்மை அதாலபாதாளத்தில் தள்ளி விட்டு எப்போதும் யாரோ ஏதோ சூழலுக்கு ஏற்றார் போலச் சொல்வதை கேட்டு நகரும் ஒரு மூடத்தனமான நிலைக்கு தள்ளி விட்டு விடும்தானே...?

மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எல்லா துறையினருக்கும அரசியல் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் மேலும் பல்வேறு விதமான தொழில் செய்யும் மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை சமுதாய நல்நோக்கர்களும் ஆளும் அரசும் ஒரு வேள்வியாய் செய்ய வேண்டும் என்ற கனவை இந்தக் கட்டுரை இணையத்தை சூழ்ந்திருக்கும் எம் உறவுகளின் முன் ஒரு விதையாய் விதைத்து தற்காலிகமாய் தன் வாய்மூடிக் கொள்கிறது.

அரசியல் நமது உயிர் மூச்சு....! அரசியல் அறிவது நமது கடமை...! அரசியலில் ஈடுபடுவது நமது உரிமை....!


தேவா. S

2 comments:

Rathnavel Natarajan said...

ஆழ்ந்து எழுதப்பட்ட அருமையான பதிவு.
இங்கு அரசியல் என்றால் -சாராயக்கடை ஏலம் எடுப்பது, காண்டிராக்ட் எடுப்பது,
காவல் நிலையத்தில் ஜாமீன் எடுப்பது - என்ற அளவில் தான் மனதில் பதிந்திருக்கிறது, பயம் இருக்கிறது. கேரள மாநிலத்தில் வீட்டில் அம்மாவும் மகனும் உட்கார்ந்து அரசியல் பேசுவார்கள். இங்கு மனப்பக்குவமும் வரவேண்டும்.
வாழ்த்துகள்.

ஹேமா said...

சாதாரண மக்களாய் எம் எதிர்பார்ப்புக்கள் நிறையவே.அரசியலில் ஏமாற்றம்தான் தேவா !