Pages

Wednesday, September 28, 2011

பயணம்....!

அது ஒரு பேருந்துப் பயணம் என்று ஒற்றை வரியில் நான் சொல்லி நிறுத்தி விடமுடியாது. இரவின் ஆளுமையோடான ஒரு பிரபஞ்சத்தின் வசீகர இராத்திரி அது. இரவு என்பதை விட இராத்திரி என்னும் வார்த்தைக்கு வசீகரம் கூடுதலாய் இருப்பதாக நான் உணர்ந்ததுண்டு.

எங்கே செல்கிறேன்? ஏன் செல்கிறேன்? என்பதெல்லாம் சராசரி வாழ்வியல் கணக்குகளுக்கு வேண்டுமானால் உதவலாம் ஆனால் பயணத்தை கவனிப்பதில்தானே அலாதி சுகம்..! அப்படியான கவனத்திற்கு கருவாய் இருந்து விட்ட இந்த பேருந்து பயணத்தில் நான், குறைந்த எண்ணிக்கையிலிருந்த பயணிகள் நடத்துனர், ஓட்டுனர்...

மற்றும் என் ஜன்னலோர இருக்கை, வெளுத்த வானத்தில் அழுத்தமாய் இருந்த நிலா.....!

உலகம் உறக்கத்திற்கு செல்லும் பொழுதுகளில் பூமியின் ஒரு பகுதி பிரஞையோடு எப்போதும் விழித்துக் கொள்ளும். மனித மூளைகளின் அதிர்வுகள் எல்லாம் மயனா அமைதியில் நித்திரை என்னும் மயக்கத்தில் கிடக்கும் போது உரிமையாய் இயற்கையோடு காதல் கொண்டு களித்திருக்கும் இந்த பூமி. அது சுற்றிச் சுற்றி இரவினைத் தேடி ஓடுவதெல்லாம் இப்படியான காதலுக்குத்தானோ என்று நான் எண்ணி ஆச்சர்யப்படும் வகையில்தான் இருந்தது அந்த ரம்யமான இரவின் நகர்வு...

காட்டு வழிப்பாதையில் பேருந்து மெதுவாய் ஊறும் பொழுதில் பேருந்தின் ஒற்றை என்ஜின் சப்தம் மட்டும் மனதோடு துணைக்கு வர, விளக்குகள் அணைக்கப்பட்ட பேருந்து என்னும் அறிவியல் ஜந்துவினுள் மெல்ல தலை எட்டிப்பார்க்கும் நிலவினை நீங்கள் ரசித்திருக்கிறீர்களா? வெட்கத்தோடு மெல்ல அடி எடுத்து காதலன் முகம் பார்க்கும் ஒரு காதலியை அது ஒத்திருப்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

பேருந்தின் ஜன்னலினூடே மெல்ல படர்ந்து என் மீது விழுந்து கிடந்த நிலவின் கிரணங்களை சுகமாய் ஏந்திக் கொண்டு முழு நிலைவினை நான் உற்று நோக்கிக் கொண்டிருந்த போது உள்ளுக்குள் ஒளிந்து கிடந்த என்னவளின் நினைவுகள் மறைந்து நின்று எட்டிப்பார்க்கும் குழந்தையாய் மூளைக்குள் பரவத் தொடங்கியிருந்தது.

ஜன்னலோரக் காற்று முகத்தில் மோதி நிலவின் கிரணங்களை ஏந்திக் கிடக்கும் என்னை கோபத்தில் சீண்டிப்பார்த்து நானும்தான் இருக்கின்றேன் என்று படபடப்பாய் ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் ஜன்னலின் வழியே சிரித்துக் கொண்டிருந்த வயல் வெளிகளும், பிள்ளைகளை எல்லாம் உறங்க வைத்து விட்டு விழித்திருக்கும் தாயாய் பறவைகளை எல்லாம் தூங்க வைத்து விட்டு மெளனித்து நிற்கும் மரங்கள் என்று எல்லாமே எவ்வளவு ஆத்மார்த்தமானவை...!!!

கிட்டத்தட்ட எல்லோருமே உறங்கிக் கொண்டிருந்த அந்த பேருந்தில் ஓட்டுனர் மட்டும் விழித்திருந்தார் என்று நான் சொல்லும் போதே உங்களுக்குச் சிரிப்புதானே வருகிறது..ஆமாம் அவரும் சற்று தள்ளி அமர்ந்து முன் படிக்கட்டு ஓரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை பார்க்க... என்னண்ணே ? என்று கேட்டேன்...

என்ன பொழப்பு தம்பி டிரைவர் பொழப்பு, நேரத்துக்கு தூங்க முடியாது எந்திரிக்க முடியாது. வண்டி ஓட்டுற அலுக்கையில் வண்டிய விட்டு எறங்குனாலே ஒடம்பு எம்புட்டு அலுக்கையா இருக்கும் தெரியுமாப்பா...

ஓட்டுனரின் வார்த்தைகள் என்னை தர தரவென்று ஏகாந்த மனோநிலையில் இருந்து எதார்த்தத்திற்கு இழுத்து வந்தன....!

ஆமாண்ணே கஷ்டம் தாண்ணே என்று நான் சொல்லி முடித்தவுடன்..

கண்டக்டர்க கூட அப்ப அப்ப கண்ண பொத்திக்கலாம் தம்பி ஆன நம்மளால முடியாதுல்ல....!சிவங்கேல எடுக்குற காருப்பா... திருச்சி போயி சேரும் போது விடியக்கால மணி ரெண்டு மூணு ஆயிடும், அப்புறம் ஒரு 2 அவர் ரெஸ்ட் இருக்கும் மறுக்கா காலையில திருச்சில எடுக்குற காரு சிவங்க வரும் போது பதினொன்னு பன்னடரை ஆயிரும்...

கியரு ஆக்ஸிலேட்டரு கிளட்ச், கூட்டம் சாட்டம் ரோடு, மாட்டு வண்டி, மனுசன் புள்ளக்குட்டிய பேத்தனமா ஓட்டுற மத்த கார்க்காரய்ங்கன்னு சொல்லி எல்லாமே புத்திக்குள்ள் ஓடிக்கிட்டே இருக்கும் எங்கன 2 அவர் ரெஸ்ட் எடுக்குறது. பேருக்குத்தான் கண்ண மூடுவோம் தம்பி ஆனா எங்குட்டு தூங்குறது...?

சோலியத்த சோலிப்பா இது. வீட்டுக்கு போன கெரண்ட காலுக்கு மேல வலி எடுக்கும் பாரு, உக்காந்து உக்காந்து முதுகு வலி மட்டுமில்லப்பா மூலச் சூடும் வந்துடுச்சு. வீட்டுக்கு போனா அக்கடான்னு படுக்கவா முடியும்னு நினைக்கிறீக... வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு காலேசுக்கு படிக்குது. பய இப்பத்தான் பன்னென்டாவது படிக்கிறான், இளையவன் எட்டாவது படிக்கிறான்..

எப்டியாச்சும் படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு போகட்டும்னு பிரயாசப்படுறேன்... கடவுள் விட்ட வழி...., எங்கப்பா புள்ளக்குட்டியலும் படிக்கிதுக அதுகளுக்கு நம்ம கஷ்ட நஷ்டம் எல்லாம் தெரியறது இல்ல...52 வயசாச்சு.. ஏதோ ஓடுது வண்டி...!

நான் இமைக்காமல் அவரைப் பார்த்துக் கொண்டே வந்தேன் அவர் இடைவிடாமல் பேசிக் கொண்டே வந்தார்...

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு பெரிய ஆக்ஸிடண்ட் வேற தம்பி ஒரு லாரிக்காரன் இடிச்சுப்புட்டு போய்ட்டான்.. ஒரு வருசம் ஆச்சு எந்திருச்சு நடமாட... ! இன்னும் கூட வலி இருக்குப்பா கிளட்ச மிதிக்கும் போதெல்லாம் நடு இடுப்புல்ல சுருக்கு சுருக்குனு வலிக்கும்.. ! வண்டி ஓட்ற வேலை பாக்க சுளுவா இருக்க மாதிரி தெரியும்...ம்ம்ம் வேண்டாம் சாமி எம் புள்ளக்குட்டியளாச்சும் நல்ல பொழப்பு பொழைக்கட்டும்.

ஒரு நா புதுக்கோட்டையில ஏதோ கச்சிக்காரய்ங்க மறியல் பன்ணிகிட்டு இருந்தாய்ங்க. கவர்மென்டு பஸ்ஸு போய்த்தான் ஆகணும்னு கம்பெனில சொல்லிப்புட்டாக, நானும் போய்ட்டேன்... கலெக்ட்டர் ஆபிஸ் முக்குல நிப்பாட்டி வயசு வித்தியாசம் பாக்காம சட்டைய புடிச்சி அடிச்சுப் புட்டாய்ங்க..ஏண்டா நீ என்ன பெரிய வெண்ணையான்னு கேட்டுகிட்டே ஒருத்தன் செருப்பாலேயே அடிச்சான் தம்பி...

யாருன்னு காங்குறது? எங்க கம்ப்ளெய்ன் பண்றது....வாங்கி கட்டிகிட்டு மறுக்கா வண்டிய ஓட்டிகிட்டு போனேன்....!

ஏன் தம்பி என் கதைய சொல்லி உன் தூக்கத்த கெடுத்துப்புட்டேன் போலயே....! கண்டக்டர் பயலும் பாவம் தூங்கவாண்ணேனு? கேப்பான் சரி தூங்கிக்கடான்னு சொல்லிடுவேன்.. நம்ம கஷ்டம் நம்மளோட அவனாட்டும் தூங்கட்டுமே... ஆளுக வந்தா எந்திரிச்சு டிக்கட் போடுவான்... ! சூதானமா இடை இடை ஊருகள்ள ஆளுகல எறக்கியும் விட்றுவான்.....

தூக்கம் வந்துருச்சு அதான் உங்க கிட்ட பேசிகிட்டே வந்தேன்..... திருமயம் தாண்டிட்டோம் தம்பி... அந்த கோட்டைய தாண்டிட்டோம்னா ஒரு மோட்டல் ஒண்ணு இருக்கு நிறுத்துறேன்... வாங்க சாயா குடிச்சுட்டு போவோம்....

சரி அண்ணே என்று நான் சொல்லி முடித்த ஐந்தாவது நிமிடத்தில் மோட்டல் வந்தது.... ! டீயை சூடாக குடித்துக் கொண்டிருந்த என்னிடம் நான் பாலுதான் தம்பி குடிக்கிறது உடம்பு சூடாயிடக் கூடதுல்ல என்று சிரித்துக் கொண்டே பால் கிளாசை ஆட்டி ஆட்டி குடித்துக் கொண்டிருந்தார்.....

மீண்டும் பேருந்து...! ஓட்டுனர் அண்ணன் இப்போது பேசவில்லை ஏதோ சிந்தனையோடு பேருந்தினை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்....

நான் மெளனமானேன்...ஜன்னலில் நிலா சிரித்துக் கொண்டிருந்தது....காற்று முகத்தை கிழித்துக் கொண்டிருந்தது......நட்சத்திரங்கள் அழகாய் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது...!

இரவு அழகானதுதான், இரவுப்பயணமும் ரம்யமானதுதான் ஆனால்.....டிரைவர் அண்ணனுக்கு...?

மனசு வலித்தது... ! ஜன்னலில் சாய்ந்தபடி ஏதோ ஒரு சோகத்தில் உறங்கியே போனேன்..!


தேவா. S3 comments:

Mohamed Faaique said...

No job is easy.

Sorry anna... NHM Writter not workin)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பேருந்து பயணம் நமக்கு சுகம் என்றால் ஓட்டுபவருக்கு ரணம் போலல்லவா இருக்கு... :(

அவங்க பொழப்பு கஷ்டம் தான்! ஓட்டுனரின் உருக்கமான கதையை உங்களுடன் சேர்ந்து கேட்டேன். பகிர்வுக்கு நன்றிகள்!

சே.குமார் said...

ஓட்டுநர் பொழப்பு கஷ்டம்தாண்ணா...
அதுவும் நம்ம பக்கம் கவர்மெண்ட் பஸ்ல திருச்சிப் பக்கம் போற பஸ்ஸெல்லாம் அருமையான வண்டிங்க.... தடதடன்னு... அது போற வேகத்துக்கும் அந்த சூட்டுக்கும் பாவம்ண்ணா அவங்க...
எல்லாம் குடும்பச் சுமைதான்...