Pages

Monday, September 19, 2011

புவனா...!என்ன மாஸ்டர் அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க? ஏதாச்சும் பேசுங்க மாஸ்டர் என்று நான் சொன்னதை மாஸ்டர் காதில் வாங்கிக் கொண்டு வாங்காததைப் போல அமர்ந்திருந்தார்.

மாஸ்டர் ஒருவர் தான் என்னை சரியாக புரிந்து வைத்திருக்கும் ஒரு மனிதராய் நான் இதுவரையில் நினைத்துக் கொண்டிருப்பது. அவருக்கும் புரியவில்லை எனில் அதுக்காக கவலைபடும் ஜென்மமா இந்த புவனா?

ஏம்மா புவனா என்னை நீ ஏன் மாஸ்டர்னு கூப்பிடுற உனக்கும் எனக்கும் 7 அல்லது எட்டு வயசு வித்தியாசம்தான இருக்கும்..! ஒரு வேளை பேர் சொல்லி கூப்பிட பிடிக்கலேன்னா அண்ணானு கூப்பிடலாம்ல....மாஸ்டர் கேட்டார்.

அடா அடா என்ன மாஸ்டர் இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க? நான் எதுக்கு உங்கள அண்ணானு கூப்பிடணும்...! அண்ணானு கூப்பிடலாம் மாஸ்டர் ஆனா எனக்கு பிடிக்கலை...! அப்டி உண்மையா கூப்பிட நினைக்கிறவங்க கூப்பிடலாம் எனக்கு என்னமோ அப்டி தோணல... ஒரளவுக்கு நான் மதிக்கிற மனுசன் நீங்க எனக்கு வயசு 27 உங்களுக்கும் 34 அப்டீன்றதால அண்ணாவோ, சாரோ, மாமாவோன்னு முறை வச்சி கூப்பிட நான் எப்பவும் விரும்பியது இல்லை....

அப்போ, அப்போ ஏதோ நான் சொல்றதை புரிஞ்சுக்கிறீங்க எனக்கு சப்போர்ட் பண்றீங்க கத்தும் கொடுக்கிறீங்க, உறவே இல்லாத ஒரு உறவா இருக்கட்டும்னுதான் நான் உங்களை மாஸ்டர்னு கூப்பிடுறேன். நாளைக்கே நீங்க என்ன பாக்க வரலேன்னா கூட நான் கவலைப் படமாட்டேன் மாஸ்டர்...

வந்தா ஏதோ இலக்கிய நயமா பேசலாம், கவிதை சொல்லுவீங்க, ஏதோ வாழ்க்கை விளக்கங்கள் சொல்வீங்க, நானும் என்னோட பார்வைகள சொல்லுவேன்.. அவ்ளோதான் வரலேன்னா நான் பாட்டுக்கு இன்னும் ஜாலியா காத்து வாங்கிட்டு, ரெண்டு பொட்டலம் சுண்டலுக்கு காசு கொடுக்கறத ஒரு பொட்டலத்துக்கு கொடுத்தோம்டா, 5 ரூபாய் மிச்சம்னு ஏகாந்தத்தை அனுபவச்சுட்டு பஸ் பிடிச்சு வீட்டுக்கு போய்கிட்டே இருப்பேன்...

ஏன் புவனா அப்டீ சொல்ற உனக்கு சென்டிமென்டே கிடையாதா என்னா? ஒரு வேளை நாளைக்கு நான் செத்துப் போய்டுறேன்னு வச்சுக்க...அப்ப எப்டீ நீ ஃபீல் பண்ணுவ?

நீங்க செத்துட்டா....ம்ம்ம் ஐயம் சாரி மாஸ்டர் இந்த கேள்விக்கு உங்க வைஃப்தான் பயந்து அலறணும் அல்லது கண்ணீர் விடணும். ஒரு வேளை நானே உங்க வைப்ஃபா இருந்தா கொஞ்சம் திங்க் பண்ணுவேன் இப்டி ஒருத்தர் இருந்தாரேன்னு.... கொஞ்ச நேரத்துல வயிறு பசிக்க ஆரம்பிச்சுடும்...மாஸ்டர மறந்துட்டு பசிக்குது என்னடா சாப்பிடலாம்னு தேடி ஓட ஆரம்பிச்சுடுவேன்...ஹா ஹா ஹா!

எல்லாத்தையும் விட, எல்லோரையும் விட, மனுசனுக்கு தான் அப்டீன்றது தான் மெயின் மாஸ்டர். என்ன ஒண்ணு எப்பவுமே பிறருக்காக வாழ்ற மாதிரி நடிக்கிற ஒரு ஆட்டு மந்தைக் கூட்டத்துக்குள்ள எல்லோரும் சுத்திகிட்டு மே மே..ன்னு கத்திக்கிட்டு இருக்காங்க...

என்னையும் மே மேன்னு கத்த சொல்றீங்களா? பி பிராக்டிகல் மாஸ்டர்...!

அப்டி இல்லை புவனா பாசம்னு ஒண்ணு இருக்கும்ல? என்னைய விடு உன்னோட சொந்தக்காரங்களுக்கு நடந்தாக் கூட இப்டிதான் நடந்துக்குவியா?

மாஸ்டர் உண்மையான பாசம் பொய்யான பாசம்னு ஒண்ணுமே உலகத்துல கிடையாது. இன்னும் சொல்லப் போனா பாசம்ன்றது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான தேவைன்னு சொல்லலாம். ரொம்ப சென்டிமென்ட்டா அம்மாவோட பாசம் பொய்யா? ன்னு கேள்வி எல்லாம் கேக்காதீங்க...

சுட்டுப் போட்டாலும் என்னால அறிவை விட்டு வெளியில நின்னு பேச முடியாது. அம்மாவாவே இருந்தாலும் அம்மாவுக்கு பிடிக்காம நடந்து கிட்டீங்கன்னா அவுங்களே உங்களுக்கு எதிரி ஆயிடுவாங்க...

இது எல்லாம் விட்டுத்தள்ளுங்க மாஸ்டர். நம்ம வாழ்க்கைல ஒரே ஒரு உன்னதமான விசயம் தொடர்புகள். இப்படியான தொடர்புகள் இல்லாம வாழ முடியாது. அந்த தொடர்புகள் என்ன தொடாத மாதிரி நான் தொடர்புகள வச்சுக்கிறேன். அவ்ளோதான்...

ஒருவேளை நான் சொல்றது உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் பிடிக்காம இருக்கலாம்...மே.. பீ நீங்க அப்டீ இருங்க ! தப்பு இல்லை. ஆனா என்னை ஏன் அப்படி நீ இல்லன்னு கேக்காதீங்க...!

நான் நானா இருக்கேன் மாஸ்டர்....!

சொல்லிவிட்டு மாஸ்டரை பார்த்தேன்.... காற்றில் கேசம் பறக்க எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தார். மாஸ்டர் அழகுதான் ஆனால் ரசிக்க கூடிய, வேண்டிய இடத்துல இருந்து எல்லோத்தையும் அவர் ரசிக்கிறதால அத்துமீறாத அந்த வசீகரம் எனக்குப் பிடிச்சு இருக்கு. இப்படி பிடிச்சு இருக்குன்னு சொல்றதுக்கெ பயப்படறவங்க இருப்பாங்க...

கேட்டா... சமுதாயம் கட்டமைப்புன்னு நிறைய விறகு கட்டைகள எடுத்து நம்மள சுத்தி அடுக்கி வச்சு எப்படா எரிக்கலாம்னு பாத்துட்டு இருப்பாங்க..? எனக்கு பயம் இல்லை பிடிக்கும்னா பிடிக்கும்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன்.... ! இதை மாஸ்டர்கிட்டயே நேரா சொல்லி இருக்கேன்...

ஒரு நாள்...இது காதலா இருக்குமா மாஸ்டர்னு கேட்டப்ப? மாஸ்டர் சொன்ன பதில்தான் அவர இன்னும் அறிவார்த்தமா பாக்க வச்சுது...

ஏன் புவனா? காதலா இருந்தா என்ன இல்லன்னா என்ன? ரசிக்கிற வரைக்கும் ரசனைகள் கண்ணியமானவைகளா இருக்கணும்னு அவ்ளோதான் ன்னு சொன்னாரு பாருங்க... அங்கதான் மாஸ்டரோட தெளிவு புரிஞ்சுது...! அவர் கல்யாணம் ஆனவர், அவருக்கு குழந்தை இருக்கு அப்டீன்றது எல்லாம் எனக்கு கூடுதல் விபரங்கள், ரசனையான மனுசன் அவருக்கே அவரோட வாழ்க்கையை ரசனையா வச்சுக்கத் தெரியும் , அப்டீன்றதால அது பத்தி ஏதாவது சொல்லி என் மூக்கை எப்பவும் நான் நுழைக்கிறது இல்லை...

இன்னும் சொல்லப்போனா அவர் ஒரு ஆண், நான் ஒரு பெண் இப்டி ஒரு கனக்ட்டிவிட்டில நாங்க பாக்குறதோ பேசுறதோ கிடையாது. அவர் என்னையும், நான் அவரையும் உணர்வுகளால சுவாரஸ்யப்படுத்துறதால... பழகுறோம்...

இந்த சுவாரஸ்யம்ன்ற விசயத்துல பெரும் பங்கா இருக்குறது என்ன பத்தி அவர் தேவையில்லாம அதிகம் தெரிஞ்சுக்கவோ அல்லது அறிவுறுத்தவோ அல்லது அவர் கூடவே நான் இருக்கணும்ன்ற பிடிவாதமோ இல்லை. அதே மாதிரிதான் எனக்கும்....

சமயத்துல நானும் மாஸ்டரும் மாதக்கணக்கா கூட சந்திக்காம இருந்து இருக்கோம் சமயத்துல கேப்பே இல்லாம மணிக்கணக்கா கூட பேசி இருக்கோம்..இது ரெண்டுக்குமே காரணத்தை நாங்க தேடிகிட்டது இல்லை.

என் யோசனையைக் கலைத்துப் போடும் படியா மாஸ்டர் என்னைப் பாத்து புன்னகைத்தார். என்ன மாஸ்டர் சிரிக்கிறீங்க...? நான் கேட்டேன்...

இல்லை புவனா? பெரும்பாலும் பெண்கள் ஆணாதிக்க சமுதாயம்னு சொல்லிக்கிறாங்க, ஆனா ஒரு காலத்துல ஆண்கள் திட்டம் போட்டு நல்ல வசமாவே பெண்களை அடிமைப்படுத்தி தனக்கு கீழ வச்சுக்கணும்னு நினைச்சாங்க.. ! இப்பவும் சிலர் அப்டி இருக்காங்க...

இப்டி நான் சொல்லும் போதே இன்னொரு விசயத்தையும் உன்கிட்ட சொல்லணும், அதாவது பெண்கள்லயே இன்னும் நிறைய பேரு பெண் அப்டீன்னா என்னனு தெரியாமதான் ஆணாதிக்கத் திமிரை ஒடுக்குவோம்னு கோசம் போடுறாங்க?

ஒரு பெண் தான் விடுதலை பெற்றதா எதைச் சொல்றா தெரியுமா?

எதை மாஸ்டர்...? கேள்வியாய் பார்த்தேன்...

ஒரு ஆணைப் போல தான் நடந்துக் கொள்வதாலும், உடுத்துவதாலும், பேசுவதாலும் கால் மேல கால் போட்டு சபையில் உக்காருவதாலும் தான் சுதந்திரமாய் இருப்பதா நம்புறா? அப்டியும் இருக்கலாம்....

ஆனா,

ஒரு பெண் தன்னை பெண்ணா 100 சதவீதம் வெளிப்படுத்திக்க எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும் எடுத்துக் கொண்டு தானே தானாக தன்னை வெளிப்படுத்திக்கிற இடம்தான் உண்மையான புரிதல்னு நான் நினைக்கிறேன் புவனா.

அப்சலுயூட்லி கரெக்ட் மாஸ்டர்...! பாரதி திமிர்ந்த ஞானச் செறுக்கோட இருக்க சொன்னான்....ஆனால் ஞானத்தை விட்டுட்டு திமிரை மட்டும் வசதியா தலையில தூக்கிட்டு போறது நிறைய பேருக்கு ஈசியா இருக்கு மாஸ்டர்.. ஹா ஹா...ஹா....!

நான் ஒண்ணு சொல்லவா மாஸ்டர்...?

சொல்லு புவனா...... மாஸ்டர் அனுமதித்தார்...

போன வாரம் என்னை பொண்ணு பாக்க ஒருத்தர் வந்தார்...! ரொம்ப கேசுவலா பேசிட்டு இருந்தவர்.. ஒரு உண்மைய உன்கிட்ட சொல்லணும் புவனா.... அதை சொல்றது என் கடமைன்னு நான் நினைக்கிறேன்...னு சொன்னார். நான் சரி சொல்லுங்கன்னு சொன்னதும்..., அவர் சொன்னார்..

என்னோட பாஸ்ட் லைஃப்ல பல பெண்களோட எனக்கு உறவு இருந்துச்சு, அதுல ஒரு மூன்று நான்கு பெண்கள் கூட ரொம்ப நெருக்கமான உறவும் ஏற்பட்டுச்சு..., ஆனா இப்போ இல்லை புவனா.....நான் உன்கிட்ட உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன் அதான் சொல்லிட்டேன்.. ! நான் உன்கிட்ட மறைக்க விரும்பலை....உண்மையா இருக்க விரும்புறேன்னும் சொன்னார்....

நான் பதிலுக்கு அட பரவாயில்லை மிஸ்டர் ரகு. எனக்கு அதுல எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்க சொல்றத நான் கேட்டுக்கிட்டேன் உங்க பெருந்தன்மையான பகிர்தலுக்கு எனது பாராட்டுக்கள்னு சொல்லிட்டு....

நான் ஒரு விசயம் சொல்லணும்..சொல்லலாமான்னு கேட்டேன்....! சரி புவனா...கோ எகெட்னு சொன்னார் அந்த எதார்த்தவாதி....

லுக் மிஸ்டர் ரகு....! எனக்கு கூட நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்காங்க, அதுல ரென்டு மூணு பேர் கூட இல்லை ஒரே ஒருத்தர் கூட கொஞ்சம் நெருக்கமா நான் பழகி இருக்கேன்.. அதாவது நீங்க குறிப்பிட்ட அதே ரேஞ்ச்ல..

ஆனா இனிமே அது மாதிரி எல்லாம் நடக்காது... ! திருமணம்னு ஒண்ணு ஆன உடனே ஒரு கட்டுக்குள்ள உங்கள மாதிரியே நானும் வந்துடுவேன் .. நீங்க இதை கேசுவல எடுத்துக்கணும்னு சொன்னேன்....

ஹா ஹா ஹா இன்ட்ரஸ்டிங் புவனா? அதுக்கு என்ன சொன்னார் ரகு...?

நான் தொடர்ந்தேன்...கல்யாணம் நின்னு போச்சு மாஸ்டர்... ஹா ஹா...! ஒரு பொண்ணு இப்டி இருக்கக் கூடாதாம்.....உலக சம்பிரதாய சட்டத்துல ஆண்களுக்கு மட்டும் இப்படி அதிகாரம் இருக்காம். அதை அவுங்க ஒத்துக்கிடும் போது அது பெருந்தன்மையாம்.. நாங்க கடவுளின் அவதாரமா அவரைப்பார்த்து எல்லோர்கிட்டயும் அவர் எவ்ளோ நல்ல மனசு உடையவர் தெரியுமான்னு கொண்டாடணுமாம்...

டாமிட்.... அவன் சொன்ன உண்மைய நான் ஏத்துக்கணும்.. ஆனா நான் சொன்ன பொய்யை அவனால ஏத்துக்க முடியாது.. இதைத் தான் நான் கன் வச்சு சூட் பண்ணனும்னு சொல்றேன் மாஸ்டர்...!

எனக்கு பிடிச்சு இருக்குன்னு வச்சுக்கோங்க ஒரு ஆணோட என்னால க்ளோசா இருக்க முடியும்.. அது எப்ப வேணா நான் செய்யலாம்....அதுக்கு கல்யாணம் கத்திரிக்கா ஒண்ணும் எப்பவுமே தடை கிடையாது மாஸ்டர்....

சரி எது? தப்பு எது? ன்னு முடிவு பண்ண வேண்டியது தனித் தனி மனுசங்க? எனக்கு என்னமோ நிறைய ஆம்பளைங்க கல்யாணம் பண்ணிகிட்டு செக்கியுரிட்டி ஆபிசர்ஸ் மாதிரி வைஃப்ங்கள சுத்தி சுத்தி வர்ற மாதிரிதான் தோணுது...

பொண்ணுங்களும் தாலிய எடுத்து கண்ணுல ஒத்திகிட்டு சாகுற வரைக்கும் நான் உனக்கு உண்மையா இருக்கண்டான்னு ஒவ்வொரு தடவையும் ப்ரூப் பண்ணிகிட்டே இருக்காங்க....

நான்சென்ஸ்...! இயல்பா வாழ முடியாதா மாஸ்டர்...?

நான் பேசி முடிக்கவும் மாஸ்டர் கை தட்டினார்....! இப்டி இருக்கணும் புவனா.... இயல்பா ஆணும் பெண்ணும் இல்லாம இருக்கறதுக்கு நிறைய காரணம் இருக்கு...அதைப் பத்தி அடுத்து நாம மீட் பண்றப்ப பேசலாம்...

ஆனா நீ பேசுறத எல்லாம் பாத்துட்டு உனக்கு திமிர் ஜாஸ்தின்னு இந்த உலகத்துல 99% சொல்லுவாங்க...ஆனா இப்டி இருக்கறதுதான் இயல்புன்னு நான் சொல்வேன்...

ஒரு வேளை நான் பொண்ணா இருந்தா உன்ன மாதிரி இருந்திருப்பேனான்றதும் டவுட்.. அதனாலேயே உன்னை உன் செயலை ரசிக்க முடியுது என்னால..

ம்ம்ம்.... டைம் ஆச்சு ஒரே விசயம் சொல்லிட்டு கிளம்பலாம்...! என்னோட கொலிக் ஒருத்தன் என்ன பாத்து கேட்டான்...ஏண்டி இவ்ளோ திமிரா இருக்கியே... ஆம்பளைங்க நாங்க சட்டைய கழட்டிப் போட்டுட்டு....ரோட்ல நடப்போம் உன்னால முடியுமாடி? ன்னு...

நான் சொன்னேன்...இல்லடா என்னால முடியாது சத்தியமா முடியாது ஒத்துக்குறேன்.

ஆனா நீ ஆம்பளைதானே..... உன்னால எல்லாமே முடியும்ல..... ஒரு மாசம் டெய்லி புடவை ஜாக்கெட் போட்டுகிட்டு, வளையல் போட்டுகிட்டு , அல்லது சுடிதார் போட்டுகிட்டு உன்னாலே ஆபிஸ்க்கு வர முடியுமாடா?ன்னு கேட்டுட்டு

என்னால பேண்ட் சர்ட் போட்டுகிட்டு ஆயுசு பூரா வரமுடியும்னும் சொன்னேன்.....

ஹி ஹி ஹின்னு சிரிச்சுட்டு போய்ட்டான் மாஸ்டர்...!

செய்ய முடியுமான்னு கேட்டா? அது மாதிரி ஆயிரம் நாமளும் திருப்பி கேக்கலாம்ல மாஸ்டர்.

ஆணாதிக்கம் மட்டும் இருக்குன்னு நான் சொல்ல வரலை மாஸ்டர், பெண்களுக்கும் பெண்ணா இருக்கறதுன்னா என்னனு முழுசா தெரியலை...! இப்டியே பேசிட்டு இரு, தனியா போகும் போது நாலு பேரு சேந்து உன்னை நாசம் பண்ணப் போறாங்கன்னு எங்கம்மா சொல்றதுக்கு பின்னாடி கடைஞ்செடுத்த பொது புத்திதான் இருக்கு மாஸ்டர்...

ஏன்னா.....நாலு பேரு ஒண்ணா சேந்தா ஒரு ஆம்பளைய கூடத்தான் என்ன வேணா பண்ணலாம்....ஹா ஹா ஹா!

மாஸ்டர் இருட்டிடுச்சு மணி 8 ஆகப் போகுது எனக்குப் பிரச்சினை இல்லை.....உங்க வைஃப் உங்களத் திட்டப் போறாங்க கிளம்பலாம் மாஸ்டர்..!

பேசி முடித்தேன்....!

சரி புவனா கிளம்பலாம் பாத்து போ... கேட்ச் யூ வென் எவர் இட்ஸ் பாஸிபிள்....

பை...சொன்னார்....!

கவலைப்படாதீங்க மாஸ்டர்.. சின்ன சைஸ் கத்தி, பிளேடு எல்லாம் ஹேண்ட் பேக்ல இருக்கு.... சீக்கிரமே கைத்துப்பாக்கி ஒண்ணு வாங்கி வச்சுக்கலாம்னு இருக்கேன்.... ஹா ஹா ஹா!

தூரத்தில் கடல் வானில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

" உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்..."


....பாரதி எனக்குள் மீசை முறுக்கிப் பாடிக் கொண்டிருந்தான்...நான் நடக்கத் தொடங்கினேன்!


தேவா. S


6 comments:

வெளங்காதவன் said...

அருமை அண்ணே!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//அந்த தொடர்புகள் என்ன தொடாத மாதிரி நான் தொடர்புகள வச்சுக்கிறேன். அவ்ளோதான்...//

...Awesome lines!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//கேட்டா... சமுதாயம் கட்டமைப்புன்னு நிறைய விறகு கட்டைகள எடுத்து நம்மள சுத்தி அடுக்கி வச்சு எப்படா எரிக்கலாம்னு பாத்துட்டு இருப்பாங்க..? எனக்கு பயம் இல்லை பிடிக்கும்னா பிடிக்கும்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன்.... ! //

..ஆயிரம் அர்த்தம் கொண்ட.. ஆழ்ந்த வரிகள். புவனா மாதிரி இருக்குறது.. பெட்டர்!!

...அருமையான பாத்திர படைப்பு. உள்வாங்கி ரசித்து படித்தேன்!

...புவனா.... புதுமை!! :)

ரேவா said...

ஒரு பெண் பார்வையில் ஒரு ஆணோட பதிவு ரொம்ப அழகா, எதார்த்தமா இருந்த்தது...அதிகம் ரசித்தேன் அண்ணா...ஒவ்வொரு வரிகளையும் எதார்த்தம் கொண்டு செதுக்கி இருக்கிறீர்கள்...

// கொஞ்ச நேரத்துல வயிறு பசிக்க ஆரம்பிச்சுடும்...மாஸ்டர மறந்துட்டு பசிக்குது என்னடா சாப்பிடலாம்னு தேடி ஓட ஆரம்பிச்சுடுவேன்...ஹா ஹா ஹா!//

எதார்த்தமும் இதுதான்..சூப்பர் அண்ணா....

//எப்பவுமே பிறருக்காக வாழ்ற மாதிரி நடிக்கிற ஒரு ஆட்டு மந்தைக் கூட்டத்துக்குள்ள எல்லோரும் சுத்திகிட்டு மே மே..ன்னு கத்திக்கிட்டு இருக்காங்க...//

வாவ்...பிராக்டிகல் அழகியலாய்...

//பாசம்ன்றது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான தேவைன்னு சொல்லலாம்.//

சரியான உண்மை அண்ணா

//ரசிக்கிற வரைக்கும் ரசனைகள் கண்ணியமானவைகளா இருக்கணும்னு அவ்ளோதான்...//

என்ன ஒரு ரசனையான எழுத்து...சூப்பர்...

//ஒரு பெண் தன்னை பெண்ணா 100 சதவீதம் வெளிப்படுத்திக்க எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும் எடுத்துக் கொண்டு தானே தானாக தன்னை வெளிப்படுத்திக்கிற இடம்தான் உண்மையான புரிதல்னு நான் நினைக்கிறேன்...//

சரிதான் ஆனாலும் பெண்ணா 100 சதவீதம் வெளிப்படுத்திக்க சாத்தியக்கூறுகள் இருந்தாலும், சிலரால் தன்னை வெளிப்படுத்த தயங்குற பெண்கள் இங்கே அதிகம்...

//திருமணம்னு ஒண்ணு ஆன உடனே ஒரு கட்டுக்குள்ள உங்கள மாதிரியே நானும் வந்துடுவேன் .. நீங்க இதை கேசுவல எடுத்துக்கணும்னு சொன்னேன்....//

ஹ ஹ இதுக்கான பதிலை பதிவை படிக்காமலே புரிஞ்சுக்க முடியும் அண்ணா...

/உலக சம்பிரதாய சட்டத்துல ஆண்களுக்கு மட்டும் இப்படி அதிகாரம் இருக்காம். அதை அவுங்க ஒத்துக்கிடும் போது அது பெருந்தன்மையாம்.. நாங்க கடவுளின் அவதாரமா அவரைப்பார்த்து எல்லோர்கிட்டயும் அவர் எவ்ளோ நல்ல மனசு உடையவர் தெரியுமான்னு கொண்டாடணுமாம்...//

ஒரு பெண்ணோட மன நிலையில இருந்து நீங்க எழுதுன இந்த எழுத்து ரொம்ப ஆசிர்யமாய் இருக்கு அண்ணா..ஒரு பெண்ணால் ஒரு ஆணுக்கும், ஒரு ஆணால் ஒரு பெண்ணுக்கும் பதிப்பு இருந்தாலும், ஒரு ஆண் ஒரு பெண்ணையும், ஒரு பெண் ஒரு ஆணையும் சார்ந்தே வாழவேண்டிய நிலைமை இங்கு மட்டும் தான்...

//பொண்ணுங்களும் தாலிய எடுத்து கண்ணுல ஒத்திகிட்டு சாகுற வரைக்கும் நான் உனக்கு உண்மையா இருக்கண்டான்னு ஒவ்வொரு தடவையும் ப்ரூப் பண்ணிகிட்டே இருக்காங்க....//

நான்சென்ஸ்...! இயல்பா வாழ முடியாதா மாஸ்டர்...?

இது தான் என் கேள்வியும் கூட அண்ணா...சூப்பர் சூப்பர்...

//நீ பேசுறத எல்லாம் பாத்துட்டு உனக்கு திமிர் ஜாஸ்தின்னு இந்த உலகத்துல 99% சொல்லுவாங்க...ஆனா இப்டி இருக்கறதுதான் இயல்புன்னு நான் சொல்வேன்...//

கரெக்ட் தான்...நம்ம இயல்ப
இயல்பா எடுத்துகிட்டவங்க எத்தன பேரு இருக்காங்க...

அப்பறம் அந்த திமிர் ஜோக் சூப்பர்...எவ்ளோதான் புவனா துணிச்சலான பெண் ன்னு காட்டினாலும், கடைசியா பாதுகாப்புக்கு சின்ன சைஸ் கத்தி, பிளேடு (சீக்கிரமே) கைத்துப்பாக்கி, இது தானே இன்னைக்கு இருக்கிற நிலைமையும் கூட... ஒரு பெண்ணை பற்றி, பெண்ணோட உணர்வுகளை பற்றி எழுதுனால இந்த பதிவுக்கு கமெண்ட் போட்டேனோ தெரியல..ஆனா ஒவ்வொரு வரியும் ரசித்தேன்...

சே.குமார் said...

அருமை.. ரசித்து படித்தேன்.

Anonymous said...

Unmai, sila uravukalukku peyar illai. Aanal mariayadai konnadau inda uravu- Meera