Pages

Saturday, September 24, 2011

தேடல்.....24.09.2011!

தெளிவான ஒரு விடயத்தை வழங்கிய புத்தனை இந்திய தேசம் தவற விட்டு விட்டது அல்லது தவற விடப்பட்டது என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கடவுள் என்ற ஒன்றினை தகர்த்தெறிந்து தானே தன்னை உணர்தலை வாழ்க்கையாய் வாழ்ந்து விட்டுப் போன ஒரு புருசனை சிலை வடித்து வணங்கி அவரின் பெயர் சொல்லி புத்த மதம் என்றாலும் அதுவும் புத்தனுக்கு எதிரானதே...!

புத்தர் என்ன தான் போதித்தார்? என்றுதானே கேட்கிறீர்கள், அவர் ஒன்றுமே போதிக்க வில்லை என்று நான் சொல்வது உங்களுக்கு முட்டாள்தனமாய் தெரியும் ஆனால் அதுதான் உண்மை. காலங்களாய் போதிக்கிறேன் போதிக்கிறேன் என்று நமக்குள் ஏற்றி வைத்த மூட்டைகளை எல்லாம் இறக்கி வைக்க ஒரு பாதையை அவர் காட்டியிருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்வேன்.

தேவை என்பது எப்போதும் துன்பத்தை தராது. ஆனால் ஆசை என்பது கட்டாயமாய் துன்பத்தை தரும் என்று அவர் கூறியதன் பின்புலத்தில் தேவை வேறு ஆசை வேறு என்று உணர்வதற்கே பல காத தூரம் சிந்தனையை செலுத்தி பின் அறுக்க வேண்டும். பசி என்பது தேவை ருசி என்பது ஆசை. காமம் என்பது தேவை குரோதம் என்பது ஆசை, உறக்கம் என்பது தேவை சோம்பல் என்பது ஆசை...

இப்படியாக வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இந்திய தேசம் புத்தரை ஏன் தவற விட்டது? என்ற கேள்விக்குப் பின்னால் பலரின் பிழைப்பு ஒளிந்திருக்கிறது. பூசாரிகள், மதத்தலைவர்கள், சாதிப் பிரிவுகள் என்று எல்லோரும் தமது கல்லாவினை கட்ட புத்தர் உதவவேயில்லை.

உலகம் மாயை என்று அவர் ஒரு போதும் சொன்னதில்லை. உலகின் மீது நீ வைக்கும் பற்றுதான் மாயை என்றார். கடவுள் ஒருவர் இல்லை என்றும் இருக்கிறார் என்றும் அவர் பகிரவே இல்லை. ஏனென்றால் அப்படியான வாதமே தவறென்பது அவருக்குத் தெரியும்.

மதத்தின் பெயரால் இன்று இத்தனை அயோக்கியதனங்களும் உருவெடுத்திருப்பதற்கு காரணம் கடவுள் என்ற ஒரு புரட்டு என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அல்லது என்னை அடிக்க வருவீர்களா? கோவில்களின் தாத்பரியங்களை விளங்கிக் கொள்ளாமல் அங்கே யாரோ ஒருவர் இருப்பதாகவும் அவரோடு நேரடித் தொடர்பு கொண்டவர்களாக பூசாரிகளையும் சாமியார்களையும் ஏற்றுக் கொள்வதும் அறீவீனம் என்று நான் சொன்னால் என்னை ஏற்றுக் கொள்வீர்களா இல்லை அடிக்க வருவீர்களா?

நீங்கள் என்ன செய்தாலும் சரி நீங்கள் சொல்லும் கடவுள் இது வரை உங்களிடம் நேரே வந்ததே கிடையாதுதானே....! யாரோ ஒரு சாமியார் தாடியை வளர்த்துக் கொண்டு உங்களை ஆசிர்வாதம் செய்வது மட்டும் தொடர்ச்சியாய் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கோவில்கள் மனதை ஆராயும் ஒரு கருவியாய் செயல்படுகின்றன என்பதை கடைசி வரை நம்மை உணரவிடாமல் இருப்பதே பூசாரிகளின் வேலையாய் இருக்கிறது.

கடவுள் என்ற கொள்கை போலியானது ஆனால் நமது உணர்வு என்பது எப்போதும் உண்மையானது அதற்கு எந்தப் பெயரையும் புத்தர் வைக்க விரும்பவில்லை. இரு...இருப்பதை அறி. அறிந்ததை தெளி தெளிந்ததை வாழ்வாக்கு வாழ்க்கை விட்டு விலகாதே என்பது எவ்வளவு நிதர்சனமோ அவ்வளவு நிதர்சனமானது புத்தர் என்ற உண்மையும்.

பிரபஞ்சம் என்பது எங்கோ இருப்பது போன்ற ஒரு மாயையை நமது மனது ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். நாம் எப்போதும் அங்கேதான் இருக்கிறோம் என்று அது உணர்த்துவதே இல்லை இதை உணர விடாமல் நம்மை பல கொள்கைகளும் சித்தாந்தங்களும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கின்றன.

சக மனிதனை இழிவு செய்ய மதங்களும் கடவுளும், கொள்கைகளும் நிகழ்த்தும் கொடுமையினைக் கண்ட தந்தை பெரியார் அவர்கள் மிகக் கடும் சினம் கொண்டு சொன்ன வார்த்தைகள்தான்...

கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிரண்டி; போதித்தவன் அயோக்கியன்; அதை நம்புவன் மடையன் என்று...!

ஆமாம் உங்கள் கடவுள் சாதி பிரிவுகளுக்கு உதவுகிறார், சக மனிதனை அடிமைப்படுத்த உதவுகிறார், உங்களைச் சிந்திக்க விடுவதில்லை, பரிகாரங்கள் கேட்கிறார் என்றால் ஒவ்வொரு நியாயவானும் மேற்கொண்ட கூற்றை சொல்லித்தான் ஆகவேண்டும்.

சுபிட்சமான வாழ்க்கையை வாழ உதவாத ஒன்று கடவுளாய் இருக்குமெனில் அதை தூக்கி எறிந்து விட்டுத்தான் நாம் வரவேண்டும். போதனைகள் மனித வாழ்க்கையை நல் வழிப்படுத்த வேண்டும் மாறாக சீர்குலைக்கிறது எனில் அவை போதனைகளா? அல்லது இரத்தம் குடிக்கும் வழிமுறைகளா?

புத்தர் போதிக்க வில்லை உங்களையும் என்னையும் வாழச் சொல்கிறார். காட்டு மிராண்டியாய் இருந்த மனிதன் நாகரீகம் என்ற ஒன்றை கைக்கொண்டு மேலேறி வர எந்த கடவுளும் உதவவில்லை மாறாக தன்னைப் பற்றிய சுய சிந்தனையே உதவியிருக்கிறது என்பதை மாறி வரும் வாழ்க்கையில் நிகழும் எல்லா சம்பவங்களும் சாட்சியாக கூற ஏதோ ஒன்றை ஏன் பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி...?

கடவுள் இல்லை என்று கூறுவதும் இருக்கிறார் என்று கூறுவதும் மனித அகங்காரத்தைதான் வளர்த்துப் போடுகிறது. அறிந்தேன் என்பதை அறியாது இருக்குமிடத்தில் மலரும் பரிபூரணத்தை ருசிக்க மனித மனத்துக்கு எப்போதும் திடனில்லை அதனால்தான் அது கடவுள் என்னும் ஒரு சுவரை பிடித்துக் கொண்டே இருக்கிறது.

கடவுள் இல்லை என்று கூறி ஏதோ ஒன்றை நிறுவ போராட வேண்டாம் இருக்கிறது என்று கூறியும் உருண்டு புரள வேண்டாம் மாறாக வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள் பரிபூரணமான ஒரு விழிப்பு நிலையில் இதை தான் புத்தர் உணர்த்தினார்.

காட்டு மிராண்டிகளாக இருந்த ஒரு சமுதாயத்தை சீர் தூக்கி ஒரு வழித்தடத்தில் நிற்க வைக்க இந்து என்னும் சனாதன தர்மம் உதவியது. அதை இன்னமும் கைப்பிடித்துக் கொண்டு செல்வது நாகரீகம் முன்னேறி ஏரோ பிளேனில் செல்லும் காலத்திலும் கட்டை வண்டியில் ஏறிச் செல்வதற்கு சமம். சனாதான தருமத்தில் சொல்லப்பட்டிறுக்கும் நிறைய விடயங்கள் மனம் என்ற ஒன்றை மனிதன் அறிய கொடுக்கப்பட்ட பயிற்சிகள்....

பயிற்சிகளிலேயே நின்று விடாமல் அதை தாண்டிய பயன்பாட்டிற்கு வித்திட்டது புத்தமதம். சனாதான தருமத்தின் ஆழத்தில் மறைந்து ஒளிக்கப்பட்டிருந்த ஒரு அற்புதத்தை புத்தர் பேரறிவு என்ற ஞான ஒளியால் வெளியே கொண்டு வந்தார், ஆனால் அது பலபேரின் பிழைப்பில் மண் போட்டு விடும் அபாயம் இருப்பதை தெளிவாக உணர்ந்த ஒரு கூட்டத்தினர் சாதுர்யமாக இந்த மண்ணில் இருந்து புத்தரின் போதனைகளை முறித்தெறிந்து விட்டனர்.

புத்தரை பின்பற்றுகிறேன் என்று அவரை ஏற்றுக் கொண்ட தேசங்களிலும் மீண்டும் தத்தம் பிழைப்பினை முன்னிறுத்தி புத்த மதத்தின் பெயராலேயே மீண்டும் வேறு திசைக்கு மனிதர்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளுணர்வை கவனியுங்கள்; அது இசைக்கும் கீதத்தினை கேளுங்கள், வாழ்க்கை விட்டு நீங்கள் எங்கும் சென்று விடவில்லை. ஒரு காற்றில் கொடி அசைவது போல, பூக்கள் பூப்பது போல, காற்றில் பரவும் நறுமணத்தைப் போல இசைவாய் வாழ்க்கையை வாழுங்கள்...

மனமென்ற ஒன்றினை அறியுங்கள் அதற்காய் மாதத்தில் ஒரு நாளாவது மெளனமாயிருங்கள். எப்போதும் அடுத்தவரோடு பேசி பேசி அலுக்கவில்லையா உங்களுக்கு....? தினமும் சிறிது நேரமேனும் உங்களோடு பேசுங்கள்....

வாழ்க்கை நகர்விற்கு பொருள் அவசியம். பொருளை பிரதானமாகக் கொண்ட உலகில் பொருளை மாயா என்று கூறுவதும் மடத்தனம். பொருளைக் கைக்கொள்ள மனதால் திட்டமிடுங்கள் தேவைகளை எடுத்து வரிசைப்படுத்துங்கள்.....பொருளை சேர்க்கும் எல்லா வழிமுறையும் நமக்கு நிம்மதியைத் தருகிறதா என்றூ பார்த்து, பார்த்து செயல் செய்யுங்கள்...

நான் இப்படித்தான் என்ற கட்டினை உடைத்து எறியுங்கள், மனித சமுதாயத்திற்கும் இந்த வாழ்க்கைகும் தீங்கு தரும் எல்லா விடயங்களையும் கொளுத்தி எரியுங்கள், உண்மையான பரிகாரங்கள் நமக்குள் நம்மை சீர் திருத்தும் படி இருக்கட்டும்.

பேசிக் கொண்டே ....இதோ நான் யாரிடமோ பேசுவது போல எனக்குள்ளேயே பேசிக் கொள்கிறேன்.....என்னை உற்று நோக்குகிறேன். மாறும் தன்மையுள்ள வாழ்க்கையில் சூழலுக்கு ஏற்ப எல்லாம் மாறுகிறது. வார்த்தைகளால் மனிதர்களை மாற்றுவதும், நாம் மாறுவதும் இயலாத ஒன்று என்பதை காலம் காலமாய் இயற்கை போதித்து வந்து இருக்கிறது

மாறாக அனுபவங்களை செரித்து உள்வாங்கிக் கொள்ளும் போது அவை தெளிவாக அடுத்த நிலைக்கு கூட்டிச் செல்லும் ஆசானாய் இருக்கின்றன. எல்லா தொடர்புகளோடும் இயங்கும் இந்த தருணத்தில் நான் என்னை அறிகிறேன்...என்னை அறிய எனக்கு மனம் ஒரு ஆயுதமாய் இருக்கிறது....

நான் இருக்கிறேன்...சுவாசத்தோடு சேர்ந்து எப்போதும் என்னை கவனித்தபடி....அழுந்த பதியாத எண்ணங்களை அழித்தபடி....தொடர்கிறேன் என் தேடலை...


தேவா. S

6 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இரு...இருப்பதை அறி. அறிந்ததை தெளி தெளிந்ததை வாழ்வாக்கு வாழ்க்கை விட்டு விலகாதே//

...இதை அறிவதற்கே.. நம் மனத்தோடு நாம் பேச வேண்டும் போல இருக்கிறது. உண்மை தான்..

...மாதத்திற்கு ஒரு நாளாவது மௌனமாய் இருந்து பாருங்கள்! :)
கண்டிப்பாய் செய்ய வேண்டிய ஒன்று!

///கடவுள் இல்லை என்று கூறி ஏதோ ஒன்றை நிறுவ போராட வேண்டாம் இருக்கிறது என்று கூறியும் உருண்டு புரள வேண்டாம் மாறாக வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்///

...எப்படிங்க இவ்ளோ அழகா சொல்ல வந்த கருத்தை வலியுறுத்தி பதிய வைக்கிறீங்க.

உங்கள் தேடலில் சில தெளிவுகள் கண்டேன். நன்றி!

சே.குமார் said...

தெளிவான தேடல்...
உங்கள் எழுத்துக்கள் தேடலுக்கு உணர்வை மட்டுமல்ல உயிரையும் கொடுத்திருக்கிறது.

கிருஷ்ணா said...

////இரு...இருப்பதை அறி. அறிந்ததை தெளி தெளிந்ததை வாழ்வாக்கு வாழ்க்கை விட்டு விலகாதே ////

:)

கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
கிருஷ்ணா said...

////காட்டு மிராண்டியாய் இருந்த மனிதன் நாகரீகம் என்ற ஒன்றை கைக்கொண்டு மேலேறி வர எந்த கடவுளும் உதவவில்லை மாறாக தன்னைப் பற்றிய சுய சிந்தனையே உதவியிருக்கிறது என்பதை மாறி வரும் வாழ்க்கையில் நிகழும் எல்லா சம்பவங்களும் சாட்சியாக கூற ஏதோ ஒன்றை ஏன் பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி...? ////

அட....கடவுள் இதுக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை தன் கோவிலுக்கு வரும் பக்தனுக்கே உதவவில்லை....
சமிபத்தில் சபரி மலை கோவிலில் 100 பக்தர்கள் (?) ஜீப் கவிழ்ந்த போது "ஐயோ அப்பா" என்று அலறியவர்களை ஐய்யப்பன் காப்பற்றவிலை....
ஆனாலும் வருடம் வருடம் ஆட்டு மந்தை கூட்டம் பெருகுவது போல மக்கள் கூட்டம் குறைந்த பாடில்லை...இது ஒரு உதாரணதுக்கு ...இது போல பல கதைகள்

sivamjothi28 said...

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454