Pages

Sunday, May 19, 2013

கனவுகள் பூக்கும் காடு.....!கொஞ்சம் காலம் முன்பு ஹார்மோன் செய்யும் கலகம்தானடா என்ற பெயரில் ஒரு தொடரை தொடங்கி  இரண்டாவது பாகத்தோடு நிறுத்தியிருந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது. கனவுகள் வாழ்க்கையை  ஆள்கிறது. அதனால் மீண்டும் கனவுகளை நிரப்பிக் கொண்டு எல்லைகளற்ற பெருவெளியில் சிறகுகளை விரிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். 

இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பித்திருந்த நேரத்தில் பதிவுலகம் என்ற ஒன்று இருந்தது. நிறைய பதிவர்கள் தினம், தினம் எழுதிக் கொண்டிருந்தனர். தமிழில் தட்டச்சு செய்து நமது உணர்வுகளைப் பதியலாம் என்று ஒருவித உற்சாகத்தில் நிறைய, நிறைய, நிறைய பேர்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. படிக்க பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் மதிய உணவு கிடைக்குமே என்று பள்ளிக்குச் செல்லும் சிறுவனைப் போல இலக்கிய தாகத்தில் எழுத வந்த ஆள் இல்லை நான்...வாழ்க்கையின் ஓட்டத்தில் கிடைத்த அலாதியான நினைவுகளை எழுதிப் பார்க்க வந்தவன்.

எல்லோரையும் போல சமூகக் கோபங்கள் எனக்கும் இருக்கிறது. சமூகத்தின் அடிப்படையில் இருக்கும் புரிதலின்மைக்கு காரணம் ஆன்மவிழிப்பு இல்லாததுதான் என்பதை உறுதியாக நம்புவன். ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் கட்டிடங்களுக்குள் கடவுள் தேடும் ஒரு வழிமுறை அல்ல. நேர்த்திக்கடன் வைத்து நிறைவேற்றி விட்டு அதற்கு பலன் எதிர்பார்க்கும் கொடுக்கல் வாங்கலும் இல்லை. எனக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன என்று ஆராய்வதே எனக்குத் தெரிந்த ஆன்மீகம்.

தன்னைப் புரிந்து கொள்ளாத மனிதன் ஒருக்காலும் மற்ற மனிதனுக்கு வழிகாட்ட முடியாது. தன்னைப் புரிந்து கொண்டவன் கூட வழிதான் காட்டமுடியுமே அன்றி கூட்டிச் செல்ல இயலாது. சைவ சமயத்தை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் பிறந்ததனால் என்னால் கட்டுக்கள் இன்றி எல்லா பக்கத்திற்கும் புலிப்பாய்ச்சல் பாயமுடிந்தது. அப்படி பாய்வதற்கான சுதந்திரத்தை என் பெற்றோர்கள் எனக்குக் கொடுத்திருந்தார்கள். சர்வம் சிவமயம் என்னும்  சைவசித்தாந்தத்தின் அடிப்படை எனக்கு உதவியது. கடவுள் எங்கே இருக்கிறார் என்ற தேடல்... யார் கடவுளாய் இருக்கக் கூடும் என்றும் யோசிக்க வைத்தது. 

தேடலின் வெளிப்பாடே எழுதும் ஆர்வத்தை உண்டாக்க... அறிந்ததை... உணர்ந்ததை... எழுதிப்பார்க்க இந்த வலையுலகம் ஒரு நல்ல களமாய் எனக்கு இருந்தது. நிறைய நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது. எழுதும் எழுத்து நன்றாக இருக்கிறதோ இல்லையோ உனக்கு நான் மறுமொழியும், திரட்டிகளில் வாக்கும் இட்டு விடுவேன் எனக்கு நீ இடவேண்டும் என்று ஒரு கையெழுத்திடாத ஒப்பந்தம் அன்றைக்கு பதிவர்களிடம் இருந்தது. நானும் மொய் வைத்திருக்கிறேன், எனக்கு மொய் வரவேண்டும் என்பதற்காகவே....

நிறைய பேரை வாசிக்க வைக்க திரட்டிகளில் பதிவுகள் மேலே வரவேண்டும். அதற்கு பதிவர்களாகிய சக நண்பர்களின் உதவி வேண்டும்.  வாக்கு செலுத்தி வாக்கு வாங்கியும் இருக்கிறேன். இன்றைக்கு காலம் பதிவுலகம் என்ற ஒன்றையே உடைத்துப் போட்டு விட்டிருக்கிறது அல்லது நான் அந்த கட்டமைப்பில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வலைப்பக்கத்தை வாசிக்க வருபவர்களுக்கு எந்த ஒரு சமகால லெளகிக சந்தோசங்களும் கிடைக்காது. கவர்ச்சிகரமான வசீகரிக்கும் எந்த ஒரு விசயமும் என்னிடம் இல்லை. நிலையாமை பற்றி நான் பேசுவது நிறைய பேருக்கு அலர்ஜியாய் இருக்கும். இருக்கும் வரையில் வாழ்ந்து சென்று விடலாமே... ஏன் நிலையாமை பற்றி எல்லாம் யோசிக்கவேண்டும் என்பது அவர்களின் எண்ணம்.

பிறந்த எல்லாம் மரிக்கத்தான் வேண்டும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இடையில் ஏன் எனது, எனது என்று வாழ்ந்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமே எனது கேள்வி. இங்கே என்னால் ஆனது என்று ஒன்றும் இல்லை. ஒரு செயலை நான் பூர்த்தி செய்ய குறைந்தது இன்னொருவர் உதவி எனக்கு வேண்டும், இப்படி இருக்கையில் நான் செய்தேன்...என்னால் மட்டுமே முடியும் என்று எண்ணுவது எல்லாம் மிகப்பெரிய மாயை.

இப்போது ஆன்மத் தேடல் இருக்கும் சிலர் தொடர்ச்சியாக இந்தத் தளத்தை வாசிக்கிறார்கள் என்பது எனக்கு ஒரு உந்து சக்தியாய் இருந்து எழுதவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. மனிதர்களின் புத்திக்கு எட்டாத விடயங்களைப் படைத்து விட்டு படியேறி வந்து படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மாமேதைத்தனம் கொண்டவர்களையும் கொண்டது இந்த சமூகம். அதே போல எனது அருட்தந்தை, ஆன்மீக வழிகாட்டி, எழுத்துலகின் குரு, ஐயா திரு. பாலகுமாரன் போன்றவர்கள் வாழ்வியலை, மனித வாழ்வின் சிக்கல்களை, அவர்களைச் சுற்றி இருக்கும் முரண்களை, ஆன்மீகத் தேடலை, கடவுளின் அவசியத்தை, ஒழுக்கத்தை, நெறி முறைகளை, அன்பை, சகிப்புத்தன்மையை, ஞானத்தை தங்களின் எழுத்தில் குழைத்து குழைத்து கொடுத்து பேரறிவுப் பால் புகட்டியதால் வளர்ந்த குழந்தைகள் என்னைப் போல எத்தனையோ பேர்கள்.

சாமானியனைச் சென்று சேராத எழுத்து இருந்து என்ன பயன்? அது பொக்கிசமாகவே இருக்கட்டும்... ஆனால் பயன் தராத பொக்கிசம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். வெகுஜன தொடர்புக்காய், புரிதலுக்காய் எழுத்து பயன்படவேண்டும். ஆன்மீகம் என்னும் பேரறிவைப் பகுத்தறிவு என்னும் புரிதலின்மையால் இந்த சமூகம் மறுத்துக் கொண்டிருப்பதற்கு நம்மிடையே இருக்கும் ஆன்மீகப் போலிகளும், மூட நம்பிக்கைகளுமே காரணம். தன்னுள் இருக்கும் வெறுமையை, காலித்தன்மையை உணர்ந்தவனுக்கு கிரீடங்கள் எதற்கு? பக்தர்கள் எதற்கு? கற்றுக் கொடுக்க காசு எதற்கு? நான் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மமதை எதற்கு...?

ஆன்ம உயர்வு எல்லோரையும் சமமாய் பார்க்கச் சொல்கிறது. வாஞ்சையோடு மனதால் அன்போடு  அணைத்துக் கொள் என்கிறது. குழந்தைகளை கை பிடித்து அழைத்துச் செல்லும் ப்ரியத்தோடு சக மனிதரை அழைத்துச் செல்லச் சொல்கிறது. திருப்தியின் உச்சத்தில் என்ன தேவைகளை இந்த உலகம் கொடுத்து விட முடியும். நான் வெறும் காலியானவன், என்னுள் எண்ணங்கள் வந்து வந்து செல்கின்றன அவ்வளவே என்று உணருமிடத்தில் பேரமைதியைத் தவிர வேறொன்றும் இருப்பதில்லை. நிறைய பேர் இங்கே தன்னை யாரென்று பிரகடனப்படுத்திக் கொள்ளவே எழுதுகிறார்கள். ஆனால் பாலகுமாரன் ஐயா போன்றவர்கள் போகிற போக்கில் தங்களின் அகந்தையை அழித்துக் கொள்வதோடு வாசிப்பவனின் அகந்தையையும் சேர்த்தே அழிக்கவும் செய்கிறார்கள்.

எழுதுபவன் தனது ப்ரியத்தை எழுத்தில் கரைத்து எழுத வாசிப்பவனால் அந்த ப்ரியத்தை உணரமுடிகிறது. நிறைய பேர் வாசிக்க அந்த ப்ரியம் திரும்ப எழுதியவனுக்குப் போய்ச் சேருகிறது. அங்கீகாரம், பட்டம், பதவி, கூட்டம் இவை எல்லாம் கடந்து ஒரு மனிதனுக்கு தேவை எவ்வளவு பேர்கள் அவனை நேசிக்கிறார்கள் என்பதே...

எழுதுவது ஒரு தவம். இங்கே பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு, புகழ் பெறவேண்டும் என்ற ஆசையோடு மட்டும் எழுத வருபவர்களை எழுத்து தூக்கி விடுவது போல தூக்கி விட்டு சறுக்கி விழச்செய்து விடுகிறது. தலைக்கனத்தோடு வருபவர்கள் தலைகுப்புற விழுந்து விடுகிறார்கள். தன்னை மிகச்சிறந்த எழுத்தாளன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வருபவர்களின் புத்தியிலிருந்து கற்பனாதேவி இறங்கிப் போய்விடுகிறாள். பிறகு இவர்கள் கற்பனையை எழுத முடியாமல் கர்வத்தை எழுதுகிறார்கள். வாசிப்பவன் கர்வத்தை வாங்கிக் கொண்டு பின் காறி உமிழாமல் என்ன செய்வான்.....?

வாழ்க்கை ஒரு அழகிய கவிதை அதில் அர்த்தங்கள் தேடுவது அபத்தம். வாழ்க்கையை  அதன் பரிபூரணத்தை வெறுமனே வாசித்து விட்டு, ரசித்து நகர்ந்து விடுதல் சுகம். பட்டாம் பூச்சியைப் பார்க்க மட்டுமே உங்களுக்கு அனுமதி... அதன் அழகை ரசித்தபடியே நகர்ந்து விடுங்கள்...அதைப் பிடித்து அதன் இறகிலிருக்கும் வர்ணத்தைப் பற்றி ஆராய்ந்து குரூரத்துக்குள் விழுந்து விடாதீர்கள்.

மீண்டும் கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு வருகிறேன். தொடர்ச்சியாய் இனி ஹார்மோன் செய்யும் கலகம்தானடா தொடரை (?!) எழுதுகிறேன் யாரேனும் ஒரு பத்து பேர் வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு. முந்தைய பாகங்களை இந்த சுட்டியை சொடுக்கி வாசித்துக் கொள்ளுங்கள். 

அந்தக் கதையில் வேறு என்ன இருக்கப் போகிறது...

என் வாழ்க்கையின் 
திரும்பிய பக்கமெல்லாம் 
எதிர்ப்படுவது...
காதலும் கடவுளுமன்றி 
வேறெதுவுமில்லை....!

வாழிய நலம்....!


தேவா. S5 comments:

ஜீவன் சுப்பு said...

// யாரேனும் ஒரு பத்து பேர் வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு. //

காதல் மீதும் கடவுள் மீதும் நம்பிக்கை இல்லை , இருந்தும் வாசிப்பேன் உங்கள் நம்பிக்கைக்காக ...!

எப்பொழுதுமே அறிமுகமில்லாதா ஒரு எதிர்பாலின குரல் ஒருவித தவிப்பையும் ரசிப்பையும் உள்ளூர கொடுத்துவிட்டுதான் போகின்றது . ஹார்மோன் கலாட்டா நல்லாவே கலக்குது ...!

Unknown said...


உங்கள்
எழுத்தில் கிடைக்கும்
அமைதியான
உணர்வுகளுக்காக

ஓடிக்கொண்டு இருக்கும்
ஜீவன்களில்
ஒருவராய்
வருகிறேன்
பத்தோடு ஒன்றாக .....

திண்டுக்கல் தனபாலன் said...

பல வரிகள் சாட்டையடி...

ஹார்மோன் செய்யும் கலகத்தை தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

தனி காட்டு ராஜா said...

///நானும் மொய் வைத்திருக்கிறேன், எனக்கு மொய் வரவேண்டும் என்பதற்காகவே....


////

:)

தருமி said...

// எதிர்ப்படுவது...
காதலும் கடவுளுமன்றி
வேறெதுவுமில்லை....!//

காதல் = ஹார்மோன்
கடவுள் = ?????