Skip to main content

யாசகன்...!



வீதியிலிறங்கியாயிற்று. தீர்மானத்திலொரு மாற்றமுமில்லை. கடமைகளென விதிக்கப்பட்ட பொய்களை புள்ளி விபரத்தோடு தீர்த்துமாயிற்று. தேவைகளை தீர்த்த பின்பு யாருக்கும் தேவையில்லாதவனாய் என்னை மாற்றிக் கொண்டாயிற்று. உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறேனென்ற கள்ளப் பெருமிதம் கொண்ட உடலைப் பொதியெனச்  சுமந்து சிரித்தபடியே உயிராய் கிளம்பியாயிற்று.

கால்களின் திசைகளை தயவு செய்து கணித்து விடாதே என் புத்தியே, கனவுகள் என்று எந்தக் கருத்தையும் விஸ்தரித்துப் பார்த்து விடாதே என் மனமே..! நான் காலப் பள்ளத்தை அறிவினை உடைத்தெறிந்து தாண்டி இருக்கிறேன். கற்பிதங்கள் கொண்ட வாழ்க்கையை தீயிட்டுக் கொளுத்திய திருப்தியில் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் வடிவம் தேவைகளில் இல்லை. வாழ்க்கையின் வடிவம் தேவைகளற்றது. நிபந்தனைகளற்றது... கொள்கைகளற்றது... சிந்தனைகளற்றது. துள்ளியோடும் புள்ளி மானின் தேவைகளை தீர்த்துக் கொள்ள அது யாதொரு கருத்தும் எடுத்துக் கொள்வதில்லை. இட்ட பிச்சையை புசிக்கும் ஞானத்தை பேரிறை இயற்கையாக்கி வைத்துவிட்டு மனிதனை மட்டும் செயற்கையாக்கி வைத்து விட்டது.

எங்கோ செல்லட்டும் என் பயணம். யாருக்காகவும் இல்லாது மரிக்கட்டும் எனது உயிர். ஏதோ ஒரு கானகத்தினூடே செல்லரித்துப் போகட்டும் இந்த உடல். யாசகனுக்கு என்ன திட்டம் வேண்டி இருக்கிறது. இட்டால் பிச்சை, இடாவிட்டால் பசி. எந்தச் செடியும் காய்கறியை விற்பனைக்காய் உற்பத்தி செய்வதில்லை. எந்த சுனையும் பொருள் வாங்கிக் கொண்டு தாகம் தீர்ப்பதில்லை. விளைபவைக்கு என்ன வியாபார யுத்தி தெரியும்? இயற்கையை செயற்கையாக்கி வர்ணமடித்து, அலங்காரம் செய்து நான் செய்தேன் என்று கூறி பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன தெரியும் இந்த மனிதர்களுக்கு..?

இருந்ததைதானே நீ கூட்டிக் கழித்து கண்டேன் என்கிறாய்..? எல்லாவற்றையும் நீ கூட்டிக் கழிக்கிறாய் உன்னை யார் கூட்டிக் கழித்தது...? உன் ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும் இடைப்பட்ட பேரமைதியில் படுத்துக் கிடப்பது யார்...? நான் யாசகன். எனக்கு மனிதர்களின் கூட்டு தேவையில்லை. அடர் கானகங்களில் வழிந்தோடும் நீர் என்னிடம் என்ன பேரம் பேசி விட்டா தண்ணீர் குடிக்கச் சொல்லப் போகிறது...? பறிக்க ஆளின்றி மண்ணில் விழுந்து கிடக்கும் கனிகள் என்ன.. நம்மிடம் காசு கொடுத்து விட்டு கை வை என்றா சொல்லப் போகிறது...?

வாழ்க்கை உங்களுக்கு அருளப்பட்டது. நீங்கள் வாழ்க்கையை நாசப்படுத்தினீர்கள். இப்படியாய் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டு அதை வரலாறு என்றீர்கள். மனிதர்கள் மனிதர்களை அடக்குவதைப் பெருமை என்றீர்கள். வலு உள்ளவனைத் தலைவன் என்றீர்கள்..., அழகாயிருந்த எல்லாவற்றையும் ரசிக்க மறந்து அடைய நினைத்தீர்கள்...

உங்களைச் சுற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி சந்தோசத்தை எல்லா பாகங்களிலும் நிறைத்து வைத்திருந்தது இயற்கை என்னும் பேரிறை.. நீங்கள் கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொண்டு ஒழுக்கம் என்னும் பொய்யைச் சுமந்தபடியே எல்லா வெளிச்சத்தையும் அணைத்து விட்டு இருளில் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்...!  இயற்கைக்கு தெரியாத ஒழுக்கமா என்ன? பூமியின் ஒழுக்கத்தில்தான் உங்களின் இரவும் பகலும் தனக்கு 24 மணிநேரம் என்று கணக்கிட்டுக் கொண்டது. அது சூரியனை சுற்றும் ஒழுக்கம் தான் உங்களின் வருடமாகிப் போனது..?

அதன் ஒவ்வொரு நகர்வும் உங்களுக்கு காலங்கள் என்று போதிக்கப்பட்டது. இயற்கையின் ஒழுக்கம் உங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தது. நீங்கள் உருவாக்கிய ஒழுக்கங்கள் உங்களைப் பைத்தியக்காரர்களாக்கி வைத்திருக்கிறது. ஆமாம்...

நாடென்று ஒரு ஒழுக்கம் உண்டாக்கி எல்லைகளை வகுத்துக் கொண்டீர்கள். என்னவாயிற்று..? எல்லைகள் கடந்து கால்கள் பதித்தால் மிருகமென மாறி உயிர் பறித்துக் கொண்டீர்கள். மொழியென்ற ஒரு ஒழுக்கத்தை பின்பற்றி பெருமைகள் பேசிக் கொண்டீர்கள். என்ன ஆனது..? உங்கள் மொழியே பிராதனமென்று கூறி சக மனிதரிடம் வன்மம் கொண்டீர்கள். மதமென்ற ஒரு ஒழுக்கத்தையும், சாதியென்ற ஒரு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டு மனிதரை மனிதர் ஈனப்படுத்தி கொலைகள் செய்து கொண்டீர்கள்? இப்படி எதை எதையெல்லாம் ஒழுக்கம் என்று இயற்றினீர்களோ அவை எல்லாம் உங்களின் அழிவுக்கான மரண சாசனம் ஆகிப் போய்விட்டது.

வழிமுறையை சொன்ன ஞானிகளை எல்லாம் கொன்று போட்ட உங்களின் ஒழுக்கங்கள், பல ஞானிகளின் கூற்றை வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டு விட்டு அந்த அயோக்கத்தனத்திற்கு துணையாய் அவர்களின் பெயர்களை போட்டுக் கொண்டது.

இதோ...உங்கள் ஒழுக்கங்களை எல்லாம் என் காலடியில் போட்டு மிதித்து விட்டேன். இப்போது நான் ஒரு யாசகன். யாசகம் என்பது பிச்சை அல்ல. யாசகம் என்பது வாழ்க்கை. யாசகம் என்பது தியானம். யாசகம் என்பது தான் யாருமல்ல என்னும் அகங்காரம் அழிக்குமொரு வித்தை. சூரியனிடமிருந்து  பெற்ற பூமியின் யாசகத்தில் பகல்களைக் கொண்டாடும் பிச்சைக்காரர்கள்தானே இந்த பூமி முழுதும் நிரம்பிக் கிடக்கிறார்கள். என் வார்த்தைகளை  எல்லாம் எரித்து விட்டேன். என் சொற்கள் எல்லாம் பட்டுப் போய்விட்டன. என்னைச் சுற்றிலும் என்னை அடையாளம் காண எந்த மனிதரின் அவசியமும் எனக்குத் தேவையில்லை. போதும் நான் புலனறிவோடு வாழ்ந்தது.

எப்போதும் பேசாத மலைகள், எப்போதும் பேசும் மரங்கள், பாதுகாப்புக்காய் வன்மம் கொள்ளும் விலங்குகள், யாருக்காகவும் நிற்காத நதி என்று என் முன் எதிர்ப்படும் எதுவுமே என்னிடம் நான் யாரென்று விசாரிக்கப் போவதில்லை. நான் யாருமில்லை என்பதை மனிதர்களிடம் சொல்லி சொல்லி நான் அலுத்துப் போய்விட்டேன். மனிதர்களின் ஆறாம் அறிவுக்கு எட்டாத பகுத்தறிவின் உச்சம் மட்டுப்பட்ட நிலையிலிருக்கும் யாவும் விளங்கி நடக்கும் விந்தையை என் விழிகளால் வாங்கிக் கொள்ளப் போகிறேன்.....

தொப்புள் கொடி அறுத்து நான் விட்டுப் பிரிந்த பெற்றவளின் நினைவுகளை எத்தனை முயன்றாலும் அறுக்க முடியாத அஞ்ஞானத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்  பிரபஞ்சத்தின் மூலத் தொடர்பை, கருவறைக்குள் மிதந்து கொண்டிருக்கையில் உணவு கொடுத்த பெருங்கருணையின் அன்பை, அப்போது என் உடல் நிறைத்த பிராணனை... இதோ.. இதோ நான் பரிபூரணமாய் அனுபவிக்கத் தொடங்கி விட்டேன்....

எங்கிருந்து பிச்சை இடுகிறானோ அந்தக் கருணா மூர்த்தி... இதோ புலன்களை எல்லாம் பூட்டிக் கொண்டு தொடங்கி விட்டது இந்த யாசகனின் பயணம்....

அவித்தை அழிக்கும்
வித்தைக்காய்...
கொண்டேன்
ஒரு ஜட சரீரம்...!

வித்தையானவன்
வித்தையறிந்தவன் சித்தம்
இதுவெனெ கிடந்து
போக எத்தனிக்கையில்
நித்தம் நடந்திடும் 
நாடகங்களில் பித்தனாகிறேன்
நான்!

என்று தொடங்கியோ..?
என்று முடியுமோ...?
இந்த சத்து சித்துவின் ஆனந்தம்!
பற்று கொண்டு நான்
வாழ்ந்து அழிகையில்
வந்து போகுமோ 
ஒரு காரணம்?


தேவா. S



Comments

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...