Pages

Saturday, May 18, 2013

முள்ளிவாய்க்கால் சோகம்...நான்காமாண்டு நினைவுநாள்!நான்காண்டுகள் ஓடோடி விட்டன. ஆறாத வடுக்களாய் இன்னமும் நம்முள் பரவிக்கிடக்கும் சோகச் சுவடுகளை காலம் எப்போதும் அழித்து விடமுடியாது. உலகில் இருக்கும் தொன்மையான கட்டிடங்கள், பறவைகள், விலங்குகள், நினைவுச் சின்னங்கள் எல்லாம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும் என்று மனிதம் பெருமைப் பேசிக் கொண்டிருந்த போதே மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மூத்த மொழி பேசி வாழ்ந்த ஒரு தேசிய இனம்  கொத்து கொத்தாக ஈழத்தில் இன்றுதான்  அழித்தொழிக்கப்பட்டது. அடிப்படையில் சுதந்திரமாய் தன் சொந்த மண்ணில் வாழ விரும்பிய ஒரே காரணத்திற்காக போராடிய மக்களை அநீதி கொன்றழித்ததை  பதிந்து கொண்டு காலம் தலைகுனிந்து கொண்டது.

சொந்த மண்ணில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பூர்வகுடிகளின் வாழ்வியியல் உரிமைப் போரட்டத்தை தீவிரவாதம் என்று முத்திரை குத்திய மிருகங்கள் இதோ நம் கண் முன்னே ஆர்ப்பட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சர்வதேசம் எப்போதுமே வெட்கக்கேட்டினை தனது முகத்தில் வடுக்களாய் ஏந்தியபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது. வரலாற்றை திருப்பிப் பார்த்தால்  சத்தியமும் நீதியும் எவ்வளவு ஜெயித்திருக்கிறதோ அதற்குச் சரிக்கு சமமாக அல்லது கூடுதலாக அநீதியும் அடக்குமுறையும் ஜெயித்திருக்கிறது. மனிதநேயம் என்னும் வார்த்தை எப்போதும் சாதகபாதகங்களைப் பார்த்தே பயன்படுத்தப்பட்டுமிருக்கிறது.

பொதுமக்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும், அதுவும் பெண்களை வன்புணர்ச்சி செய்தும் சிங்களவன் செய்த கொலைகளை படங்களாகாவும், காணொளியாகவும் கண்ட பின்னரும் விழித்துக் கொள்ளாத சர்வதேசத்தின் மனிதநேயம் இனி இருந்தால்தான் என்ன செத்தால்தான் என்ன? அன்பும் கருணையும், சகிப்புத்தன்மையும் கொண்ட இந்தியப் பேரரசு தனது அண்டை தேசத்தில் நடாத்தப்பட்ட பெரும் இன அழிப்பினை அதுவும் தனது தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழரை கோடி தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் கொன்றழிக்கப்பட்டதை குரூரமாய் அனுமதித்ததும் அதை தடுத்து நிறுத்தாமல், தட்டிக்கேட்காமல் இன்னமும் கள்ள மெளனம் சாதிப்பதும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை தமிழர்களுக்கும் செய்த ஒரு வரலாற்று துரோகம்.

வரலாற்றில் தமிழன் எப்போதுமே இரண்டு பிரிவாய்த்தான் இருந்திருக்கிறான். அநீதியை எதிர்த்துப் போராட ஒரு கூட்டம் இருந்தால் அவனைக் காட்டிக் கொடுக்க ஒரு கூட்டம் அவன் கூடவே வளர்ந்து வரும். தங்களின் வயிறு வளர்க்க மானத்தைக் கூட அது இழக்கும். மானத்தை விற்று தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள ஈழத்தில் போராடிய மக்களுக்கு நடுவே ஒரு கூட்டமும், தாய்த்தமிழகத்தில் ஒரு கூட்டமும் அது போல இருந்தது. அந்தக் கூட்டம் தமிழர்கள் முன் தாங்களும் தமிழர்கள்தான் என்று நீலிக் கண்ணீர் வடித்தபடியே திரைக்குப் பின்னால் எல்லா நாடகங்களையும் அரங்கேற்றியும் கொண்டது.

இதோ நான்காண்டுகளைக் கடந்து விட்ட இந்தச் சூழலில் தாய்த்தமிழகத்தில் ஈழம் நிஜமான உணர்வாளர்களால் எந்த வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே அளவு போலிகளாலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை பிரச்சினைகள் தமிழகத்தில் இப்போது விரவிக் கிடந்தாலும் ஈழத்தைப் பேசாமல் எந்த ஒரு அரசியல்வாதியும் அரசியலை செய்ய முடியாது என்னும் ஒரு அசாதரண சூழலை ஈழ மண்ணில் உயிரிழந்த எம்மக்களின் மகத்தான தியாகம் இன்று உருவாக்கிக் காட்டி இருக்கிறது. போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தானே செய்யும் என்று சொன்னவர்களும், மழை விட்டாலும் தூவானம் விடாது என்று சொன்னவர்களும் இன்று ஈழம், ஈழம் என்று குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

தொண்டைகளைச் செருமிக் கொண்டு பல தீர்மானங்களை ஈழமக்களுக்கு ஆதரவாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், இந்தியப் பேரரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கிறார்கள். கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்கிறார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இதனால் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது...

என்றாலும் கொத்துக் கொத்தாய் வேதியல் குண்டுகளை போட்டு வெள்ளைக் கொடிகளை ஏந்திவந்தவர்களையும் கனரக ஆயுதங்களைக் கொண்டு சிங்களப் பெளத்த பேரினவாத அரசு அழித்துக் கொண்டிருந்த போது தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகள்  வீதியில் இறங்கி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்காமல் அடக்கி வாசித்த அசிங்கத்தையும் வலியோடு நாம் நினைவு கூற வேண்டி இருக்கிறது.

ஈழத்தின் போரட்டத்தை தயவு செய்து  ஆயுதம் ஏந்திய அகிம்சைக்கு எதிரான போராட்டமாய் பார்த்து விடாதீர்கள் தோழர்களே...!!! தந்தை செல்வா என்னும் ஈழத்து காந்தி அகிம்சை வழியில் போராடிப் போராடி அகிம்சை என்பது மனிதர்களுக்கான போரட்டம் மிருகங்களுக்கானது அல்ல என்று உணர்ந்த பொழுதில் வேறு வழியின்றி அடித்த வலியைத் தாங்காது திருப்பி அடித்தவர்கள் நாம் என்பதை உணருங்கள்.

தமித்தாய்க்கு நூறு கோடி ரூபாய்க்கு சிலைவைக்க திட்டங்கள் தீட்டப்படும் இதே நாம் வாழும் காலக்கட்டத்தில்தான் தமிழ் பேசிய ரத்தமும் சதையுமான நமது உறவுகள் கொன்றழிக்கப்பட்டனர் என்ற உயிர் உறைக்கும் உண்மையை அறியுங்கள்! ஈழத்தமிழர்களின் போராட்டம் தமிழர் வரலாற்றில் வீரம் செறிந்த பக்கங்களில் பொறிக்கப்படவேண்டிய ஒரு போராட்டம் என்பதையும் அதை வழிநடத்திய நமது அண்ணன் பிரபாகரன் தான் என்றென்றும் தமிழகளின் நலம் விரும்பிய தலைவன் என்றும் நமது பிள்ளைகளிடம் அழுத்திச் சொல்லுங்கள்.

வரலாறு என்பது எங்கோ யாரோ எழுதுவது அல்ல தொடர்ச்சியாய் நம் நினைவுகளில் ஊறிக் கிடப்பது. ஒவ்வொரு மே 17 மற்றும் 18களில் நிகழ்ந்தேறிய இன அழிப்பில் வீரச்சாவடைந்த நம் உறவுகளுக்கு ஒவ்வொரு வருடமும் மறக்காமல் நமது அஞ்சலிகளைச் செலுத்துவதோடு ஜனநாயக ரீதியில் நமது வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதையும் எப்போதும் நினைவு கொள்ளுங்கள்.

தமிழர் நலம் பேசுகிற, தமிழர் வாழ்வுரிமை பற்றிய தொலைநோக்குப் பார்வைகள் கொண்ட, தனித்தமிழ் ஈழத்திற்கு ஆதரவு கொடுக்கிற அரசியல் கட்சிகளை மட்டுமே தமிழத்தில் ஆதரியுங்கள். வீதி இறங்கிப் போராடும் அரசியல் நாடக சக்திகள் சாதாரண மக்களாகிய நம்மை  நீங்கள் என்ன செய்து சாதித்தீர்கள் என்று  கேலிகள் செய்யக் கூடும்..... இணையத்தில் எழுதி என்ன கிழித்து விடுவீர்கள் என்று நம்மை ஊனப்படுத்தி இணையப்போராளிகள் என்று ஏளனம் செய்யக்கூடும்....

அவர்களின் பிரச்சாரங்களையும் பரப்புரைகளையும், காலில்  போட்டு மிதியுங்கள்...!!!! உங்களின் மனசாட்சியிடம் கேள்விகள் கேட்டு....யார் தமிழர் நலம் விரும்பிகள்...?யார் தமிழர்களின் வியர்வையை மூலதனமாக்கி நாடகமாடுகிறார்கள் என்பதை கணியுங்கள். ...!

நான் என்னை சேர்ந்த பத்து பேரிடம் சொல்வேன்...நீங்கள் உங்களைச் சேர்ந்த பத்து பேரிடம் சொல்வீர்கள்....சிறுகச் சிறுக நமது உணர்வுகள் பற்றிப் பரவும். வீதி இறங்காமலேயே....மேடை நாடகங்கள் நிகழ்த்தாமலேயே....மெளனமாய் வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் நமது உணர்வுகளைப் வெளிப்படுத்துவோம்.

ஆயிரம் பேர்கள் இந்தக்கட்டுரையப் படித்து தமிழகமெங்கும் பரவி இந்தக்கருத்துக்கள் சென்று சேரப்போவதில்லை ஆனால் என்னைச் சேர்ந்த ஒரு பத்து பேர் வாசிக்க அதில் ஒருவர் உணர்வு பெறக்கூடும்...என்ற விருப்பத்தையே இங்கே எழுத்துக்களாக்கி இருக்கிறோம்...! காலம் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது...நம்மை  கீழே இறக்கி வைத்த காலம் மீண்டும் நம்மை மேலே ஏற்றும்....அன்று தமிழர்கள் கொடி...பட்டொளி வீசி பறக்கும்...!

மே17, 18ல் முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கங்கள்!!!!


தேவா. SNo comments: