Pages

Tuesday, April 13, 2010

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு V I
இந்த தொடரின் மூலம் எந்த ஒரு தனிமனிதரின் வாழ்க்கையை பிரபலமாக்கும் முயற்சியை நான் எடுக்கவில்லை மாறாக தினம் மாறிகொண்டிருக்கும் ஒரு நிலையில்லாத ஒரு வாழ்க்கையினைத்தான் நாம் அனைவரும் திடமாக நம்பி....சில தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்....அந்த நிலையாமையின் நெருப்பை அனைவரின் நெஞ்சுக்குள்ளும் கொண்டு வரும் ஒரு சிறு முயற்சி....!

ஒரு பதிவெழுதி நான் சமுதாயத்தின் எண்ண ஓட்டத்தை மாற்றி விடுவேன் என்று சொல்லவில்லை...ஒருவர் அல்லது இருவர் இதை உணர் ந்தாலே...அது கட்டுரையின் வெற்றி.....

தொடர்ந்து செல்வோம்....!

இதுவரை

பாகம் I
பாகம்II
பாகம் III
பாகம் IV
பாகம் V

இனி....

கட்டைகளுக்கு நடுவே வைக்கப்பட்டது உடல்........மறைக்கப்படாமல் இருந்தது முகம். ஒரு தீக்குச்சி தன்னுள் அக்னியை தேக்கி வைத்து அந்த உடலை பஸ்பமாக்க காத்திருந்தது.....! சடங்குகள் எல்லாம்....கடந்து....அக்னி காதலோடு
உடலை அணைத்து.....உருமாற்றிக்கொண்டிருந்தது....! வந்தவர் எல்லாம் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிட.... ஒரு ஓரமாய் அமர்ந்து இருந்த என்னை யாரும் கவனிக்கவில்லை..........

ஒரு முறை மாமாவோடு டீ குடித்துக்கொண்டிருந்தேன்....சூடான டீ...அவரது கையில் கொஞ்சம் தெரியாமல் ஊற்றிவிட்டது.....துடி துடித்து விட்டார் மனுசன்..."தம்பி...கை எரியுதுடா...எரியுதுடா" என்று கலங்கியே போய் விட்டார்.....! இன்று முழு உடலையும் நெருப்பு மேய்ந்து கொண்டிருக்கிறது....பாகம் பாகமாய்....அணு அணுவாய்......! எனக்குள் பாமரத்தனமாய் ஏற்பட்ட ஒரு கேள்வி.. .என்னை தாண்டி உச்சரிப்பாய் வெளியில் வந்து விழுந்தது....." இப்போ சூடா இல்லையா மாமா? உனக்கு இப்போ உடம்பு எரியலையா மாமா? அன்னைக்கு உனக்கு எரியுதுன்னு சொன்னியே.....அப்போ எது உனக்குள்ளே இருந்துச்சு உனக்கு சுட்டது....? இப்போ எது இல்லை உனக்கு சுடமா இருக்கு?....


அக்னி இப்போது இடம் மாறி என்னுள் எரிந்து கொண்டிருந்தது....! இவ்வளவுதான் வாழ்க்கை.... ! தொடர்ந்து நிகந்து கொண்டிருக்கும் எந்த நிகழ்வுகளுக்கும்...இறுதியாய் என்னவாகும் என்ற கேள்விக்கும் சம்பந்தமில்லை.....!

சந்தோசம் மற்றும் துக்கத்தின் அளவுகள் ஏழை பணக்காரன் என்று பார்த்து மாறுவதில்லை...மெர்சிடிஸ் பென்ஸ் இல்லை என்றால் அம்பாசடரில் செல்லும் போது ஒருவன் எவ்வளவு வேதனைப்படுவானோ அந்த அளவே...ஒருவன் சைக்கிளை விற்றுவிட்டு நடந்து செல்லும் போது அதே அளவுதான் அவனது கவலையின் அளவும்...சிலருக்கு லீ மெர்டியனில் உணவருந்தினால் சந்தோசம் சிலருக்கு...முனியாண்டி விலாசிலே அந்த சந்தோசம் கிடைத்துவிடும்....


எல்லா வேறுபாடும் மூளையின் செல்களுக்குள் பதிந்து இருக்கிறது....வெளியில் ஏதும் இல்லை. இதற்கு இடையில் தான் சாதி என்றும் மதம் என்றும் ஓவ்வொரு கூறாக மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்காகவே.....பல குழுக்களை ஏற்படுத்திக்கொண்டார்களே தவிர... நிஜத்தில் உள்ள இறை நிலைக்கும்.... இங்கே கடைபிடிக்கப்படும் விசயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எந்த கடவளையும் நான் பார்த்தேன் உங்களுகும் காட்டுவேன் என்று யாரும் சொன்னதில்லை....! அப்படி சொல்பவர்கள் எல்லாம் ரகசியாமாக கண்டவர்கள்... ஏன் கடவுள் பொதுவாய் தோன்றி நான் தான் கடவுள் என்று சொல்லலாமே.... அப்படி சொன்னால் பாமரர்களும்...படித்தவர்களும் ஒரு நிலை எடுத்து அவரை பின்பற்றலாமே.....? இதுவெல்லாம் நடக்காது என்று கடவுளை கற்பிப்பவர்களுக்கே தெரியும்...இருந்தாலும் அப்படி சொல்லிக் கொள்வதில் ஒரு சுகம் இருக்கிறது.

வாழ்வில் இரண்டு நிகழ்வுகள் மிக உறுதியாக நம்மால் அறுதியிட்டு சொல்ல முடியும்...ஒன்று பிறப்பு....மற்றொன்று இறப்பு...! இந்த இரண்டையும் உற்று நோக்கி தியானம் செய்தால் வாழ்வின் ரகசியங்களுக்கான சாவியும் அந்த சாவியை கொண்டு திறந்தால் கடவுளும் வரலாம்......சென் ஹைகூ சொல்வது போல....

" கதவை திறந்து வை ....
கடவுள் வந்தாலும்
வரலாம்....."


வரமாட்டர் என்பது நிச்சயமல்ல....ஆனால் வருவார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். கடவுளும், காமமும், பிறப்பும், இறப்பும் .... நமக்கு கிடைத்துள்ள துருப்புச்சீட்டுக்கள்...இதனைப் பிடித்து...ஆழ்ந்து உணர்ந்துதான் ....வாழ்வாற்றை கடக்கவேண்டும்....! மரணத்தை பற்றி எழுதினால்...படிக்கவே பயப்படும் மனிதர்களை நினைத்தால் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.....அவர்கள் தள்ளிப்போட்டாலும் நிகழபோகும் ஒன்றுதான். ஒதுக்கி வாழாமல் உணர்ந்துதான் வாழச்சொல்கிறேன்.

மாமா என்ற அடையாளம் அழிந்து விட்டது அல்லது வேறு ரூபமாய் மாறிவிட்டது...அதைப்பற்றி ஆராய்ந்து அவர் எங்கு சென்றார் என்ன ஆனது என்று மேற்கொண்டு நான் ஏதாவது சொன்னால் அது எல்லாம் பச்சைப் பொய்! இந்த நிகழ்வு...அதன் தாக்கம் அதனால் ஏற்பட்ட மாற்றம்தான் முக்கியம்....! சிதையின் நெருப்பு அணைந்துவிட்டது ஆனால் அந்த நிகழ்வு ஏற்படுத்திய கனல் என்னுள் இன்னு எரிகிறது...தொடர்ந்து எரியும்.....!


தொடர்ந்து ....வந்து படித்து கருத்து சொன்ன எல்லா உள்ளங்களுக்கும் நன்றி.....!


பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் (இறை) எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ.

தேவா. S


(முற்றும்.)

4 comments:

Chitra said...

மரணத்தை பற்றி எழுதினால்...படிக்கவே பயப்படும் மனிதர்களை நினைத்தால் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.....அவர்கள் தள்ளிப்போட்டாலும் நிகழபோகும் ஒன்றுதான். ஒதுக்கி வாழாமல் உணர்ந்துதான் வாழச்சொல்கிறேன்.

...... இந்த வரிகளில் பொதிந்து இருக்கும் ஆழமான அர்த்தங்களுக்கு, ஆயிரம் பாராட்டுக்கள், தேவா!


பிறப்பு என்று ஒன்று இருக்கும் போதே - இறப்பு என்றும் உறுதியாக இருப்பது நன்கு தெரிகிறது. எப்பொழுது, எப்படி ..... என்று பயந்து போகாமல், இரண்டுக்கும் உள்ள கால கட்டத்தில் நாம் என்ன செய்கிறோம் - எப்படி வாழ்கிறோம் என்பதே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, தேவா.

Ananthi said...

பிறப்பு, இறப்பு ரெண்டுமே தவிர்க்க முடியாத நிலைகள்.. இதற்கு இடையில் உள்ள காலத்தில் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் மனதில் நிற்கும் விதமாய் நடந்து கொண்டால் நல்லது..

உங்கள் தொடர் பதிவு...மிகவும் அருமை..

யாரும் எழுத தயங்கும்... ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதை.... செவ்வனே முடித்தும் விட்டீங்க..
வாழ்த்துக்கள் தேவா..!!

எஸ்.கே said...

மிக நெகிழ்ச்சியாக இருந்தது! எத்தனை அர்த்தங்கள் இந்த தொடரில்! மிக அற்புதம்! வாழ்த்துக்கள்!

vasan said...

எல்லாம் க‌ட‌ந்து போகும் என்பார்க‌ள் ஆனால் இது போன்ற‌ சில நின‌வுகள் க‌ட‌ந்து செல்லாது
நம்முட‌ன் கூட‌வே நட‌ந்து வ‌ரும். இதே போன்ற‌ அனுவ‌ம் என‌க்கும் உண்டு.
ம‌ர‌ண‌த்தில் மிக‌க் கொடும் ம‌ர‌ண‌ம் த‌ற்கொலையே.