Skip to main content

இதன் பெயர்தான்(னா) காதல்..?!


பார்த்த மாத்திரத்திலேயே முகத்தில் பேயாய் அறைய வேண்டும் அது. நம்மைப் புரட்டிப்
போட்டு வேறு பேச்சொன்றும் இல்லாமல் மூர்ச்சையாக்கி தர தரவென்று இழுத்துச் செல்ல வேண்டும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற பித்தமிகு நிலையில் தன்னிலை மறந்து, புறச்சூழல் மறந்து... இதோ...இவள் தான் என் தேவதை, இவள்தான் என் வாழ்க்கை, இவளின்றி ஏதும் நகராது என் வாழ்வில், இவளே எனது வாழ்வின் ஆரம்பம், இவளே என் வாழ்வின் இறுதி என்று எண்ணி எண்ணி இதயம் துடித்து எகிறி வெளியே விழுந்து விடுமோ என்ற பயத்தில் ஆழமான பெருமூச்சின் உஷ்ணத்தோடு நகர வேண்டும் நாட்கள்...

அது காதல், அந்த காதல் என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனை அவஸ்தைகளையும் செய்யும்....

நள்ளிரவில் அது உறக்கம் கலைக்கும், திக்குத் தெரியாத கருவானின் தீராத தூரத்தை பார்த்தபடி தொண்டை அடைக்க, மூச்சு திணறி அது கேவிக் கேவி அழும், படுத்து கண் மூடி அவளைக் கண்ட அந்த கடைசிக் கணத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து உமிழ் நீரை விழுங்கி ஆசுவாசப்பட்டு கொண்டு சிறகடித்து கனவில் பறக்கும். அப்பப்பப்ப்பா....இவள் இமைகளுக்குள் இருப்பது இரு விழிகளா இல்லை தீக்கங்குகளா என்ற கேள்வியொன்றை கேட்டு கேட்டு அடம் பிடிக்கும் பழக்கப்படாத யானையைப் போல நகராமல் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த பெரும் இரவை மெல்ல மெல்ல கட்டி இழுக்கும். காதல் பர்ப்பதற்கு என்னவோ கனமில்லாத ஒரு பஞ்சைப் போலதான் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும்... ஆனால் காதல் கொள்ளும் போதுதான் அது ஒரு கனத்த மிருகம் ஆனால் பார்க்கமட்டுமே மென்மையானது என்ற ரகசியம் விளங்கும்...

அவள் விழிகளால் புன்னகைப்பாள், உதடுகளால் உச்சரித்து உச்சரித்து உயிர் குடிப்பாள், அவ்வப்போது கேசம் ஒழுங்கு செய்கிறேன் பேர்வழி என்று உயிரை பதற வைப்பாள், எங்கோ பார்ப்பது போல எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பாள், தீரத் தீர வேண்டும் என்பதை வேண்டவே வேண்டாமென்று சொல்வாள், வேண்டவே வேண்டாததைக் கொண்டு வந்து கொட்டு என்பாள், பேசாமலேயே இருப்பாள் ஆனால் தினமும் நினைவுகளில் பக்கம் பக்கமாய் பேசுவாள், கேள்விகள் கேட்டு வராத பதில்களுக்காய் வார்த்தைகளை தேடாமல் மெளனத்தால் மூர்ச்சையாக்குவாள்...ப்ரியத்தைச் சொல்லாமல் சொல்லவும், நேசத்தை கோபமாக காட்டவும் செய்வாள்...
அமிலக்கடலுக்குள் பிடித்துத் தள்ளி நெருப்பெரியும் ராத்திரிகளை பரிசளித்து விட்டு அவள் விழித்திருப்பாளா? உறங்கிக் கொண்டிருப்பாளா என்ற தர்க்கத்திற்குள் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கும் போதே....

அதிகாலையில் ஐ லவ் யூ என்ற மூன்றே வாக்கியத்தில் நம்மை இன்னுமொரு அதிய தினத்திற்குள் தள்ளிவிட்டு... மீண்டும் அவளைக் காணப் போகும் அந்தக் கணத்திற்காய் கடிகார முள்ளோடு சேர்ந்து நொடிக்கு நொடி நகரும் ஒரு பேரவஸ்தையைப் பரிசளிப்பாள்.

காதலொன்றும் ஏதோ வழியில் எதிர்ப்படும் பால்ய சினேகிதனை பார்த்து சிரித்துப் பேசிச் செல்வதைப் போல எளிதானதொன்றுமில்லை, அது சுகமானதுதான் என்றாலும் வலியையும், கண்ணீரையும், ஏமாற்றத்தையும் எதிர்ப்பார்ப்பையும் போட்டுப் பிசைந்து பேரன்புக் கடலுக்குள் தள்ளிவிட்டு இனி இங்கே எதுவுமில்லை இதைத் தவிர என்றும் எண்ண வைப்பது...வாழ்க்கையின் எல்லாப் பொழுதுகளையும், எல்லாப் பருவங்களையும், போதும் போதுமெனுமளவிற்கு வானத்தையும் மேகத்தையும் நிலவினையும், இன்னபிற வாழ்வின் அத்தனை அழகியலையலையும் தன் அடையாளமாக்கிக் கொண்ட காதலென்ற ஒன்றின் ஆதி முத்திரையோடுதான் முடிச்சிட்டுத் தொடங்கியத் இந்த ராட்சச வாழ்வு...

அடிப்பெண்ணே..
சுறாவளியாய் என்னை சுழற்றி 
அடிக்கும் இந்தக் கொடூரக் காதலையா
உன் கருணைமிகு விழிகளிலிருந்து
பிரசவித்து எனக்கு பரிசளித்தாய்...?

இரக்கமில்லாமல் என்னுள் அரற்றிக் கொண்டிருக்கும்
அத்தனை நினைவுகளையும் பெயர்த்தெடுத்து
உன் முன் கவிதையென்று மொழிபெயர்து வைத்து விட்டு
மண்டியிட்டுக் கிடக்கும் இந்த உணர்வுகளை,
விவரிக்க முடியாத என் கனவுகளை....,
நீ பட்டாம் பூச்சியைத் துரத்திப் பிடிக்கும்
சிறுமியைப் போல விரட்டி கொண்டிருக்கிறாய்!

பஞ்சுப் பொதியினில் படுத்துறங்கும் தேவதையாய்
நீ என்னவோ சலனமின்றிதான் இருக்கிறாய் என்றாலும்
கடும் கனவு கண்ட கொடும் ராத்திரியில்
அலறி எழுந்து தாய் தேடும் பிள்ளையைப் போல...
உன்னையே மீண்டும் மீண்டும்
தேடி வரும் என் நினைவுகளை...
என்ன செய்வதென்றறியாமல்தான்...
இதோ இந்த வார்த்தைகளை எல்லாம் 
நான் கடந்து கொண்டிருக்கிறேன்...
விலாசம் தொலைத்த வழிப்போக்கனாய்....




தேவா சுப்பையா...






Comments

அப்பப்பா.... அண்ணா என்ன எழுத்து...
காதல்...அவள் மீண்டும் மீண்டும் மீண்டுமாய் உயிர்த்தெழுந்தாள்...
அருமை.. அருமை...
காதல் கொள்ள வைக்கும் எழுத்து....

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...