Pages

Tuesday, June 28, 2011

போலாம்....ரைட்........!
பஸ்ல ஏறி உக்காந்தா இந்த சனம் பண்ற அலப்பறை இருக்கே ...யப்பா சாமி முடியல..! என்னைய மாதிரி மிடில் கிளாஸ் ஆளுகள படைச்சி நெருப்ப அள்ளிக் கொட்ற இந்த உச்சி வெயிலுல்ல பஸ்ஸுக்குள்ள ஏத்தி விட்டு....வேகாத வெயிலு வெளில அனலடிக்க உள்ள வேர்க்க விறு விறுக்க..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா..மாரநாட்டு கருப்பு முடியலை சாமி....!

இந்த கண்டக்டர்கார பயலும் டிரைவர்காரப் பயலும் எங்க போய்ட்டாய்ங்க...? வண்டிய எடுத்தாய்ங்கன்னா கொஞ்சம் காத்தாச்சும் வரும்...! அந்தா நிக்கிறாய்ங்க பாருங்க இந்த வேகாத வெயில்ல டிரைவரு சாயா குடிச்சிகிட்டு நிக்கிறான்...அவன் பக்கத்துல் கண்டக்டர்காரப் பய போண்டாவ தின்னுகிட்டு....இப்பத்தானய்ய செத்த வடம் முன்னால கண்டுபட்டி காளையப்பன் மெஸ்ல மல்லுக் கட்டி சாப்டீக....அதுக்குள்ள ஒரு சாயா ஒண்ணு போண்டா ரெண்டு....

எல்லாம் காலவெனை....! இவிங்க வண்டிய கொண்டாந்து நிப்பாட்டினதுக்கு கடைக்காரய்ங்க ப்ரீயா கொடுப்பாய்ங்க போல...ஓட்டல்காரய்ங்களும் காசு வாங்கிருக்க மாட்டாய்ங்கன்னு நினைக்கிறேன்....சரி கெரகம் அதப் பத்தி ஏன் நாம பேசிகிட்டு...வெத்தியூரு வெளக்கு வரைக்கும் நாம போகப்போறோம்....இவிங்க கோழி கூப்ப்ட கார திருச்சில இருந்து பத்தியாந்து காரைக்குடியலாச்சும் நிறுத்திருந்துருக்கலாம்...மானகிரில வந்து கரைக்கிட்டா நிப்ப்பாட்டி சாப்புடாறய்ங்கன்னா இப்பிடி நெனைக்க தோணும்லப்பு...

ஏத்தா....கடகத்த வச்சிகிட்டு வெலாவுலயே இடிக்கிறியே..செத்த அத கீழதேன் வச்சா என்னனு கொஞ்சம் வேகமத்தேன் கேட்டுபுட்டேனோ...? வெத்தலைய போட்டுகிட்டு...கண்டாங்கிய கட்டிக்கிட்டு...காதுல போட்டுருக்க பாம்புவடம்...என் முகறையில அடிக்கிற மாதிரி வெரசா திரும்பி பேசின பேச்சுக்கு புளிச்சுன்னு மூஞ்சில துப்பியே இருக்கலாம்..இந்த அப்பத்தா...

அம்புட்டு வெத்தலை எச்சியும் மேல தெரிக்கிது...இதுல ஏச்சு வேற....!!!! ஏம்புத்தா...இப்ப என்ன கேட்டுபுட்டேன்டு...இப்புடி பாயுற...காசு இருந்தா தனியா கார வாங்கி போகத்தெரியாமலா..கவர்மெண்டு பஸ்குல்ல நின்டுகிட்டு நொண்டியடிக்கிறோம்....நல்லாத்தேன் வையிறீக....அட கடகத்த கொஞ்சம் அங்கிட்டு மாத்தி வையுத்தா...வயித்துல இடிக்கிதுன்னு சொன்னா....

என்னமோ நேத்து சமஞ்ச கொமரி மாதிரி பொத்துகிட்டு வருது கோவம்னு சொல்லி வாய மூடல அங்கிட்டு ஒருத்தன் நறுக்குன்னு எங்கால மிதிச்சுகிட்டு வெளியில் எவ்வி சன்ன வழியா வெள்ளரிக்காய வாங்குறான்...

அட மொட்டையா போயிறுவ...காலுடா..வெண்ணை...! அடே....கால மிதிக்கிறாய்டான்னு கத்தி சொன்னதுக்கப்புறம்..என்னப்பு ரொம்பத்தேன் பேசிறீய......கண்டுவார் பட்டி முக்கு தாண்டாதுடி பஸ்ஸு....இறக்கிப்போட்டு வெளுத்துப் புடுவோம்டியோவ்ன்னு....கைய ஒங்கிகிட்டு வர்றான் பாருங்கப்பு....

இப்ப உள்ள இளசுகளுக்கு எல்லாம் மூக்க பொத்துகிட்டு வருது கோவம்....என்ன அப்படி பாக்குறீய இளசுகன்னு சொன்னதால என்னிய இளந்தாரிப் பயவுல்ல இல்லன்னு நெனச்சுப்புடாதீக...நமக்கும் வயசு ஒண்ணும் கூட ஆகல அப்பு....கொஞ்சந்தேன்,.... அட அத விட்டுத் தள்ளுங்க கழுதய...வண்டிய பொக்குனு எடுத்தாய்ங்கன்னா...பொக்குனு போகலாம்னு பாத்தா....எடுக்க மாட்டாய்ங்க போல இருக்கே...

அவிங்கள சொல்லியும் குத்தமில்லப்பு....டிரைவர், கண்டக்டருகன்னு சுளுவா சொல்லிப்புட்டு போயிருவாக எல்லோரும்....அவிங்க படுற பாடுகள பாத்தாலும் பொசுக்குனு ஒன்னும் சொல்ல முடியாத மாறிதேன் இருக்கு...! நம்மள மாறி ஆளுக அம்ம தேவையளுக்கு வந்து போய்கிட்டு இருக்கோம்....

காலம் புல்லா அவிங்க பொழப்பு இந்த காருக்குள்ளதேன் ஓடுதுப்பேய்....! டீசல் வண்டி ஓட்டிகிட்டு இந்த பெல்லா பயவுட்டு கியர போட்டு போட்டு வண்டிய ஒடிச்சு ஓட்டவுஞ்செய்யணும்..ரோட்ல குறுக்கா மறுக்கா வர்ற மனிச மக்களையும், மாடு கண்ணுகளையும் மனசுல வச்சித்தேன் வண்டியவும் பத்தணும். டிரைவர்னு சொல்லிப்புட்டோம்..அவுக வீட்லயும் பொண்ட்டாட்டி புள்ளைய இருக்கத்தானே செய்யதுக...வெள்ளன கோழி கூப்புட எடுக்குற வண்டி...தீயா கொதிக்கிற வெயிலுல அனலா கொதிக்கிற இஞ்சின் பக்கத்துல ஒக்காந்துகிட்டு....ஓட்டிகிட்டு வரதே பெரிய பாடு...

சில சமயத்துல நாம ரொம்ப தொல கார்ல போயிட்டு, நாம எறங்கிப் போகும் போதே..ஆத்தாடி இடுப்பு கழண்டு போச்சுடி பேச்சியாத்தா...கை வலிக்கிதிடி காளியாத்தானு முனகிகிட்டே....வீட்டுக்கு போயி வென்னீரு வச்சி குளிச்சாலும் அந்த அலிப்பு தீர நாலு நா ஆகும்...! ஆனா இந்த வண்டி ஓட்ற டிரவைரு மாருக வண்டிய கொண்டாந்தி நிப்பாட்டி நம்மள் எறக்கி விட்டுப்புட்டு....அரை மணி சென்டு மறுக்கா அந்த வண்டிய எடுத்துகிட்டு...நாம் ஏறுன ஊருக்கே திரும்பிப் போவாக....

அவுகளுக்கும் உடம்பு வலி இருக்கத்தானே செய்யும்...! இப்படித்தேன் சமயத்துல அவுக கஷ்டம் தெரியாம நாம அவுகள ரொம்ப சுளுவா பேசிப் புடுவோம்..! அவுக என்னதேன் டிரவரா இருந்தாலும் மனிசந்தானேப்பு....என்ன நாஞ்சொல்றது..?

எங்கூரு நாடி இருக்குறவய்ங்க எல்லாம் ரொம்ப வேகமான ஆளுகப்பு.., போன வாரம் இப்படித்தேன்...கூட்டமா இருக்குனு வண்டிய நிறுத்தாமா வெரசா போன கண்ணாத்தா பஸ் டிரைவரு வண்டிய மடங்கி ஊரு வழியா வரயில மரிச்சுப் புட்டாய்ங்க.....

அடின்னா செம்ம அடி...பாவம் அந்த டிரைவர் அண்ணே.....கைய எடுத்து கும்பிட்டுகிட்டு நிக்கயில கூட எங்கூரு பயலுக நிறுத்தாம அடிச்சுப் புட்டாய்ங்க...பாவமாத்தேன் இருந்துச்சு...என்ன பண்ணச் சொல்றிய...? நாம ஊடால போயி என்னமாச்சும் சொல்லுறம்னு வச்சிகிறுங்களே....நம்மளையும் போட்டு வெளுத்துப் புடுவாய்ங்க வெங்கம் பயலுக...

அவிங்க அவிங்க அண்ணன் தம்பிய எல்லாம் இந்த வேலைக் கழுதைய கட்டிகிட்டு அழுகுறப்ப தெரியும் அதுல இருக்குற சூதானம். எல்லாமே அப்புடித்தானப்பு...பட்டாத்தேன் திருந்துது ஊருச்சனம்...நாம் சொன்னா "....யேய் யாருப்பா நீயி....வெளக்கெண்ணை பெரிசா டீட்டெயிலு சொல்ல வந்திட்டியளோ..உம்ம சோலிய பாத்துகிட்டு போவியான்னு..." நம்மளத்தானா வைவாய்ங்க...

அட...இது யாரு....ஊடால... வயசனா கெழவி..இந்த வேகாத வெயிலுல்ல...பிச்சை எடுக்க ஏறியிருக்கு பஸ்ஸுக்குள்ல...அடப் பாவி பரப்யாய்ங்களா.....கிழவிய காப்பாத்தாம தெருவில விட்டுப்புட்டாய்ங்களேன்னு மனசு பதறி கேட்டே புட்டேன்...' ஏன் அம்மாயி....வூட்ல புள்ள குட்டிக இல்லையான்னு...' பொசுக்குனு அழுதுபுட்டா களவானி முண்ட.. என் கண்ணுலயும் தண்ணிய வர வச்சுப்புட்டா....புள்ளைக எல்லாம் விட்ருச்சுகளாமுத்தா....பொசுக்குனு பத்து ரூவாய கையில வச்சி அமுக்கிபுட்டு கண்ண தொடச்சிகிட்டேன்...என்ன மனுசப் பொறப்போ...என்ன எழவு செம்மமோ...?

ஆங்ங்ங்ங்.......என்ன சொல்லியிட்டு இருந்தேன்....ஆமா டிரைவரு கண்டக்டரு பொழப்பு பத்திதானே பேசிகிட்டு இருந்தேன்..ஆமாம்...ஆமாம்...! இதுல கண்டக்டர் அண்ணே பாடு இருக்கு பாருங்க....ஆத்தி....அத பத்தி ரொம்ப கேக்காதீகப்பு....! கூட்ட நாட்டத்துல இன்டு இடுவுல போயி டிக்கெட்டும் போடணும்....

மனிசன் கணக்கு வழக்கும் பாக்கணும், ஊடல செக்கிங் ஏறுனாகன்னா கரிக்கிட்டா கணக்கும் ஒப்படைக்கணும்....! அம்ம பயலுக சவுடாலா வண்டியில ஏறிகிட்டு டிக்கெட்டு எடுக்க மறந்துட்டேன்னு ஈசியா பல்ல இளிச்சுக்கிட்டு சொல்லிப் புடுவாய்ங்க.....அதுக்கு இந்தாள் புடிச்சிக்கிட்டு செக்கிங் ஏறுவாப்புல......! அவுக இன்வாய்ஸ் எழுதுறதுக்குள்ள் ஸ்டாப்பிங் போயிருச்சுன்னா....நாட்டானுக திட்றதையும் கேட்டுக்கணும்....

நம்மள எல்லாம் கூட்டியாந்து விட்டுபுட்டு கூட்டிகிட்டு போற வேலைய செய்யுறாக...சம்பளமே வாங்குனாலும் பொழப்பு ரொம்ப கஷ்டந்தேன் சாமி.....! நமக்கு கொஞ்ச நேரம் வெக்கைய தாங்க முடியாம அவுக மேல கோவம் வருது..ரோசிச்சு பாத்ததேன்....வெளங்குது.....

ஆத்தே...டிரைவரும் கண்டக்கிடரும் ஏறிட்டாக.....வண்டி எடுத்திட்டாய்ங்கப்பு....விசிலு சத்தம் உங்களுக்கு கேட்டிருச்சா.....அதானே பாத்தேன்..நீங்க உசாரு தானே...

நான் வாரேன் அப்பு......இனிமேயாச்சும் பஸ்ஸுல ஏறுனா நான் சொன்னத எல்லாம் நெனச்சுப் பாப்பியளா? கண்டிப்பா நினைப்பிய.....!!! பொறவு பாக்கலாமப்பு.....!


தேவா. S


5 comments:

சௌந்தர் said...

அட வண்டியை எடுக்குறதுகுள்ளே என்னமா கதையை சொல்லிப்புட்டீங்க...

நாங்க பஸ்ள்ளே போறச்சே இவங்களை திட்டிட்டே தான் இருப்போமுங்க..!!!

அம்புட்டு கோவம் வந்திட்டு எல்லாம் வெக்கை தான் காரம்....

ஆமா இம்புட்டு சொன்னீங்களே உங்க பேர என்னனு சொல்ல மறைந்து புட்டீங்க....

பேர சொன்னா இந்த அண்ணாச்சி சொன்னாரு நினைவு வைசுப்போம் லே...

சரிங்க அண்ணாச்சி உங்க பஸ் எடுத்து புட்டாங்க அடுத்து எங்க பஸ் தானோ ...!!!

cheena (சீனா) said...

அன்பின் தேவா - உங்கள் வட்டார வழக்கு ( நான் ஆத்தங்குடி ) - அருமை. உண்மை - சற்றே சிந்தித்தால் - பேருந்தின் நடத்துனரும் ஓட்டுனரும் படும் பாடு - பாவமே ! தேர்ந்தெடுத்த படம் - இயல்பான நடை - பேருந்தில் நடக்கும் அத்தனையையும் பற்றிய விவரணைகள். மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் தேவா - நட்புடன் சீனா

சேலம் தேவா said...

எப்பவும் நம் பக்கம் இருக்கும் நியாயத்தை யோசிக்கும் நாம் இன்னொரு பக்கத்தை யோசிப்பதில்லை.ஓட்டுநர்,நடத்துனரின் துன்பத்தை கண்முன் கொண்டு நிறுத்துகிறது உங்கள் விவரனை.அருமையான பேச்சு வழக்கில்...

சே.குமார் said...

தேவா... அண்ணா... நம்ம வட்டார வழக்கில் மிகவும் அருமையான ஒரு பகிர்வு.

Jeyanthi said...

தேவா ! சூப்பர் போங்க !

ஊருக்கு போயிடு வந்த மாதிரி இருக்குங்க. நீங்க எந்த ஊரு ?

சிவசங்கை (சிவகங்கை) ஒரு டிக்கெட் னு கேட்குராப்ள இருக்கு !