Pages

Saturday, June 4, 2011

ஆன்ம யுத்தம்...!

அது ஒரு விடியல் காலை நேரம் இரவு முழுதும் முன்னும் பின்னும் நான் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். ஏதேதோ புத்தகங்களை படித்து கடவுள், பிறப்பு, இறப்பு, இந்த மூன்றுக்கும் அருகே நான் சென்று விடையறிய முற்படும் பொழுதில் தெரிந்தும் தெரியாமலும் விடைகள் என்னை விட்டு விலகிப் போக...

ஆழமான ஒரு கடலின் தரையைத் தொட்டு விடும் வேகத்தில் நீருக்குள் நான் சென்று அந்த கடலின் தரையை என் நடுவிரலால் தொட்டுத் தடவிக் கொண்டிருக்கும் போது நீர் மீண்டும் என்னை மேல் நோக்கி எடுத்துக் கொண்டு வந்தால் என்னவொரு இயலாமை இருக்குமோ அப்படி ஒரு இயலாமை எனக்குள் கோபமாய் வந்ததில் கண்ணீர் என் கண்களை கட்டுப்பாடுகளின்றி கடந்து கொண்டிருந்தது....

நான், நான் என்று அடித்து பிடித்து வாழ்ந்து, சுற்றிலும் பகட்டான மனிதர்கள் கொண்ட ஒரு சூழலில் நான் பல வேறு நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். எல்லாமே அபத்தங்கள் என்று இன்று தெளிவாக உணர முடிந்தது. எனது கிராமத்தில் இருவர் வெட்டிக் கொண்டு இறந்து போயினர்.

காரணம் முனியனின் வரப்பிலிருந்க மரத்தின் வேர் குப்பனின் வரப்புக்கும் பொதுவாக இருப்பது போல இருக்க அந்த உதய மரம் எனக்கு சொந்தம் என்று இவன் சொல்ல அவன் மறுக்க 2000 ரூபாய் கூட பெறாத உதயன் மரம், இருவரின் குடும்பத்தையும் நிற்கதியில் நிற்க வைத்ததோடு அல்லாமல் போலிஸ், கோர்ட் என்று மேலும் சிக்கல்களை தாரளமாய் வழங்கியிருந்தது.

மாதங்களாய் அந்த உதய மரம் வேறோடு வெட்டப்பட்டு அந்த ஊர் போலிஸ் ஸ்டேசனில் கிடந்தது. அது யாருக்குப் போனது என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை ஆனால் முனியனும் குப்பனும் செத்துப் போனார்கள்.

அகங்காரம் கொண்ட மனம் மனிதர்களை எப்போதும் சிந்திக்க விடுவதில்லை. அது எப்போதும் தனக்கு நிறைய தெரியும் என்றும் தனக்கு கீழ்தான் எல்லோரும் என்றும் ஒரு கற்பனைக் காட்சியை தனக்குள் வரைந்து வைத்திருக்கிறது.

வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை என்று அறிந்தும் தெரிந்தும் வீண் ஜம்பங்களை பேசுகிறது. எனது கடவுள், எனது சித்தாந்தம், எனது சாதி எனது மதம், எனது மூளை என்று பல இரும்புக் கம்பிகளை சொருகிக் கொண்டு மனிதர்கள் ஒரு சிறைக்குள் வாழ்கிறார்கள்.

நேற்று வரை நான் கும்பிட்டு வந்த முருகனும் பிள்ளையாரும், சிவனும் மனித வாழ்க்கையை போதிக்க பெரியவர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகள். அவையெல்லாம் ஒவ்வொரு தத்துவத்தை விளக்க கொண்டு வரப்பட்ட காட்சி வடிவங்கள் என்று அறிந்த உடனே எனது தூக்கம் போயிற்று.... அப்படி இல்லை நம்பாதே என்று மனம் எனக்கு கட்டுக்கள் ஏற்படுத்தி மூளையைப் பொய்யன் என்று சொன்னது.....

மூளையோ எந்த சலனமுமின்றி இதுதான் சத்தியம் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். உனது மனதை நீ நம்பினாலும் தடுக்க மாட்டேன். எப்படி இருந்தாலும் எதார்த்ததிற்கு எல்லோரும் வந்துதான் ஆக வேண்டும். நீ மட்டும் விதி விலக்கா என்ன? என்று என்னைப் பார்த்து புன் முறுவலாய் சிரித்தது.

எனது தூக்கம் சுத்தமாய் போய் விட பளீச் என்று விழித்துக் கொண்டேன். மெல்ல எழுந்து பால் கனிக்கு வந்தேன். அதிகாலை மணி நான்கில் சென்னை மெல்ல மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. வானம் இன்னும் கருமையாயிருக்க என் மனதில் இறைவன் என்ற கற்பிதங்கள் எல்லாம் மழையில் கரைந்த அழுக்குகளாய் கரைந்து கோண்டிருந்தன.

எல்லா மதமும் மனித நன்மைக்கே...! எல்லா தேவ தூதர்களும் மனிதரில் சிறந்தவர் மேலும் இந்த உண்மை உணர்ந்தவர்; என்று ஒரு எண்ணமும் இல்லை இல்லை கடவுளர் இருக்கிறார்கள் என்று ஒரு எண்ணம் அதன் பின்னால் மறைந்து கொண்டும் எட்டிப்பார்த்தன.

நான் சட்டை செய்யாமல் எதிலும் என்னை புகுத்தாமல் வெறுமனே நின்று கொண்டிருந்தேன். ஏதேதோ எண்ணங்கள் உருவாக வெறுமனே நிலைகுத்திப் போயிருந்த கண்களுக்கு முன்னால் மாய உலகத்தில் மனிதர்களின் பெருமைகளும் திமிர்களும் எனக்கு நினைவுக்கு வர சட்டென ஒரு கோபம் துளிர்த்தது...

மானுட தவறுகளுக்கும், அகங்காரங்கள் கொண்ட மானுட புத்திகளுக்கும் புத்திகள் புகட்ட வேண்டும். ஏற்றுக் கொள்பவருக்கு என்று ஒரு முறையும், புரியாதவர்களுக்கு ஒரு முறையும், வெறுப்பவர்களுக்கு ஒரு முறையும், மறுப்பவர்களுக்கு ஒரு முறையும், எல்லாம் அறிந்தும் மனிதர்களை கேலிப் பொருள்களாக்குபவர்களுக்கு ஒரு முறையும் என்று தனித்தனியே அஸ்திரங்களாய உருவாக்கப்பட வேண்டும்.

யுத்திகளின் மூலம் மனித புத்திகளுக்குள் நுழைந்து சீர்ப்படுத்த வேண்டும். காலமெல்லாம கற்ற கல்வியும், பார்க்கும் காட்சிகளும் தத்துவங்களும், கடவுளர்களும் எதுவுமே பயன் தராது. மனிதன் விழிக்க வேண்டும். அவனது உள்ளுணர்வு எப்போதும் சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும்.

தன்னையும் சுற்றுப் புறத்தையும் சரியாக வைத்துக் கொள்ள மனிதன் நான் என்று அகந்தையை அழிக்க வேண்டும். அகந்தை அழிக்க தன்னை அறிதல் வேண்டும். தன்னை அறிய பயிற்சிகள் வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயிற்சி. அமைதியாய் சொன்னால் ஏறுபவனுக்கு அமைதியாய், செவுட்டில் அறைந்து ஏற்றுபவனுக்கு செவுட்டில் அறைந்து, வாளெடுத்த் நெஞ்சுக்கு நேரே வருபவனுக்கு இரு கைகள் முறுக்கி காலை ஒடித்து வலி என்றால் என்னவென்று போதித்து உணரவைக்கும் பயிற்சி....

என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும். எது நடந்தாலும் மனிதன் சக மனிதனை நேசிக்கவும் அன்பு செய்யவும் இருக்கும் வரை சந்தோசமாய் வாழவும் வழி செய்ய வேண்டும்....

என் ஆயுட்காலம் குறைவு. ஒரு நூறு பேரின் ஆன்மாவை நான் விழிக்க வைப்பேன். நூறு பேரின் விழிப்பு நிலை ஆயிரமாகும் ஆயிரம் பேரும் சும்மா இருக்க மாட்டார்கள்... ஆமாம் ஆன்ம விழிப்பு என்பது புலி வாலை பிடிக்கும் செயல். ஆன்ம விழிப்பு அடைந்தவன் சும்மா இருக்க மாட்டான். ஏதாவது பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் பைத்தியமாய் இயங்குவான். பிசாசாய் வேலை செய்வான்.

நானும் கூவிக் கூவி கத்துகிறேன். எங்கு பார்த்தாலும் எழுதி வைக்கிறேன். என்னை சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் பதம் பார்த்து நெஞ்சில் என் ஆன்ம கத்தி சொருகுகிறேன்...

நான் தனி அல்ல கூட்டு நிகழ்வின் ஒரு பகுதி. பிரமாண்டத்தின் ஒரு அணு. என்னிடம் பிரமாண்டத்தின் குணங்களுண்டு....! மெல்லிய தீ நான் .. பற்றிப் பரவுவேன்.. காற்றையே எரிப்பேன்.. கரும் கல்லையும் தகர்ப்பேன்....

தொடர்ச்சியாக எனக்குள் எண்ணங்கள் எழுந்து நானே நானாய் நின்று உறுதி பூண்டு கொண்டிருந்த வேளையில், என்னின் ஒரு பகுதியான பூமியில் மானுடர்கள் எழத் தொடங்கிருந்தனர்...

என்னின் பகுதியான சூரியன் மேலெழும்பி செஞ்சுடராய் என்னைப் பார்த்து சிரித்தான். நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்.....

பளீச் சென்று விடிய..... தொடங்கியது எனது ஆன்ம யுத்தம்!


தேவா. S


8 comments:

Anonymous said...

கடவுள், பிறப்பு, இறப்பு, இந்த மூன்றுக்கும் அருகே நான் சென்று விடையறிய முற்படும் பொழுதில் தெரிந்தும் தெரியாமலும் விடைகள் என்னை விட்டு விலகிப் போக... ////////

விலகும் விலகி விலகி செல்லும் ...,சுதந்திரமான பொருளை நீ ஏற்று கொள்ளும் போது விடை சூனியமாகும்

Anonymous said...

கிளாசிக் தேவா ...,தேடு தேடு ...,

Anonymous said...

என்னின் பகுதியான சூரியன் மேலெழும்பி செஞ்சுடராய் என்னைப் பார்த்து சிரித்தான். நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்.....

பளீச் சென்று விடிய..... தொடங்கியது எனது ஆன்ம யுத்தம் /////////


BEAUTIFUL ........................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Anonymous said...

மிக மிக விருப்ப பட்டு ..,இந்த பதிவுக்கு ஒட்டு போடுறேன் ..,என்னால முடிஞ்சது இது தான் .,நீ நிறையா எழுது ,

Kousalya said...

அழகாய் ஆரம்பித்து, அமைதியாய் கொண்டுச் சென்று, ஆக்ரோஷமாய் முடித்திருப்பதில் தெரிகிறது உங்கள் எழுத்தின் ஆளுமை...உள்ளத்தின் வேட்கை...!!

இறுதியில் விடிந்தே விட்டது வானம்...!!

தங்கள் மனதில் எரியும் நெருப்பை படிப்பவர்களின் மனதில் ஏற்றுவது பலருக்கும் கைவராது உங்களுக்கு முடிந்திருக்கிறது...உணருகிறேன் அதை !!

மீண்டும் ஓர் அற்புத படைப்பு.

பாராட்டுக்கள் தேவா !!

தொடரட்டும் உங்களின் ஆன்ம யுத்தம் ! வாழ்த்துக்கள் !!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//மெல்லிய தீ நான் .. பற்றிப் பரவுவேன்.. காற்றையே எரிப்பேன்.. கரும் கல்லையும் தகர்ப்பேன்....//

.....உணர்ச்சிகரமான பதிவு. உங்கள் தீவிரம் என்னையும் பற்றிக் கொண்டது. :)

ஹேமா said...

ஏதோ இடைவெளி விட்டு மீண்டும் அதே தேவா !

Anonymous said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி