Pages

Thursday, January 26, 2012

இசையோடு இசையாக..தொகுப்பு 3 !





















புத்துணர்ச்சி வீசும் புதிய நாளை சூரியனின் வருகைக்கு முன்னாலேயே எழுந்து ஆழ சுவாசித்து ஆரத்தழுவி அந்த அற்புத பொழுதின் குளுமையை உடலுக்குள் வாங்கி...புத்தியின் சூடு தணிய இரவு உறக்கத்தில் அயர்ச்சியில் கிடந்த மூளை தன்னை உலுக்கிக் கொண்டு அன்று பிறந்த குழந்தையைப் போல அதிகாலையை ஆச்சரியாமாய் நோக்கும் தருணம் சுகமானது....

நகரத்து வாழ்க்கையில் மறுக்கப்பட்டுப் போய்விடும் பல அற்புதங்களை கிராமத்துக் காலைக்கு பிரபஞ்சம் ஆசிர்வாதம் செய்து கொடுத்திருக்கும்.... ஆடு, மாடு, நாய் போன்ற் மனித வாழ்க்கையோடு ஒன்றிப் போன விலங்குகளும், சேவல், கோழி, காகம், கிளி,குருவி, காடை,கவுதாரி, கொக்கு, மடையான், நாரை, சிட்டுக்குருவி, மரங்கொத்தி, குயில் போன்ற பறவைகளும் பிரபஞ்ச ஓட்டத்தில் விடியலை ருசிக்க எழுந்து கடவுளின் சாயலை தரிசித்துதான் விடுகின்றன.

மெல்ல நகர்ந்து வயல் வெளிக்குள் நுழையும் பொழுதில் இரவு முழுதும் புற்களோடு சல்லாபித்த பனித்துளிகள் இன்னும் சற்று நேரத்தில் சூரியனின் வருகைக்குப் பின் கிளம்ப இருக்கிறோம் என்ற தகவலை சிரித்துக் கொண்டே சொல்ல... குளிர்வான இரு ஊதக்காற்று உடல் தடவி நாடி நரம்புகளின் அயற்சிகளை எல்லாம் சுகமாய் நீவி விட்டு எனக்கு வேலை நிறைய இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி விட்டு போய்க்கொண்டே இருக்கும்...

ரோசா, ஆவாரம்பூ, அரளிப்பூ, காட்டு ஆமணக்குப் பூ, பூவரசம் பூ, காட்டு மல்லி, பட்டு ரோசா, டிசம்பர் பூ, கனகாம்பரம், கொடி மல்லி, கொடியிலே கிடக்கும் பூசணிப் பூ.. சூரியனை விட நாங்க ரொமப் கலராக்கும் என்று சிரிக்கும் செவ்வந்திப் பூ.....என்று எல்லாமே புது மணப் பெண்ணாய் மெல்லிய காற்றில் ஆடிக் கொண்டு காதலை இந்த பிரபஞ்சமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும்....

இப்படியாக எனக்குள் விரியும் காட்சிகளை புத்திக்குள் நிறைத்துப் போட்ட ஒரு அற்புதமான இசையையும் பாடலையும் நீங்களும் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவோடு கூட்டு சேர்ந்து மனதை கொள்ளையடிக்கும் வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள் வைரமுத்துவும், ஜானகி அம்மாவும்.....

" வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது "


மயக்கும் காலையைப் பற்றிய அற்புதமான நினைவுகளோடு இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாய் அமையட்டும்...!

தேவா. S



2 comments:

நாய் நக்ஸ் said...

அருமையான...பகிர்வு...நன்றி தேவா...

துரைடேனியல் said...

இப்போது வரும் பாடல்களை நான் கேட்பதேயில்லை சகோ. அறுவெறுப்பும் ஆபாசமும் சத்தக்காடாகவும் தான் இருக்கின்றன. நான் பழைய பாடல்களின் ரசிகன்.

இந்தப் பாடல் அருமை. வைரமுத்து கலக்குகிறார். இசையும் அருமை. பகிர்வுக்கு நன்றி!.



தமஓ 4.