Pages

Sunday, January 15, 2012

மாடு புடிக்க வாரியளா....?!ஏறு தழுவுதல்னுதானே சல்லிக்கட்டை அப்பவே நம்ம பாட்டன் பூட்டன் எல்லாம் சொல்லி வச்சிருக்காய்ங்க...இன்னிக்கு புதுசா வந்து மிருக வதை லொட்டு லொசுக்குன்னு கோர்ட்ல கேச போட்டுகிட்டு...என்னாப்பு நீங்க...? ஆயிரத்தெட்டு ரூல்ஸ் ரெகுலேசன் எல்லாம் வச்சிகிட்டு, காலங்காலமா நாங்க வெளையாடிக்கிட்டு இருந்த விசயதை இம்புட்டு சீரியசா ஆக்கிபுட்டியளே....

சல்லிகட்டுல மாடு குத்திதேன் மனுசங்க செத்துப் போயிருப்பாய்ங்கன்னு பேப்பர்ல படிச்சி இருப்பீக...? எங்கனயாச்சும் மாடுக செத்துப் போச்சுன்னு படிச்சு இருக்கீகளா? இருக்காதே....சல்லிக்கட்டுனா என்ன மாட்ட தும்புறுத்துறதா....? அங்க அங்க சில பேரு அத்து மீறி இருப்பாய்ங்க...அது கழுத எல்லா பொழப்புலயும்தானே அத்து மீறிப் போற ஆளுக இருக்கு....

சல்லிகட்டு எங்களுக்கு வீர வெளையாட்டுப்பா...?என்னாண்டு நினைச்சீய..? இதுல என்னப்பு வீரம் இருக்குன்னு கேக்கிறியளா...? மாட்டை புடிச்சு அடக்கி கீழ தள்ளி மேல ஏறி நிக்கிறதுதான் சல்லிக்கட்டுன்னு யாரு சொன்னது....அப்டி  எல்லாம் செய்றது இல்லப்பு சல்லிக்கட்டுனா...

மாட்ட வெரசா வெரட்டிகிட்டு போயி அதோடு திமிலிசங்கைய புடிச்சி கட்டிப் புடிச்சிகிட்டு, கீழ விழுந்துறாம வெரசா மாட்டோட வேகத்துக்கு ஈடு கொடுத்து வேகமா ஒடியாரணுமப்பே...மாடு குத்தப் பாக்கும், சில நேரம் குத்தியேபுறும், அங்கிட்டு இங்கிட்டு தள்ளி நம்மள விழுத்தாட்டப் பாக்கும் அம்புட்டையும் தாங்கி கிட்டு ரெம்ப நேரம் யாரு நிக்கிறானோ அவென் செயிச்சவன்...

மாட்டு புடிக்கிறதுல என்ன வீரம்னு கேப்பாய்ங்க..நீங்க அம்மூரு மாடுகள வந்து பாக்கணும்...தீனியப் போட்டு,...கொம்புகளை சீவி சிங்காரமா இதுக்காண்டியே வளர்த்தி வச்சு இருப்பாய்ங்க...! மாடுன்னு சொன்னா அது மிருகந்தேன்..அதுக்கு ஒரு கூறு மாறும் தெரியாது ஆனா மனுசப்பயலுக்கு கூறு மாறு தெரியும்ல...மாடு எங்கிட்டு எப்போ திரும்புதுன்னு மனுசப்பயலாள ரோசிக்கவே முடியாது...

அங்கிட்டு திரும்பும், இங்கிட்டு பாத்து முறைக்கும், முன்னாடி இருக்க கால சிராண்டிகிட்டே நம்மள குத்தறதுக்கு குறிபாக்கும், வாலை தூக்கும்...முன்னாடி பாயும், பின்னாடி கால எட்டி ஒதைக்கிம், அங்கிட்டு போகுதுன்னு நினைப்பீக லவக்குன்னு இங்கிட்டு வெரசா திரும்பும்..., 

அசந்து மசந்து நின்னியன்னு வச்சிகிறுங்க...எந்தப்பக்கட்டு சதைய குத்தி கிழிக்கும்னு நமக்கே தெரியாது...! ஒண்ணுந்தெரியாட்டி லவக்குனு கீழ படுத்துக்கிட்டியன்னா பேயாம திரும்பிகிட்டு போயிறும்..ஓடி ஒளிஞ்சறாலாம்னு வெரசா ஓடினா வெரட்டி வந்து குத்தும்...

கனமான மாடுகள எவ்விப் புடிக்கறதுக்கு முன்னாடி நம்மள் எவ்வி குத்தியேபுடுமப்பே...வவுத்துல குத்தி தூக்கி எறிஞ்சுச்சுனா... அம்புட்டுதேன்....குடலு வேற குந்தாணி வேறயா போயி விழுக வேண்டியதுதேன்....! 

அம்புட்டும் தெரிஞ்சும் அந்த உசுர துச்சமா மதிச்சு மாடுக கிட்ட போயி அதுவும் பெல்லா கோவக்கார மாடுகளா பாத்து அதுக மேல பாஞ்சு திமிலி சங்கிய புடிச்சு அணைச்சுகிட்டு போகையில் மனசு பூரா காத்துல பறக்குற மாதிரி இருக்கும் பாருங்க....அதேன்...அதேன் சந்தோசம்....!

மாடு குத்திபுறும்னு தெரிஞ்சும், குத்தினா செத்துப் போயிருவோம்னு புரிஞ்சும் போயி மாட்ட புடிக்கிறோம் பாத்தியளா அது வீரந்தானே....! இதைப் போயி என்னமோ நாங்க மாடுக கூட மல்லுக்கட்டி சண்டை போடுறமாதிரி இட்டுக்கட்டி சல்லிக்கட்ட நிறுத்துங்க..அது இதுன்னு பொலம்பிகிட்டு இருக்காய்ங்க....

இளந்தாரிப் பயலுக இப்படி சாடிப் போயி மாடு புடிக்கிறது எல்லாம் அதுவும் முரட்டு முரட்டு மாடுகளை பிடிக்கிறது எல்லாம் வீரம்யா...வீரம்..பொறவு இதை என்னாண்டு சொல்லுவிய? மாடு குத்தி பத்து பன்னெண்டு தையலுகள போட்டுகிட்டு அடுத்த சல்லிகட்டுக்கு வந்து நின்ன பயலுக எங்கூர்ல ரெம்பப் பேரப்பே....! சும்மா காச்சுக்கும் ஓடிப்பிடிச்சு வெளையாடுற வெளையாட்டு இல்ல இது....சல்லிக்கட்டுன்னா...தமிழப்பயலுகளோட வீர வெளையாட்டு...!

வயக்காட்ல நின்னு விதை போட்டு தண்ணி பாச்சி, ஏறு ஓட்டி உழுது, களையெடுத்து, நட்டு, வெள்ளாமை செஞ்சு, கதிரறுத்து, பொனையடிச்சு, தூத்தி, அதை நெல்லா ஆக்கி அதை மூடையில கட்டி இந்தா......அப்டி முதுகுல தூக்கி பாரவண்டியில இப்டி இறக்கி வைக்கியில மனசு ரெக்கை கட்டி பறக்குமப்பு...

வயக்காட்டுப் பொழப்பு கஷ்டப்பாடு பொழப்புதேன்...ஆனா அடிமை பொழப்பு இல்லப்பு...வலியோட செஞ்சாலும் மனசு நெறஞ்சு செய்யிறோம்....

சொல்ல வந்த சோலிய மறந்து போயிட்டேன் பாருங்க...அம்மூர்ல நாளைக்கி சல்லிகட்டு வந்திருங்கப்பு...., மாடுகளை இளந்தாரிக புடிக்கிறதும், புடிமாடுகளைக் கொண்டு வந்தவைங்க மூஞ்சிய தூக்கி வச்சிகிட்டு அழுகுறதும்னு..........ஒரே ஆட்டமாத்தான் நிப்போம்....,அம்ம வீட்டுக்கு வந்துருங்க...சாப்டு கீப்டுபுட்டு...போயி மாடு புடிக்கலாம்...!

அப்போ.....வர்ர்ர்ர்ர்ட்ட்டடா!!!!!


தேவா. S


14 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//அம்ம வீட்டுக்கு வந்துருங்க...சாப்டு கீப்டுபுட்டு...///

...சரி ஓகே.. வந்திர்றேன்.... எனக்கு இந்த டீலிங் பிடிச்சிருக்கு...!! :))

///போயி மாடு புடிக்கலாம்...!///

...அவ்வ்வ்வ்வ்வ்.. சாரி.. மீ நோ மாடு கேட்ச்சிங்....!


//அப்போ.....வர்ர்ர்ர்ர்ட்ட்டடா!!!!!//

....ஏம்ப்பு....எங்க எல்லாத்தையும் வீட்டுக்கு கை நனைக்க வரச் சொல்லிப்போட்டு... நீங்க எங்க வெரசா கிளம்பிட்டீக.....!! :)

உங்களுக்கு மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!

அன்புடன் நான் said...

இளந்தாரிப் பயலுக இப்படி சாடிப் போயி மாடு புடிக்கிறது எல்லாம் அதுவும் முரட்டு முரட்டு மாடுகளை பிடிக்கிறது எல்லாம் வீரம்யா...வீரம்..பொறவு இதை என்னாண்டு சொல்லுவிய? மாடு குத்தி பத்து பன்னெண்டு தையலுகள போட்டுகிட்டு அடுத்த சல்லிகட்டுக்கு வந்து நின்ன பயலுக எங்கூர்ல ரெம்பப் பேரப்பே....! சும்மா காச்சுக்கும் ஓடிப்பிடிச்சு வெளையாடுற வெளையாட்டு இல்ல இது....சல்லிக்கட்டுன்னா...தமிழப்பயலுகளோட வீர வெளையாட்டு...!//

பகிர்ந்து கொண்ட கட்டுரையும் பகிர்ந்துகொண்ட பாணியும் சிறப்பு.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வெங்கட் said...

இந்த பதிவில் எனக்கு மாற்றுக்கருத்து
உண்டு..!

பார்க்க...

http://veppurthirudan.wordpress.com/2011/12/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1/

dheva said...

வெங்கட் @ முதலில் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மருத நிலமல்ல சல்லிக்கட்டு என்னும் ஏறு தழுவுதலின் பிறப்பிடம் அதன் பிறப்பிடம் முல்லை.

இராமநதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்கள் எல்லாம் காடும் காடு சார்ந்த புன்செய் நிலங்கள்தான். ஆயர்கள் எனப்படும் யாதவர்கள்தான் ஆடுமாடுகளை பராமரித்து வந்தனர். சாதி என்று யாரும் பகுத்துப் பார்க்கும் முன்னரே தொழில் ரீதியான பிரிவுகள் சங்க காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது. காலப்போக்கில்தான் பல வித அன்னிய கலப்பின துவேசங்களால் சாதிப் பிரிவினைகளும் அதனை வைத்து மனிதர்களை மதிக்கும் போக்கும் வளர்ந்தேறியது.

முல்லை நிலத்தின் வீர விளையாட்டாக இந்த ஏறு தழுவுதல் என்னும் சல்லிகட்டு இருப்பதை கலித்தொகைப் பாடல்கள் நமக்கு விளக்குகின்றன. தமிழகம் முழுதும் பல்வேறு நிலப்பரப்புகளாகவும் பல தொழிகளை அடிப்படையாக வாழ்க்கையும் கொண்டிருந்தது.

முல்லை நிலத்தின் காடுகளில் தென் தமிழர்களின் பிழைப்பாய் கால்நடைகளை வளர்த்தல் இருந்து வந்ததால் அதன் அடிப்படையிலான ஏறு தழுவுதலும் அந்த நிலத்திலேயே பிரபலம் அடைந்து இன்றளவிலும் அதன் தொடர்ச்சியாக அந்த மண்ணில் சல்லிக்கட்டுக்கள் நடக்கின்றன.

ஏறு தழுவுதல் என்ற வார்த்தையிலேயேஎ அதில் இருக்கும் டெக்னிகாலிட்டி என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். ஏறு தழுவுதல் என்பது உடல் உறுதியை மட்டும் பொறூத்தது அல்ல எப்படி தழுவுகிறோம் என்பது புத்திசாலித்தனத்தையு பொறுத்தது.

தமிழர்களுக்கும் ஏறு தழுவுதலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத மாதிரி கட்டுரை விரிவது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கலித்தொகை என்னும் சங்ககாலப்பாடல் தமிழரின் பண்டைய இலக்கியம்ததானே...? அதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாதுதானே...?

முல்லையின் சிறப்புகள்
=========================

முல்லை நில மக்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள்
ஆகிய சிறப்புகளில் சிலவற்றை இப்பகுதியில் அறியலாம்.

ஏறு தழுவல்
============

ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் நாட்டின் எல்லைப் பகுதி காடு. பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் அப்பகுதியே, ஆதலால் அவர்கள் வீரம் உடையவராக விளங்க வேண்டியிருந்தது. எனவே ஆயர், தம் மகளை மணக்க வரும் ஆடவர் வீரம் மிக்கவராய் விளங்க வேண்டும் என எண்ணினர். அதன் காரணமாக ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குதல் ஆகும். ஆயர் ஏறுகளின்
கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான ஏறு தழுவும் இடத்தில் விடுவர். இளைஞர் போட்டி போட்டு ஏறு தழுவ முயல்வர். ஏறு தழுவிய ஆயனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவர் ஆயர். ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம்.

ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்
(கலித்தொகை௰2 : 9௰)

(பொருபுகல் = போர் செய்வதில் விருப்பம் உடைய ; ஏறு = காளை)

போர் செய்யும் விருப்பம் உடைய நல்ல காளையை அடக்குபவரே அல்லாமல் வேறு யாரும் இவளது மெய் தீண்டத்தக்கவர் அல்லர் என்பது இதன் பொருள். ஆயர்குலப் பெண் ஏறு தழுவும் ஆடவனையே விரும்பி மணப்பாள் என்பதை இது உணர்த்துகிறது.

ஆடு, மாடுகள் வதியும் இடத்தையும், ஏறு தழுவும் இடத்தையும் ‘தொழு’ என்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. வீரம் அற்றவனை ஆயர்குலப் பெண்டிர் விரும்ப மாட்டார். காளையின் கொம்புக்கு அச்சம்
கொள்பவனை ஆயர்மகள் அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை

" கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
(கலித்தொகை- 103 : 63௬4)

(கோடு = கொம்பு ; புல்லாள் = தழுவ மாட்டாள்)
என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.

இளைஞர்கள் ஏறு தழுவும் காட்சியைக் காணும் தோழியும் தலைவியும் பேசிக் கொள்ளும் உரையாடலில் அக்காட்சி அழகாக விரிகிறது. ஆயர் காளைகளைத் தொழுவில் விடுகின்ற போது வாத்தியங்கள் முழங்குகின்றன. மகளிர் வரிசையாக நிற்கின்றனர். தொழுவில் ஆயர் பாய்ந்தபோது தூசி
கிளம்புகிறது ; தொழுவில் பாய்ந்த ஆயர் காளைகளின் கொம்பினைப் பிடித்தனர் ; தம் மார்பில் பொருந்தும்படி தழுவினர். அவற்றின் கழுத்தில் அடங்கினர் ; கொண்டை (இமில்) முறியும்படி தழுவினர் ; தோளுக்கு நடுவே காளையின் கழுத்தைப் புகும்படி விட்டனர் ; காளைகள் ஆயர்களைக்
கீழே வீழ்த்தின; நீண்ட கொம்புகளால் சாகும்படி குத்தின ; மொத்தத்தில் கோபமுற்ற காளை எமனைப் போல் விளங்கியது.

இக்காட்சிகளைக் கலித்தொகை 105 ஆம் பாடல் விரிவாகக் காட்டுகிறது.

ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது

வெங்கட் said...

@ தேவா.,

ஒரு சின்ன விளக்கம்..

ஜல்லிக்கட்டை ஆதரிப்பதில் மட்டுமே
எனக்கு மாற்றுக்கருத்து.. அதன் வரலாறு
பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. அது
இங்கு முக்கியமும் அல்ல..

// காலங்காலமா நாங்க வெளையாடிக்கிட்டு
இருந்த விசயதை இம்புட்டு சீரியசா
ஆக்கிபுட்டியளே.... //

நிஜமாவே நீங்க விளையாடி இருக்கீங்களா..?

" தமிழர் " " வீரம்னு " சொல்லிட்டு நம்ம
வீட்ல இருந்து அண்ணனோ, தம்பியோ
ஜல்லிகட்டுல கலந்துக்க போறேன்னு
சொன்ன அனுமதிப்போமா..?

அட்லீஸ்ட் பக்கத்துல நின்னு வேடிக்கை
பார்க்க அனுமதிப்போமா..?

// எங்கனயாச்சும் மாடுக செத்துப் போச்சுன்னு
படிச்சு இருக்கீகளா? இருக்காதே....சல்லிக்கட்டுனா
என்ன மாட்ட தும்புறுத்துறதா.... //

இல்லையா பின்ன..?

// மாடு குத்திபுறும்னு தெரிஞ்சும், குத்தினா செத்துப்
போயிருவோம்னு புரிஞ்சும் போயி மாட்ட புடிக்கிறோம்
பாத்தியளா அது வீரந்தானே....! //

இதுக்கு பேரு தான் வீரமா..?
மனித உயிர் அவ்ளோ மலிவா போச்சா..?

ஜல்லிகட்டுல கலந்துக்குற ஆண்களின்
குடும்பத்தை நினைச்சி பார்த்தீங்களா..?

ஒரு தடவை சன் டிவில ஒரு பொண்ணு
" இவரு போன வருஷம் ஜல்லிகட்டுல
கலந்துகிட்டு மாடு குத்தி குடல் எல்லாம்
வெளியே வந்து செத்து பிழைச்சி இருக்காரு..

இப்ப இந்த வருஷமும் கலந்துக்குவேன்னு
அடம் பிடிக்கிறாரு.. இவருக்கு எதாவது
ஆச்சின்னா.. என் 2 குழந்தைகளை எப்படி
காப்பாத்துவேன்னு " அழுதுச்சு..

இப்ப சொல்லுங்க.. இதுக்கு பேரு தான்
வீரமா..?!!

dheva said...

சல்லிக்கட்டோடு நேரடித் தொடர்புகள் கொண்ட குடும்ப பாரம்பரியம் எனக்கு இருப்பது இரண்டாவதாக இருக்கட்டும்....வெங்கட்....

போர் பற்றி பேசும் அத்தனை பேரும் போர்முனைக்குப் போயிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆபத்து இல்லாத எந்த தொழிலும் எங்கும் இல்லை...! தமிழன் கலம் காலமாக போர்த் தொழில் புரிபவனாக வாழ்ந்திருக்கிறான்...

ஒவ்வொரு தேசமாய் சென்று வெட்டி வீழ்த்தி தனது கொடியை அவன் நாட்டியிருக்கிறான். அதிலும் ஆபத்து இருக்கிறது...!

சல்லிக்கட்டு ஒரு காலத்தில் வீர விளையாட்டு இப்போது வேண்டுமானால் வியாபரமாக ஆகிப்போயிருக்கலாம்...,

ஏறுதழுவுதல் என்பது ஒரு பயிற்சி விளையாட்டு பயின்றவர்களால் மட்டுமே அதனை திறம்படச் செய்ய முடியும்.

அலை சறுக்கிச் செல்லும் விளையாட்டில் கூடத்தான் உயிராபத்துக்கள் இருக்கின்றன......பயிற்சியும் அதில் ஈடுபடும் வீரமுமே....இங்கே முக்கியம்..!

வீரமாயிருக்கிறேன் என்று நான் நாளை பயிற்சியின்றி காளையை அடக்கப் போனால்... கண்டிப்பய் திரும்பி வரமாட்டேன்.. என்பது எல்லோருக்குமே தெரியும்.. ( ஹா ஹா)

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

மாப்பு... நாம வேணும்னா ஒட்டகத்த ஓட விட்டு பிடிப்போமா.. :)

வெங்கட் said...

// தமிழன் கலம் காலமாக போர்த் தொழில்
புரிபவனாக வாழ்ந்திருக்கிறான்... ஒவ்வொரு
தேசமாய் சென்று வெட்டி வீழ்த்தி தனது
கொடியை அவன் நாட்டியிருக்கிறான்.
அதிலும் ஆபத்து இருக்கிறது...! //

உண்மை தான்.. ஒரு ஆண் தன் வீரத்தை
மற்றவர்க்கு காட்ட வேண்டிய நிர்பந்தம்
அப்போது இருந்தது..

சிறந்த வீரனுக்கு தான் பல அழகான பெண்கள்
கட்டிக்க போட்டி போடுவார்கள்.,

படையில் அவனுக்கு உயர்பதவி கிடைக்கும்
இப்படி பல ஆதாயங்கள் இருந்தன...

அதனாலேயே ஜல்லிகட்டு போன்றவை
அவர்கள் வீரத்தை உலகுக்கு காட்ட
தேவைப்பட்டது..

ஆனா. இப்ப அப்படியா..?

// அலை சறுக்கிச் செல்லும் விளையாட்டில்
கூடத்தான் உயிராபத்துக்கள் இருக்கின்றன.....
பயிற்சியும் அதில் ஈடுபடும் வீரமுமே....
இங்கே முக்கியம்..! //

ஆனா அதுல எல்லாம் பாதுகாப்புக்கு
சில விஷயங்கள் இருக்கின்றன..
( ஹெல்மெட் etc )

உயிர் ஆபத்து எந்த விளையாட்டிலும்
இந்த அளவு மோசமாக இல்லை..
இதை ஒப்புக்கொள்வீர்கள் தானே..?!

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//இப்ப சொல்லுங்க.. இதுக்கு பேரு தான்
வீரமா..?!!//

அப்போ வீட்டுகுள்ள உக்காந்து வீடியோ கேம் விள்ளாடரது தான் வீரமா?

1.வீரம் சிறு குறிப்பு வரைக.. :)
2. வீர விளையாட்டு சிறு குறிப்பு வரைக..

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//சிறந்த வீரனுக்கு தான் பல அழகான பெண்கள்
கட்டிக்க போட்டி போடுவார்கள்.,

படையில் அவனுக்கு உயர்பதவி கிடைக்கும்
இப்படி பல ஆதாயங்கள் இருந்தன...

அதனாலேயே ஜல்லிகட்டு போன்றவை
அவர்கள் வீரத்தை உலகுக்கு காட்ட
தேவைப்பட்டது..

ஆனா. இப்ப அப்படியா..? //

சரி விடுங்க அடுத்த வருஷம் பேங் பேலன்ஸ் காட்டும் போட்டி, ஸாலரி ஸ்லிப் காட்டும் போட்டி, டிகிரி சர்டிபிகெட் காட்டும் போட்டி இப்படி நடத்திடலாம்... :)

dheva said...

டெரர் @ ஒரு ஒட்டகத்துல ஏறி உக்காந்து போகும் போதே அது நம்ம முதுகுல வீரத் தழும்ப போட்டுடுச்சு....

ஐ மீன்....ஒட்டகதத்தையே பாத்தாச்சு....மாடு எம்மாத்திரம்...!

வெங்கட் சொல்ற மாதிரி வேணும்னா சிங்கம், புலின்னு (எம்புட்டு ஆசை...ஏய்யா..!???) ட்ரை பண்ணி (பன்னி இல்ல...) பாக்கலாம்..ஹி ஹி ஹி!

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட் & தேவா

போங்க போய் பொங்கல் வச்சி சாப்பிட்டு டீவியில் பட்டி மன்றம் பாருங்க. சிறுபிள்ளை தனமா சண்டை போட்டு.

@மிஸஸ் வெங்கட் & மிஸஸ் தேவா

ஏம்மா தங்கச்சிங்களா! இவங்களை எல்லாம் கேக்காரது இல்லியா? வீட்டுல எம்புட்டு வேலை கிடக்கு அதை விட்டு இங்கன வந்து வானவராயன் வல்லவராயன் மாதிரி அடிச்சிகிராங்க. :) :)

வெங்கட் said...

@ டெரர்.,

// ஏம்மா தங்கச்சிங்களா! இவங்களை எல்லாம்
கேக்காரது இல்லியா? வீட்டுல எம்புட்டு வேலை கி
டக்கு அதை விட்டு இங்கன வந்து வானவராயன்
வல்லவராயன் மாதிரி அடிச்சிகிராங்க. :) :) //

நாங்களே எல்லா வேலையும் முடிச்சிட்டு
கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு
ஜாலியா பேசிட்டு இருந்தா....

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//நாங்களே எல்லா வேலையும் முடிச்சிட்டு
கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு
ஜாலியா பேசிட்டு இருந்தா....//

அப்போ நானாதான் வந்து சிக்கிட்டேனா.. :))))