Pages

Sunday, July 3, 2011

நம்ம மண்ணுதேன்...!!!!
எப்டி பட்ட நாள் எல்லாம் மிஸ் பண்ணியிருக்கோம்...அதாவது இழந்து இருக்கோம்னு நினைக்கிறப்ப ச்ச்சும்மா நம்ம மேலயே வெறுப்பா இருக்குல்ல...? இன்னமும் அனுபவிக்கிற பாக்கியசாலிகள் இருக்கத்தான் செய்வாங்க..!

லீவுக்கு ஆயா வீட்டுக்கு போவோம்...அம்மாவோட அம்மாவ ஆயான்னு கூப்பிடுறது எங்க வழக்கம் (அட உங்க வழக்கமும் அதுவா அப்போ....பிஞ்ச்...பிஞ்ச் பிஞ்ச்!!!!). முழுப்பரீட்சை முடிஞ்ச உடனே....ஊருக்கு கெளம்புறதே ஒரு அலாதியான விசயம். பெரும்பாலான நம்ம சனத்துக்கு அப்பாவோட வகையிறக்கள விட அம்மாவோட வகையிறாக்கள் மேல பிடிப்பு ஜாஸ்தியா இருக்கும். இதுக்கு காரணம் என்ன என்ன பாலிடிக்ஸோ அது நமக்கு வேண்டாம் இப்ப.... !

பட்டுக்கோட்டையில இருந்து பஸ் ஏறி...காரைக்குடி வரைக்கும் போற ஏற்படுற உணர்வுகள் இருக்கே... அத வார்த்தைகளுக்குள்ள கொண்டு வர முடியாது. தஞ்சாவூர் ஜில்லாவுலதான் அப்பாவுக்கு வேலை....சொந்த ஊரு சிவகங்கைச் சீமை.

நம்ம பழக்க வழக்கம் எல்லாம் காவிரித்தாயோட மடியில ஆனா பூர்வீகம் வானம் பார்த்த சிவகங்கையோட செம்மண். இரண்டு வேறு கலாச்சாரம், மனிதர்கள், பழக்க வழக்கங்கள்னு சின்ன வயசுல இருந்தே அந்த மாற்றத்தை பாத்து பாத்து ஆச்சர்யமா புத்தி பல கேள்விகள கேக்க ஆரம்பிச்சுது!

இந்த ஊரு மட்டும் பச்சை பசேல்னு ச்சும்மா ஜில்லுனு இருக்கே, செருவா விடுதி, ஆவணம் தாண்டி அறந்தாங்கி நுழையறதுக்கு முன்னால கொஞ்சம் கொஞ்சமா மண்ணு மாறுறதும் மரம் மட்டைங்க மாறுறதும் மனுசங்க மாறுறதும் ஏன்னு.....போட்டு நெஞ்ச அரிச்சுகிட்டே இருக்கும் ஒரு கேள்வி?

வெயிலு காலத்துல வீட்டுக்குத் தெரியாம இடுப்புல துண்ட கட்டிகிட்டு ஆத்துல போய் பசங்க கூட கண்ணு செவக்குற வரைக்கும் ஆட்டம், பச்சை பசேல்னு வயக்காட்டுக்குள்ள திபு திபுன்னு ஒடியாறதும்னு தஞ்சாவூர் ஜில்லா எப்பவுமே ஒரு குளுமைதான். தென்னந்தோப்பும் வாழத்தோப்பும் மாந்தோப்பும் பாத்து பாத்து பழக்கப்பட்டு..

அறந்தாங்கி தாண்டி பஸ் போகும் போதே கருவ மரமெல்லாம் முள்ளோடோ நின்னுகிட்டு இருக்கறத பாக்குறப்ப கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும். அஞ்சாவது ஆறாவது படிக்கிற காலத்துலயே நினைச்சுப் பார்ப்பேன்.

தண்ணியில்லாமத்தான் இந்த நிலமெல்லாம் வரண்டு போயி கெடக்குது, தண்ணி வரத்து இருந்துச்சுன்னா மண்ணோட தரம் மாறி செழிப்பா போயிறுமே, தஞ்சாவூருக்குள்ள ஓடுற ஆத்த இங்குட்டு கொண்டு வந்தா என்னனு எல்லாம் கிறுக்குத்தனமா யோசிப்பேன், அறந்தாங்கில இருந்து கண்டனூர் வர்ற வழி எல்லாம் முந்திரிக் காடா இருக்கும் அந்த மண்ண பாத்தா செவ செவன்னு இருக்கும்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்ள ஊருங்க எல்லாம் அடுத்தடுத்து இருக்கும்...ஆனா சிவகங்கங்கை மாவட்டம் முழுசும் ஊருங்க தள்ளித் தள்ளி இருக்கும் இடையில காடுகளாத்தான் இருக்கும் அதுவும் சரளைக் கல்லுங்க இருக்குற செம்மண்னுதான்...

அந்த அந்த ஊரு மண்ணுக்கேத்த மாதிரி மனுசங்க குணமும் அமைஞ்சு போயிடும்கிறது அப்போ எனக்குத் தெரியாது. ஆனா இனிக்கு யோசனை பண்ணிப் பாக்குறப்ப பளிச்சுனு மனசுக்குப் படுது

பொதுவா தஞ்சாவூர் பக்கம் இருக்குற ஆளுங்க எல்லாம் ஒரு வித அமைதியத்தான் இருப்பாங்கா..ஆனா உள்ளுக்குள்ள யோசனை காத தூரம் இருக்கும் சட்டு சட்டுனு மனுசங்கள பாத்து எடை போடுறது அவுங்களுக்கு கை வந்த கலை.

மூணு போகம் நெல்லு வெளஞ்சு, கரும்பு, தென்னைன்னு எல்லாமே பாஸிட்டிவா போன ஒரு வாழ்க்கை வாழ்றவங்களுக்கு ஆர அமர யோசிக்க நேரம் இருந்திருக்கும்.....அதே நேரம் ஒரு மனசுக்குள்ள கர்வமும் இருக்கும் எப்பவுமே....

ஆனா...

தெக்குச் சீமைன்னு சொல்ற சிவககங்கை, இரமநாதபுரம் மாவட்டத்த சேந்த ஆளுங்களுக்கு ஒரு வித கோபம் எப்பவுமே இருக்கும். அது திட்டமிட்டு சேத்த கோபமாயிருக்காது....வானம் பாத்து, பாத்து மழை தண்ணி ஏமத்திட்டு போறப்ப சாவியா போகுற பயிருகள பாத்து வத்திப் போயி கிடக்குற கண்மாய பாத்து ஒரு கோபத்தோடயே இருப்பாங்க...

தீயா கொளுத்துற வெயிலுக் காட்டுக்க்குள்ள சுத்தியும் கருவ மண்டிக்கிடக்குற ஊருக்குள்ள ஒத்த கேணியில ஊரே தண்ணி எறைக்குற மாதிரியான வாழ்க்கைமுறையில என்ன சுபிட்சம் வந்துடப் போகுதுன்னு நீங்களே சொல்லுங்க?

இதுக்காகவே அந்த காலத்துல சிங்கப்பூர், மலேசியா, பர்மானு ஆளுக போயி அங்க இருந்து சொத்து சேத்து வந்து இருப்பாங்க...! முரட்டு மீசையும், பெரிய கிருதாவும், காது வளத்த அப்பத்தாக்களும் கோவம் ஜாஸ்தி வர்ற ஆளுகதான் ஆனா...சரளை மண்ண வெட்டும் போது கரடு முரடா வெட்ட விடாம கோவம் காட்டும்...

வெட்டுப் பட்டு ஆழமா தோண்டிப் பாத்தீங்கன்னா..வெள்ளை மண்ணு சல சலன்னு வழிய விட்டு வெலகி நிக்கும். அப்டித்தான் மனுசங்க வாழ்க்கை முறையும் சூழ் நிலையும் கரடு முரடா இருந்தாலும், அடி மனசுல ஈரம் அதிகம் இருக்குற சனங்கதான் எல்லோரும்

அதனால்தான் முரட்டு மீசை வச்சிருக்கிற ஆளுக கூட பாசத்துக்கு கட்டுப்பட்டு "என்ன பெத்த அய்யா.....என்ன பெத்த ராசானு" கதறி அழுகுற மாதிரி சம்பவங்களையும் சர்வ சாதாரணமா நெறய பாக்கலாம்...! என்ன பண்றது வசதி வாய்ப்புகளை அவங்களுக்கு இயற்கையே தடுத்துப் போட்டிருந்தாலும்...

ஊரு ஊருக்கு ஊருணின்னு சொல்லக் கூடிய குளங்க்ளையும், கம்மாய்ன்னு சொல்லக்கூடிய ஏரிகளையும் நிறைய கட்டிப் போட்டு இருப்பாங்க. ஒரு அடை மழை காலத்துல எல்லா ஊருணிலயும் கம்மாயிலயும் தண்ணி ரொம்பிப் போயிரும்.

அட இப்படியே கலச்சார விவரணைக்குள்ளேயே போய்ட்டேன் பாருங்க. மண்ணுக்கேத்த மாதிரி மனுச மனசும் உடம்பும், மாறும்னு சொல்ல வந்தேங்க.....! முழுப் பரிட்சை லீவுக்கு ஆயா வீட்டுக்குப் போனப்ப என்ன எல்லாம் கூத்தடிச்சேன்னு சொல்ல வந்த படுவாதான் நான்........அதை விட்டுப் புட்டு எங்க எங்கயோ ஊரச் சுத்திகிட்டு இருக்கேன் பாருங்க..!

மெதுவா பேசுவோம் அது பத்தி எல்லாம்...இம்புட்டு படிக்கிறதுக்கே நீங்க உங்க வேலைய விட்டுப் புட்டு வந்து இருக்கீங்க...! எங்க போக போறோம் இங்க தான இருக்கப் போறோம் சாவகாசமா பேசுவோம்.

நமக்குன்னு விதி விலக்கு இருக்கா என்ன? தொடர்ச்சின்னு போடணும், பாகம் போடணும், அப்டி ஆரம்பிக்கணும் இப்டி முடிக்கணும்னு.....அட சொந்தஞ் சோலிகளுக்குள்ள என்ன முறைப்பாடு.....

மெதுவா பேசுவோம்...! அடாடா ஆரம்பத்துல இருந்து கேக்கணும்னு இருந்தேன் மறந்தே போய்ட்டேன் பாருங்க....

எல்லோரும் நல்லா இருக்கீங்களா? .............வீட்ல எல்லாம் எப்டி இருகாவ்வோ? (தஞ்சாவூர் ஸ்டைல்) .......! ஆத்தா அப்பு எல்லாம் சும்மா இருக்காகளா (சிவகங்கை பக்கம்...இப்டித்தேன்).........!

பேசிட்டே இருப்பேன்...........வண்டிய இழுத்து இங்க நிப்பாட்டிக்கிறேன்..!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா!


தேவா. S-

6 comments:

தமிழ் அமுதன் said...

ஊர் நினைவு வருது அப்பு..!

தமிழ் அமுதன் said...

நம்ம மண்ணு ’’தேன்’’..!

சௌந்தர் said...

உங்க வுட்டுல ஒரு கொயந்த கீது ல அதை என்னைக்கி அவங்க ஆயா வுட்டுக்கு இட்டுகுனு வர போறே...???/

சேலம் தேவா said...

மண் மணக்கும் தொடர்..!!

சே.குமார் said...

ஊர் நினைவு வருது...

Kousalya said...

//ஆவணம் தாண்டி அறந்தாங்கி நுழையறதுக்கு//

'ஆவணம்' இந்த ஊரில் சிறிய வயதில் நானும் இரண்டு வருடம் இருந்திருக்கிறேன் என்பதால் உங்களின் இந்த படைப்பு எனக்கும் அந்த ஊரை நினைவு படுத்திவிட்டது. இனிமையான நினைவுகள்...!! :))

தஞ்சாவூர், சிவகங்கை இரண்டு மண் மட்டுமல்ல மனிதர்களின் மனமும், பிறவும் வேறுபட்டது என்பது போன்றவற்றை நுட்பமாக கவனித்து இங்கே பகிர்ந்த உங்களுக்கு என் பாராட்டுகள்.

சின்ன வயது ஞாபகத்தை சொல்றேன்னு இரண்டு ஊரையும், ஊரின் மனிதர்களை பற்றியும் சொன்ன விதம் அருமை. ரசித்து படித்தேன்.