Skip to main content

சுவாசமே...காதலாக....! தொகுப்பு:10

























இன்னும் மறக்கவில்லை உன்னை பிரிந்த அந்த தினத்தின் கடைசி நிமிடத்தின் அடர்த்தியினை, மீண்டும் சந்திப்போம் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அந்த வலுவினை திடமாக்கி கண்களின் வழியே நீ வழிய விட்ட போது அதில் காதலும் சேர்ந்தே இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அதுதான் கடைசியாய் நாம் சந்திக்கும் தருணம் என்று நினைத்திடவில்லை....

காதலை எழுத்துக் கூட்டி வாசிக்க கற்றுக் கொண்ட அந்த முதல் சந்திப்பில் எனக்கான காதலை நான் கண்ட இடம் உன் கண்கள். எங்கோ சுற்றிக் கொண்டிருந்த என் விழிகள் எதார்த்தமாய் உன் விழிகளோடு பதிந்து மீள முடியாமல் இன்னும் உன் விழிகளை என் விழிகளுக்குள் ஏந்திக் கொன்டு வாழ்வதை உன்னிடம் பகிர நினைத்திருக்கிறேன். வார்த்தைகள் ஆசையாய் வெளி வரத்துடித்து பகிர நீ இல்லாத காரணத்தால் தொண்டைக் குழிக்குள்ளேயே ஒரு தர்ணா போரட்டம் நடத்தி தீக்குளித்து நெருப்பான ஏக்கப் பெருமூச்சாய் வெளிப்படுத்தியிருக்கிறது....

மனிதன் வாழும் காலத்தில் அவனை சுவாரஸ்யப்படுத்துவது காதல். அதையே அவன் சரியாக பயன்படுத்தாத போது அவனை அவஸ்தைப் படுத்துவதும் அதுதான். காதல் என்பதை பகிரப்படாத உணர்வாய் நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீ சொன்ன அந்த கந்தர்வ வார்த்தைகள் எனக்கு பிடிபட கொஞ்ச காலம் ஆனது.

வார்த்தைகளுக்குள் வெளிப்பட்டு விடும் காதல் அதன் திடமிழந்து போய் விடும் என்று நீ சொன்னதன் அர்த்தம் அதை உணர்வாய் தேக்கி வைத்து அதன் ஆளுமை என்னை புரட்டிப் போட்டு கொடுத்த உணர்வுகளின் ஆக்ரோசமான தாக்குதல்களில் என்னால் உணர முடிந்தது....

இன்று வரை உனக்கும் எனக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும் என்று பகிராமலேயே நாம் காதலித்தோம், பிரிந்து விட்டோம். ஆனால் காதல் என்ற ஒன்று ஜீவனாய் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறதே எப்படி..? உருவமில்லா உணர்வுகளின் சங்கமத்திற்கு பெயரிட்டு அழைத்து அதை களங்கப்படுத்தி ஏதேதோ செய்து வைத்திருக்கிறது சமுதாய பழக்க வழக்கங்கள். நாம் அதைக் கடந்தான் நின்று கொண்டிருந்தோம்!

ஒவ்வொரு முறையும் நீ இல்லாத பொழுதுகளும், உனக்காக நான் காத்திருந்த பொழுதுகளும் மிக அற்புதமானவை. நான் என்னுள் நானாய் நிறைந்து வழிந்து என்னை நிரப்பிக் கொண்ட ஒரு கூர்மையான பொழுதுகள். என்னுடைய இருப்பினை மிக தெளிவாய் நான் உணர்ந்த கணங்கள். கீழே விழாமல் தத்தி தத்தி காற்றில் பறக்கும் ஒரு பஞ்சினைப் போல நான் மிதந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா?

தூரத்தில் நீ நடந்து வர வர...உள்ளுக்குள் ஒரு பிரளயமாய் உணர்வுகள் சுற்றி சுற்றி இதயத்தை பிய்த்து வெளியே போட்டு விடலாமா என்று தோன்றுமளவிற்கு படபடப்பு கூடும் நிமிடங்கள். ஏதேதோ பேசுவோம்...உன் வார்த்தைகளுக்குள் உலக கவிதைகளும், தத்துவங்களும் மேலும் மெருகேறி என் செவியேறி என்னை கிறங்கடிக்கும்.

ஒரு ஆணின் அறிவும் பார்வையும் எப்போதும் பெண்ணிலிருந்து வேறுபட்டது. ஒரு பெண் உணர்வுப் பூர்வமாய் அறிவினை உள் வாங்குவாள், ஆனால் ஆண் அறிவுப்பூர்வமாய் உணர்வினை அணுகுவான். பெண்ணின் அனுபவத்தை அவள் பகிரும் தருணங்களில் சொக்கிப்போய் புதிதாய் ஏதேதோ காட்சிகளை உள்ளே பரப்பிப் போட ஓராயிரம் ஓவியங்களை அவனின் உனர்வுகள் தீட்ட ஆரம்பிக்கும்...

எனக்குள் உணர்வாய் பரவி
கவிதைகளாய் நான் எழுதிய
ஓராயிரம் ஓவியங்களின்
கரு உன்னிடம் இருந்து
ஜனித்த வார்த்தைகளின்
ஆழங்களில் இருந்தது
உனக்குத் தெரியுமா?

காட்சிப்படுத்த முடியாத காவியத்தினை எழுத்தினுள் கொண்டு வருதல் சாத்தியமா என்று யோசித்து, யோசித்து செதுக்கும் சிற்பமாய்த்தான் இருக்கிறது உன்னைப் பற்றிய நினைவுகளை எழுதும் போது, ஒவ்வொரு முறையும் நீ பேசும் வார்த்தைகளும் அழகுதான், முன் வந்து விழும் முடியை ஒதுக்கும் தொனியும் அழகுதான்.....! அழகு என்ற படிமாணம் பொதுவான விதிகளுக்குட்பட்டது அல்ல. எனக்கு அழகானதாய் தெரியும் விடயங்கள் மற்றவருக்கு அழகாயிருக்க வாய்ப்பிருக்காது...

நாட்களில் மிருதுவானது கடினமானது என்று சொல்ல முடியுமா? என்னால் தெளிவாக சொல்ல முடியும் உன்னோடான நாட்கள் மிருதுவானவை, ஆர்ப்பாட்டமானவை, தெளிவானவை. நாம் சந்தித்துக் கொள்வதற்கும் பேசிக் கொள்வதற்கும் என்றுமே அவசரப்பட்டது கிடையாது. ஒரு முறை நீ புடவை கட்டி வந்த தினமன்று எனக்குள் எழுந்த ஆச்சர்யத்தை கேள்வியாக வைத்த போது நீ வெட்கப்பட்டதை பார்த்த பின்புதான் பெண்ணின் வெட்கத்தில் இருக்கும் நளினம் என்னவென்று என்னால் உணர முடிந்தது...

மெல்ல ஏறெடுத்து
அரை விழிகளால் என்னை ஊடுருவி
சிரிப்புக்கும் புன்னகைக்கும் மத்திமத்தில்
உன் உதடுகள் பரவ விட்ட
சந்தோசத்தின் அதிர்வுகள்...
மெல்லப் பரவி கன்னங்களில்
ஒரு இளஞ்சிவப்பை கொண்டு வந்து
கண நேரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்து
என்னை மொத்தமாய் ஆட்கொண்டதே
அதுதானே வெட்கம்..???!!!!

இறைவனின் மீது எனக்கு கோபம் வருகிறது என்று நான் சொன்னவுடன் வெட்கமென்ற பாவம் சட்டென்று மாறி ஆச்சர்யமாய் உன் முகத்தில் குடிகொண்டு வார்த்தைகளை வெளிவிடாமல் ஏன் என்ற ஒரு கேள்வியை முகத்தால் செதுக்கிப்போட்டதே.....அந்தக் கணம் நான் மூர்ச்சையாகி விழ இருந்த நேரம், நல்ல வேளையாக பின்னால் இருந்த ஒரு மரத்தின் அரவணைப்போடு நான் சுதாரித்துக் கொண்டேன்....

இறைவன் ஆண்களுக்கு எப்போதும் கோபம், இறுக்கம் எல்லாம் அதிகமாக கொடுத்ததின் பின்ணனியில் என்ன சமுதாய நிர்ப்பந்தம் இருக்கிறது என்று என்னால் ஆராய முடியவில்லை, ஆனால் பெண்ணுக்குள் நளினத்தை இறைத்துப் போட்டு வெட்கம் என்ற ஒரு விடயத்தை அதில் மறைத்துப் போட்டு இப்படி ஆண்களை ஒரவஞ்சனை செய்திருக்கக் கூடாது என்று நான் சொன்னவுடன்....

ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்த உன் விழிகள் மெல்ல பூத்து கல கல சிரிப்பாய் மாறி அந்த இடத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளில் அந்த மரத்தடியில் சிந்திக்கிடந்தவை எல்லாம் பூக்களா அல்லது உன் சிரிப்பா என்று நான் சந்தேகப்பட்டு கீழே குனிந்து பார்க்கத்தான் செய்தேன்....

வாழ்வின் அற்புதமான தருணங்கள் என்பவை அழகான பெண்ணோடு இருத்தல் என்று உலகம் நம்புகிறது, புறத்தை வைத்து வாழ்க்கையை தீர்மானிக்கும் மனிதர்கள் இப்படிப்பட்ட அபத்தத்தில் விழுந்து பின் வெளியேற சிரமப்பட்டு மூச்சு திணறிக் கொண்டிருக்கிறார்கள். அதுவல்ல நிஜம், வாழ்வின் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் என்பது அறிவான பெண்ணோடு ஏற்படும் சினேகம், உறவு...! அழகினை தாண்டிய அறிவும் விசால பார்வையும் ஒரு பெண்ணிடமிருந்து ஆணுக்கு கிடைக்க வேண்டும், மாறாக ஆதரவான தெளிவான கம்பீரமான ஒரு ஆண் பெண்ணுக்கு கிடைக்க வேண்டும். முரண்பட்டுப் போகும் இடங்களில் எல்லாம் ஆணும் பெண்ணுமே முரணாகிப் போகிறார்கள்.

நீ கவிதை எழுதுவாய்
நான் வாசிப்பேன்..!
நீ சிரிப்பாய்..
நான் கவிதை எழுதுவேன்...!
என் கவிதை வரிகளை
நீ ஆழமாய் பார்ப்பாய்...
அதற்குள் படர்வாய்....
வார்த்தைகளுக்குள் குடி கொண்டிருக்கும்
உன்னை நீ பார்க்கும் தருணங்களில்
நான் சிறகடித்து எங்கேயோ
பறந்து கொண்டிருப்பேன்!

காலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு காதலை மனதில் தேக்கிக் கொண்டு நாம் நடந்து கொண்டிருந்தோம் ஒரு சூழல் நாம் பிரிய வேண்டும் என்று பணித்த போது சூழலை நாம் முன்னிலைப்படுத்தாமல் தேவையின் பொருட்டு பிரிந்தோம்.

அதே சூழல் நம் தொடர்புகளை அறுத்துப் போட்டு இன்றோடு ஏழாண்டுகள் ஆகி விட்டதும், மீண்டும் அந்த சூழலை முன்னிலைபடுத்தாமல் விலாசங்கள் மாறிப்போன உன்னைத் நான் தேடியும், நீ கிடைக்காமல் சிதறிப்போயிருக்க வேண்டிய என்னை உன் ஆழமான காதலின் நேசங்கள் சிதறாமல் சேமித்து வைத்திருந்தது போலத்தான் உன்னையும் சேமித்து வைத்திருக்கும் என்று நம்பி நான் ...எனக்காக வாழ்க்கை காட்டிய வழியில் நடந்து கொண்டிருந்தேன் உன் நினைவுகளோடு....

எவ்வளவு மாற்றங்கள்.....இந்த ஏழு வருடத்தில் திருமணம், குழந்தை என்று நான் மாறித்தான் விட்டேன் ஆனால் மாறாமல் உன் நினைவுகளை இன்னமும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது உன் மீதான் ஒரு உணர்வுக் காதல்...

நேற்று எதேச்சையாக என் மகனை பள்ளியில் விட்டுத் திரும்பிய போது தூரத்தில் நீ........!!! உன் மகளை கையில் பிடித்தபடி...! நீ என்னைப் பார்க்கவில்லை...நான் நீ என்னைப் பார்ப்பதையும் விரும்பவில்லை..! ஆனால் காலம் மிக வினோதமானது அதனால்தான் மீண்டும் உன்னை நான் சந்திப்பதை ஏதோ ஒரு விதத்தில் அது ஆக்கி வைத்திருக்கிறது.

இருவரும் எதிர் எதிர் சந்தித்துக் கொண்ட அந்த பொழுதில்.....வார்த்தைகளும் வார்த்தை படிமங்களும் சட் சட்டென்று ஓடி ஒளிய அதே ஆச்சர்யத்தை நீ விழிகளில் தேக்கி........என் பெயர் சொல்லி அழைக்கையில் நான் உன் கையை பிடித்துக் கொண்டு நின்ற உன் மகளின் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்....

பரஸ்பரம் நலம் விசாரித்தலோடு அந்த சந்திப்பு அட்டகாசமான ஒரு சம்பிரதாய சந்திப்புதான். வார்த்தைகள் மிக கண்ணியமாக நமது கடந்த காலத்தை ஓரம் வைத்து விட்டு.....நிகழ்காலத்தை விசாரித்துக் கொண்டிருந்தது. என் மகனும் அங்கேதான் படிக்கிறானென்றும் எனது வீடு இன்ன இடத்தில் இருக்கிறது என்றும் பகிர்ந்தேன்.. நீயும் உன்னைப்பற்றிய அறிமுகங்களைச் செய்து கொண்டாய்....இருவரும் இருவரின் வீடுகளுக்கு இருவரையுமே அழைத்துக் கொண்டோம்....!

கடந்த காலம் உள்ளே நினைவுகளாய் உருண்டு இருவரின் கண்களையும் நேருக்கு நேர் சந்திக்க விடாமல் செய்து கொண்டிருந்தது.....! பள்ளிக்கு நேரமானதை நீ உணர்ந்தாய்.. என் அலுவலகத்துக்க் நேரமானதை நான் உணர்ந்தேன்.....நன்றிகளோடு எதிர் எதிர் திசைகள் நடந்து கொண்டிருந்தோம்....

சில அடிகள் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது ஏதோ ஒன்று என் பிடறியை அழுத்த திரும்பிப் பார்த்தேன்....எதேச்சையாக நீயும் திரும்பி இருந்தாய்......தூரங்களில் இருந்து ஆழாமாய் நீ ஊடுருவிப் பார்த்த பார்வையையும்...பிரிய விட்ட புன்னைகையையும் நான் உனக்குத் திருப்பிக் கொடுத்த போது இருவருமே சப்தமாய் சிரித்துக் கொண்டோம்.....!

மீண்டும் பிரிந்து விட்டோம்....! அவ்வளவுதான்..வாழ்க்கை அழகானது....வாழும் வரையில் தொடர்புகளையும் உறவுகளையும் சூழல்களையும் புரிந்து வாழும் போது...! அன்றைய சூழலில் அப்படி......இன்றைய சூழலில் இப்படி....! உன்னை நான் தேடவில்லை இப்போது..! நீ எங்கிருக்கிறாய் என்றும் ஆராயவில்லை...! சம கால வாழ்க்கையில் நான் சந்தோஷித்து இருக்கிறேன்..! அதே நேரத்தில் கடந்த கால நினைவுகளை மறுப்பதற்கில்லை....

அவை இருக்கின்றன....அவை அழகனாவை...! அப்படியே ஒரு ஓரமாய் நினைவுகளில் இருந்து விட்டுப் போகட்டும்..!

நான் நானாக... நீ நீயாக...வாழ்க்கையை அழகாய்த் தொடரல்தானே அழகு!


தேவா. S


Comments

Kousalya Raj said…
This comment has been removed by the author.
//ஆனால் பெண்ணுக்குள் நளினத்தை இறைத்துப் போட்டு வெட்கம் என்ற ஒரு விடயத்தை அதில் மறைத்துப் போட்டு இப்படி ஆண்களை ஒரவஞ்சனை செய்திருக்கக் கூடாது என்று நான் சொன்னவுடன்....//

ஹ்ம்ம்ம்.. உங்களின் உணர்ச்சிகளை, எப்படி இப்படி, வார்த்தைகளில் வடிக்கிறீங்க.. Chanceless.

ஒரு வரியும், விட முடியாதபடிக்கு, அழகான, பூச்சரம் போன்ற தொடரை... ரசித்து படித்தேன். :)
//என் கவிதை வரிகளை
நீ ஆழமாய் பார்ப்பாய்...
அதற்குள் படர்வாய்....
வார்த்தைகளுக்குள் குடி கொண்டிருக்கும்
உன்னை நீ பார்க்கும் தருணங்களில்
நான் சிறகடித்து எங்கேயோ
பறந்து கொண்டிருப்பேன்!//

எண்ணிலடங்கா அர்த்தங்கள்...
எதார்த்தமான வரிகளில்..
என்றும் நினைவில் நிற்கும்படியாய்!!
எதார்த்த வரிகளில் எண்ணிலடங்கா அர்த்தங்கள்.

ரசித்து படித்தேன்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...